Friday, December 23, 2011

கலைஞரின் ஆதரவு தமிழ் இனத் துரோகம்! பரிதி திடீர் பாய்ச்சல்!

பல ஆண்டு காலமாக இருந்த ஒரு காட்சியில் திடீர் மாற்றம். கடந்த வாரம் கூடிய தி.மு.க. கட்சிக்குழுக் கூட்ட மேடையில் பரிதி இளம்வழுதி இல்லை. அவருக்குப் பதிலாக நியமிக்​கப்பட்டு இருந்த வி.பி.துரைசாமி உட்கார்ந்து இருந்தார். அதாவது வெளிப்படையாக நடந்தது. ஆனால், தி.மு.க. தலைமைச் செயற்குழுக் கூட்டத்திலும் பரிதி இளம்வழுதியைக் காணோம். அந்தக் கேள்விக்​காகவே பரிதியைத் தொடர்பு​கொண்டோம்.!

''தலைமைச் செயற்குழு உறுப்பினரான நீங்கள் ஏன் அந்தக் கூட்டத்தைப் புறக்கணித்​தீர்கள்?''

''நான் புறக்கணிக்கவில்லை! தலைமை, என்னை அழைக்க​வில்லை. நான் வருவதை விரும்பவில்லை என்பதுதான் முழு உண்மை. முல்லைப் பெரியாறு அணை விவகாரத்​துக்காக, அவசரமாக இந்தக் கூட்டத்தை தலைவர் கலைஞர் கூட்டினார். காலஅவகாசம் இல்லாததால் அழைப்பு அனுப்ப இயலாமல் அனைவரையும் போனில் தொடர்பு கொண்டு சொல்லி இருக்கிறார்கள். எனக்கு மட்டும் சொல்லவில்லை. எங்கேயோ கன்னியாகுமரியில் இருந்த உறுப்பினருக்கு கிடைத்த போன் இணைப்பு... இங்கே பாலவாக்கத்தில் இருக்கிற எனக்கு கிடைக்காததற்குக் காரணம்... மனம் இல்லை என்பதுதான். 'பரிதி வரக்கூடாது’ என்று நினைக்கிறார்கள். 'முரசொலி’யில் வந்த விளம்பரத்தையே அழைப்பாக ஏற்று நான் போயிருக்கலாம். தேவையற்ற மோதலை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காகவே நான் போகவில்லை!

துணைப் பொதுச்செயலாளர் என்பது நியமனப் பதவி. குடும்ப உறுப்பினர்கள் சேர்ந்துகூட நீக்கலாம். ஆனால், தலைமைச் செயற்குழு உறுப்பினர் என்பது வட சென்னை மாவட்டத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பேரில் நானும் ஒருவன். அதைத் தங்கள் விருப்பத்துக்கு வளைக்க முடியாது.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு சில விஷயங்களைச் சொல்ல வேண்டும் என்று நான் நினைத்திருந்தேன். அதைத் தெரிந்து பயந்துகூட அழைக்காமல் இருந்திருக்கலாம்!''

''என்ன பேசி இருப்பீர்கள் நீங்கள்?''

''மத்திய அரசாங்கத்தின் துரோகத்தைக் கண்டித்து தி.மு.க. அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும், மன்மோகன் சிங் அரசுக்கு தி.மு.க. தரும் ஆதரவை வாபஸ் பெற வேண்டும் என்று பேசலாம் என்று இருந்தேன்!

முல்லைப் பெரியாறு விவகாரம் ஏதோ ஓர் அணைப் பிரச்னை மட்டும் அல்ல. ஐந்து மாவட்டங்களை உள்ளடக்கிய தென் தமிழகத்தின் வாழ்வாதாரத்தைத் தீர்மானிக்கின்ற விவகாரம். நூற்றாண்டு காலப் பாரம்பர்யமிக்க அணையை, ஏதோ ஒரு ரோட்டுக் கடையைப் போல இடிக்கத் துடிக்கின்றன கேரளக் கட்சிகள். இதை அந்த மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் அரசு தூண்டிவிடுகிறது. சோனியாவும் பிரதமரும் இதை வேடிக்கை பார்க்கிறார்கள். இப்படிப்பட்ட மத்திய அரசாங்கத்தை தி.மு.க. ஆதரிப்பது தமிழினத் துரோகம் அல்லவா? பதவிக்காக மத்திய மந்திரிகளாக நம்மவர்கள் தொடரத்தான் வேண்டுமா என்பதுதான் என்னுடைய கேள்வி!''

