சசிகலா குடும்பத்தையே விரட்டி விட்ட முதல்வர் ஜெயலலிதா அவரது குடும்பத்தைச் சேர்ந்த 2 பேரை மட்டும் விட்டு வைத்துள்ளார். அவர்கள் சசிகலாவின் அண்ணி இளவரசி மற்றும் இளவரசியின் சம்பந்தியான கலியபெருமாள் ஆகியோர்தான்.
ஜெயலலிதாவின் இந்த விதிவிலக்கு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் இதிலும் ஒரு சுவாரஸ்யமான கதை இருக்கிறதாம்.
இளவரசிக்கும், சசிகலாவுக்கும் இடையே அவ்வளவாக நெருக்கம் இல்லையாம். அதாவது வழக்கமாக தமிழக குடும்பங்களில் காணப்படும் நாத்தனார் சண்டைதான்.
போயஸ்கார்டனில்தான் இளவரசி தொடர்ந்து வசித்து வருகிறார். இவரது பெயரில்தான் சிறுதாவூர் பங்களா உள்ளிட்ட பல சொத்துக்கள் உள்ளதாம். இதுகுறித்து அவருக்கும் சசிகலாவுக்கும் இடையே அவ்வப்போது புகைச்சல் வெடிக்குமாம். மேலும் ஜெயலலிதா இளவரசி மீது தனிப் பிரியம் வைத்திருப்பாராம். இதும் கூட சசிக்குப் பிடிக்காதாம்.
சமீபத்தில் கூட பெங்களூர் கோர்ட்டுக்கு சசிகலாவும், இளவரசியும் போனபோது இருவரும் பேசிக் கொள்ளவில்லையாம். இத்தனைக்கும் இருவரும் ஒரேகாரில்தான் போனார்களாம். அதேசமயம், கோர்ட்டுக்கு வந்திருந்த சுதாகரனிடம் மட்டும் சசிகலா நன்றாகப் பேசினாராம்.
சசிகலாவை இளவரசிக்குப் பிடிக்காது என்ற ஒரே அம்சம் ஜெயலலிதாவுக்குப் பிடித்துப் போய் விட்டதாம். இதனால்தான் எதிரியின் எதிரியாயிற்றே என்ற ஒரே காரணத்திற்காக இளவரசியை தன்னுடனேயே வைத்துள்ளாராம். அதேபோல இளவரசியின் சம்பந்தியான கலியபெருமாள் மீதும் ஜெயலலிதா நல்ல மதிப்பு வைத்துள்ளார்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் பல முக்கிய கட்சி நிர்வாகிகளை நியமிப்பதில் கலியபெருமாள் ஜெயலலிதாவுக்கு பெருமளவில் உதவியுள்ளாராம். இவருக்கு சசிகலாவைப் பிடிக்காதாம். சசிகலாவின் ஆதிக்கத்தையும் மீறி செயல்பட்டு வந்தவர் என்பதால் இவருக்கும் ஜெயலலிதாவிடமிருந்து விதி விலக்குக் கிடைத்துள்ளதாம்.
அதேபோல தினகரின் மனைவியான அனுராதா மீதும் இதுவரை நடவடிக்கை எதுவும் பாயவில்லை. இவர்தான் ஜெயா டிவியின் நிர்வாக இயக்குநராக இருக்கிறார். இவர் மீது ஏன் நடவடிக்கை பாயவில்லை என்று தெரியவில்லை.
No comments:
Post a Comment