Monday, December 12, 2011

மீட்கப்படுமா மீனாட்சி அம்மன் கோவில்?

துரை மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றிலும், நிர்ணயிக்கப்பட்ட உயரத்​​தைத் தாண்டி முளைக்கும் கட்டடங்களை இடிக்க இந்து அமைப்புகள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்த நிலையில், இப்போது விவகாரம் பொதுநல வழக்காக நீதிமன்றப் படி ஏறி இருக்கிறது!


மீனாட்சி அம்மன் கோயிலை மையமாக வைத்துத்தான் மதுரையை புராதன நகரமாக மத்திய அரசு அங்கீகரித்திருக்கிறது. கோயிலின் நான்கு முக்கிய கோபுரங்களும் தலா 13 சென்ட் ஏரியாவில் பிரமாண்டமாக எழுப்பப்பட்டு உள்ளன. எங்கிருந்து பார்த்​தாலும் கோபுரங்கள் தெளிவாக தெரிய வேண்டும் என்பதற்காகவும் பாது​காப்பு கருதியும் கோயிலைச் சுற்றிலும் குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் கட்டடங்களை எழுப்பக் கூடாது என்பது அரசு உத்தரவு. ஆனால் இந்த உத்தரவை காற்றில் பறக்கவிட்டு, கோயிலைச் சுற்றிலும் விதிகளை மீறிய கட்டடங்கள் வளர்ந்துகொண்டே இருக்கிறது.
இது குறித்து மதுரை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருக்கும் வழக்கறிஞர் முத்துக்குமாரை சந்தித்தோம். ''இந்து சாஸ்த்திரப்படி, 'கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ என்பார்கள். ஆனால், மீனாட்சி அம்மன் கோயில் கோபுரங்களை மக்கள் தரிசிக்க முடியாத அளவுக்கு சுற்றிலும் பிரமாண்ட கட்டடங்களைக் கட்டி விட்டார்கள். இதற்கு அதிகாரிகளும் உடந்தை. இந்தக் கட்டடங்களை இடிப்பது தொடர்பாக 2004-ல் மாநகராட்சி ஆணையராக இருந்த கார்த்திகேயன், நடவடிக்கையைத் தொடங்கினார். ஆனால், அரசியல் குறுக்கீடுகள் அவரது கைகளைக் கட்டிப்போட்டு விட்டன. ஏற்கெனவே, சித்திரை வீதிகளில் கனரக வாகனங்களை அனுமதித்ததாலும், அண்டர்கிரவுண்ட் தோண்டியதாலும் கோயிலில் விரிசல் விழுந்தது. இதைத் தடுக்கக் கோரி, 2006-ல் நான் பொதுநல வழக்குப் போட்டேன். அதன் பிறகுதான் தொல்லியல் துறை அதிகாரிகளின் மேற்பார்வையில் விரிசல்கள் சரி செய்யப்பட்டு, சித்திரை வீதிகளில் வாகனப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. அதேபோன்று, இந்த விவகாரத்திலும் கோர்ட் நல்ல தீர்ப்பு சொல்லும் என்று நம்புகிறேன்'' என்றார்.
இது தொடர்பாக நம்மைத் தொடர்பு கொண்ட பி.ஜே.பி-யின் பிரசார அணி மாநிலச் செயலாளர் சசி ராமன், ''மாநகராட்சி அதிகாரிகளே பணத்தை வாங்கிக்​கிட்டு, கட்டடங்களைக் கட்ட சிக்னல் கொடுக்குறாங்க. பிறகு, அவர்களே தங்களுக்கு எதிராக கட்டட உரிமையாளர்களை கோர்ட்டில் வழக்கும் போட வைத்து, அதையே காரணமாகக் காட்டி நியாயமான அதிகாரிகளையும் பயமுறுத்துகிறார்கள். உயரமான கட்டடங்கள் மட்டுமில்லாமல், கோயில் ஏரியாவில் அண்டர்கிரவுண்ட்களையும் தோண்டு​கிறார்கள். இதன் மூலமும் அந்தப் பகுதியில் போடப்படும் ஆழமான போர்வெல்கள் மூலமும் கோயிலின் அஸ்திவாரத்துக்கே ஆபத்து வரலாம். உயரமான கட்டடங்களால் கோயிலின் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் இல்லை. வியாபாரிகள் என்ற போர்வையில் சில ஆபத்தான மனிதர்கள் இந்தப் பகுதியில் ஊடுருவி இருக்கிறார்கள். இவர்கள் உயரமான கட்டடங்கள் மீது ஏறி கோயிலுக்கு பேராபத்தை விளைவிக்க முடியும். அதனால் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என்று ஆத்திரப்பட்டார்.

கோயில் நிர்வாகத் தரப்பில் பேசியவர்களோ, ''கோயில் பாதுகாப்பு குறித்து 2010-ல் கோயிலை ஆய்வு செய்த மத்திய பாதுகாப்பு குழுவினர், 40 விதமான பரிந்துரைகளைக் கொடுத்தார்கள். அதன்படி கோயிலையும் அதன் சுற்றுப்பகுதியையும் நாங்கள் பராமரித்து வருகிறோம். அத்துமீறிய கட்டடங்களைத் தடுப்பதும் அந்த 40-ல் ஒன்றுதான் என்றாலும் நேரடியாக நடவடிக்கை எடுப்பதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. கோர்ட் இந்த விஷயத்தில் கண்டிப்பான உத்தரவு போட்டால் நாங்களும் நிம்மதியடைவோம்'' என்கிறார்கள்.

''கோயிலை சுற்றி ஒரு கிலோ மீட்டர் சுற்றளவிற்கு விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்களை ரெண்டு நாளா அதிகாரிகள் கணக்கு எடுத்துட்டு இருக்காங்க. அந்த லிஸ்ட்டை கோர்ட்டில் சமர்ப்பிப்போம். கோர்ட் என்ன சொல்கிறதோ, அதன்படி கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம்'' என்கிறார் மதுரையின் மேயர் ராஜன் செல்லப்பா.

கலெக்டர் சகாயத்திடம் இந்த விவகாரம் குறித்துப் பேசினோம். ''பொதுநல வழக்கு பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால், உள்ளூர் திட்டக் குழுமத்தின் சேர்மன் என்ற முறையில், விதிமீறி கட்டப்பட்ட கட்டடங்கள் குறித்து குழுமத்தின் மெம்பர் செகரட்டரியை ஏற்கெனவே லிஸ்ட் எடுக்கச் சொல்லிவிட்டேன். மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றி ஒரு கிலோ மீட்டர் சுற்றளவிற்கு 9 மீட்டர் உயரத்திற்கு மேல் எந்தக் கட்டடமும் இருக்கக் கூடாது என்பதுதான் தெளிவான விதி. அதிகாரிகள் கணக்கு எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். கிட்டத்தட்ட 75 சதவிகித பணிகள் முடிந்து விட்டன. முழு லிஸ்ட் கைக்கு வந்ததும் கோர்ட்டில் தெரிவிப்போம். விதிமீறிய கட்டடங்களை அப்புறப்படுத்துவதில் நாங்கள் உறுதியாகவே இருக்கிறோம்'' என்றார்.
அப்படியே நடக்கட்டும்!

No comments:

Post a Comment