நில அளவைப் பணிக்காக 'தியோடலைட்’ என்ற அளவியல் கருவி, இங்கிலாந்தில் இருந்து கப்பலில் கொண்டு வரப்பட்டது. அதைப் பயன்படுத்த, தேர்ச்சி பெற்ற பொறியாளர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டார்கள். நில அளவை துவங்க மலை உச்சிகளின் மீது ஏற வேண்டி இருந்தது. அதில், அளவைப் பணியாளர்கள் பலர் காயமுற்றனர். பணியின்போது ஒரு முறை தியோடலைட் கருவி நழுவி விழுந்து சேதம் அடைந்தது. இந்தியாவை அளப்பது என்பது அவர்கள் நினைத்தது போல எளிதாக இல்லை.வில்லியம் லாம்டன், ஒரு ராணுவ அதிகாரி. ஆனால், புவியியல் நுட்பங்களைத் தெரிந்து கொள்வதில் மிகுந்த நாட்டம் கொண்டவர். கணித அறிஞரும்கூட. ஆகவே, அவரால் இந்த நில அளவையை சிறப்பாகச் செய்ய முடி ந்தது. இந்தியாவை அளந்து முடிப்பதற்கு 40 வருடங்களுக்கும் மேலானது. அதற்குள் எவ்வளவோ பிரச்னைகள், புதுப்புது சிக்கல்கள்.808-ம் வருடம் தஞ்சாவூரில் நில அளவைப் பணி நடைபெற்றது. கோயில் கோபுர உச்சிக்கு தியோடலைட் கருவியைக் கொண்டுபோக முயன்றபோது, அது தவறி விழுந்து சேதம் அடைந்தது. எனவே, வேறு கருவி வரும் வரை லாம்டன் காத்துக்கிடந்தார்.சென்னையில் இயங்கி வந்த நில அளவைப் பிரிவை கல்கத்தாவில் உள்ள தேசிய நில அளவைத் திட்டத்தோடு இணைத்து விட்டதால் ஏற்பட்ட நிர்வாகக் கோளாறு மற்றும் நிதிப்பற்றாக்குறை, அதனால் உருவான பயணக் குளறுபடிகளால் லாம்டன் மிகப்பெரிய போராட்டத்தை நடத்த வேண்டியிருந்தது.இந்தப் பணிக்கு உறுதுணையாக இருக்க, 1818-ம் ஆண்டு ஜார்ஜ் எவரெஸ்ட் என்ற பொறியாளர் நியமிக்கப்பட்டார். மத்திய இந்தியா வரை நில அளவைப் பணி முடிந்தபோது, தாமஸ் லாம்டன் இறந்து போனார். அப்போது அவருக்கு வயது 70. அதன்பிறகு, முழுப்பொறுப்பும் ஜார்ஜ் எவரெஸ்ட்டிடம் அளிக்கப்பட்டது. அவர், லாம்டனின் சர்வே பணியை முன்னெடுத்துச் சென்றார். 1830-ம் ஆண்டு அவர், சர்வேயர் ஆஃப் ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்டார். இங்கிலாந்துக்குச் சென்று புதிய கருவிகளைக் கொண்டுவந்து, மிக துல்லியமானதொரு நில அளவைப் பணியை எவரெஸ்ட் மேற்கொள்ளத் துவங்கினார்.
