மக்கள் போராட்டம்!
பெயர் தெரியாத, சாதாரண, எளிய மக்களின் பலம் என்ன என்பதை இந்த ஆண்டு முழுவதும் நடைபெற்ற அரபுலக எழுச்சியின் மூலம் உலகம் அறிந்துகொண்டது. 23 ஆண்டுகள் துனிஷியாவை ஆண்ட அதிபர் பென் அலி, மக்களின் எதிர்ப்பு அலைகளால் அடித்துச் செல்லப்பட்டு, பதவி இழந்தார். அடுத்த மாதம் எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக் தூக்கியெறியப்பட்டார். தொடர்ந்து பஹ்ரைன், லிபியா, யேமன், சிரியா, ஜோர்டன், மொராக்கோ, குவைத், ஈரான் என்று ஆட்சியாளர்களுக்கு எதிரான மக்கள் போராட்டம் பரவிப் படர்ந்தது. சூடானில் இருந்து தெற்கு சூடான் தனி நாடாகப் பிரிந்து போனது. தலைவர் என்றோ வழி காட்டுதல் என்றோ எதுவும் இல்லாமல் தன்னிச்சையாக நடைபெற்ற போராட்டங்கள் இவை. மேலும், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் முதல் முறையாக பெரிய அளவில் மக்களை ஒருங்கிணைத்தது.
இன்னொரு இழப்பு!
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மிகப்பெரும் மனித இழப்பைக் கடந்த மார்ச் மாதம் ஜப்பான் சந்தித்தது. அடுத்தடுத்து நிகழ்ந்த நிலநடுக்கத்திலும் சுனாமியிலும் கிட்டத்தட்ட 16,000 பேர் உயிரிழந்தனர், 4000 பேர் காணாமல் போயினர். வாகனங்களும் கட்டடங்களும் அட்டை பொம்மைகளைப் போல் மிதந்து சென்ற காட்சி, எவரும் மறக்கவியலாது. இது போதாதென்று, ஃபுகுஷிமா நகரில் உள்ள அணு உலைகள் வெடித்ததில் நாடெங்கும் அவசர நிலைப் பிரகடனம் செயப்பட்டது. அணுக்கதிர் பரவலால் ஏற்பட்ட பாதிப்பு இன்னும் மதிப்பிடப்படவில்லை.
இரண்டு கொலைகள்!
இரண்டு பிரபலங்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் இன்றுவரை சர்ச்சை. ஒசாமா பின்லேடன் பாகிஸ்தான், அபோடா பாத்தில் ராணுவத்தினரால் கொல்லப்பட்டதாக மே 1ம் தேதி ஒபாமா அறிவித்தார். அக்டோபர் 20ம் தேதி, லிபிய அதிபர் கடாபி சிர்டேவில் கொல்லப்பட்டார். இரண்டுமே ராணுவ நடவடிக்கைகள் என்று சொல்லப்பட்டன. இரண்டுமே அமெரிக்காவாலும் அமெரிக்கா ஆதரவு நேட்டோவாலும் அரங்கேற்றப்பட்ட திட்டமிடப்பட்ட படுகொலைகள் என்று அரசியல் ஆவாளர்களால் சந்தேகிக்கப்படுகின்றன.
லண்டன் கலவரம்!
பொருளாதார நெருக்கடி என்னும் வேதாளத்தின் பிடியில் சிக்கித் தவிக்கிறது ஐரோப்பா. கிரீஸ், இத்தாலி இரு நாடுகளின் அதிபர்கள் ராஜிநாமா செய்தனர். அமெரிக்கப் பொருளாதாரக் கட்டுமானத்தின் பலவீனத்தை உணர்த்தும் விதமாக, அந்நாட்டின் கடன் தர வரிசை குறைந்தது. இதனால் சர்வதேச அளவில் அமெரிக்காவின் நம்பகத்தன்மை கேள்விக்குறியானது. பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளிலும் மந்தமே. லண்டன் வீதிகளில், ஆகஸ்ட் மாதம் தொடங்கிய கலவரத்தை லண்டன் மிகுந்த சிரமப்பட்டே ஒடுக்கியது.
ஆக்குபை வால் ஸ்ட்ரீட்
அரபுலக எழுச்சியின் அமெரிக்க வடிவம், ஆக்குபை வால் ஸ்ட்ரீட். வால் ஸ்ட்ரீட்டில் உள்ள நலிவடைந்த பெரும் நிதி நிறுவனங்களை அரசு பண உதவி செய்து மீட்க முன்வந்தது, நடுத்தர வர்க்கத்தினரிடையே கடும் அதிருப்தியை உருவாக்கியது. அதன் விளைவாகத் தோன்றிய வால் ஸ்ட்ரீட் முற்றுகைப் போராட்டம், அமெரிக்காவைத் தாண்டி ஐரோப்பா முழுவதும் பரவியது. 99 சதவிகித மக்களின் நலன்களைக் கண்டுகொள்ளாமல் 1 சதவிகித பெரும் பணக்காரர்கள் குறித்து மட்டும் ஏன் அரசு கவலை கொள்ள வேண்டும் என்னும் கேள்வியே போராட்டத்தின் மையம்.
