Friday, December 16, 2011

காசு கொழிக்கும் கொசு விரட்டி தயாரிப்பு !

‘தற்போதைய வாழ்க்கை முறையில் ரசாயனங்களின் பங்கு மகத்தானது என்றாலும், இயற்கை பொருட்களுக்கு இருக்கும் மவுசு தனிதான். கொசுக்களை விரட்ட, நாங்கள் தயாரிக்கும் மூலிகை லிக்யுட், நுகர்வோரிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கொசு விரட்டி தயாரிக்கும் தொழிலை கற்றுக்கொண்டால், நல்ல லாபம் சம்பாதிக்கலாம்’ என்கிறார் கோவை குனியமுத்தூரில் பெஸ்ட் நேச்சுரல் அண்ட் கம்பெனி நடத்திவரும் ஜெயந்தி.

அவர் கூறியதாவது: விளக்கு எரிக்க கேரளாவில் வேப்பெண்ணெய், விளக்கெண்ணெய், இலுப்பெண்ணெய், நல்லெண் ணெய், நெய் போன்றவற்றை இன்றும் பயன்படுத்துகின்றனர். இதன் வாசனை கொசு, பூச்சிகளை அண்ட விடாது. சாம்பிராணி, காய்ந்த வேப்பிலை புகை மூட்டம் போன்றவையும் கொசுகளை விரட்டும். இதை அடிப்படையாக வைத்து, கடந்த 5 ஆண்டாக கொசு விரட்டி மூலிகை லிக்விட் தயாரித்து விற்கிறோம்.


இது பாரம்பரியமும், நவீனமும் கலந்தது. மின்சார விளக்கில் பொருத்தி பயன்படுத்தலாம். ஆஸ்துமா உள்ளிட்ட நோயாளிகளை கொசுவிரட்டி பாதிக்கக் கூடாது. இயற்கை முறையில் தயாரிப்பதால், இவை நோயாளிகளை பாதிப்பதில்லை. வரும் காலத்தில் கொசு விரட்டி மூலிகை லிக்யுட் பயன்பாடு அதிகரிக்கும். கோவை வேளாண் பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் நடத்திய கண்காட்சிகளில் கொசு விரட்டி மூலிகை லிக்யுட் இடம்பெற்றுள்ளது. பலர் எங்கள் தயாரிப்பை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்கள். இவ்வாறு ஜெயந்தி கூறினார்.




விற்பனை வாய்ப்பு



மளிகை கடைகள், டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள், சர்வோதய சங்கம், காதி கிராப்ட் விற்பனையகங்கள், நாட்டு மருந்து கடைகள், மருந்து கடைகள் ஆகியவற்றில் மூலிகை கொசுவிரட்டி லிக்யுட் விற்கப்படுகிறது. அங்கு நேரடியாக சப்ளை செய்யலாம். தினசரி கடைக்கு 5 பாட்டில் வீதம் 20 கடைகளுக்கு ஒரு நாள் உற்பத்தியான 4 லிட்டர் லிக்யுட்டை (100 பாட்டில்) எளிதில் விற்கலாம். இவ்வாறு சுழற்சி முறையில் வெவ்வேறு கடைகளில் சப்ளை செய்யலாம். தெரிந்தவர்களுக்கும், அக்கம்பக்கத்து வீட்டுக் காரர்களுக்கும் நேரடியாகவும் விற்கலாம். தரம் மிகவும் முக்கியம். நல்ல தரத்தோடு விலையும் ஏற்றதாக இருந்தால் வாடிக்கையாளர்கள் பெருகுவார்கள். விற்பனையும் அதிகரிக்கும்.



கட்டமைப்பு : மூலிகை லிக்யுட் காய்ச்ச வீட்டு சமையலறை, மூலிகைகளை காய வைக்க திறந்தவெளி. தளவாட சாமான்கள்: வர்த்தக கேஸ் சிலிண்டர் அடுப்பு, 15 லிட்டர் குக்கர், 30 அடி நீள பைப், அகன்ற பாத்திரம், 10 லிட்டர் பாத்திரம், 40 மி.லி காலி பெட் கன்டெய்னர்கள், லேபிள், பேப்பர் பேக்கிங் பாக்ஸ். இவற்றுக்கு செலவு ரூ.15 ஆயிரம்.



தேவைப்படும் பொருட்கள்: வேப்பிலை, துளசி, நொச்சி இலை, மஞ்சள், சாம்பிராணி, குங்குலியம், தும்பை, ஆடாதொடா, சிறியாநங்கை, சோற்று கற்றாழை. நாட்டு மருந்து கடைகளில் மற்ற மூலிகை பொருட்கள் கிடைக்கின்றன. சோற்று கற்றாழையை வீட்டில் வளர்க்கலாம். பெட் கன்டெய்னர் பாட்டில்கள் கோவை, மும்பை உள்ளிட்ட இடங்களில் கிடைக்கின்றன.



உற்பத்தி செலவு(மாதத்துக்கு): வேப்பிலை 500 கிராம் ரூ.10, துளசி 500 கிராம் ரூ.25, நொச்சி இலை 700 கிராம் ரூ.70, மஞ்சள் 100 கிராம் ரூ.10, சாம்பிராணி 150 கிராம் ரூ.40, குங்குலியம் 150 கிராம் ரூ.30, தும்பை 50 கிராம் ரூ.10, ஆடாதொடா, சிறியாநங்கை, சோற்று கற்றாழை 1 கிலோ ரூ.20, 4 லிட்டர் மூலிகை கொசுவிரட்டி மூலிகை லிக்யுட் தயாரிக்க தேவையான மூலிகை பொருட்கள் செலவு ரூ.250, பேக்கிங் மெட்டீரியல் செலவு ரூ.50, உழைப்பு கூலி 2 நபருக்கு ரூ.300 வீதம் ரூ.600, இதர செலவுகள் ரூ.100 என தினசரி 1000 ரூபாய் செலவாகும். ஒரு மாதத்தில் 25 நாள் உற்பத்திக்கு ரூ.25 ஆயிரம் தேவை.