பல நேரங்களில், இடம்விட்டு இடம் பெயர்ந்த நில அளவைக் குழுவை வழிப்பறிக் கொள்ளையர் தாக்கிப் பொருட்களைப் பறித்தனர். ஒரு இடத்தில் அவர்கள் வைத்திருந்த டெலஸ்கோப்பைப்பற்றி தவறான ஒரு கட்டுக்கதை பரப்பப்பட்டது. அந்தத் தொலைநோக்கியை வைத்துப் பார்த்தால் பெண்கள் நிர்வாணமாகத் தெரிவார்கள் என்று நினைத்து, ஒரு வணிகன் தனது ஆட்களை அனுப்பி நில அளவையாளர்களை மடக்கி, தொலைநோக்கிகளைக் கொண்டுவரச்செய்து சோதித்துப் பார்த்தான்.சில இடங்களில், அவர்களது கருவியைக்கொண்டு பூமியின் உள்ளே புதைந்து இருக்கும் புதையல்களைக் கண்டுபிடித்து விடலாம் என்று திருட்டுக் கும்பல் நினைத்தது. அதனால், நில அளவைப் பணியாளர்களை மடக்கி வாரக்கணக்கில் பூமியைத் தோண்டச் செய்து இருக்கிறார்கள். புதையல் கிடைக்கவில்லை என்று தெரிந்தவுடன் கருவிகளை உடைத்து எறிந்ததோடு, பணியாளர்களையும் அடித்து கைகால்களை முறித்துப் போட்டு இருக்கிறார்கள்.இதற்காகவே, நில அளவைப் பணியாளர்களுக்குப் பாதுகாப்பு படை ஒன்றும் துணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.லாம்டனின் சர்வே விவரங்களில் சிறிய அளவு வேறுபாடு காணப்பட்டாலும், எவரெஸ்ட் அந்த இடத்தை மறுமுறை அளவிடச் செய்திருக்கிறார். கடுமையான பணியின் முடிவில் அவர் இமய மலையில் உள்ள சிகரங்களை அளவிட்டார். ஆனாலும், சிகரங்களின் உயரத்தைத் துல்லியமாக அறிந்து சொல்ல முடியவில்லை.1843-ம் ஆண்டு அவர் கல்கத்தாவில் இருந்து பணி ஒய்வுபெற்று இங்கிலாந்து திரும்பிப் போனார். அவருக்கு, 1861-ம் ஆண்டு இங்கிலாந்து அரசின் 'நைட்’ விருது வழங்கப்பட்டது.அதன்பிறகு, ஆண்ட்ரு ஸ்காட் வாக் என்ற அதிகாரி நில அளவையின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். அவர், வழிகாட்டுதலில் இமயமலையின் சிகரங்கள் அளவிடப்பட்டன. அது பெரும் சவாலாக இருந்தது. நேபாளத்தின் எல்லைக்குப் போய்விட்ட நில அளவைக் குழுவை உள்ளே அனுமதிக்க நேபாள அரசு மறுத்தது. தெற்கு நேபாள எல்லை வழியாக அளவைப் பணியை மேற்கொள்ளலாம் என்று பிரிட்டிஷ் அரசு முடிவு செய்தபோது, அங்கே இடைவிடாத மழை. அதன் காரணமாக, மலேரியா காய்ச்சல் ஏற்பட்டு நில அளவைப் பணியாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். ஜான் ஆம்ஸ்ட்ராங் என்ற அதிகாரி கடுங்குளிரைப் பொருட்படுத்தாமல் தியோடலைட் கருவிகளை, ஆட்களை சுமக்க வைத்து எடுத்துச் சென்று, இமயமலையின் சிகரங்களை கணக்கெடுக்கத் துவங்கினார். அப்போதுதான், மிக உயரமான சிகரம் கஞ்சன் ஜங்கா என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ஜார்ஜ் எவரெஸ்ட்டின் பணிக் காலத்தில் ராதா நாத் சிக்தார் என்ற வங்காளி இளைஞன், கணிதத் திறமையும் துடிப்புடன் பணியாற்றுபவனாகவும் இருந்தான். அவனை, டேராடூனில் உள்ள ஆய்வு மையத்தில் பணியாற்ற அழைத்துக்கொண்டார். அந்த இளைஞன் நில அளவையைத் துல்லியமாகக் கணக்கிட தானே ஒரு புதிய முறையை உருவாக்கினான். அவனால் எந்த இடத்தையும் துல்லியமாக அளவிட முடிந்தது. டார்ஜிலிங்கில் இருந்து இமயமலையின் சிகரங்களை ஆறு கோணங்களில் துல்லியமாக அளந்து, முடிவில் 1852-ம் ஆண்டு, ராதாநாத் சிக்தார் இந்தியாவின் மிக உயரமான சிகரமாக இமயமலையின் 15-வது சிகரம் உள்ளது என்பதைக் கண்டறிந்து சொன்னான். அப்படி, அவன் கண்டுபிடித்த சிகரம் 29,002 அடி உயரம் கொண்டது.