கோவை மாவட்டம் வழியாக கேரளாவுக்கு தடையின்றி நடைபெற்றுக் கொண்டிருந்த வாகனப் போக்குவரத்திலும் தற்போது சிக்கல் வந்து விட்டது. தமிழகத்திலிருந்து போன ஐயப்ப பக்தர்கள் வாகனத்தை கேரள போலீஸாரின் பெரும் துணையோடு மலையாளிகள் தாக்கி சேதப்படுத்தினர். குருவாயூரில் ஒரு பேருந்து தீவைத்துக் கொளுத்தப்பட்டது. இதனால் கோவை மாவட்டம் வழியாக வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2 வாரங்களாக கேரளாவில் தமிழர்களைக் குறி வைத்தும், தமிழக வாகனங்களைக் குறி வைத்தும், ஐயப்ப பக்தர்களைக் குறி வைத்தும் தொடர்ந்து தாக்குதல்கள் நடந்து வருகின்றன. இதற்குப் பதிலடியாக தமிழகத்திலும் ஆங்காங்கு மலையாளிகளின் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் தாக்கப்பட்டு வருகின்றன.
இதனால் தேனி மாவட்டம் வழியாக கேரளாவுக்கும், அங்கிருந்து தமிழகத்திற்கும் வாகனப் போக்குவரத்து முற்றிலும் முடங்கிப் போயுள்ளது.
அதேசமயம், செங்கோட்டை வழியாகவும், கோவை வழியாகவும் வாகனப் போக்குவரத்து பிரச்சினையின்றி நடந்து வருகிறது. இந்த நிலையில் கோவை வழியாக கேரளாவுக்குச் செல்லும் வாகனப் போக்குவரத்திற்கும் தற்போது சிக்கல் வந்து விட்டது.
கோவை மாவட்டம் வாளையாறு பகுதி தமிழக, கேரள எல்லையாகும். இந்த வழியாகப் போவது எளிதானது என்பதாலும், மலைப் பிரதேசம் எதுவும் இந்த வழியில் குறுக்கிடாது என்பதாலும் வாகனதாரிகள் இந்த வழியை அதிகம் விரும்புவார்கள். மேலும் எர்ணாகுளம், கொச்சி, திருச்சூர், பாலக்காடு உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்குச் செல்ல இதுதான் எளிய வழியாகும்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக பிரச்சினை வெடித்த நிலையில் தேனி மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ள நிலையில் வாளையாறு பகுதியில் பிரச்சினை இல்லாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு இந்தப் பகுதி வழியாக சபரிமலைக்குச் சென்ற ஐயப்ப பக்தர்களின் வாகனங்களை ஒரு சமூக விரோதக் கும்பல் சரமாரியாக கல்வீசித் தாக்கியது. இதில் 20க்கும் மேற்பட்ட வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்து சிதறின. மேலும் ஐயப்ப பக்தர்களையும் தாக்கியுள்ளனர் அந்த சமூக விரோதக் கும்பலைச் சேர்ந்த மலையாளிகள்.
இதையடுத்து அங்கிருந்த போலீஸாரிடம் விரைந்து சென்று தமிழக பக்தர்கள் பாதுகாப்பு கேட்டபோது, நான்தாண்டா அடிக்க் சொன்னேன், ஓடுங்கடா என்று அவர்கள் வெறித்தனமாக பேசியுள்ளனர். இதனால் செய்வதறியாமல் திகைத்த தமிழக பக்தர்கள் வண்டிகளை எடுத்துக் கொண்டு மீண்டும் கோவை திரும்பியுள்ளனர்.
இதுகுறித்து பெருந்துறையைச் சேர்ந்த ஒரு பக்தர் கூறுகையில், தமிழக ஐயப்ப பக்தர்களுக்கு கேரளாவில் சுத்தமாக பாதுகாப்பு இல்லை. போலீஸாரின் உதவியுடன்தான் மலையாளிகள் நம்மைத் தாக்குகின்றனர். போலீஸாரே தாக்கச் சொல்லி தூண்டுகின்றனர்.
உங்கள் ஊரில் உள்ள முருகன் கோவிலுக்குப் போக வேண்டியதுதானேடா, இங்கு எதுக்குடா வர்றீங்க என்று கேட்டு படு மோசமான கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தித் திட்டுகின்றனர். இதனால் வேறு வழியில்லாமல் நாங்கள் ஊர் திரும்பி விட்டோம் என்றார்.
இந்தத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து வாளையாறு சோதனைச் சாவடியுடன் தமிழகத்திலிருந்து போகும் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அதற்கு மேல் போக போலீஸார் அனுமதி தரவில்லை. இதனால் கோவை மாவட்டம் வழியாக கேரளாவுக்கான போக்குவரத்து பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment