டிசம்பர் 5ம் தேதி திங்கட்கிழமை மதியம் தகவல் தொழில்நுட்பத் துறைக்கான மத்திய அமைச்சர் கபில் சிபல், ஃபேஸ்புக், கூகுள், யாகூ, மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களின் அதிகாரிகளைத் தனது அலுவலகத்திற்கு அழைத்து சீறினார். அவரது சீற்றத்திற்குக் காரணம், ஆறுவாரங்களுக்கு முன் அவர்களிடம் சோனியா காந்தியைப் பற்றி தரக்குறைவாகச் செய்தி வெளியிட்டிருந்த ஒரு ஃபேஸ்புக்கின் பக்கத்தைக் காண்பித்து, ‘இது போன்ற விஷயங்களை அனுமதிக்க முடியாது, இவற்றை இந்த நிறுவனங்களே வெளியாவதற்கு முன் தடுத்து நிறுத்த வேண்டும்’ என சொல்லியிருந்தார். ஆனால், நிறுவனங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சொல்கிறது ‘நியூயார்க் டைம்ஸ்’.
கடந்த ஜனவரியிலிருந்து ஜூன் வரையிலான ஆறுமாதங்களில், ஆர்குட், யூ டியூப் உள்ளிட்ட தனது இணைய தளங்களிலிருந்து 358 விஷயங்களை நீக்க வேண்டும் என அரசிடமிருந்து தகவல் வந்ததாகச் சொல்கிறது கூகுள் வெளியிட்டுள்ள அறிக்கை. இவற்றில் 255 விஷயங்கள் (ஆர்குட்டில் 236, யூ டியூபில் 19) அரசாங்கத்தை விமர்சிப்பதாக உள்ளதாக அதற்குக் காரணம் சொல்லப்பட்டிருந்தது.
இவை தவிர அவதூறு என 39 கோரிக்கைகள், அந்தரங்கத்தைப் பாதிக்கின்றன என 20 கோரிக்கைகள், ஆள் மாறாட்டம் செய்வதாக 14 கோரிக்கைகள், வெறுப்பை உமிழ்பவை என 8 கோரிக்கைகள், ஆபாசம் என சொல்லி 3 கோரிக்கைகள் வந்தன. தேசத்தின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் என வந்த கோரிக்கை ஒன்றே ஒன்றுதான்.
யூ டியூபிலிருந்து நீக்க வேண்டும் எனக் கோரப்பட்டவை, அரசியல் தலைவர்களுக்கு எதிரான போராட்டங்களின் வீடியோக்கள். தனக்கு வந்த கோரிக்கைகளில் 51 சதவிகிதத்தை முழுமையாகவோ, பகுதியாகவோ நிறைவேற்றியிருக்கிறது கூகுள். மற்றவற்றை நீக்க முடியாது என மறுத்து விட்டது.
‘அந்தந்த நாட்டின் சட்டங்களுக்கு முரணானவற்றை நீக்குவோம். அந்தந்த நாட்டின் சட்டங்களுக்கு உட்பட்டிருந்தாலும் எங்கள் விதிமுறைகளுக்கு மாறானவையாக இருந்தால், அவற்றையும் நீக்குவோம். நாட்டின் சட்டங்களுக்குட்பட்டு, எங்கள் விதிமுறைகளுக்கு உடன்பாடாக இருப்பவற்றை, அவை சர்ச்சைக்குரியவையாக இருக்கின்றன என்ற காரணத்திற்காக நீக்க வேண்டும் என கோரினால், ஸாரி, அதை ஏற்க முடியாது’ என தெளிவாகத் தெரிவித்து விட்டது கூகுள்.
கலிபோர்னியாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் ஃபேஸ்புக், ‘எங்கள் விதிகளுக்கு முரணான நிர்வாணப் படங்களையும், வன்முறையைத் தூண்டுபவற்றையும் மட்டும் நீக்குவோம்’ என அறிவித்திருக்கிறது. கனடாவை சேர்ந்த ரிசர்ச் இன் மோஷன் (Research in motion) என்ற நிறுவனத்தின் கண்டுபிடிப்பு பிளாக்பெரி. அதன் வழி அனுப்பப்படும் மின்னஞ்சல்களைக் கண்காணிக்க வேண்டும் என கடந்த ஆண்டு இந்திய அரசு அதற்கு உத்தரவிட்டபோது, அதை ஏற்க அது மறுத்து விட்டது. அதேபோல கூகுள், ஸ்கைப் இரண்டும், அதன் வழியே சாட் செய்வோர் யார் என தெரிய ஏதுவாக இந்தியாவில் சர்வர்களை நிறுவ வேண்டும் என அரசு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், அவை அதற்கு இணங்க மறுத்து விட்டன.