வருவாய்: உற்பத்தி செய்யப்படும் லிக்யுட் 40 மி.லி அளவுகளில் பாட்டில்களில் அடைத்து விற்கப்படுகிறது. ஒரு பாட்டில் ரூ.25க்கு கடைகளுக்கு விற்கப்படுகிறது. அவர்கள் ரூ.40 வரை விலை வைத்து விற்கிறார்கள். இவ்வாறு தினசரி உற்பத்தியாகும் 4 லிட்டர் லிக்யுட்டை 100 பாட்டில்களில் அடைத்து விற்பதன் மூலம் ரூ.2,500 கிடைக்கும். செலவு போக தினசரி லாபமாக ரூ.1,500 கிடைக்கும். இதுவே மாதத்தில் 25 நாட்களில் லாபம் ரூ.37,500.



தயாரிப்பது எப்படி?



வேப்பிலை, துளசி தலா 500 கிராம், நொச்சி 700 கிராம், மஞ்சள் 100 கிராம், சாம்பிராணி, குங்குலியம் தலா 150 கிராம், தும்பை, ஆடாதொடா, சிறியாநங்கை தலா 50 கிராம் ஆகியவற்றை காயவைத்து மிக்சியில் போட்டு பொடியாக அரைத்து கொள்ள வேண்டும். சோற்று கற்றாழை ஒரு கிலோ எடுத்து கசப்பு நீங்கும்வரை கழுவ வேண்டும். மூலிகை பொடிகளையும், சோற்று கற்றாழை ஜெல்லையும் 10 லிட்டர் தண்ணீரில் போட்டு, குறைந்தது 6 நாள் முதல் 10 நாள் வரை ஊற வைக்க வேண்டும். பின்னர் அவற்றை குக்கரில் போட்டு மூடி மிதமான தீயில் வைக்க வேண்டும் (வெப்பநிலை 30 முதல் 40 டிகிரி வரை). குக்கரில் ஆவியை வெளியேற்ற விசில் போடும் இடத்தில், விசிலுக்கு பதிலாக 30 அடி நீள பைப்பை செருக வேண்டும். குக்கரில் இருந்து வெளியேறும் ஆவி, பைப் வழியாக வரும். அந்த பைப்பை தண்ணீர் நிரப்பப்பட்ட அகன்ற பாத்திரத்தில் மூழ்கியவாறு வைக்க வேண்டும்.



பைப் வழியாக வரும் ஆவி குளிர்ந்து தண்ணீரும், எண்ணெயும் கலந்தவாறு சொட்டு சொட்டாக வெளியேறும். பாத்திரத்தின் கீழ் பகுதியில் 4 லிட்டர் தண்ணீரும், மேல் பகுதியில் 3 லிட்டர் எண்ணெயும் மிதக்கும். மேலே மிதக்கும் எண்ணெய் தான் கொசு விரட்டி மூலிகை லிக்யுட். இதற்கு மூன்றரை மணி நேரம் ஆகும். அதற்குள் குக்கரில் உள்ள தண்ணீர் வற்றி விடும். பிறகு தீயை அணைத்து விட வேண்டும். தண்ணீரும், எண்ணெயும் கலந்த பாத்திரத்தில் உள்ள எண்ணெயை மேலோட்டமாக வடித்து எடுத்து கொள்ளலாம் அல்லது ஏர் பில்லர் மூலம் உறிஞ்சி எடுக்கலாம்.
எண்ணெய் வடித்தது போக பாத்திரத்தில் மிஞ்சிய 4 லிட்டர் தண்ணீரை மீண்டும் குக்கரில் ஊற்ற வேண்டும். ஏற்கனவே குக்கரில் மூலிகை பொருட்கள் மசாலா போல் தங்கியிருக்கும். இதில் தண்ணீர் கலந்தவுடன் மீண்டும் மிதமான தீயில் வேக வைத்து, ஆவி வெளியேறி, அதன் மூலம் மேலும் ஒரு லிட்டர் லிக்யுட் கிடைக்கும். இவ்வாறு ஒரு நாளில் ஒரு முறை 4 லிட்டர் கொசுவிரட்டி மூலிகை லிக்யுட் கிடைக்கும். சேகரித்த தைலத்தை பெட் கன்டெய்னர் பாட்டிலில் ஊற்றி பேக்கிங் செய்தால் கொசு விரட்டி மூலிகை லிக்யுட் விற்பனைக்கு தயாராகி விடும். தினசரி 4 லிட்டர் தயாரிக்க, 10 நாளுக்கு முன்பே மூலிகை பொருட்களை தண்ணீரில் ஊறப் போட வேண்டும்.

2 comments:

  1. வணக்கம் sir இந்த தொழிலை செய்ய விரும்புகிரேன் தயவு செய்து அந்த பெட் கன்டைனர்கள் எங்கு கிடைக்கும் என்று கூரினால் மிகவும் உதவியாக இருக்கும் . தயவு செய்து கூரவும் ......... நன்றி!!

    ReplyDelete
  2. This is my mail id sir please inform to me sir ..............( omjeevan99@gmail.com )

    ReplyDelete