ராமதாஸிடம் விறுவிறுப்பான பேட்டி தட்டலாம் என்று தைலாபுரம் தோட்டத்துக்குச் சென்றால், ''இங்கே என் மேற்பார்வையில் வளர்க்கப்படும் 200 வகை பூச்செடிகள் இருக்கு. பார்த்துட்டு வாங்க... பேசலாம்!'' என்று எனக்கு அசைன்மென்ட் கொடுத்தார். 'பூக்கள் பூத்த தருணத் துக்கு’ப் பிறகு பூகம்பம் வெடித்தது.
''தமிழக அரசு உயர்தர வசதிகள்கொண்ட 'எலைட் பார்’கள் அமைப்பது குறித்து?''
'' 'குடி உடலுக்கு, வீட்டுக்கு, நாட்டுக்குக் கேடு’ என்று அரசே அச்சிட்டு மதுபான பாட்டில்களில் எழுதி விற்கிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு டாஸ்மாக் இருப்பதே அவமானம். அதிலும் இந்த எலைட் பார்கள் பெருத்த அவமானம்!''
''பா.ம.க. உறுப்பினர்கள் அனைவரும் மது அருந்தாதவர்களா?''
'' 'மது, புகை, கஞ்சா, லாட்டரி, சூதாட்டம் போன்றவற்றைத் தடுத்து நிறுத்துவோம்’ என்பது உட்பட 10 உறுதிமொழிகளை ஏற்றால்தான், பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணி, இளம்பெண்கள் அணி இரண்டிலுமே உறுப்பினராக முடியும். (உறுதி ஏற்புப் படிவங்களைக் காண்பிக்கிறார்) எதிலும் சமத்துவம் வேண்டும் இல்லையா?''
''அப்படி என்றால், சென்னையில் நடைபெற்ற பா.ம.க-வின் மது ஒழிப்பு மாநாடு முடிந்த கையோடு 'மதுவை ஒழிப்போம்’ என்று எழுதப்பட்ட டி-ஷர்ட்களோடு உங்கள் கட்சியினர் டாஸ்மாக்கில் மது வாங்க நின்றார்களே?''
''அது கொள்கை தெரியாத பையன்கள் யாராவதாக இருக்கும். தற்செயலாக 'நானும் வருகிறேன்’ என்று யாராவது மாநாட்டுக்குச் செல்லும் வண்டியில் ஏறி இருப்பார்கள். அவர்களுக்கும் கட்சிக்காரர்கள் டி-ஷர்ட் கொடுத்திருப்பார்கள்!''
''ஜெயலலிதாவின் ஆட்சி எப்படி இருக்கிறது?''
''பாராட்டும்படியாக எதுவுமே இல்லை. தி.மு.க. ஆட்சியில் இருந்ததைவிட விலைவாசி பல மடங்கு உயர்ந்துவிட்டது. முதல் கோணலே முற்றும் கோணல் என்பது மாதிரி சமச்சீர் கல்வி தொடங்கி நதி நீர்ப் பிரச்னைகள் வரை எதிலுமே சொல்லிக்கொள்ளும்படி ஜெயலலிதா எதுவும் செய்யவில்லை. எந்தக் கட்சியும் அமைப்பும் அழைப்பு விடுக்காமல் தன்னெழுச்சியாக, முல்லைப் பெரியாறு நோக்கி ஒரு லட்சம் மக்கள் திரண்டு வருகையில் போலீஸ் தடியடி நடத்தி அந்த எழுச்சியைக் குறைக்கிறது. அரசு செய்ய வேண்டியதை மக்கள் செய்கிறார்கள். ஆனால், அவர்கள் மீது அரச வன்முறை பிரயோகிக்கப்படுகிறது!''
''அதே விவகாரத்தில் 'கேரளா நம் சகோதர மாநிலம்’ என்கிறாரே கருணாநிதி?''
''இப்படிச் சொல்லிச் சொல்லித்தான் தமிழர்களுடைய நலன்களை, கேரளம், கர்நாடகம், ஆந்திரத்துக்கு காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு என விட்டுக்கொடுத்துவிட்டார்கள். இதில் கருணாநிதி செய்தது தப்பென்றால், ஜெயலலிதா தலைமையிலான அரசு செய்துகொண்டு இருப்பது ரொம்பத் தப்பு!''
''முல்லைப் பெரியாறு விவகாரத்தில் கேரளத்துக்கு உணவு உற்பத்திப் பொருட்கள் செல்லும் எட்டு சாலை களையும் அடைக்க வேண்டும் என்கிறீர்கள். அதுதான் பிரச்னைக்கான தீர்வா?''
