Friday, December 23, 2011

சங்கரன்கோவில்: ஸ்டாலின் தலைமையில் இடைத்தேர்தல். தயாராகும் திமுக.

.தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு, இரண்டாவது இடைத்தேர்தல் சங்கரன்கோயிலில் நடக்கப் போகிறது. ‘தேர்தலில் போட்டியிடுமா, இல்லையா?’ என்கிற அளவுக்கு சோர்வாக இருந்த லோக்கல் தி.மு.க.வினர் ஸ்டாலின் வருகையால் உற்சாகமாகியிருக்கிறார்கள்.



2002-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் சாத்தான்குளம் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறுவதற்காக தி.மு.க. அங்கு போட்டியிடவில்லை. அதேபோல், ‘இப்போது சங்கரன்கோயில் இடைத்தேர்தலில் அ.தி.மு.க.விற்கு எதிராக ம.தி.மு.க. சார்பில் பொது வேட்பாளர் நிறுத்தப்படுவார். அதனால் தி.மு.க. போட்டியிடாது’ என பேச்சு எழுந்தது.

உடனடியாக, ‘கண்டிப்பாக இடைத்தேர்தலை சந்திக்க வேண்டும்’ என சங்கரன்கோயில் நகர தி.மு.க. தீர்மானம் போட்டு தலைமைக்கு அனுப்பியது.

சங்கரன்கோயில் தொகுதியைப் பொறுத்தவரை நாயக்கர்கள் ஆதரிக்கும் வேட்பாளரை, தலித் மக்கள் ஆதரிக்க மாட்டார்கள். அதேபோல, தலித் மக்கள் ஆதரிக்கும் வேட் பாளரை நாயக்கர்கள் ஆதரிக்க மாட்டார்கள். எனவே, அங்கு ம.தி.மு.க. போட்டியிடுவதும், தலித் மக்களின் வாக்குகள் தி.மு.க. ஆதரவு வாக்குகள் என்பதும் அ.தி.மு.க.விற்கு பலவீனம் என யோசிக்கிறார்கள் உடன்பிறப்புகள்.

வைகோவின் சொந்தத் தொகுதி என்பதால் சங்கரன்கோயிலில் அதிக கவனம் செலுத்தி வருகிறது ம.தி.மு.க. ‘‘பொதுவாக இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சியை ஜெயிப்பது கடினம். ஆனால் தி.மு.க.வைவிட ஒரு வாக்காவது அதிகம் பெற்றுவிட வேண்டும்’’ என்பதே ம.தி.மு.க.வினருக்கு வைகோ போட்டிருக்கும் கட்டளையாம்.

மு.க. அழகிரி சட்ட மன்றத் தேர்தலுக்குப் பிறகு, அரசியலிலேயே தீவிரமாக இல்லை. எனவே, ‘‘சங்கரன்கோயில் இடைத்தேர்தலை தளபதி வழிகாட்டுதலில்தான் சந்திக்கப் போகிறோம்’’ என உற்சாகமாக இருக்கிறார்கள் தி.மு.க.வினர். ஸ்டாலின் தங்குவதற்கு ராஜபாளையத்தில் உள்ள சிமெண்ட் ஃபாக்டரி கெஸ்ட் ஹவுஸ் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு மேற்பார்வையில் தயாராகிவிட்டது.

சரி, தி.மு.க. சார்பில் போட்டியிடப் போகும் வேட்பாளர் யார் எனக் கேட்டால் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளரான வக்கீல் துரை, மாநில ஆதி திராவிடர் நலக் குழு துணைச் செயலாளர் சீனியம்மாள், கடந்த தேர்தலில் அண்மையில் மறைந்த கருப்பசாமியிடம் பத்தாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியைப் பறிகொடுத்த உமாமகேஸ்வரி, 1996 தேர்தலில் நானூற்று அறுபது வாக்குகள் வித்தியாசத்தில் கருப்பசாமியிடம் தோற்றுப்போன ராசைய்யா ஆகியோர்தான் என்கிறார்கள்.

இருப்பினும், தலைமை என்ன முடிவு செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

No comments:

Post a Comment