''முல்லைப் பெரியாறு விஷயத்தில், மத்திய அரசுக்கு கருணாநிதி தொடர்ந்து கடிதம் அனுப்பிக் கோரிக்கைகளை வைத்து வருகிறாரே?''

''கலைஞர் கடிதம் எழுதுகிறார். ஆனால், அங்கே இருந்துதான் பதில் இல்லை. பதில் போடாதவருக்குக் கடிதம் எதற்கு எழுத வேண்டும்? மத்திய அரசாங்கத்தில் இருந்து தி.மு.க. வெளியேறி​னால்தான் தமிழினத் தலைவர் என்ற பட்டத்துக்கு கலைஞர் பொருத்தமானவராக இருக்க முடியும்!''

''அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட வேண்டும் என்று கருணாநிதி சொல்லி இருப்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா?''

''முள்ளிவாய்க்காலில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட வேதனையான தருணத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டினார் கலைஞர். தமிழக எம்.பி.க்கள் அனைவரும் ராஜினாமா செய்யத் தயார் என்று வீரமாக அறிவித்தார். ஆனால், இரண்டு வாரங்களில் நைஸாகப் பின்வாங்கிவிட்டார். அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டி இதை விவாதிக்க வேண்டும் என்று பழ.நெடுமாறன் உள்ளிட்ட தலைவர்கள் கோரிக்கை வைத்தபோது, சட்டமன்றக் கட்சிகளின் கூட்டத்தை சுருக்கமாகக் கூட்டி முடித்துக்கொண்டார். அப்படிப்பட்டவர் இந்த மாதிரியான கோரிக்கையை வைக்கலாமா? இதில் விவாதிக்க வேண்டிய அளவுக்கு எந்த வேறுபாடும் எந்தக் கட்சிக்கும் இல்லை. மாறுபாடு இருப்பதெல்லாம் மன்மோகன் சிங்குக்கு மட்டும்தான். அவரை ஆதரித்து நாம் பேசுவது, தமிழனத் துரோகம்.

இன்றைக்குக்கூட கூடங்குளம் அணுமின் நிலைய விவகாரத்தில் கருத்து சொல்லும்போது கலைஞர் தடுமாறியிருக்கிறார். கூடங்குளம் திறக்கப்பட வேண்டுமா? கூடாதா? தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன என்று சொல்ல முடியாமல்... 'எல்லாரையும் கலந்துகொண்டுதான் பிரதமர் சொல்லியிருக்க முடியும். கலந்துகொண்டு சொல்லி இருந்தால், அந்தக் கருத்து வரவேற்கத்தக்கதாகவே அமையும்’ என்று வெண்டைக்காயை விளக்கெண்ணெய்யில் தேய்த்துச் சொல்லி இருக்கிறார். கூடங்குளம் செயல்படத் தொடங்கும் தேதி, பிரதான கூட்டணிக் கட்சி என்ற அடிப்படையில் தி.மு.க. தலைமையிடம் கலந்து ஆலோசிக்கப்பட்டதா? கலைஞர் சம்மதம் தெரிவித்தாரா? என்பதும் என்னைப் போன்ற தொண்டன் மனதில் இருக்கும் சந்தேகம்!''

''கருணாநிதியின் இத்தகைய செயல்பாடுகளுக்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?''

''தன் குடும்ப நலனைத் தவிர மற்ற சிந்தனைகள் எதுவும் இல்லாததுதான் ஒரே காரணம்!''

No comments:

Post a Comment