"சமூக வலைத் தளங்களின் செயல்பாட்டில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. ஆனால், அவை எங்களோடு ஒத்துழைக்க மறுத்தால், தேவையான நடவடிக்கைகளை எடுப்பதைப் பற்றி யோசிக்க வேண்டியது அரசின் கடமை" என அறிவித்து விட்டார் அமைச்சர். ‘தேவையான நடவடிக்கைகள்’ என்பது என்னவாக இருக்கும் என ஊகிப்பது கடினமல்ல. ‘வடிகட்டல்’ என்ற பெயரில் மறைமுகத் தணிக்கைதான்.
அரசு ஏன் தணிக்கையைப் பற்றி யோசிக்க வேண்டும்? தரக்குறைவாக எழுதுபவர்கள், வெறுப்பை உமிழ்ந்து எழுதுபவர்கள் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்தியச் சட்டங்களில் இடமில்லையா?
இருக்கிறது. இந்திய தண்டனைச் சட்டத்தின் 153 A பிரிவுதிட்டவட்டமாக தெள்ளத் தெளிவாகச் சொல்கிறது: சொற்கள்(எழுத்தானாலும் சரி, பேச்சானாலும் சரி), குறியீடுகள் அல்லது காட்சி வடிவத்தில் ஆனவையானாலும் வேறு வகையினதானாலும், இவற்றைக் கொண்டு மதம், இனம், பிறப்பிடம், வசிப்பிடம், மொழி, இவற்றின் அடிப்படையில் அல்லது வேறு எந்தக் காரணத்தின் அடிப்படையிலானாலும் சரி, சமூகத்தில் பிணக்கையோ, விரோதத்தையோ, வெறுப்பையோ, கெட்ட எண்ணத்தையோ ஏற்படுத்தினாலோ, ஏற்படுத்த முனைந்தாலோ, மூன்றாண்டு சிறைத் தண்டனையோ, அபராதமோ அல்லது இரண்டுமேயோ விதிக்கலாம் என இந்திய தண்டனைச் சட்டத்தின் 153 A பிரிவு தெள்ளத் தெளிவாகச் சொல்கிறது. சமூக நல்லிணக்கம், பொது அமைதி கெடுவதற்கு வாய்ப்பிருப்பதாகக் கருதினால்கூட (likely to disturb) நடவடிக்கை எடுக்கலாம்.
இதைப்போல 1927ல் வெள்ளைக்காரர்கள் ஆட்சியின் போது இயற்றப்பட்டு, இன்றும் நடைமுறையில் இருக்கிற 295 A பிரிவும் மத வெறுப்புணர்வைத் தூண்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வகை செய்கிறது. அதன்படியும் மூன்றாண்டு சிறைத்தண்டனை உண்டு.
இவற்றைத் தவிர அவதூறாக எழுதுபவர்கள் மீது வழக்குத் தொடுக்க இந்திய தண்டனைச் சட்டத்தில் ஒரு தனி அதிகாரமே இருக்கிறது (CHAPTER XXI). இந்தச் சட்டத்தின் 499, 500வது பிரிவுகளின்படி, அவதூறாக எழுதினால் இரண்டாண்டு சிறைத் தண்டனை உண்டு, எழுதியவருக்கு மட்டுமல்ல, எழுதியதை வெளியிட்டவருக்கும்.
இவ்வளவு சட்டங்கள் இருக்கும்போது அவற்றைப் பயன்படுத்தலாமே? அதை விட்டுவிட்டு தணிக்கையைப் பற்றி, அதாவது, ‘தேவையான நடவடிக்கை’களைப் பற்றி ஏன் அரசு சிந்திக்க வேண்டும்?
மூன்று காரணங்களைச் சொல்கிறார் கபில் சிபல்:
1. இணையத்தில் எழுதுபவர்களில் பலர் வெளிநாட்டிலிருந்து எழுதுகிறார்கள். அந்த நாடுகளில் இந்திய சட்டம் செல்லுபடியாகாது.
2. எழுதுபவர்கள் பற்றிய தகவல்களை இணைய நிறுவனங்கள் எங்களுக்கு அளிக்க மறுக்கின்றன. இணைய சேவை வழங்கும் கணினிகள் (சர்வர்கள்) அயல்நாடுகளில் உள்ளன. அந்த நாட்டுச் சட்டப்படி நாங்கள் இந்த விவரங்களைத் தர வேண்டியதில்லை என அவை சொல்கின்றன.