தனக்கு முந்தைய சர்வேயர் ஜெனரலின் நினைவைக் கொண்டாடும் வகையில் ஆண்ட்ரு ஸ்காட் வாக், உலகின் மிக உயரமான அந்த சிகரத்துக்கு 'ஜார்ஜ் எவரெஸ்ட்’டின் பெயரைச் சூட்டினார். அப்படித்தான்நேபாளிகளின் கோமோலுங்குமா சிகரத்துக்கு, எவரெஸ்ட் என்ற புதிய பெயர் சூட்டப்பட்டது. அதை, எவரெஸ்ட்டே ஏற்றுக்கொள்ள மறுத்தார். அதற்கு அவர் சொன்ன காரணம்... இந்தியர்களால் அவரது பெயரை முறையாக உச்சரிக்கவோ எழுதவோ முடியாது என்றும் கூறுகிறார்கள், ஆனால் ஆண்ட்ரு ஸ்காட் வாக். அதை ஏற்றுக்கொள்ளவில்லை. உலகின் மிக உயரமான சிகரத்துக்கு எவரெஸ்ட் என்றே பெயர் சூட்டினார்.இதை, ராயல் ஜியாகிரஃபி சொசைட்டி 1857-ல் அங்கீகரித்தது. ஆனால், இன்றும் சீனர்கள் அந்த சிகரத்தை ஷெங்மூபெங் என்றுதான் அழைக்கிறார்கள். அந்தப் பெயருக்கு புனித அன்னை என்று பொருள். வெள்ளைக்காரர்கள் கண்டறிவதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே, அந்தமலைச்சிகரத்தை நேபாளிகள் அடையாளம் கண்டு அதற்கு கோமோலுங்குமா என்று பெயரும் சூட்டி இருக்கி றார்கள். நேபாளத்தில் வாழும் ஷெர்பாக்கள் அந்த மலையின் உச்சியில் தங்களது குலக்கடவுள் வசிப்ப தாக நம்புகிறார்கள். அப்படி புராதனமாக மக்கள் கொண்டாடி வந்த சிகரத்துக்கு, ஆங்கில அதிகாரியான எவரெஸ்ட்டின் பெயரைச் சூட்டி உலகையே அங்கீகரிக்கச் செய்ததுதான் வெள்ளைகாரர்களின் அதிகாரம்.
இமயச் சிகரங்களைக் கணக்கிட்டுத் துல்லியமாகக் கண்டுபிடித்த ராதாநாத் சிக்தாருக்கு வரலாற்றில் ஓர் இடமும் இல்லை. ஆனால், தனது பணிக்கு முன்னோடியாக இருந்தார் என்பதற்காக ஆண்ட்ரு ஸ்காட் வாக்-கின் விசுவாசம் ஜார்ஜ் எவரெஸ்ட் டின் பெயரைச் சூட்டி அழகு பார்த்தது. அதை, அன்றைய காலனிய அரசும் ஏற்றுக்கொண்டது.எவரெஸ்ட் என்பது ஓர் ஆளின் பெயர். அவர் கிழக்கிந்திய கம்பெனியில் பணியாற்றிய ஒரு சர்வே அதிகாரி. அவரது செயல்பாடுகள் பிரிட்டிஷ் அரசை வலிமையாக்குவதற்கு உதவி செய்வதாகவே இருந்தது என்ற தகவல்கள் எதுவும், நமது வரலாற்றுப் பாடப்புத்தகத்தில் இடம்பெறவே இல்லை. அது, பல ஆயிரம் வருடங்களாகவே இமயச் சிகரத்தின் பூர்வீகப் பெயர் எவரெஸ்ட் என்பது போலவே நம்பவைக்கப்படுகிறது.பூர்வகுடி மக்களின் நிலங்களை ஆக்கிரமித்துக்கொண்டு புதிய தேசங்களைக் கண்டுபிடித்ததாக பெயர் சூட்டி மகிழ்வது வெள்ளைக்காரர்கள் காலம் காலமாக செய்து வரும் மோசடி. அமெரிக்க, மேற்கிந்தியத் தீவுகள் போன்றவை பெயர் மாற்றம் பெற்று தங்களது சுயத்தை இழந்ததையும், பூர்வகுடி மக்கள் அழித்து ஒழிக்கப்பட்டதையும் சரித்திரத்தை உன்னிப்பாக வாசிப்பவர்களால் உணர்ந்துகொள்ள முடியும்.இமயமலையில் உள்ள எந்த சிகரத்திலும், ஷெர்பா என்று அழைக்கப்படும் இனக் குழுவினர்களால் எளிதாக ஏறிவிட முடியும். ஹிலாரியும் டென்சிங்கும் எவரெஸ்ட் சிகரத்தின் மேலே ஏறியபோது அவர்களது சுமைகளைத் தூக்கிக்கொண்டு மலைஉச்சி வரை சென்றது ஷெர்பாக்களே!