அஞ்சாத அசாஞ்சே!
விக்கிலீக்ஸ் ஜூலியன் அசாஞ்சே அள்ளி வீசிய அரசு ரகசியங்கள் அமெரிக்காவை இன்னமும் உலுக்குகிறது. இராக் யுத்தம், ஆப்கனிஸ்தான் யுத்தம், அமெரிக்க உளவு நிறுவனங்கள் பரிமாறிக்கொண்ட தகவல்கள், பிற நாடுகள் பற்றிய அமெரிக்காவின் மதிப்பீடு (அந்நாட்டுத் தலைவர்களுக்கு சூட்டிய செல்லப் பெயர்கள்) அனைத்தையும் ஆதாரபூர்வமாக அம்பலப்படுத்தினார். அசாஞ்சேயை முடக்கும் வகையில், அவர் மீதான பாலியல் வழக்கை வெளிக் கொண்டுவந்து அலைக்கழிக்கிறார்கள். வழக்கில் இருந்து வெளிவர அசாஞ்சே கடுமையாகப் போராடிக்கொண்டிருக்கிறார்.
இழுத்து மூடப்பட்ட பத்திரிகை!
அமெரிக்காவின் டேப்லாட் பத்திரிகையான நியூஸ் அஃப் தி வர்ல்ட், முறைகேடான முறையில் இயங்கியது அம்பலமானதால் இழுத்து மூடப்பட்டது. புகழ்பெற்ற மீடியா சக்கரவர்த்தியான ரூபர்ட் முர்டாக்கின் நிறுவனங்களில் ஒன்று இது. ரகசியமாக தொலைபேசியை ஒட்டுக் கேட்பது, துப்பறியும் நிபுணர்களைப் பணியில் அமர்த்தி, பிரபலங்களின் பிரத்தியேக வாழ்க்கையைக் கண்டறிந்து வெளியிட்டது என்று பல குற்றச்சாட்டுகள் இந்நிறுவனத்தின் மீது சுமத்தப்பட்டன.
நார்வே பிரெவிக்
நோபல் அமைதிப் பரிசு வழங்கும் அமைதிப் பூங்காவாகக் கருதப்பட்ட நார்வேயின் பிம்பம் ஆண்ட்ரஸ் பிரெவிக் என்னும் மதவெறியனால் சிதறடிக்கப்பட்டது. குண்டுவெடிப்பு மூலமாகவும் துப்பாக்கிச் சூடு மூலமாகவும் 93 பேரைக் கொன்றவன் ‘இந்தத் தாக்குதல் கொடூரமானதாக இருக்கலாம், ஆனால் அவசியமானது’ என்று சாட்சியம் அளித்தான் பிரெவிக். படுகொலையை நியாயப்படுத்தும் வகையில் ஆயிரம் பக்கச் சித்தாந்த விளக்கத்தையும் இணையத்தில் வெளியிட்டுப் பரபரப்பூட்டினான். வழக்கு விசாரணை நடந்துகொண்டிருக்கிறது.
ஜாக்சன் சிகிச்சையில் தகராறு!
மைக்கேல் ஜாக்சனின் கொலைக்கு அவர் மருத்துவரே காரணம் என்று தீர்ப்பு வெளியாகியுள்ளது. ஜாக்சனுக்குச் சிகிச்சை அளித்த டாக்டர் கான்ரட் முர்ரேவுக்கு நான்காண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முர்ரே மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு, மைக்கேல் ஜாக்சனின் உடல் நலம் குறித்து அவர் போதிய கவனம் எடுத்துக்கொள்ளவில்லை என்பது தான்.
எரியும் உலகம்
Global Carbon Project வெளியிட்ட புள்ளி விவரப்படி, 2009ஆம் ஆண்டைக் காட்டிலும் 2010ல் கரிமிலவாயு வெளியேற்றம் 5.9 சதவிகிதம் அதிகம். 2011ல் இன்னும் கூடுதலாம். மனித குலத்துக்கு இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான கண்டுபிடிப்பும் எச்சரிக்கையும் இதுதான். புவிச் சூடேற்றத்தைத் தடுத்து நிறுத்தாவிட்டால், இயற்கை சீரழிவுகள் இனிவரும் காலங்களில் பெருகும் என்கிறார்கள் அவர்கள்.
No comments:
Post a Comment