சாலைதான் இவர்களின் முகவரி. சமையல் முதல் தாம்பத்யம் வரை எல்லாமும் சாலையோரம்தான். வெயிலென்றால் மர நிழல்; மழையென்றால் கடைகளின் தாழ்வாரங்கள். நாள்தோறும் லட்சக்கணக்கானோர் இவர்களைக் கடந்து போகிறார்கள். எனினும் இவர்களின் அவலத்தைக் கண் கொண்டு பார்க்கவோ, துயரத்தை செவிகொடுத்துக் கேட்கவோ யாருமில்லை. ஒரு பக்கம் மாட மாளிகைகளாக சென்னை வளர்ந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நடைபாதையை வாழிடமாகக் கொண்டு பல்லாயிரம் குடும்பங்கள் ஜீவிக்கின்றன.
இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் நடைபாதைவாசிகள் உண்டு. சென்னையில் மட்டும் சுமார் 50 ஆயிரம் பேர். இவர்களின் வாழ்க்கை நரகமாகத்தான் கழிகிறது. இந்தக் குளிரின் தாக்கத்தில் இவர்களில் பலர் சத்தமின்றி சாவதைக் கண்டு அதிர்ந்த உச்ச நீதிமன்றம், ‘இவர்கள் இரவு நேரத்தில் உறங்குவதற்காவது விடுதிகள் கட்டித்தர வேண்டும்Õ என்று மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டிருக்கிறது.
இந்த மக்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள்? இவர்களின் தேவைதான் என்ன..?
‘‘60, 70கள்ல தென் மாவட்டங்கள்ல ஏற்பட்ட பஞ்சத்தால சென்னையை நாடி வந்தவங்க. துறைமுகத்தில ஏத்த, இறக்கக் கூலிகளா சிலருக்கு வேலை கிடைச்சுச்சு. அதை நம்பி ஊர்கள்ல மிஞ்சியிருந்தவங்களும் வந்துட்டாங்க. கிடைச்ச சம்பளத்தில வீடு எடுத்தெல்லாம் தங்க முடியலே. வெட்ட வெளிகளா கிடந்த சுடுகாடுகள், பாலங்கள், நடைபாதைகள்ல தங்கினாங்க. நகரம் வளர வளர இப்படி வர்றவங்க எண்ணிக்கை அதிகமாயிடுச்சு. இவங்களுக்குள்ள ஜாதி, மத வேறுபாடெல்லாம் அழிஞ்சிடுச்சு. மனசுக்குப் பிடிச்சவங்கள கல்யாணம் பண்ணிக்கிட்டு குடும்பமா வாழ்றாங்க. பூ, மீன், காய்கறி வியாபாரம், சுமை வண்டி ஓட்டுறதுன்னு நிரந்தரமில்லாத தொழில். கிடைக்கிற வருமானத்தை வச்சு சாப்பிடுறதே பெரிய விஷயம். அதைத் தாண்டி வேறெதையும் வாழ்க்கையில கற்பனை பண்ண முடியாது’’ என்கிறார் குடிசை மக்கள் வாழ்வுரிமை இயக்கத் தலைவர் இசையரசு.
திரு வல்லிக் கேணி நெடுஞ் சாலை, வேப்பேரி, பெரியமேடு, சென்ட்ரல், வால்டாக்ஸ் ரோடு, ராயபுரம், வண்ணாரப் பேட்டை, தண்டையார் பேட்டை, அயனாவரம், பெசன்ட் நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபாதை மக்கள் வசிக்கிறார்கள். எதுவும் நிரந்தர இடமில்லை. திடீரென வரும் ‘கொள்ளை லாரிகள்’, சொந்தமென இருக்கும் தளவாடச் சாமான்களை அள்ளிச் சென்றுவிடும். போலீஸ் விரட்டும். பார்த்தால் ஓரிரு மாதங்களில் அங்கொரு கட்டிடம் முளைக்கும். வேறொரு நிழல் தேடி ஓடவேண்டியதுதான்.
