Saturday, December 17, 2011

பாக்தாத் ஏர்போர்ட்

ஈராக்கிய எல்லையைக் கடந்து முதலாவது அமெரிக்க ராணுவ டாங்கி உள்ளே நுழைந்து சுமார் 9 ஆண்டுகள் ஆகியிட்டன. “அமெரிக்க யுத்தம் ஈராக்கில் முடிவடைந்தது” என்று நேற்று (வியாழக்கிழமை) அமெரிக்கா அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.



9 வருடமாக இருந்த இடத்தில் இருந்து புறப்படுமுன் ஞாபகார்த்தமாக போட்டோ எடுத்துக்க வேணாமா?
பாக்தாத் விமான நிலையத்துக்கு மேல், வானில் அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர்கள் சுற்றிக்கொண்டிருக்க, விமான நிலையத்தில் வைத்து அமெரிக்க பாதுகாப்பு செயலர் லியோன் பனேடா, இந்த அதிபாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.
பாக்தாத் விமான நிலையத்தில்கூட, அமெரிக்க பாதுகாப்பு செயலருக்கு வானிலும் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய கதியில் உள்ளது அங்குள்ள நிலைமை!
விமான நிலையத்தில்கூட தீவிரவாதிகள் எந்த நிமிடத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்ற நிலையில், “ஈராக்கில் யுத்தம் முடிந்துவிட்டது” என்ற அமெரிக்க அறிவிப்பு கொஞ்சம் கேலிக்குரியதாகவே உள்ளது.அல்-காய்தா இயக்கம் இன்னமும் ஈராக்கின் ஏதோ ஒரு பகுதியில் தினமும் தாக்குதல் நடாத்திக் கொண்டுதான் உள்ளது.
அல்காய்தா தாக்குதல்கள் ராணுவம் மீது மாத்திரமல்ல, மக்கள்மீதும் நடாத்தப்படும் நிலைக்கு கொண்டு வந்துள்ளது அமெரிக்காவின் 9 வருட ஈராக்கிய யுத்தம்!

யுத்த முடிவுக்கான அதிகாரபூர்வ ராணுவச் சடங்கு.
விமான நிலையத்தில் யுத்தம் முடிவுக்கு வந்த அறிவிப்பை வெளியிட்டு பேசிய பாதுகாப்பு செயலர், “ஒரு விஷயத்தை தெளிவு படுத்த விரும்புகின்றேன். ஈராக்கில் நாம் (அமெரிக்கா) நடத்திய யுத்தம்தான் இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளது.
பொட்டி-படுக்கை கட்டத் தொடங்கியாச்சு!
ஆனால், ஈராக் இன்னமும் முற்று முழுதாக பாதுகாப்பான நாடாக மாறவில்லை. ஏராளமான பாதுகாப்பு சேலஞ்சுகள் இங்கே உள்ளன. அவற்றை ஈராக்கியர்களே தீர்த்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு உதவி தேவை என்றால், வழங்க நாம் தயாராக உள்ளோம்” என்றார்.
2003-ம் ஆண்டு, ஈராக்கில் கெமிக்கல், பயாலஜிக்கல் ஆயுதங்கள் இருப்பதாக குற்றம்சாட்டி உள்ளே புகுந்த அமெரிக்காவால், அப்படியான ஆயுதங்கள் எதையும் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. கடந்த வெள்ளிக்கிழமை வரை எடுக்கப்பட்ட கணக்கில், அமெரிக்க ராணுவத்தைச் சேர்ந்த 4.487 பேர் ஈராக்கில் உயிரிழந்துள்ளனர். 32, 226 அமெரிக்க ராணுவத்தினர் காயமடைந்த நிலையில் ஈராக் யுத்தக் களத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளனர்.
நேற்று பாக்தாத் ஏர்போர்ட்டில் அதிகாரபூர்வமாக அமெரிக்கா யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தபோது, அமெரிக்க பாதுகாப்பு செயலரிடம் ஒரேயொரு கேள்வியை நல்ல வேளையாக யாரும் கேட்கவில்லை. கேட்டிருந்தால் அவருக்கே சரியான பதில் தெரிந்திராது. அந்த கேள்வி-

“யுத்தம் உங்களுக்கு வெற்றியா? தோல்வியா?”

No comments:

Post a Comment