கிரிக்கெட்டில் உலகக் கோப்பை வென்றது முதல் உலக கால்பந்து ரசிகர்களின் ஸ்டார் மெஸ்ஸி இந்தியா வந்தது வரை இந்திய விளையாட்டின் மகிழ்ச்சிப் பக்கங்கள்... உலக விளையாட்டு அரங்கில் நிகழ்ந்த முக்கியமான பத்து....
நூறும் நூலும்
சச்சின் 100வது செஞ்சுரியை மும்பை டெஸ்டில் தவற விட்டபோது நாடே கன்னத்தில் கை வைத்தது. இவரளவுக்கு ரசிகர்களால் கவனிக்கப்படும் பிரபலம் வேறு யாரும் இல்லை. சச்சினை விமர்சித்து புத்தகம் எழுதினால் புகழும் பணமும் கிடைக்கும். இதைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார்கள் சோயிப் அக்தர், சேப்பல் மற்றும் ஜெயவந்த் லீலே. சச்சின் என்னைப் பார்த்து நடுங்கினார் என்றார் அக்தர். நிறைய பேருடைய தவறான ஆலோசனைகளைக் கேட்டுச் செயல்பட்டதால்தான், சச்சினால் கேப்டனாகப் பிரகாசிக்க முடியவில்லை என்றார் லீலே. சில சமயங்களில், சச்சின் பலவீனமாக இருப்பார் என்றெழுதினார் சேப்பல். நிச்சயம் சச்சின் யார்மீதும் மானநஷ்ட வழக்கு போடமாட்டார் என்பதால் இனியும் நிறைய அக்தர்கள், சேப்பல்களை எதிர்பார்க்கலாம்.
சானா அதிரடி!
சாதனை அளவில், சானா நேவாலுக்கு 2011 சிறந்த வருடமல்ல. ஆனால், பேட்டிகள் மூலம் அதிக கவனத்துக்கு ஆளானார் சானா. ‘என்னை சானியா மிர்சாவோடு ஒப்பிட வேண்டாம். நாங்கள் இருவருமே உலகின் நெ.1 வீரராக இருந்தால்கூட ஒப்பிடுவதில் ஒரு நியாயம் இருக்கிறது. அவர் ஒரு கிராண்ட்ஸ்லாம் போட்டியைக்கூட வெல்லவில்லை. ஆனால் நான் கிராண்ட்ஸ்லாமுக்கு நிகரான நான்கு சர்வதேசப் போட்டிகளை வென்றிருக்கிறேன். மேலும், அவர் ஒற்றையர் ஆட்டங்களில் அதிக வெற்றி பெறவில்லை. இரட்டையர் ஆட்டங்களில்தான் மிளிர்கிறார். அடுத்த சானா நேவால் உருவாவாரா என்றால் இல்லை என்றுதான் சோல்வேன்,’ என்றவர் ‘நான் ஒரு வேளை சினிமாவில் நடித்தால், ரஜினியுடன் நடிக்கவே விருப்பம். எந்தவிதக் கேள்விகளும் இல்லாமல் ஒப்புக்கொள்வேன்’ என்று கோடம்பாக்கம் பக்கம் தம் குண்டுகளை வீசினார்.
இறங்கிய அமெரிக்கா
மே 9 அன்று வெளியிடப்பட்ட டென்னிஸ் தரவரிசைப்பட்டியலில் முதல் பத்து இடத்தில் ஒரு அமெரிக்கர்கூட இல்லை. கடந்த 37 வருடங்களில் இது போல நடந்ததில்லை. 2003-ல் ஆண்டி ரோடிக் யு.எஸ் ஓபன் வென்றபிறகு வேறு எந்த அமெரிக்க வீரரும் கிராண்ட்ஸ்லாம் போட்டியை வெல்லவில்லை. அதேசமயம், ஸ்பெயின் நல்ல முன்னேற்றம் கொண்டுள்ளது. முதல் 25 பேரில், நடால் உள்பட ஏழு பேர் ஸ்பெயின் வீரர்கள். கால்பந்து, டென்னிஸிலும் ஸ்பெயினின் ஆதிக்கம் அதிகம். ஆண்கள் பிரிவில் மார்டி ஃபிஷ், ஆண்டி ரோடிக் மட்டுமே முதல் பத்து இடங்களில் அவ்வப்போது இடம்பிடித்து அமெரிக்காவைக் காப்பாற்றுகிறார்கள்.
