Thursday, December 15, 2011

மீண்டும் மன்னார்குடி அசெம்பிளி?

ழுகார் வந்ததும் ரெண்டு விரலை நம் முன் நீட்டினார்!''தமிழ்நாட்டுச் செய்திகளுக்கு அப்புறம் வருகிறேன். அதற்கு முன் உமக்குத் தேவை கேரளத்துச் செய்தியா... கர்நாடக நியூஸா?'' என்றார்.கூரிய நகங்கள் குத்திவிடாமல் ஒரு விரலைத் தொட்டோம்.


''வாசகர்களுக்கு இது சர்க்கரைக் கட்டி. ஆனால், அம்மாவுக்கோ வேப்பங்கட்டி'' என்றபடி கிசுகிசுத்தது கர்நாடக ரகசியம்.
''பெங்களூரு தனி நீதிமன்றத்தில் ஆஜரான ஜெய லலிதா, சரம் சரமான கேள்விகளுக்குச் சளைக்காமல் பதில் சொன்னது ஒரு பக்கம். வழக்கு சரியான பாதையில் போகும் என்ற நம்பிக்கையோடு அவர் நிமிர்ந்திருக்கும் சமயத்தில், வேறு சில தகவல்கள் கிடைத்து அதிர்ந்துபோனாராம். கடைசியாக சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு போன செய்தியை கடந்த இதழில் சொல்லியிருந்தேன்... அதன் தொடர்ச்சிதான் இந்த அதிர்ச்சித் தகவல்!''
''சொல்லும்... சொல்லும்!''
''சித்தி சசிகலாவின் பக்கத்தில் உட்கார்ந்து உற்சாகமாக சுதாகரன் பேசிய காட்சியை விவரித்து இருந்தேன். தமிழ்நாட்டில் இருந்து அனுப்பிவைக்கப்பட்ட உளவு போலீஸார், அதையும் தாண்டி சில விஷயங்களை அங்கே நோட் பண்ணினார்களாம். அண்மைக் காலமாக ஒதுக்கிவைக்கப்பட்ட ஒரு மனிதரும், மன்னார்குடி குடும்பத்தின் வேறு பல தலைகளும் அப்போது கோர்ட் வளாகத்துக்குள் தென்பட்டனவாம். சசிகலாவின் அண்ணியான இளவரசியின் மருமகன் தலையில் தொப்பி, பெரிய கூலிங் கிளாஸ் மாட்டிக்கொண்டு தன் அடையாளத்தை மறைத்தபடி சுறுசுறுப்பாக சுற்றி வந்தாராம். போயஸ் தோட்டத்தால் கசந்து ஒதுக்கப்பட்ட பரபரப்பான பிரமுகர் ஒருவரேகூட ரகசியமாக அப்போது பெங்களூரு வந்து இவர்களுக்குப் பக்கபலமாக திரை மறைவு மேற்பார்வைகள் நடத்திவிட்டுப் போனதாகவும் உளவுப் போலீஸாருக்குத் தகவல்!''
''ஆஹா... அவருமா?''
''இதெல்லாம் அம்மாவுக்குத் தெரிந்ததுமே ஏகத் துக்கும் அப்செட் ஆனார் என்கிறார்கள். சொத்துக் குவிப்பு வழக்கின் முடிவு பாதகமாக வந்து, அதனால் ஜெயலலிதா பதவி விலகி இருக்கவேண்டிய சூழ்நிலை வருமா என்று அவருடைய அரசியல் எதிரிகள் கண் கொத்திப் பாம்பாகப் பார்த்துவரும் நிலையில், அதே வழக்கைச் சாக்காக வைத்து மன்னார்குடி மனிதர்கள் மறுபடி சங்கமம் ஆவது எப்படிப்பட்ட அடையாளம்? இதன் பின்னால் ஓர்ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்துகிடப்பதாக நினைக்கிறார்கள் அம்மையாரின் அசைக்க முடியாத விசுவாசிகள். அதிலும், உளவுப் பிரிவில் உள்ள ஓர் உயர் அதிகாரி, உச்ச நீதிமன்ற வட்டாரத்தில் செல்வாக்கோடு வளைய வந்த ஒரு 'கிருஷ்ண பரமாத்மா'வின் உதவியாளர் கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் எப்படி 'மனை மாட்சி'யுடன் வளைக்கப்பட்டார் என்பதை நினைவூட்டுகிறார். நீதித் துறையில் பழம் தின்று கொட்டை போட்ட அந்த 'கிருஷ்ண பரமாத்மா'வை மன்னார்குடி மனிதர்கள் சிலர் அடிக்கடி ரகசியமாகத் தொடர்புகொள்வதன் பின்னணி என்ன என்பதையும் ஆராய ஆரம்பித்திருக்கிறார் 'அம்மா விசுவாச' உளவுத் துறை அதிகாரி!''
