தண்ணீர் பிரச்னையில் அண்டை மாநிலங்கள் வஞ்சிக்கும்போதெல்லாம் தமிழ்நாட்டில் ‘நதிநீர் இணைப்பு’ குரல்கள் எழுவது வாடிக்கையாகி விட்டது. கர்நாடகா, ஆந்திரா கடந்து இப்போது கேரளாவின் முறை. முல்லைப் பெரியாறு விவகாரத்தால் தமிழகமே தகித்து நிற்கும்போது வழக்கம் போல் மீண்டும் நதிநீர் இணைப்பு கோஷம் உச்சம் தொட்டிருக்கிறது.
இந்நிலையில், நதிநீர் இணைப்புக்கான நிதியைத் திரட்டவும், பிற மாநிலங்களின் ஆதரவைப் பெறவும் சூப்பர்ஸ்டார் ரஜினியை தமிழகத்தின் ‘பிராண்ட் அம்பாசிடராக’ நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்திருக்கிறது இந்து மக்கள் கட்சி.
இது தொடர்பாக அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் கண்ணனிடம் பேசினோம்.
‘‘நதிநீர் இணைப்பு பற்றி பேசுவது ‘சீசன் டாக்’ மாதிரி ஆயிடுச்சு. பிரச்னை வரும்போது பேசறதும், மற்ற நேரங்கள்ல வசதியா மறந்துடறதுமா இருக்கோம். கடந்த 10 வருஷங்களா வெறும் பேச்சளவிலதான் நாம இருக்கோம். ஆனா குஜராத்ல எல்லா நதிகளையும் இணைச்சு தன்னிறைவு விவசாயம் செஞ்சுக்கிட்டிருக்காங்க. தமிழகம் இன்னும் பிற மாநிலங்களை கெஞ்சும் நிலையிலதான் இருக்கு. முல்லைப் பெரியாறு மாதிரி பிரச்னைகள் எதிர்காலத்துல வராம இருக்கறதுக்கு, நதிகளை தேசியமயமாக்கி இணைக்கிறதுதான் தீர்வு.
நதிநீர் இணைப்புக்கு தடையா இருப்பது நிதிதான். சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என்கிறார்கள். தமிழ்நாட்டு நதிகளை இணைக்க 2500 கோடி ரூபாய் போதும். மேலும், நதிநீர் இணைப்பை எதிர்க்கும் மாநிலங்களை சம்மதிக்க வைக்கணும். அரசாங்க மட்டத்துல பேச்சுவார்த்தை, அதிகாரிகள் விவாதம்னு போக ஆரம்பிச்சுதுன்னா, இந்த ஜென்மத்துல சாத்தியம் இல்லாமப் போயிடும்.
கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட மக்கள் செல்வாக்கு மிகுந்த ஒருவரால்தான் இதைச் செய்யறது சாத்தியமாகும். நதிநீர் இணைப்பு பற்றி ஏற்கனவே பேச்சு எழுந்தபோதே, ‘இதற்காக நான் ஒரு கோடி ரூபாய் தருகிறேன்’ என்று தன்னெழுச்சியாக அறிவித்தவர் ரஜினிகாந்த். காவிரி பிரச்னையில் தமிழ்நாட்டின் உரிமைக்காக தனியாளா உண்ணாவிரதம் இருந்தவர். தமிழ்நாட்டு மக்கள் மேல் அவருக்கு நிறைய அக்கறை இருக்கு. ‘ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு தந்தது தமிழல்லவா...’, ‘அன்னை வாரிக்கொடுத்தது தாய்ப்பாலு, என்னை வாழவைத்தது தமிழ்ப்பாலு’ன்னு பாடல்கள்ல தன் நன்றிக்கடனை வெளிக் காட்டுறவர்.