வெல்டன் வெட்டல்!
மிகவும் இள வயதில் (வயது 24) ஃபார்முலா ஒன் சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறார் ஜெர்மனியைச் சேர்ந்த செபாஸ்டியன் வெட்டல். தான் அறிந்த மூன்று மைக்கேல்களைப் போல பெயரும் புகழும் பெற வேண்டும் என்று தமக்குள் கனவை விதைத்துக் கொண்டார் வெட்டல். மைக்கேல் ஜாக்சன், மைக்கேல் ஜோர் டான், மைக்கேல் ஷூமேக்கர் ஆகியோர் தான் அம்மூவரும். உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொடாவில் 5.4 கி.மீ. நீளம் கொண்ட புத் மைதானத்தில் முதல் முறையாக ஃபார்முலா 1 கார் பந்தயம் நடை பெற்றபோது, லட்சம் ரசிகர்கள் குவிந்தார்கள். இந்தியாவின் சார்பில் பங்கேற்ற ஒரே வீரர் தமிழகத்தைச் சேர்ந்த நரேன் கார்த்திகேயன். 17-வது இடத்தைப் பிடித்தார்.
வெகுண்ட ஹாக்கி வீரர்கள்
இந்திய ஹாக்கி அணி, ஆசியக் கோப்பையை வென்ற போது, அரசாங்கம் 25,000 ரூபாயைப் பிச்சையாகப் போட்டவுடன் அவர்கள் வெகுண்டெழுந்து பணத்தை வாங்க மறுத்துவிட்டார்கள். மீடியாவில் பிரச்னை பெரிதாகி, இறுதியில் இந்திய விளையாட்டு அமைச்சகம், ஹாக்கி வீரர்கள் ஒவ்வொருவருக்கும் ஒன்றரை லட்சம் அறிவித்தது. இது பற்றிப் பேட்டியளித்த இந்திய அணியின் கேப்டன் ராஜ் பால் சிங், ‘ஹாக்கி வீரர்களிடம் ஷூவே கிடையாது. எங்களுக்கு வழங்கப்படும் உபகரணங்களும் மிக மோசமானதாக இருக்கும். 25,000 ரூபாயைப் பரிசாகக் கொடுப்பதால் யாருக்கும் சந்தோஷம் இல்லை. எங்களை அவமானப்படுத்த வேண்டாம்,’ என்றார்.
வந்தார் மெஸ்ஸி!
24 வயதுக்குள் உலகக் கால்பந்து ரசிகர்களையே தம் கட்டுக்குள் வைத்திருக்கிறார் மெஸ்ஸி. நட்புறவு ஆட்டத்துக்காக மெஸ்ஸி, இந்தியா வந்திருந்தபோது, அவரைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடினர் இந்தியக் கால்பந்து ரசிகர்கள். கொல்கத்தா விமான நிலையத்தில் அதிகாலை 2 மணிக்கே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு மெஸ்ஸியை வரவேற்றார்கள். அன்றைய தினம் மெஸ்ஸி, கோல் எதுவும் போடவில்லையென்றாலும், அவரது சுறுசுறுப்பான ஆட்டமே ரசிகர்களுக்குப் போதுமான திருப்தியைக் கொடுத்திருந்தது. மெஸ்ஸியின் இந்திய விஜயத்தால் இந்தியக் கால்பந்துக்கு 22 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.