''நிச்சயமாக! 'உணவு கொடு’ என்று அவர்கள் கேட்டால், பதிலுக்கு 'தண்ணீர் கொடு’ என்று நாம் கேட்க முடியுமே! இப்போதே அங்கே தக்காளி விலை ஒரு கிலோ 150 ரூபாய். இன்னும் எட்டு வழிகளையும் அடைத்துவிட்டால், அவர்கள் வழிக்கு வந்துதான் ஆக வேண்டும்!''
''பிரதான எதிர்க் கட்சியான தே.மு.தி.க-வின் செயல்பாடுகள் குறித்து?''
''பிரதான எதிர்க் கட்சியா... தே.மு.தி.க- வா? அதெல்லாம் கிடையாது! பா.ம.க-தான் உண்மையான எதிர்க் கட்சி. வேறு ஒரு கட்சியும் எங்களைப் போலச் செயல்படவில்லை. எங்களோடு ஒப்பிடுகையில், இடது சாரிக் கட்சிகள் செய்ததெல்லாம் ஒன்றுமே இல்லை!''
''இனிமேல் திராவிடக் கட்சிகளோடு கூட்டணி இல்லை என்று சொல்லியிருக்கிறீர்கள். நம்பலாமா?''
''இதைச் சொல்வதற்கு தி.மு.க-விடம் இருந்தே வார்த்தைகளைக் கடன் பெற்றுக்கொள்கிறேன்... கார் உள்ளவரை, கடல் நீர் உள்ளவரை, பார் உள்ளவரை (டாஸ்மாக் பார் இல்லை... இது உலகம்!) பைந்தமிழ் உள்ளவரை திராவிடக் கட்சிகளோடு இனி கூட்டணி கிடையாது!''
''அணி மாறி மாறி சந்தர்ப்பவாதக் கட்சி என்று பெற்ற பெயரை எப்படிப் போக்குவீர்கள்?''
''யார்தான் அணி மாறவில்லை? நாங்கள் மட்டும்தான் அணி மாறுகிறோமா? கம்யூனிஸ்ட் கட்சிகள் அணி மாறவில்லையா? அவர்களிடம் போய்க் கேட்க வேண்டியதுதானே? இந்தக் கேள்வி என்னிடம் கேட்கப்படுவது இதுதான் கடைசித் தடவையாக இருக்கும். இப்படி இனி ஒரு முறை கேட்பதற்கான வாய்ப்பை உங்களுக்கு நாங்கள் வழங்க மாட்டோம்!''
''வட மாவட்டங்களில் மட்டுமே செல்வாக்குள்ள பா.ம.க, 2016-ல் ஆட்சியைப் பிடிக்கும் என்று எந்த நம்பிக்கையில் சொல்கிறீர்கள்?''
''1989-ல் கட்சி தொடங்கி, ஐந்தே மாதங்களில் தென் தமிழகத்தில் உள்ள பெரியகுளத்தில் 70,000 வாக்குகள் பெற்றோம். 1999-2000 காலகட்டத்தில் 234 தொகுதிகளிலும் தொகுதி மாநாடு நடத்தினோம். 'எங்களுக்குச் செல்வாக்கு இல்லை’ என்று சொல்லப்படுகிற தென் மாவட்டங்களில் சராசரியாக 5,000 பேர் மாநாட்டுக்கு வந்தனர். வட மாவட்டங்களில் அந்த எண்ணிக்கை இன்னும் அதிகம். அப்படி என்றால், எல்லாத் தொகுதிகளிலும் எங்களுக்கு வாக்குகள் உள்ளன என்றுதானே அர்த்தம்? 1949-ல் தி.மு.க. உதயமானது. 1952 தேர்தலில் 15 எம்.எல்.ஏ-க்கள். அத்தனை பேரும் வட மாவட்டங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். அதன் பிறகு 1962 தேர்தலில் 50 இடங்களை வென்றது. அப்போதும் வட மாவட்டங்கள்தான் கைகொடுத்தன. தெற்கிலோ, மேற்கிலோ, ஓர் இடம்கூடக் கிடையாது. 1967-ல் தி.மு.க. ஆட்சியைப் பிடித்தபோதும் பெரும்பாலான இடங்கள் வட மாவட்டங்களில் இருந்துதான் கிடைத்தன. பா.ம.க-வைப் பொறுத்த வரை வட மாவட்டங்களில் சர்வசாதாரணமாக 100 இடங்களைப் பெற முடியும். மிச்சம் 17-தானே?''