'தலை சுற்றுகிறதே..!''
''எப்படியோ... 'அம்மா ஓரளவு அலெர்ட் ஆகிட்டாங்க. பெங்களூரு வழக்குத் தொடர்பாக தான் போகிறபோது தென்படாத தலைகள், மற்றவர்கள் போகிறபோது மட்டும் தென்பட்டால், அதுகுறித்து முழு ரிப்போர்ட்டைத் தனக்குத் தந்தாக வேண்டும் என்று பூவான ஒரு பெரிய அதிகாரிக்கு உத்தரவு' என்று கோட்டைப் பக்கம் பரபரப்பாகப் பேச்சு. போலீஸில் ஒரு பெரிய தலை உருண்டதற்கும் இத்த கையத் தொடர்புகளும் ஒரு காரணம் என்கிறார்கள்.''
''அந்த ரகசியத்தையும் சொல்லும்!''
''சமீபத்தில் பாசமான ஒரு ஃபைனான்சியர் போலீஸ் வலையில் சிக்கினார். அவரை தோட்டம் வளர்த்துப் பின் விரட்டிய ஒருவரின் பினாமி என்றும் சொல்வார்கள். அந்த ஃபைனான்ஸ் பிரமுகரை அரெஸ்ட் காட்ட ஒரு அதிகாரி முழு முயற்சி எடுத்தபோது, சென்னையில் இருந்து திடீரென ரகசிய உத்தரவு போனதாம்.
'இதெல்லாம் கொடுக்கல் வாங்கல் தகராறு தானே! விட்ருங்க... அவங்க செட்டில் பண்ணிக் குவாங்க’ என்று சொன்னதாம் அந்தக் குரல் இதை அந்த போலீஸ் அதிகாரி, முதல்வருக்கு நெருக்கமான அதிகாரிக்குச் சொல்ல... அவர் முதல்வருக்குச் சொல்ல.... உருண்டதாம் தலை. 'யாரை எனக்குப் பிடிக்காதோ... அவருக்கு ஆதரவுக் கரம் நீட்டுவீங்களா?’ என்று கொந்தளிப்பு கேட்டதாம் கார்டனில்!''
''போகிற போக்கைப் பார்த்தால், ஏதோ ஒருவித சதி வலை இறுக்கமாகப் பின்னப்படுவதாகத் தெரிகிறதே!'' என்றோம் நாம். அதற்கு சிரிப்பையே பதிலாகத் தந்தபடி தொடர்ந்தார் கழுகார்!
''ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்ற ஏழு மாதங்களில் நான்காவது முறையாக அமைச்சரவையை மாற்றி அமைத்திருக்கிறார். அமைச்சரான 34 நாட்களுக்குள் பதவியைப் பறி கொடுத்தார் பரஞ்சோதி. திருச்சி மேற்குத் தொகுதி இடைத் தேர்தலில் எம்.எல்.ஏ. ஆன கையோடு, அமைச்சர், மாவட்டச் செயலாளர் என்று அடுத்தடுத்து ஜாக்பாட் அடித்தவருக்கு, இப்படி ஓர் இறங்கு முகம் யாரும் எதிர்பார்க்காதது. பரஞ்சோதி அமைச்சர் ஆக்கப்பட்டபோது, ஆசி பெறுவதற்காக குடும்பத்தினரோடு ஜெயலலிதாவை போயஸ் கார்டனில் சந்தித்தார் பரஞ்சோதி. டாக்டர் ராணி விவகாரம் தொடர்பாக பரஞ்சோதியின் மனைவியிடம் பேசிய ஜெயலலிதா, 'பரஞ்சோதி மீது எனக்கு நம்பிக்கை இருக்கு. அவர் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகளைப்பற்றி கவலைப் படாதே’ என்றாராம். அந்த அளவுக்கு பரஞ்சோதி மீது நம்பிக்கை வைத்த ஜெயலலிதா, திடீரென்று பரஞ்சோதியை கழற்றிவிடக் காரணமே ஸ்டாலின்தான் என்று கடந்த இதழில் சொல்லியிருந்தேன்.''