3. சர்ச்சைக்குரிய இந்த விஷயங்கள் விசாரணைக்காக நீதி மன்றங்களுக்கு வரும் ஒவ்வொரு முறையும், மக்கள் பெருங்கூட்டமாகத் திரண்டு எதிர்ப்புத் தெரிவிக்கலாம், வன்முறைகூட நிகழலாம்.
கபில் சிபலின் கருத்துக்களைக் கண்டு இணையவாசிகள் கொந்தளித்துப் போனார்கள். தங்கள் கருத்துரிமை பறி போய்விடுமோ என்ற கோபத்தில் கடுமையான வார்த்தைகளில் கபில் சிபலைத் தாக்கத் தொடங்கினார்கள். ‘கபில் சிபல் ஒரு #1 முட்டாள்’ என்று டிவிட்டர் குருவிகள் இரைச்சலிட்டன. ‘நான் சோனியாகாந்தியை நேசிக்கிறேன். She is awesome அவர் கடவுள். எதிலும் தவறு செய்யாதவர் (இந்த செய்தி கபில் சிபலிடம் அனுமதி பெற்று அனுப்பப்படுகிறது)’ என்று ஒருவர் டிவிட்டரில் கலாய்த்திருந்தார். கபில் சிபலை விமர்சிக்கும் கட்டுரைகள் மளமளவென்று ஃபேஸ்புக்கில் அரங்கேறின. விக்கிப்பீடியாவில் உள்ள கபில் சிபல் பற்றிய பக்கத்தை கைப்பற்றிய அவரது எதிர்ப்பாளர்கள், அவரைப் பற்றி அவதூறான கருத்துக்களை தொடர்ச்சியாக எழுதிக் கொண்டிருந்தார்கள். சுமார் இருபத்தோரு முறை அவற்றை திருத்திய விக்கிப்பீடியா, கடைசியாக வெறுத்துப் போய் கபில் சிபலின் பக்கத்தை யாரும் திருத்த முடியாமல் முடக்கி வைத்திருக்கிறது.
‘இது என்னுடைய நாடு. கருத்து சுதந்திரம் என்னுடைய பிறப்புரிமை. தயவுசெய்து நீங்கள் நரகத்துக்கு போய்விடுங்கள் சார்’ என்று கபில் சிபலை ட்விட்டரில் கேட்டுக் கொள்கிறார் கவிஞர், பத்திரிகையாளர், அரசியல்வாதி என்று பன்முகங்கள் கொண்ட ப்ரிதீஷ் நந்தி.
சமூக வலைத்தளங்களில் தீவிரமாகப் பங்கெடுத்து வரும் நரேன், அரசின் மிரட்டல் முட்டாள்தனமானது என்று கோபப்படுகிறார். "இந்தியாவில் தீர்க்கப்படாத எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கின்றன. விவசாயிகள் கூட்டம் கூட்டமாக தற்கொலை செய்துகொள்கிறார்கள். இந்தியாவின் கிழக்கு மாநிலங்கள் சுதந்திரம் கண்டதிலிருந்தே எவ்வித முன்னேற்றங்களையும் காணாமல் பின் தங்கியிருக்கின்றன. நாட்டின் அடிப்படைப் பிரச்சினைகளை தீர்க்க வக்கில்லாமல் இருக்கும் அரசு, கருத்து சுதந்திரத்தின் குரல்வளையை நெரிக்க முற்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது" என்கிறார்.
ஆனால், இணையதளங்களால் பாதிக்கப்பட்டவர்கள் கபில் சிபலுக்கு ஆதரவாகப் பேசுகிறார்கள். ஃபேஸ்புக் மாதிரியான சமூக வலைத்தளங்களில் பங்கேற்கும் காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, "அமெரிக்காவில் சொகுசாக உட்கார்ந்துகொண்டு எவனோ, எதையோ எழுதிப்போட, இங்கே காஷ்மீரின் தெருக்களில் வன்முறைக் கும்பலின் கல்வீச்சை நான் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. வன்மங்களை தூண்டும் கருத்துக்களால் மக்களின் உயிருக்கு கூட அச்சுறுத்தல் ஏற்படுகிறது. இது ஏதோ நிறுவனங்களின் சமூக வலைத்தளங்களின் தனிப்பட்ட கொள்கை ரீதியிலான பிரச்சினையாகப் பார்த்து நடவடிக்கை எடுக்கப்படாமல் போய்விடக்கூடாது. நிஜமான சமூகப் பிரச்சினையாக இது பார்க்கப்பட வேண்டும். பயனாளர் என்கிற அடிப்படையில் ஃபேஸ்புக் மற்றும் யூ ட்யூப் தளங்கள் எவ்வளவு அபாயகரமானவை என்று எனக்குத் தெரியும்" என்கிறார்
கடந்த ஆண்டு இவரையும், இவரது குடும்பத்தாரையும் கொச்சைப்படுத்தி புகைப் படங்களும் வாசகங்களும் இணையதளங்களில் வெளியான போது யார் மீதும் நடவடிக்கை எதுவும் எடுக்க வேண்டாம் என்று அப்போது பெருந்தன்மையாக கேட்டுக்கொண்டவர் இவர்.