''உள்ளாட்சித் தேர்தலுக்கு முன், தி.மு.க. அணியில் இருந்த விடுதலைச் சிறுத்தைகளுக்கு நீங்கள் விடுத்த அழைப்பை ஏற்று பொதுக் குழுவைக் கூட்டிப் பரிசீலிப்பதாக திருமாவளவன் அறிவித்தார். உடனே தி.மு.க. தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தது. பிறகு நீங்களும் தனித்துப் போட்டி என்று சொல்லி விடுதலைச் சிறுத்தைகளைத் தனிமைப்படுத்தியது நியாயமா?''
''நாங்கள் எங்கே அழைப்புவிடுத்தோம்? அவர்கள்தான் இங்கே வந்து நான்கு மணி நேரம் பேசினார்கள். அவர்கள் ஒன்றும் பரிசீலிப்பதாகச் சொல்லவில்லை. அவர்கள் விடுத்த அழைப்பைப் பரிசீலிப்பதாக நாங்கள்தான் சொன்னோம். பின்னர், தனித்துப் போட்டி என்று முடிவு எடுத்தோம். அதை அவர்களுக்கு முறையாகத் தெரிவித்தும்விட்டோம்!''
''சாராயம், சினிமா, இலவசம் மூன்றும்தான் தமிழ்நாட்டைச் சீரழிக்கின்றன என்று சொல்லி இருக்கிறீர்களே?''
''நான் ஒன்றும் சினிமாவுக்கு எதிரி அல்ல. நானும் சினிமா பார்ப்பேன். சமீபத்தில் 'அபியும் நானும்’ படம் பார்த்தேன். அப்புறம் 'மொழி’, 'வாகை சூடவா’ பார்த்தேன். இந்தப் படங்களில் எல்லாம் எந்தக் குத்துப் பாட்டும் இல்லை. அரைகுறை ஆடைகள் இல்லை. காதல் இருக்கிறது. ஆனால், கண்ணியமாக இருக்கிறது. இப்படிப்பட்ட படங்கள் தயாரிக்க அரசே வட்டி இல்லாத கடன் கொடுத்து ஊக்குவிக்க வேண்டும். நம் பண்பாட்டை, கலையை வளர்த்தெடுக்கும் இளம் இயக்குநர்கள் எடுக்கும் இது போன்ற படங்களை மட்டுமே தமிழில் தயாரிக்க வேண்டும் என்று அரசு ஒரு சட்டம் போட்டுவிட்டால், மக்களின் ரசனை மாறிவிடும். அப்புறம் ஏன் தமிழன் 'மானாட மயிலாட’ பார்க்கப்போகிறான்?''
''பா.ம.க-வின் பழைய வேகமும் போர்க் குணமும் நீர்த்துப்போய்விட்டதோ?''
''அரசியல் கட்சிக்கு என்று சில நெறிமுறைகள் உண்டு. வன்னியர் சங்கமாக இருந்தபோது ஏழு நாட்கள் சாலை மறியல் செய்து ஸ்தம்பிக்கவைத்தோம். ஆனால், அப்படி எல்லாம் இப்போது போராட முடியாது. அற வழியில்தான் போராட வேண்டும். வன்முறைக்கு இடம் இல்லை. ஓட்டு அரசியலுக்கு வந்துவிட்டால் அப்படித்தான். முன்புபோல சாலை மறியல் செய்தால், பொதுமக்கள் 'இதென்னடா தொல்லை இவங்களாலே!’ என்று எங்களை வெறுக்க ஆரம்பித்துவிடுவார்கள். ஓட்டு அரசியலில் இதெல்லாம் சகஜம்.''
''ஆனால், கட்சியில் இருந்து நிறைய இளைஞர்கள் வெளியேறுவதாகச் செய்திகள் தொடர்ந்து வருகின்றனவே?''
''இல்லை. போன வாரம்கூட சேலத்தில் அன்புமணி பேசிய கூட்டத்தில் 15,000 பேர் கலந்துகொண்டனர். அதில் 95 சதவிகிதம் இளைஞர்கள்!''
''பத்திரிகையாளர் சந்திப்புகளில் வேல்முருகன் நீக்கம்பற்றிக் கேள்வி கேட்டால், ஏன் அவ்வளவு கோபம்? அதிலும் குறிப்பாக சென்னை பத்திரிகையாளர் சந்திப்பில்..?''
''இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லப்போவது இல்லை. எல்லாக் கட்சிகளிலும்தான் யார் மீதாவது நடவடிக்கை எடுக்கிறார்கள். இதெல்லாம் ஒரு விஷயமா?''
No comments:
Post a Comment