''ஆமாம்!''
''சட்டத் துறையை யார் வைத்திருக்கிறார்களோ அவர்கள் அடுத்தடுத்து அமைச்சர் பதவியில் இருந்து கழற்றிவிடப்பட்டு வருகிறார்கள். முதலில், இசக்கி சுப்பையா. அதன் பிறகு செந்தமிழன். இப்போது பரஞ்சோதி. புதிய சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் இப்போதே திகிலில் இருக்கிறார்.''
''இந்து அறநிலையைத் துறையைக் கவனித்தவர்கள் எல்லாம் அவ்வளவாக அரசியலில் சோபிக்கவில்லை என்றும் ஒரு ஆரூடம் சொல்லப்படுமே?''
''அரசியலில் ஆரூடங்களுக்காக பஞ்சம்? இதில் அதிர்ச்சிக்கு உரியது செல்வி ராமஜெயத்தின் பதவி பறிப்புதான். கடந்த 9-ம் தேதிதான் அமைச்சர்கள் பதவி பறிப்பு வெளியானது. அறிவிப்பு வருவதற்கு இரண்டு மணி நேரம் முன்புதான் அண்ணா பல்கலைக்கழகத்தின் விவேகானந்தா அரங்கத்தில் நடந்த அனைத்து நாடுகள் மாற்றுத் திறனாளிகள் தின விழாவில் கலந்துகொண்டார். விழா முடிந்து மேடையைவிட்டு இறங்கிய போது அவருடைய அமைச்சர் பதவி பறிக்கப்பட்டு இருந்தது. செல்வி ராமஜெயத்தின் பதவிப் பறிப்புக்கு அவர் துறையில் நடந்த ஒரு விவகாரமே காரணம் என்கிறார்கள்.
ராமஜெயம் பதவி பறிக்கப்படுவதற்கு இரண்டு நாட்கள் முன்புதான் அவருடைய சமூக நலம் மற்றும் சத்துணவுத் துறையின் செயலாளரும் கூடுதல் தலைமைச் செயலாளருமான ஷீலா பாலகிருஷ்ணன், நகராட்சி நிர்வாகத் துறைக்கு மாற்றப்பட்டு இருந்தார். மாற்றுத் திறனாளிகள் தினம் சமீபத்தில் வந்தபோது, அதை அரசின் சார்பில் சிறப்பாகக் கொண்டாடவில்லை என்கிற புகார் எழுந்ததாம். மத்திய அரசுக்கு எதிராக ஜெயலலிதா பேசி வரும் நிலையில், முதியோர் உதவித் தொகையாக தரப்படும் 1,000 ரூபாயில் 200 ரூபாய் மத்திய அரசு தருகிறது என்று கடலூரில் நடந்த விழாவில் ராமஜெயம் பேசினாராம்.. இதுவும் ஜெயலலிதாவுக்கு கோபத்தை ஏற்படுத்திவிட்டது. விழாவுக்கு போகும்போதுகூட விலை உயர்ந்த சேலைகளை ராமஜெயம் அணிந்து வருவாராம். குழந்தைகள் விழா ஒன்றில் அவர் அணிந்து வந்த சேலையைப் பார்த்து கோபப்பட்டதாம் கார்டன் வட்டாரம்.''
''ம்!''
'' 'நான் சீக்கிரமே மந்திரி ஆகப்போறேன். லிஸ்ட்ல வரப் போகுது பாருங்க’ என்று சொல்லி வந்த வளர்மதிக்கு, பதவி கிடைத்துவிட்டது!
முதல்வர் ஜெயலலிதாவின் இணைச் செய லாளராக இருந்த ரீட்டா ஹரீஸ் தாக்கர் ஐ.ஏ.எஸ். சத்தம் இல்லாமல் அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். அதிகாரிகளுக்குள் நடக்கும் மோதலின் விளைவு இது என்கிறார்கள் கோட்டை யில்'' என்ற கழுகாரை அடுத்த சப்ஜெக்ட் பக்கமாகத் திருப்பினோம்!