ட்விட்டரில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டதால் அமைச்சர் பதவியை இழந்தவர் சசி தரூர். அவர் கபில் சிபலுக்கு சப்பைக்கட்டு கட்டும் விதமாகப் பேசுகிறார். "கபிலிடம் பேசினேன். அரசியல் கருத்துக்கள் குறித்த தணிக்கையை அவரும் கூட எதிர்க்கத்தான் செய்கிறார். ஆனாலும் மதம், மொழி ஆகியவற்றை கொச்சைப்படுத்தும் கருத்துக்களையும், படங்களையும் இணையத்தில் பயன்படுத்தி, அதன் மூலம் ஏற்படும் வெறுப்புணர்வு ஆகியவற்றைக் குறித்தே அவரது அக்கறை இருக்கிறது" என்கிறார் சசி தரூர்.
ஆச்சரியகரமான வகையில் கருத்து சுதந்திரத்துக்கு குரல் கொடுக்க வேண்டிய பத்திரிகைகள் பலவும் கபில் சிபலுக்கு ஆதரவாக களமிறங்கியிருக்கின்றன. ‘தினமணி’, ‘தினகரன்’ போன்ற தமிழ் நாளிதழ்கள் இணையதளங்களுக்கு கட்டுப்பாடு தேவை என்று தலையங்கமாகவே எழுதி வலியுறுத்தியிருக்கின்றன.
கருத்துக்களும் தகவல்களும் பரவுவது தொழில்முறைப் பத்திரிகையாளர்கள் கையில் மட்டும் இல்லை, இணையம் போன்ற தொழில்நுட்பங்கள், ‘மக்கள் இதழியல்’ (Citizen Journalism) சாத்தியமாக்கியிருக்கின்றன, அச்சு, தொலைக்காட்சி ஊடக ஆசிரியர்களின் வானளாவிய அதிகாரத்திற்கும் விருப்பு வெறுப்புகளுக்கும் பக்கச் சாய்வுகளுக்கும் அது சவால் விடுகிறது என்ற யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாத மனோபாவத்துடன் (அரசியல்வாதிகளைப் போலத்தான்) பத்திரிகையாளர்களும் இருக்கிறார்கள் என்பதைத்தான் இது காட்டுகிறது.
சமூக வலைத்தளங்களுக்கு வாய்ப்பூட்டுப் போட வேண்டும் என்று அரசு முயற்சிப்பதற்கு கபில் சிபல் வெளிப்படையாகச் சொல்லும் காரணங்களைத் தவிர, வேறு சில உள் நோக்கங்களும் இருக்க வேண்டும் என அரசியல் நோக்கர்கள் சந்தேகப்படுகிறார்கள். "காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீதும், கட்சி மீதும் மக்கள் கடுமையான வெறுப்பில் இருக்கிறார்கள். எனவேதான் மக்கள் இவர்கள் மீது வைக்கும் விமர்சனங்களை தவிர்க்க, இணையதளங்களின் குரல்வளையை நெரிக்க முயல்கிறார் கபில் சிபல்" என்று காட்டமாக எழுதுகிறார் பத்திரிகையாளரான சுதிர் சிங். சமூக வலைத்தள அதிகாரிகளை சந்தித்தபோது கபில் சிபல் காட்டிய ஆதாரங்கள் பலவும் சோனியா, மன்மோகனுக்கு எதிராக எழுதப்பட்டவையே என்பதைப் பார்க்கும்போது இந்தக் கருத்தை மிகைப்படுத்தல் என ஒதுக்கித் தள்ள முடிவதில்லை.
ஆனால், இது மட்டும்தான் காரணமா என்று பார்த்தோமானால், இதுவும் ஒரு காரணம் மட்டுமே. அரசின் மிரட்சிக்கு இன்னொரு காரணம், அன்னா ஹசாரே. இன்னும் சொல்லப்போனால் அரசு இணையத்தைக் கண்டு பயப்படுகிறது என்பதை விட அன்னாவைக் கண்டுபயப்படுகிறது என்பதுதான் சரியாய் இருக்கும்.