‘‘நடைபாதை மக்களுக்குன்னு ஒரு துறையோ, அதிகாரியோ இல்லை. குடிசை மாற்று வாரியத்துக்குப் போனா உங்களுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லைங்கிறாங்க. நாலு பேரு கூடுற இடத்திலதான் பூ விக்கமுடியும். நாலு குடும்பங்கள் இருக்கிற எடத்துலதான் காய்கறி, மீன் விக்க முடியும். நாலு கம்பெனிகள் இருக்கிற இடத்துலதான் ஏத்த, இறக்க வேலை கிடைக்கும். இவங்க நகரத்தை விட்டு 25 கி.மீ. தள்ளி கண்ணகி நகர்லயும், செம்மஞ்சேரியிலயும் வீடு கொடுக்கிறாங்க. அங்கேயிருந்து இங்கே பஸ்சுல வந்துபோனாலே எங்க வருமானம் கரைஞ்சிரும். எப்படிச் சாப்பிடுறது?’’ என்கிறார் தெருவோரம் வாழ் மக்கள் உரிமை சங்கத் தலைவர் கலியன்.
இவர்களுக்கு இரவு நேர விடுதி பயனளிக்குமா?
ஏற்கனவே சென்னையில் இவர்களுக்காக சில விடுதிகள் உள்ளன. அவற்றின் நிலையை எழுத்தில் சொல்ல முடியாது.
‘‘டெல்லி மக்களை மனதில் வைத்துதான் உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. தற்காலிகமாக தொழில்தேடி வரும் பேச்சிலர்கள்தான் அங்கே நடைபாதையில் தங்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு விடுதி பயனளிக்கும். இங்கு நிலை வேறு. குடும்பம் குடும்பமாக நடைபாதையில் வசிக்கிறார்கள். இப்போதுள்ள இரவுநேர தங்கும் விடுதியில் ஒரு சிறிய திண்டு மட்டுமே தடுப்பாக இருக்கிறது. அதில் எப்படி கணவன், மனைவி தங்கமுடியும். எங்களுக்கு ஆசாபாசங்கள் இருக்கக்கூடாதா? எங்களுக்கு அடிப்படை உரிமைகளை ஏற்படுத்தித் தர வேண்டிய கடமை அரசுக்கு இல்லையா? வயதுக்கு வந்த பெண்களை வைத்துக் கொண்டு, இரவில் கால்நீட்டி தூங்கக்கூட அவதிப்படுகிறோம். பிச்சையெடுப்பவர்களுக்கு, மனநலம் பாதித்தவர்களுக்கு, கைவிடப்பட்ட மனிதர்களுக்கு இரவுநேர விடுதி ஓ.கே. எங்களைப் போல குடும்பமாக வாழ்பவர்களுக்கு அதையே சிறுசிறு வீடாகக் கட்டிக் கொடுத்தால் நிம்மதியாக இருப்போம்’’ என்கிறார் தெருவோரம்வாழ் மக்கள் உரிமை சங்க செயலாளர் ஸ்ரீதரன்.
பெரியமேடு கால்நடை மருத்துவக்கல்லூரி விடுதி அருகே வசித்த 50 குடும்பத்துக்கு கண்ணப்பர் திடல் அருகில் இரவுவிடுதி அமைத்துத் தரப்பட்டது. அதில் குடும்பமாக தங்கும் சூழல் சிறிதும் இல்லை. இடையில் சேலை, சாக்குகளை கட்டி தொங்க விட்டு உறங்குகிறார்கள்.
‘‘பொதுக் கழிவறையில குளிக்க 5 ரூபாயும், கழிக்க 2 ரூபாயும் கேட்கிறாங்க. ஒரு குடும்பத்துக்கு இதுக்கே ஒருநாளைக்கு 25&30 ரூபாய் தேவைப்படுது. சில இடங்கள்ல பயன்படாத பள்ளிக் கூடங்களை இரவு விடுதிகளா மாத்தியிருக்காங்க. ஆடு, மாடுகள் மாதிரி அடைஞ்சு கிடக்க வேண்டியிருக்கு. கண்ணப்பர் திடல் விடுதியை இடிச்சு வீடா கட்டுனா 200 குடும்பங்கள் நிம்மதியா தங்கலாம். புளியந்தோப்புல ஆர்டிஓ ஆபீஸ் போற வழியில பெரிய இடம் இருக்கு. அதுமாதிரி இடங்கள்ல எங்களுக்கு வீடு கட்டித் தரணும்’’ என்கிறார் ஸ்ரீதரன்.
இம்மக்களின் குரல் அரசின் செவிகளை எட்டுமா..?
No comments:
Post a Comment