''முல்லைப் பெரியாறு விஷயத்தில் என்னதான் நடக்கிறது?''

''எந்த ஒருங்கிணைப்பும் இல்லாமல் அரசியல் கட்சிகளின் பின்பலம் இல்லாமல், தேனி மாவட்ட மக்கள் சுமார் ஒரு லட்சம் பேர் வரையில் முல்லைப் பெரியாறு பிரச்னைக்காக கேரளா நோக்கிப் பேரணி நடத்தியது, அரசுக்கு பெரிய அதிர்ச்சி. இதனை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்ற முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. 'போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது தடியடி நடப்பதற்குக் காரணமாக இருந்தவர் சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி-யாக இருந்த ஜார்ஜ்’ என்று அதிகாரிகள் மட்டத்திலேயே கொந்தளிப்பு கேட்கிறது. 'அவர் ஒரு மலையாளி என்பதால், கேரளாவுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார்’ என்றும் சிலர் சொல்கிறார்கள்!''
''தேனி மாவட்டத்தில் நடப்பவை முதல்வருக்கு உடனுக்குடன் போய்ச் சேர்கிறதா?''
''தமிழக எல்லை ஓரத்தில் உள்ள கேரளக்காரர் களின் வீடு, கடை போன்ற உடைமைகளைப் பாது காப்பதில்தான் அதிகக் கவனம் செலுத்துகிறார்கள் போலீஸார். 'ஏதோ நாங்கள் இங்கு உள்ள கேரளக்காரர்களின் சொத்துக்களை அபகரிக்க நடக்கும் கலவரம் இது என்கிற ரீதியில் ஆட்சி மேலிடத்துக்கு போலீஸ் அறிக்கை கொடுத்ததாகக் கேள்விப்பட்டோம். அதே போல், டிசம்பர் 10-ம் தேதியன்று நடந்த போராட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்கள், கிராமத்தினர் என்று 7,000 பேர் கலந்துகொண்டதாக முதல் கட்ட அறிக்கை போயிருக்கிறது. பத்திரிக்கைகளில் 80 ஆயிரம் என்று எழுதுகிறார்கள். அப்படி இருக்க எந்தக் காரணத்துக்காக மக்கள் எண்ணிக்கையைக் குறைத்து போலீஸ் காட்டவேண்டும்? இதில் ஏதோ உள்நோக்கம் இருப்பதாக சந்தேகப்படுகிறோம்.

போராடும் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது மாவட்ட கலெக்டர் பழனிச்சாமி உள்ளிட்ட வருவாய்த் துறையினர். தமிழர்களின் குமுறல்களை உள்ளார்ந்த நட்புடன் பகிர்ந்துகொள்கிறார்கள். ஆனால், எல்லை ஓரச் சட்டம் - ஒழுங்கைக் கவனிக்கும் போலீஸாரை வழிநடத்தும் போலீஸ் உயர் அதிகாரிகள் சிலரை நினைத்தால்தான், டென்ஷனாக இருக்கிறது. போராட்டக் களத்தில் நிற்கும் முக்கிய அதிகாரிகளில் தேனி மாவட்ட எஸ்.பி-யான பிரவீண் குமார் அபினபு ஆந்திரக்காரர். இந்த மாவட்டத்தை உள்ளடக்கிய திண்டுக்கல் சரக டி.ஜ.ஜி-யான சஞ்சய் மாத்தூர் ராஜஸ்தான்காரர். தென் மண்டல ஐ.ஜி-யான ராஜேஸ்தாஸ் ஒடிஸாக்காரர். இவர்களுக்கு எல்லாம் உயர் பதவியில் இருக்கும் கூடுதல் சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி-யான ஜார்ஜ், கேரளக்காரர். இவர்களுடன் வேறு எத்தனையோ தமிழ்நாட்டு போலீஸ் அதிகாரிகள் இருக்கிறார்கள்தான். இருந்தாலும், முக்கிய அதிகாரிகள் மூவரும் தமிழர்கள் மீது கரிசனப் பார்வை காட்டுவதாகத் தெரியவில்லை’ என்றும் சொல்கிறார்கள். ஐ.ஜி-யான ராஜேஸ்தாஸ் மைக்கில் பொதுமக்களிடம் பேசும்போது கோபத்தில் வார்த்தைகளை அள்ளி விடுகிறார். பரமக்குடி கலவரத்தில் துப்பாக்கி சூடு நடந்தபோது இவர் தானே ஐ.ஜி! அங்கு போலீஸ் நடந்துகொண்டதை நாடறியுமே?''

''15ம் தேதி தமிழக சட்டமன்றம் இந்த விவகாரத்துக்காகக் கூட இருக்கிறது. அதன் பிறகாவது அமைதி திரும்புமா?''
''இரண்டு பக்கமும் அமைதி திரும்ப வேண்டும் என்று முதல்வர் நினைக்கிறார். 'உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் 142 அடித் தண்ணீரை தேக்க மதகினை (ஷட்டர்) உடனடியாக இறக்க வேண்டும், அணைக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு வேண்டும்’ என்ற தீர்மானத்துடன் 'முல்லை பெரியாறு அமைந்துள்ள இடுக்கி மாவட்டத்தை தமிழகத்தோடு இணைக்க, அந்த மாவட்ட மக்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும்’ என்றும் தீர்மானம் போடப்போவதாகச் சிலர் சொல்கிறார்கள்'' என்ற தகவலை உதிர்த்துவிட்டுக் கிளம்பினார் கழுகார்!

No comments:

Post a Comment