‘‘எதிர்பாராத ஒரு பொழுதில எதுவும் நமக்கு நேரலாம். நடந்து போகும்போது ஒரு லாரி தறிகெட்டு வந்து தட்டிட்டுப் போகக்கூடும். இல்லாட்டி வேலிபோட பள்ளம் தோண்டினா ஒரு புதையலும் அங்கே கிடைக்கலாம். சந்தர்ப்பங்கள் எதையும் சாத்தியமாக்கிடும்.
அப்படி ஒரு இளைஞனின் வாழ்க்கையில எதிர்பாராமல் நடக்கிற சம்பவங்கள் அவனை எப்படிப் புரட்டிப் போடுதுன்னு ஒரு கதையை இயல்புக்கு நெருக்கமா வச்சு சொல்லியிருக்கேன். இதைப் பார்த்து நீங்க ரசிக்கலாம், சிரிக்கலாம், அதிரலாம், நெகிழலாம், ஆனந்தப் படலாம்...’’ என்கிறார் ஃபெதர்டச் என்டர்டெயின்மென்ட்ஸின் ‘தடையறத் தாக்க’ இயக்குநர் மகிழ் திருமேனி.
தலைப்பைக் கேட்டு ‘காக்க காக்க’ நினைவுக்கு வந்தால் நீங்கள் ரசிகப்புலிதான். கௌதம் வாசுதேவ் மேனனின் வழிவந்தவர்தான் மகிழ் திருமேனி.
‘‘ஒரே வரியில படத்தைப் பத்திச் சொல்லணும்னா, இது ரசிக்கிற விதத்துல சொல்லப்பட்ட ஒரு ஆக்ஷன் திரில்லர்..!’’ என்ற மகிழ் இதில் அருண்விஜய் ஹீரோவாகவும், மம்தா மோகன்தாஸ் ஹீரோயினாகவும் ஆன காரணத்தைச் சொன்னார்.
‘‘எனக்கு ஆடத்தெரிஞ்ச, பாடத் தெரிஞ்ச, நடிக்கத் தெரிஞ்ச, எகிறி அடிக்கத் தெரிஞ்ச... இப்படி எல்லாம் கற்ற ஒரு ஹீரோ தேவைப்பட்டார். அந்த ஹீரோ தமிழ் சினிமாவில உச்சத்துல இருக்கணும்ங்கிற அவசியம் இந்த ஸ்கிரிப்டுக்குத் தேவைப்படலை. மாறா ஹீரோயிஸத்தை சமன் பண்ணப்போய் கதையைக் காணாமல் அடிக்கவும் நான் தயாரில்லை. அப்படி சிறகுக்குக் காற்றும், காற்றுக்கு சிறகும் ஆதாரமானதைப் போல அருண்விஜய் இந்த ஸ்கிரிப்ட்டுக்குப் பொருத்தமா அமைஞ்சார். எல்லா விஷயங்களும் தெரிஞ்சவரானதால எதையும் சரியா உள்வாங்கி எந்தத் தேவைக்கும் வடிவம் கொடுத்திடறார். இதுவரை பார்க்காத அளவில அவர் தெரிவார். அவர் பாதையில இந்தப்படம் அவருக்கு லேண்ட்மார்க்கா இருக்கும்னு சொல்றது அடக்கமான உண்மை.
அதேபோல மம்தா. இத்தனை தைரியசாலியான பெண்ணை யாரும் பார்த்திருக்க முடியாது. எதற்கும் அஞ்சாத திறன் இருந்ததாலதான் தனக்கு வந்த கேன்சரைக்கூட எதிர்த்து நின்ன அசாத்தியத் துணிச்சல் அந்தப் பெண்கிட்ட இருக்கு. சொல்லப்போனா இந்தப் படத்துல சில காட்சிகளுக்கு மம்தாவை பயப்பட வைக்கிறதுக்கு நான் சிரமப்பட்டேன். அத்தனை போல்டான பெண். இந்தக் கேரக்டருக்கு இந்தி நடிகை பிராச்சி தேசாயைப் பேசி, அதனால வந்த பிரச்னைகளை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க முடியாது.
ஆனா உண்மை என்னன்னா, இந்தக் கேரக்டருக்கு நாங்க முதல்ல பேசிய நடிகையே மம்தாதான். ஆனா அவங்க அப்ப தெலுங்கு, மலையாளத்துல பிஸியா இருந்ததால தமிழ்ல நடிக்கிற எண்ணமில்லாம இருந்தாங்க. ஆனா காலம் மம்தாவைக் கனிய வச்சது. எதையும் கொண்டு வந்து சேர்த்துடும் சமய சஞ்சீவியான எங்க புரட்யூசர் டாக்டர் மோகன், பிராச்சியால ஏற்பட்ட பிரச்னைக்கு மருந்தா மம்தாவைக் கொண்டு வந்து சேர்த்தார்.
இளைஞர்களை இசையால கட்டிப்போட்டு வச்சிருக்க எஸ்.தமனுக்கு இன்னொரு வெற்றிப் படமாவும், ஒளிப்பதிவாளர் சுகுமாருக்கு தமிழ் சினிமாவில இன்னும் உயரத்தைத் தர்ற படமாவும் இது இருக்கும். தடைகள் இல்லாம வளர்ந்து தொண்ணூறு சதவிகிதம் முடிஞ்ச நிலையில ரசிக மனங்களை மகிழ்ச்சியோட தாக்க படத்தை உருவாக்கிட்டிருக்கோம்..!’’
‘மகிழ்வித்து மகிழ்’ங்கிறது இதுதானா மகிழ்..?
No comments:
Post a Comment