Wednesday, December 14, 2011

தமிழக உயர் கல்விமுறையில் நடக்கும் அநியாயங்கள்


தேர்தலில் பணம் கொடுத்து வாக்குகள் பெறுவதைப் போல, தேர்விலும் பணம் கொடுத்து தேர்ச்சி பெறுவது இன்றைய உயர்கல்வி உலகில் மிக இயல்பான செயலாக மாறிவிட்டது.அண்மையில் பொறியியல் கல்லூரியில் பல பாடங்களில் தேர்ச்சி பெறாமல் இருக்கும் தனது தம்பிக்கு மதிப்பெண் போட்டுக்கொடுத்து தேர்ச்சி பெறச் செய்ய வேண்டும் என்பதற்காக, பொள்ளாச்சியைச் சேர்ந்த ஒரு பெண்மணி ஓர் உதவிப் பேராசிரியருக்கு கையூட்டாக ரூ.3 லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும், ஆனால் அந்த கல்லூரி ஆசிரியர் ஏமாற்றிவிட்டார் என்றும் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.இந்தச் செய்தி ஏற்படுத்திய பரபரப்பின் காரணமாக, பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் இது குறித்து பேச வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டனர். தங்கள் பல்கலைக்கழகத்தில் இத்தகைய முறைகேடுகள் இல்லை என்றும் விடை திருத்தும் பணி முறைகேடுக்கு இடமளிக்காத வகையில் அமைக்கப்பட்டுள்ளது என்றும் பொதுமேடைகளில் இதுபற்றிப் பேசுவதும், மாணவர்கள் இத்தகைய முறைகேடான வழிகளைப் பின்பற்றக்கூடாது என்று அறிவுரை வழங்குவதும் கடந்த சில வாரங்களாக அடிக்கடி பத்திரிகைகளில் தென்படும் செய்தியாக இருக்கிறது. துணைவேந்தர்கள் இவ்வாறாகக் கூறினாலும், கல்லூரி விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் சங்கத்தினர் சொல்லும் கருத்து நேர்மாறாக இருக்கிறது. இவ்வாறு பணம் கொடுத்து தேர்ச்சி மதிப்பெண் பெறுவது பல இடங்களில் அதிக அளவில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்று அவர்கள் சொல்கிறார்கள்.

கால் நூற்றாண்டுக்கு முன்பே இத்தகைய "பேப்பர் சேஸிங்' (விடைத்தாளைத் துரத்துதல்) பற்றிய பேச்சு இருக்கவே செய்தது. சில மாணவர்கள் தங்கள் விடைத்தாள்கள் எந்தப் பேராசிரியருக்கு அனுப்பப்பட்டுள்ளது என்பதை பல்கலைக்கழகத்தில் லஞ்சம் கொடுத்துத் தகவல் பெறுவதும், அதன் பின்னர் தங்களுக்கான டம்மி எண்களைப் பெற லஞ்சம் கொடுப்பதும், விடைத்தாள் திருத்தும் பேராசிரியர் வீட்டுக்கே போய், வாசலில் அழுது, கெஞ்சி அல்லது சேவகம் செய்து, எதற்கும் மனம் இரங்கவில்லை என்றால் பணத்தாசை காட்டி அந்தப் பேராசிரியரின் கருணையை எப்படியாவது பெற்று, பாஸ் மார்க் வாங்கி வருவது ஒரு கலையாகவே இருந்தது. அந்த அனுபவத்தை கொஞ்சம் இட்டுக்கட்டி கண் காது வைத்து சுவாரஸ்யமாகச் சொல்லும் தலைமுறையும் இருக்கவே செய்தது. இப்போது அத்தகைய அனுபவங்களுக்கு அவசியமே இல்லை. ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் இதற்காக இடைத்தரகர்கள் இருக்கிறார்கள். அவர்களில் சிலர் உதவிப் பேராசிரியர்களாகவும் பேராசிரியர்களாகவும்கூட இருக்கிறார்கள். இன்றைய உயர் கல்வி உலகில் இத்தகைய முறைகேடுகள் பொறியியல் படிப்பில் மேலதிகமாக நடைபெறுகிறது என்பதுதான் உண்மை.பல்கலைக்கழகங்களிலும், குறிப்பாக நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும் தனியார் பல்கலைக்கழகங்களிலும் இத்தகைய முறைகேடுகள் நடக்காமல் தடுக்கவோ, கண்காணிக்கவோ முறையான அமைப்புகள் இல்லை. அத்தகைய அமைப்புகள் இருந்தாலும் அவை வீணான ஒன்றாக ஒப்புக்கு இருக்கிறதே தவிர, அதனால் பயன் இருப்பதாகத் தெரியவில்லை. அரசு நடத்தும் கலந்தாய்வு மூலமும் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழும் ஓர் ஆண்டுக்கு சுமார் ஒன்றரை லட்சம் பேர் பொறியியல் படிப்பில் சேருகிறார்கள். இவர்கள் அனைவரும் பொறியியல் படிப்பிற்கு மிக அத்தியாவசியமான உயர் கணிதத்தில் புலிகள் அல்ல. மேனிலைப் பள்ளியில் படிக்கும் முறை, பாடத்திட்டம் அனைத்துமே பொறியியல் கல்லூரிகளில் மாறிவிடுகிறது.உண்மையாகவே உயர் கணிதத்தில் புரிதல் இருக்கும் மாணவர்களால் மட்டுமே பொறியியல் கல்லூரியில் தொடர்ந்து நல்ல மதிப்பெண் பெற முடியும். பெற்றோர்களின் வறட்டு கௌரவத்துக்காகவும், ஏதோ பொறியியல் படிக்காவிட்டால் வருங்காலமே சூன்யமாகிவிடும் என்பது போன்ற தவறான கண்ணோட்டத்தினாலும் கணிதத்தில் பலவீனமாக இருந்தாலும் நன்கொடை கொடுத்தாவது பொறியியல் கல்லூரிகளில் சேர்பவர்கள் பலர். ஆகவேதான், பொறியியல் மாணவர்கள் பலருக்கும் அரியர்ஸ் அதிகமாக இருக்கிறது.


