கிறிஸ்தவ அமைப்புகள் நடத்தும் விழாவில் ஜெயலலிதா கலந்து கொள்வது வழக்கமாக நடப்பதுதான். ஆனால், இம்முறை ஜெயலலி தாவே, கிறிஸ்துமஸ் விழாவை அவரது கட்சி சார்பில் நடத்தி, ஒட்டுமொத்த கிறிஸ்தவ மக்களை யும் குளிர வைத்துள்ளார்!
சசிகலா வகையறாக்களை அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கிய மறுநாள், இந்த விழா நடந்ததால் முதல்வர் என்ன பேசுவார் என்று ஏகத்துக்கும் எதிர்பார்ப்பு. 'ஆபரேஷன் சசி அண்ட் கோ’வுக்குப் பிறகு, அனைத்து எம்.எல்.ஏ-க்களும் மாவட்டச் செயலாளர்களும் சென்னையில் இருக்க வேண்டும் என்பது கார்டனின் உத்தரவு. இதனால் அவர்களும் விழாவில் ஆஜர்!
முதல்நாள் எடுக்கப்பட்ட ஆக்ஷனுக்கான ரியாக்ஷன் எதுவும் ஜெயலலிதாவின் முகத்தில் தென்படவில்லை. வழக்கமாக ஜெயலலிதா கலந்து கொள்ளும் விழாவில் அமைச்சர்கள், வி.ஐ.பி-க்களுக்கு பின்னால்தான் பத்திரிகையாளர்களுக்கு இருக்கை போடப்படும். ஆனால், மீடியாவுக்கு இங்கு முன் வரிசை மரியாதை.
முதல்வரின் இருக்கைக்கு இருபக்கங்களிலும் சென்னை மயிலை உயர் மறை மாவட்ட பேராயர் சின்னப்பாவும், தென்னிந்திய திருச்சபை சென்னை பேராயர் தேவசகாயமும் அமர்ந்து இருந்தார்கள். முதல்வரின் இருக்கைக்கும் அவர்களின் இருக்கை களுக்கும் கணிசமான இடைவெளி இருந்தது. இதைக் கவனித்த ஜெயலலிதா, 'பக்கத்துல வாங்க’ என்று கேஷ§வலாகச் சொல்லி, இருவரையும் தனக்குப் அருகில் அமர வைத்தார். முதல்வரின் காஸ்ட்யூமில் ஒரே ஒரு மாற்றம்... புதிய கைக்கடிகாரம் கட்டி இருந்தார்.
சசி மீதான நடவடிக்கையால் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றத் தலைவர் பி.எச்.பாண்டியனுக்கு செம உற்சாகம். இந்த விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க-வின் முக்கியப் பிரமுகர்கள் எல்லாம் அடக்கி வாசிக்கும் நிலையில்... விழாவில் பட்டென்று போட்டு உடைத்தார் பாண்டியன். ''நம் முதல்வரின் ஆட்சி ஒரு குடும்பத்துக்கானது மட்டும் அல்ல. தமிழகத்தில் உள்ள அத்தனைக் குடும்பங்களுக்கும் ஆட்சி நடத்துகிறீர்கள். நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் நடவடிக்கையும் தொண் டர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. விசுவாசமான தொண்டர்கள் உங்கள் பின்னால் உறுதுணையாக நிற்பார்கள்...'' என்று அவர் பேசவும், கூட்டம் அர்த்தத்தோடு ஆர்ப்பரித்தது.
ஜெயலலிதாவுக்காக கூடுதல் ஏ.சி. வைத்து இருந்தார்கள், ஒருகட்டத்தில் குளிர் தாங்க முடியாத அளவுக்குச் செல்லவே, ஏ.சி-யை நிறுத்தச் சொன்னார், முதல்வர். அந்த டெக்னீஷியன்களைத் தேட முடியாமல், உடனே ஏ.சி-யை சுற்றி வளைத்து ஆட்கள் நின்று கொண்டார்கள்!
கிறிஸ்துமஸ் கேக் வெட்டிய ஜெயலலிதா, அதை தட்டில் வைத்து சின்னப்பாவிடம் நீட்டினார். அவர் அதில் ஒரு வில்லையைப் பிய்த்து ஜெயலலிதாவுக்கு ஊட்ட... போட்டோகிராபர்கள் சுதாரிப்பதற்குள் அந்த அரிய காட்சி கடந்து விட்டது. அதனால் போட்டோகிராபர்கள் ஒன்ஸ்மோர் கேட்க... திரும்பவும் சின்னப்பா இன்னொரு வில்லையை ஊட்ட... நீண்ட நாள் கழித்து முதல்வரின் முகத்தில் சிறுபிள்ளையின் பூரிப்பு!
விழாவில் பேசிய சின்னப்பா, ''யாருக்குமே கிடைக்காத பாக்கியம், முதல்வருக்கு கேக் ஊட்டி யதன் மூலம் எனக்குக் கிடைத்திருக்கிறது. 'உங்களுக்கு ஒரு பாலகன் பிறந்துள்ளார். இது மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி’ என்று கிறிஸ்துமஸ் பற்றி வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படி ஒரு மகிழ்ச்சி இப்போது நடந்திருக்கிறது...'' என்று பொடி வைத்துப் பேச, அப்போதும் முதல்வரின் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை!
தொடர்ந்து, முதல்வர் மைக்கைப் பிடிக்க எல்லோரிடமும் எதிர்பார்ப்பு. ''சின்னப்பா கரங் களால் கேக் ஊட்டப் பெறுவது ஒரு முறை நடந்தாலே மிகப்பெரிய பாக்கியம். ஆனால், எனக்கு போட்டோகிராபர்கள் மூலம் இரண்டாவது வாய்ப்பும் கிடைத்திருக்கிறது. 500 பேர் ஜெருசலேம் செல்ல அரசு நிதிஉதவி வழங்கும். நாம் ஒவ்வொருவரும் பகை, சுயநலம் இல்லாமல், தியாக உணர்வுடன் வாழ வேண்டும். சுயநல வாழ்க்கை ஆரம்பத்தில் இனிக்கும். பின்பு கசக்கும். சுயநலமின்றி பிறருக்காக வாழும் வாழ்க்கை, ஆரம்பத்தில் கசக்கும். ஆனால், முடிவில் இனிக்கும். யார் எனக்கு எதைச் செய்தாலும், நான் எல்லோருக்கும் நன்மையே செய்வேன் என்ற அர்ப்பணிப்பு உள்ளத்தோடு வாழ வேண்டும். இதுவே எனது கிறிஸ்துமஸ் செய்தி...'' என்றார் முத்தாய்ப்பாக!
முதல்வர் சொன்ன வரிகளில் அர்த்தங்கள் ஆயிரம்!
No comments:
Post a Comment