தமிழ்நாட்டுக்கு அவர் நிறைய செய்ய நினைக்கிறார். அதனால் அவரை தமிழ்நாட்டோட கௌரவ அம்பாசிடரா நியமிக்கணும். அவர் களத்தில இறங்கினா தமிழ்நாட்டுக்கு உள்ளேயே நதிநீர் இணைப்புக்கான நிதியைத் திரட்டிடலாம். அவர் பேச்சைக் கேக்கறதுக்கு வயசு வித்தியாசம் இல்லாம தமிழ்நாடு முழுக்க லட்சக்கணக்கான பேர் இருக்காங்க. மத்திய அரசுகிட்ட கையேந்தி நிக்கணும்னு அவசியம் இல்ல. இந்தியா முழுவதும் ரஜினிக்கு மரியாதை இருக்கு. நதிநீர் இணைப்பை எதிர்க்கும் அண்டை மாநிலங்களுக்கும் நல்லெண்ணத்தோட அவர் போய்ப் பேசினா நமக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும்’’ என்கிறார் கண்ணன்.
‘‘ரஜினியை இப்படி பிராண்ட் அம்பாசிடராக நியமிப்பதில் மேலும் சில நன்மைகளும் இருக்கு’’ என்கிறார் அவர். ‘‘அடித்தட்டு குடும்பத்தில் பிறந்து, கண்டக்டரா வாழ்க்கையைத் தொடங்கி இன்று உலகமறிந்த மனிதரா உயர்ந்திருக்காரு ரஜினி. இந்த வெற்றிக்குப் பின்னால பிரமாண்டமான உழைப்பு இருக்கு. இவரை அம்பாசிடரா நியமிச்சா, இளம் தலைமுறை மத்தியில் மிகப்பெரிய உத்வேகம் உருவாகும். நிறைய தொழில் வாய்ப்புகளை அவரால தமிழகத்துக்குக் கொண்டு வரமுடியும்.
விளையாட்டுதான் நம் மரியாதையை உலக அரங்கில் தீர்மானிக்குது. கிரிக்கெட் தவிர மற்ற விளையாட்டுகள்ல நம்மகிட்ட இருக்கற திறமைசாலிகளை விரல்விட்டு எண்ணிடலாம். போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததே இதற்குக் காரணம். ரஜினி விளையாட்டுத் துறையில் கவனம் செலுத்தினால் ஏராளமான வீரர்களை உருவாக்க முடியும். அவரை இந்த அளவுக்கு உயர்த்திய தமிழகம், தனது வளர்ச்சிக்கு அவரைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்...’’ என்று சொல்லும் கண்ணன், இதற்கு ஏராளமான உதாரணங்களையும் பட்டியல் போடுகிறார்.
‘‘நடிகர் அமிதாப் பச்சனை குஜராத் அரசு தங்கள் மாநிலத் தூதராக நியமிச்சது. குஜராத் சுற்றுலாத் துறை விளம்பரங்களில் அவர் வர்றார். சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கறதுக்கு அவர் உதவறார். தொழில் முதலீட்டுக்கும் அமிதாப் உதவியா இருக்கார். ‘இன்போசிஸ்’ நாராயணமூர்த்தி கர்நாடக மாநிலத்தின் அம்பாசிடரா இருந்தார். இந்தியாவின் ‘ஹைடெக் தலைநகரம்’னு சொல்ற அளவுக்கு பெங்களூருவை மாற்றியதில் அவர் பங்கு அதிகம். பல கிராமங்களை தத்தெடுத்து மேம்படுத்தினார். அதேபோல், ‘சத்யம்’ ராமலிங்க ராஜு ஹைதராபாத் சிட்டியின் அம்பாசிடராக இருந்தார். அந்நகரத்தை ஐ.டி. ஹப்பாக மாற்றினார். தற்போது மேற்கு வங்காள மாநிலத்தின் அம்பாசிடராக ஷாரூக் கானை நியமிக்க உள்ளார்கள். அதைப்போல தமிழக மக்களின் நன்மைக்காக ரஜினியை அம்பாசிடராக முன்நிறுத்த வேண்டும்...’’ என்கிறார் கண்ணன்.
இந்து மக்கள் கட்சியின் இந்தக் கோரிக்கை பற்றி ரஜினிக்கு நெருக்கமான சிலரிடம் பேசினோம்... ‘‘தமிழ்நாட்டு மக்களுக்கு நிறைய செய்ய வேண்டும் என்ற எண்ணம் ரஜினிக்கு இருக்கிறது. ஆனால் அதுபற்றிப் பேச இது சரியான தருணமல்ல...’’ என்று முடித்துக் கொண்டார்கள்.
No comments:
Post a Comment