ஜோகோவிச் நெ.1
ஜோகோவிச், நடாலின் ஆதிக்கத்துக்கு முடிவு கட்டி, டென்னிஸ் ஆடவர் தரப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இந்த ஆண்டில் ஆஸ்திரேலிய ஓபன், விம்பிள்டன் மற்றும் யு.எஸ். ஓபன் ஆகிய மூன்று கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் இவர் கையில். இவர், ப்ரெஞ்ச் ஓபன் அரையிறுதியில் ஃபெடரரிடம் தோற்றார். ஆனால், விம்பிள்டனில் வெற்றி பெற்று, உலகின் நெ.1 டென்னிஸ் வீரராகிவிட்டார். 2004க்குப் பிறகு ஃபெடரர், நடாலுக்கு மாற்றாக இருக்கும் ஜோகோவிச்சை டென்னிஸ் உலகம் கொண்டாடி வருகிறது.
போதை வீரர்கள்
2010 காமன்வெல்த் போட்டியின் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் கலந்து கொண்டு தங்கம் வென்ற நால்வரில் மூன்று பேர் (மன்தீப் கவுர், சினி ஜோஸ், ஜுவானா மர்மு) போதை மருந்து குற்றச்சாட்டுக்கு ஆளானார்கள். மேலும், டயானா மேரி தாமஸ் (400 மீ.), ஹரி கிருஷ்ணன் (நீளம் தாண்டுதல்), சோனியா (குண்டு எறிதல்) என மொத்தமாக ஆறு பேர், தடைசெயப்பட்ட ஊக்கமருந்து பயன்படுத்தியது தெரியவந்தது. விவகாரம் பெரிதானதும், மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அஜ மக்கான் உடனே பயிற்சியாளர் யூரி ஆக்ரோட்னிக்கை பொறுப்பிலிருந்து நீக்கினார்.
மீண்டும் பிரிவு
லண்டன் ஒலிம்பிக்ஸில் பதக்கம் வாங்குவதற்காக லியாண்டர் பெயஸும் மகேஷ் பூபதியும் மீண்டும் இணைந்தபோது ரசிகர்கள் பரவசமடைந்தார்கள். ஆனால், சமீபத்தில் இருவரும் பிரிவதாக அறிவித்திருப்பது ஏமாற்றம். ‘முன்புபோல ஒன்றிணைந்து ஆட முடியவில்லை என்பதால் பிரிந்துவிட்டோம். வயதும் ஆட்டமும் ஒரு காரணம்’ என்கிறார் மகேஷ் பூபதி. இவர்களிருவரும் பல ஒலிம்பிக் போட்டிகளில் இரட்டையர் ஆட்டங்களில் கலந்து கொண்டுள்ளார்கள். ஆனால், ஒருமுறைகூட பதக்கம் வாங்கியது கிடையாது. இதனால்தான், இந்தத் தடவை சமயோசிதமாகப் பிரிந்துவிட்டார்கள்.
உலகக்கோப்பை
1983க்குப் பிறகு 2011ல் கிரிக்கெட் உலகக் கோப்பை நம் வசமானது. 1992 உலகக் கோப்பை முதல் ஆடும் சச்சினின் கனவும் நிறை வேறியது. கால் இறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, பாகிஸ்தானை அரை இறுதியில் தோற்கடித்து, பரபரப்பான இறுதிப் போட்டியில் இலங்கையை, தோனியின் வின்னிங் சிக்ஸர் வழியாக வென்றது இந்திய அணி. நான்கு முறை ஆட்ட நாயகன் விருதும் இறுதியில் தொடர் நாயகன் விருதையும் பெற்ற யுவ்ராஜ் சிங்கும்; இந்திய அணியை, டெஸ்ட்டில் நம்பர் ஒன், ஒருநாள் உலகக்கோப்பை சாம்பியன் என சாதனை அணியாக மாற்றியதில் பயிற்சியாளர் கிறிஸ்டனுக்கும் பங்கு உண்டு.
No comments:
Post a Comment