பல லட்சம் செலவு செய்து படிக்க வைக்கும் பெற்றோரின் கோபத்துக்கு ஆளாகவும்கூடாது. அதே நேரத்தில் தேர்ச்சி பெற்றுவிடவும் வேண்டும் என்கின்ற கட்டாயம் அந்த மாணவர்களை எப்படியாகிலும், எந்தப் பொய்யைச் சொல்லியாவது பெற்றோரிடம் பணம் பெற்று அதைக்கொண்டு முறைகேடாகத் தேர்ச்சி பெறுவதுதான் அவர்களுக்குத் தெரிந்த ஒரே வழியாக இருக்கிறது. அப்படியே மாணவர்கள் யோக்கியர்களாக இருந்தாலும் அவர்களது பெற்றோரும் அண்ணன் அக்கா போன்ற ரத்தஉறவுகளுமே இந்த முறைகேட்டில் இறங்கிவிடுகிறார்கள். படிப்புக்காக பல லட்சம் ரூபாய் செலவழித்துவிட்டதால் இன்னும் கொஞ்சம் செலவழித்து ஒரு பட்டம் வாங்கிவிட்டால் போதும், பிறகு இதேபோல பணத்தைக் கொடுத்து ஒரு வேலையும் வாங்கிவிடலாம் என்கின்ற "நம்பிக்கைவாதி'களாக இருக்கிறார்கள். இந்த இரண்டுக்கும் வழியில்லாமல், இதைத் தாங்கிக்கொள்ளும் சக்தியில்லாத மாணவர்களில் சிலர் தற்கொலை செய்துகொள்வதையும் பார்க்கிறோம்.மாணவர்கள் எந்தப் பாடத்திட்டத்தைத் தேர்வு செய்வது என்பதை அவர்களிடம் விட்டுவிடும் நிலைமை உருவானால், இத்தகைய முறைகேடுகளில் 90 விழுக்காடு தானே மறைந்துபோகும். ஒரு மாணவர் தனக்குப் பிடித்தமான பாடத்திட்டத்தை எடுத்துப் படிக்கும்போது இத்தகைய பேப்பர் சேஸிங் என்கின்ற வேலைக்கே இடமில்லை. கல்லூரிக்கு மட்டம் போட்டு ஊர்சுற்றுவதும்கூட பிடிக்காத படிப்பினால்தான். கல்லூரி மாணவர்களைப் பொறுத்தவரை வெறும் 'அரியர்ஸ் கிளியர்' ஆகிவிட்டாலே போதும். ஆனால், பள்ளி மாணவர்கள் பெற்றோருக்காக மதிப்பெண் வாங்கிடப் படும்பாடு மிக மிக அதிகம்.

மாணவர்கள் விரும்பும் கல்வி என்பதை நாம் உருவாக்கவில்லை. நாம் உருவாக்கிய கல்வியை மாணவர்கள் படித்தாக வேண்டும் என்ற நிலைதான் இருக்கிறது. கல்வித்துறைத் திணிப்பு ஒருபுறம், பெற்றோரின் திணிப்பு மறுபுறம். இந்த நிலை மாறினால் மட்டுமே, கல்வித்துறையில் ஊழல்கள் களையப்படுவது மட்டுமன்றி கல்வி தரமானதாகவும், பயனுடையதாகவும் மாறப்போகிறது. சிந்திக்க வேண்டியவர்கள் சிந்திக்க வேண்டிய நேரமிது.


தினமணி

No comments:

Post a Comment