நோர்கே என்ற ஷெர்பாதான் அவர்களின் வழிகாட்டி. ஷெர்பாக்கள் திடமான உடலுடன், மிக அதிகமான சுமைகளை தங்களது முதுகில்சுமந்து கொண்டு மலை ஏறக்கூடியவர்கள். பனிப்பாதைகளைக் கண்டுபிடித்து செல்வதில் அவர்களுக்கு இணையாக இந்தியாவில் யாரும் கிடையாது. ஆகவே, இன்றுவரை எந்த மலையேற்றக் குழு, இமயம் சென்றாலும் ஷெர்பாக்களையே வழிகாட்டிகளாகக் கொள்கிறார்கள்.கிழக்கு நேபாளப் பகுதியில் வசிக்கும் இந்த ஷெர்பாக்களின் வரலாறு, காலம் மறந்த ஒன்று. உலக அதிசயங்களில் ஒன்றான எவரெஸ்ட்டின் உச்சி வரை ஏற முடிந்த அவர்களின் வாழ்க்கைத் தரம் அதலபாதாளத்தில் விழுந்துகிடக்கிறது. 100 வருடங்களாக ஏழ்மையும் கஷ்டங்களுமே அவர்களுக்கு மிச்சமாகி இருக்கின்றன. விவசாயக் கூலிகளைப் போலவே இவர்களுக்கு மலையில் சுமையைத் தூக்கிச் செல்வதற்கு கூலி தரப்படுகிறது.ஷெர்பா என்னும் சொல்லுக்கு கிழக்கில் வசிப்பவர்கள் என்றே பொருள். மலை ஏறும் முன்பு அதனிடம் அனுமதி கேட்பதுடன், விழுந்து வணங்கவும் செய்கிறார்கள். இந்தியாவைச் சுற்றி இயற்கை அமைத்த பாதுகாப்பு அரண்தான் இமய மலை. இன்னும் முழுமையாக ஆராயப்படாத இந்த அரண் பனி மூடியது. மேகங்கள் உரசும் எழில்கொண்டது. ஹிம் என்றால் பனி, ஆலயா என்றால் கோயில். பனி தெய்வத்தின் உறைவிடம் எனப்படும் இமயத்தை கடவுளின் வீடு என்று இந்துக்கள் நம்புகிறார்கள். பௌத்தர்களும் அது புத்தரின் உறைவிடம் என்று வழிபடுகிறார்கள்.ஒரு காலத்தில் எவரெஸ்ட்டின் உச்சியை அடைவது மிகப் பெரிய சவாலாக இருந்தது. முதன் முதலில் 1953 ஆண்டு மே மாதம் 29ம் தேதி எட்மண்ட் ஹிலாரி என்ற நியூசிலாந்து வீரரும், டார்ஜிலிங்கைச் சேர்ந்த நேபாளியான டென்சிங் நார்கேயும் எவரெஸ்ட்டின் உச்சியை அடைந்து சாதனை புரிந்தனர். இந்த 50 வருடங்களுக்குள் எவரெஸ்ட்டின் உச்சியை 1,200-க்கும் மேற்பட்டவர்கள் தொட்டிருக்கிறார்கள். இதில், ஷெர்பா அப்பா எனப்படும் நேபாளி ஆக்ஸிஜன் உதவியின்றி எவரெஸ்ட் பயணம் மேற்கொண்டு உச்சியை அடைந்திருக்கிறார். அதோடு, 13 வருடங்களில் 12 முறை எவரெஸ்ட் உச்சியை அடைந்த வீரரும் இவர் ஒருவரே!
முதல் எவரெஸ்ட் பயணத்தில் அதன் உச்சியை அடைந்த டென்சிங், மலையின் உச்சியில் காணிக்கையாக எதையாவது புதைத்துவிட்டு வர விரும்பினார். தனது மகள் நீமா தந்து அனுப்பிய நீல நிறப் பேனா ஒன்றையும் கொஞ்சம் இனிப்புகளையும் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் புதைத்துவிட்டு வந்தார். உலகின் மிக உயரமான சிகரம் ஒன்றின் அடியில் ஒரு பேனா புதையுண்டுகிடக்கிறது என்பது 'எழுத்தும் தெய்வம், எழுதுகோலும் தெய்வம்’ - என்று பாரதி சொன்னதையே நினைவுபடுத்துகிறது.அடுத்த முறை இந்திய வரைபடத்தைப் பார்க்கும்போது அதன் பின்னே எண்ணிக்கையற்ற மனிதர்களின் உழைப்பும் போராட்டமும் அடங்கி இருப்பதை உணர்ந்து பாருங்கள். அதே நேரம், அடிமைப்பட்ட ஒரு தேசத்தில் ஒரு மலை கூட தன் பெயரை இழந்துபோகும் என்பதையும் மறந்துவிடாமல் பாருங்கள்.
விகடன்
No comments:
Post a Comment