பூக்கள் ஏன் கண்கவர் வண்ணங்களில் இருக்கின்றன?
எல்லா பூக்களும் கண்கவர் வண்ணங்களில் இருப்பதில்லை ஷோபனா. பகலில் பூக்கும் பூக்கள் மட்டுமே சிவப்பு, மஞ்சள், வயலட், நீலம் என்று ஆழ்ந்த நிறங்களுடன் காட்சி தருகின்றன. மாலையில் மலரும் மல்லி, முல்லை, ஜாதிமல்லி போன்ற பூக்கள் எல்லாம் வெள்ளை நிறத்தில்தான் இருக்கின்றன. தாவரங்களால் நடந்து செல்ல இயலாது. எனவே மகரந்தச் சேர்க்கைக்கு பூச்சிகள், பறவைகள், காற்று போன்றவற்றை நம்பித்தான் இருக்கின்றன தாவரங்கள். பூச்சிகளுக்கும் பறவைகளுக்கும் நிறங்களைப் பார்க்க முடியும். அதனால் பூச்சிகளையும் பறவைகளையும் தங்களை நோக்கி வரவழைக்க தாவரங்கள் கண்கவர் வண்ணங்களில் பூக்கின்றன. பூக்களில் அமர்ந்து பூந்தேனைச் சுவைத்துவிட்டு, அடுத்த பூவுக்குச் செல்லும்போது ஒரு தாவரத்திலிருந்து மற்றொரு தாவரத்துக்கு மகரந்தத் தூள் பரவுகிறது. இதன் மூலம் மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது.
இரவில் மலரும் பூக்கள் கண்கவர் வண்ணங்களில் இருந்தால் இருளில் பூச்சிகளுக்குத் தெரியாமல் போய்விடும். வெள்ளை நிறத்தில் இருந்தால் எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடியும். அத்துடன் நறுமணத்தையும் அவை வெளியிடுகின்றன. நிறத்தால் தெரியாவிட்டாலும் கூட, மணத்தால் பூக்களை அடைய முடியும்.
காகத்துக்கு காது உண்டா?
பறவைகளுக்குக் காது உண்டு . நம்மைப் போல வெளிப்புறம் தெரிகிற மாதிரி காதுகள் கிடையாது. தலையின் இரண்டு பக்கங்களிலும் சிறிய காது துளை உண்டு. இதைச் சிறிய இறகுகள் மூடியிருக்கும். இதன் மூலம் நம்மைப் போலவே பறவைகளும் ஒலிகளை உணருகின்றன. மிக மெல்லிய ஒலியைக் கூட பறவைகளால் கேட்க முடியும்.
நெப்போலியன் எப்படி அரசரானார்? அவர் மர்மமான முறையில் இறந்தார் என்பது உண்மையா?
1769ம் ஆண்டு இத்தாலிக்கு அருகிலுள்ள கோர்சிகா தீவில் பிறந்தார் நெப்போலியன். பிரான்ஸில் ஆயுதப் பிரிவில் வேலை செய்துவந்தார். பிரான்ஸுக்கு எதிராகப் போர்களை வழிநடத்தி, முதல் கன்சலாகப் பதவி ஏற்றார். ஐந்து ஆண்டுகள் அந்தப் பதவியை வகித்த பின்னர், பிரான்ஸின் பேரரசரானார். அதிலிருந்து பத்தாண்டுகள் தொடர்ந்து போர்களில் ஈடுபட்டார். இதன் மூலம் ஐரோப்பா கண்டத்தின் மிக முக்கியமான ஆளுமையாக மாறிப் போனார். தான் பிடித்த நாடுகளில் உறவினர்களையும் நண்பர்களையும் அரசர்களாக நியமித்தார். 1812-ம் ஆண்டு ரஷ்யாவை ஆக்கிரமிக்கும்போது தோல்வியைச் சந்தித்தார்.அந்தத் தோல்வியிலிருந்து அவர் சரிவைச் சந்திக்க ஆரம்பித்தார். அவருக்கு எதிரான ஆறாவது கூட்டணி பிரான்ஸுக்குள் நுழைந்தது. நெப்போலியனைப் பதவியில் இருந்து இறக்கியது. எல்பா தீவுக்கு நாடு கடத்தியது. ஆனால் மனம் தளராத நெப்போலியன் ஓராண்டுக்குள் மீண்டும் படையெடுத்து பிரான்ஸைக் கைப்பற்றினார். 1815-ல் வாட்டலூ என்ற இடத்தில் மீண்டும் நெப்போலியன் தோல்வி அடைந்தார். ஆறு ஆண்டுகள் செயின் ஹெலனா தீவில் கழித்தார். 1821-ம் ஆண்டு இரைப்பையில் ஏற்பட்ட புற்று நோயால் இறந்து போனார்.
No comments:
Post a Comment