இந்த ஆண்டின் (2011) செயல்பாட்டைக் கணக்கிட்டு வரும் ஃபேஸ்புக் நிறுவனம், தனது தளத்தில் அதிகம் விவாதிக்கப்பட்ட இந்தியப் பிரச்சினை ஜன்லோக்பால் மசோதாவும், அன்னா ஹசாரேவும் என்று அறிவித்திருக்கிறது. மற்ற சமூக வலைத்தளங்களும் ஹிட்ஸ் அடிப்படையில் கணக்கிட்டால் ஹசாரேவே முதலிடத்தில் இருப்பார்.
ஹசாரே உண்ணாவிரதம் இருந்தபோது அதுகுறித்த செய்திகளை உடனுக்குடன் பரப்ப இணையம் பெரிதும் உதவியது. தனக்கு எதிரான செய்திகள் அதிகம் வெளிவராதமாதிரி, மற்ற ஊடகங்களை ‘ஏதோ ஒருவகையில்’ அரசால் கட்டுப்படுத்த முடியும் என்கிற நிலையில், இளைய தலைமுறையின் மக்கள் ஊடகமான இணையத்தைக் கட்டுப்படுத்த முடிவதில்லை. ‘ஊழலுக்கு எதிரான இந்தியா’ (IAC – India against Corruption) எனும் அமைப்பு தனது ஃபேஸ்புக் செயல்பாடுகள் மூலமாகவே, ஹசாரே உண்ணாவிரதங்களின் போது பெரும் எதிர்ப்பலையை இந்திய ஊழல்வாதிகளுக்கு எதிராக எழுப்பியது.
இப்போது மீண்டும் அன்னா ஹசாரே அடுத்தகட்ட உண்ணாநிலைப் போராட்டத்துக்கு தயாராகி வருகிறார். இந்நிலையில் மக்களிடையே இருக்கும் ஆயுதமான இணையம், அவருக்கு ஆதரவாக ஒட்டுமொத்தமாக களமிறங்கும் என்கிற அச்சம் அரசுக்குஇருக்கலாம். எனவேதான் இருக்கிற பிரச்சினைகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, இணைய தணிக்கைக்கு மணி அடித்திருக்கிறார் கபில் சிபல்.
ஆனால், உலகங்கும் அதிகாரத்திற்கெதிரான குரலாக சமூக வலைத்தளங்கள் எழுந்து வருகின்றன. எகிப்து, லிபியா, சிரியா என்று பல்வேறு நாடுகளில் ‘மக்கள் புரட்சி’ ஏற்பட ஸ்மார்ட் போன், ஃபேஸ்புக், ட்விட்டர் என்பவையே ஆதாரமாக இருந்தன. எகிப்துப் புரட்சியை பத்திரிகைகள் ஃபேஸ்புக் புரட்சி என்றே எழுதின. சில மாதங்களுக்குமுன் இங்கிலாந்தில் வெடித்த இனக்கலவரத்திற்கு சமூக வலைத்தளங்கள்தான் காரணம் என அதன் அயலுறவுத்துறை செயலர் வில்லியம் ஹேக் குற்றம் சாட்டினார். ரஷ்யாவில் சமீபத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சியில் இருந்த பிரதமர் புடின் கட்சி பெரும் சரிவினை சந்தித்ததற்கு சமூக வலைப்பின்னல் தளங்களில் அரசுக்கு எதிராக நடந்த பிரச்சாரங்கள்,காரணமாக கூறப்படுகிறது. அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் (ஒபாமா) அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட, ஃபேஸ்புக்கின் பங்களிப்பு கணிசமானது. எனவே, இந்தியாவிலும் சமூக வலைத்தளங்கள் அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்ற அச்சம், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்டிருக்கலாம்.
ஆனால், வரலாற்றை அறிந்தவர்களுக்குத் தெரியும். கூடன் பெர்க், அச்சு இயந்திரத்தை உருவாக்கிய நாளிலிருந்து தொழில்நுட்பங்கள் எப்போதும் அதிகாரத்தை வீழ்த்த ஒரு கருவியாக வரலாறு நெடுகப் பயன்பட்டு வந்திருக்கிறது. பெர்லின் சுவர் வீழ்ந்தபோது, அப்போது சோவியத்அதிபராக இருந்த மிகைல் கொர்பச்சேவ் சொன்னார்: ‘அந்த நெடுஞ்சுவரில் முதல் விரிசல் விழக் காரணமாகயிருந்தது, ஃபேக்ஸ் மெஷின் என்ற சிறிய கருவி.’
இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல.
No comments:
Post a Comment