முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆரம்பத்திலிருந்தே மக்கள் மத்தியில் 'துக்ளக்' இமேஜை உருவாக்கிய பெருமை சசிகலாவுக்கும், அவரது கணவர் நடராஜனுக்கும்தான் உண்டு. இதை ஜெயலலிதாவை நன்கு அறிந்தவர்கள் ஒப்புக் கொள்வார்கள்.
1991ம் ஆண்டு முதல் முறையாக முதல்வர் பதவியில் அமர்ந்தார் ஜெயலலிதா. இரண்டாக பிளவுபட்டுக் கிடந்த அதிமுகவை தனது திறமையால் ஒருங்கிணைத்து, 1991ல் நடந்த சட்டசபை தேர்தலில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றார் ஜெயலலிதா. அந்த்த தேர்தலி்ல ராஜீவ் காந்தி படுகொலையால் கிளம்பிய அனுதாப அலையும் ஜெயலலிதாவுக்கு சாதகமாக அமைந்தது என்பது வேறு விஷயம்.
1991ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதாவின் முதல் ஆட்சிக்காலம் 96 வரை முழுமையாக கழிந்தது. இதில் முதல் 3 ஆண்டு கால ஆட்சியை அத்தனை பேருமே அப்போது புகழ்ந்தார்கள். காரணம், ஜெயலலிதாவின் துணிச்சலான பல நடவடிக்கைகள், பல்வேறு பிரச்சினைகளை அவர் தெளிந்த சிந்தனையோடும், திடமான முடிவுகளோடும் சந்தித்து ஊதித் தள்ளியதாலும்.
ஆனால் முதலாவது ஆட்சியின் கடைசி 2 ஆண்டுகள் நம்ம ஜெயலலிதாவா இவர் என்று அனைவரையுமே ஆச்சரியப்பட வைத்தது. காரணம் அத்தனை குளறுபடிகள். வரிசையாக ஊழல் குற்றச்சாட்டுகள், ராமதாஸை சாலையில் துரத்தித் துரத்தி கைது செய்த விதம், டி.என்.சேஷனை விடாமல் துரத்தி அதிமுகவினர் நடத்திய போராட்டம், சுப்பிரமணியம் சாமிக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக மகளிர் அணியினர் கொடுத்த 'அபார வரவேற்பு' என ஏகப்பட்ட குழப்பங்கள். இதற்கு உச்சமாக அமைந்தது வளர்ப்பு மகன் சுதாகரன் கல்யாணக் களேபரம்.
இதில் எல்லாம் நடராஜனின் கைவரிசை இருந்ததாக அப்போதே செய்திகள் வெளியாகின. அப்போது சசிகலாவை விட நடராஜனுக்கே ஜெயலலிதாவிடம் செல்வாக்கு இருந்தது. ஜெயலலிதாவும் பல விஷயங்களில் ஆரம்பத்தில் நடராஜனிடம்தான் ஆலோசனை கேட்டு நடந்து வந்தார். அவரது ஆட்டம்தான் அப்போது அதிமுகவில் அதிகமாக இருந்தது.
நடராஜன் கைவரிசை ஓங்கிக் கொண்டே போனதால் ஜெயலலிதாவே ஒரு கட்டத்தில் கடுப்பாகி அவரை வீட்டை விட்டு விரட்டினார். இதனால் சசிகலா, நடராஜன் இடத்திற்கு வந்தார். ரிமோட் கன்ட்ரோல் மூலம் தான் செய்ய நினைத்ததை சசி மூலம் செய்து வந்தார் நடராஜன். இதனால்தான் கோபமாகி, நடராஜனுடன் எந்தவிதமான தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று சசிகலாவுக்கு உத்தரவிட்டு தன்னுடன் போயஸ் தோட்டத்திலேயே அவரை வைத்துக் கொண்டார் ஜெயலலிதா.
ஜெயலலிதாவின் முதலாவது ஆட்சியிலும் சரி, பின்னர் வந்த 2வது ஆட்சியிலும் சரி சசிகலா மற்றும் மறைமுகமாக நடராஜனின் ஆதிக்கம்தான் கொடி கட்டிப் பறந்தது.
இவர்கள் இருவரும் நேரிலும், மறைமுகமாகவும் கொடுத்து வந்த பல தவறான ஆலோசனைகளைக் கேட்டு ஜெயலலிதா நடந்ததால் அவர் எடுத்த பல முடிவுகள் மக்கள் மத்தியில் கோமாளித்தனமாக பார்க்கப்பட்டது. இதை உணரக் கூட விடாத வகையில் ஜெயலலிதாவின் கண்களை கிட்டத்தட்ட மூடி வைத்து விட்டது சசிகலா தரப்பு.
அமைச்சர்கள் மாற்றம், அதிகாரிகள் மாற்றம், கட்சி நிர்வாகிகள் மாற்றம், தேர்தலில் சீட் தருவத, வேட்பாளர் தேர்வு என பல விஷயங்களிலும் சசி தரப்பின் தலையீடு நிச்சயமாக இருந்தது. தடாலடியாக ஒருவரை நியமிப்பது, அவர் அதில் செட்டிலாவதற்குள் தூக்குவது என்று தான்தோன்றித்தனமான பல முடிவுகளால் ஜெயலலிதாவுக்கு மக்கள் மத்தியில் கெட்ட பெயரே ஏற்பட்டது. இதற்கெல்லாம் நிச்சயம் சசி தரப்பு ஒரு காரணமாக இருந்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.
இப்போதைய 3வது ஆட்சியிலும் கூட வந்தது முதலே தொடர்ந்து அமைச்சர்கள் மாற்றம், அதிகாரிகள் மாற்றம் வரலாறு காணாத வகையில் இருந்தது. மக்களே கடுப்பாகிப் போகும் அளவுக்கு நடந்து வந்த இந்த மாற்றங்கள், ஜெயலலிதா மீது உண்மையான விசுவாசம் கொண்ட கட்சியின் மூத்த தலைவர்களுக்கும், அவருக்கு ஆலோசனை கூறி வந்தவர்களுக்கும் கூட எரிச்சலையே கொடுத்தது.
கடந்த இரண்டு ஆட்சிகளிலும் ஜெயலலிதா மேற்கொண்ட பல அரசியல் முடிவுகளில் பெரும்பாலானவற்றில் இந்த இருவரின் தலையீடும் இருந்தது என்பது மறுக்க முடியாதது. ஜெயலலிதாவை மக்கள் மத்தியில் ஒரு நிலையான முடிவெடுக்கத் தெரியாதவர், அவசர புத்தி கொண்டவர், அள்ளித் தெளித்த கோலமாக முடிவெடுக்கக் கூடியவர், துக்ளக் போல நடந்து கொள்பவர் என்ற எண்ணத்தை ஏற்படுத்தக் காரணமாக அமைந்தது என்பதில் சந்தேகம் இல்லை.
மொத்தத்தில் தெரிந்தோ தெரியாமலோ ஆரம்பத்திலிருந்தே ஜெயலலிதாவை மக்கள் மத்தியில் தவறான இமேஜுக்குரியவராக மாற்றியமைத்தவர்கள் சசியும், நடராஜனும் என்பதே உண்மை.
No comments:
Post a Comment