மதுரைக்கு வரும் வி.வி.ஐ.பி-க்கள் அத்தனை பேருக்கும் திருப்பாலை சீனிவாசனைத் தெரியும். 32 லட்ச ரூபாய் காரை டாக்ஸியாக ஓட்டிக்கொண்டு இருக்கும் காஸ்ட்லி டிரைவர் இவர். அவருடைய வாழ்க்கை அத்தனை சுவாரஸ்யம்!
'29 வருஷத்துக்கு முன்னாடி 'பிர்லா கெஸ்ட் ஹவுஸ்’ பகுதியில் அரைக்கால்ச் சட்டையோடு எடுபிடி வேலை பார்த்துக்கிட்டு இருந்தேன். வடநாட்டில் இருந்து வர்ற டூரிஸ்ட் வாகனங்களைக் கழுவிச் சுத்தம் செய்வேன். ஒரு வண்டியைக் கழுவினா ரெண்டு ரூபா கூலி கிடைக்கும். சுத்தம் பண்ணும்போது எல்லாம் 'இந்த வண்டியில் நாம போனா எப்படியிருக்கும்?’னு யோசிச்சுப் பார்ப்பேன். அதனால், யாராவது 'ராமேஸ்வரம் எப்படிப் போறது? கன்னியாகுமரிக்கு வழி எப்படிப்பா?’னு கேட்டாப் போதும், உடனே அவங்க வண்டியில் ஏறி வழிகாட்டப் போயிடுவேன். அவுட்டர் வரைக்கும் போய் இறங்கி, அங்கே இருந்து பஸ்ஸுக்குக் காசு இல்லாம நடந்தே வந்திருக்கேன்.
தெரிஞ்ச ஆள் மூலமா கேரளாவில் லாரி கிளீனராச் சேர்ந்து லாரி ஓட்டக் கத்துக்கிட்டேன். அப்புறம் சென்னையில் இருக்கிற கணேஷ் டிராவல்ஸ்ல டிரைவரா சேர்ந்தேன். அங்க எங்களுக்கு உடல், உடை சுத்தம், நாகரீகமான நடத்தை, கனிவான பேச்சுனு நல்ல விஷயங்களைச் சொல்லிக்கொடுத்தாங்க. அந்த அனுபவத்தை வெச்சு 11 வருஷத்துக்கு முன்னால் நானே சொந்தமா அம்பாசிடர் வாங்கி மதுரையில் ஓட்ட ஆரம்பிச்சேன். அனுபவம் தந்த அணுகுமுறையால் நிறைய சம்பாதிக்க ஆரம்பிச்சேன். நிறைய கார்களை வாங்கி வித்துட்டு கடைசியா 'மெர்சிடிஸ் பென்ஸ்’ வாங்கிட்டேன். ஆனாலும், காரோட ஓனரா இல்லாம பொறுப்பான டிரைவரா வேலை பார்த்துக்கிட்டிருக்கேன். மதுரையில் 32 லட்ச ரூபாய் காரை வாடகைக்கு ஓட்டுற ஒரே ஆள் நான்தான். அதனால் மதுரைக்கு வரும் வி.வி.ஐ.பி.க்கள் எல்லாம் என்னைத் தேடுவாங்க. தொழில் அதிபர்கள் அனில் அம்பானி, கோயல், அப்பல்லோ பிரபாத் ரெட்டி, ஹெச்.சி.எல். ஷிவ் நாடார், நடிகர் சூர்யா, பாடகர் ஹரிஹரன் என்று நம்மோட கஸ்டமர்ஸ் எல்லாமே பெரிய பெரிய ஆளுங்கதான். அவங்ககிட்டே தேவையில்லாமப் பேசுறதையும் தவிர்த்துடுவேன். அதே நேரத்தில் அவங்க ரிலாக்ஸாப் பேச விரும்புறாங்கனு தெரிஞ்சா வழக்கமான மதுரைக்காரன் ஆயிடுவேன். அனில் அம்பானி மதுரை ஏர்போர்ட்ல இறங்கியதும் கேட்டது, இளநிதான். அவரோட வந்தவங்க 'இங்கே கிடைக்காதே’னு இழுத்தாங்க. மீனாட்சியம்மன் கோயிலுக்குப் போயிட்டுத் திரும்பும்போது, மறுபடியும் அவர் இளநி கேட்டார். சி.எஸ்.ஐ. மிஷன் ஆஸ்பத்திரி பக்கத்தில் காரை நிறுத்தினேன். அங்கேயே இறங்கி ரோட்டில் நின்னு இளநி குடிச்சார். ஷிவ்நாடார் வந்தப்ப 'எனக்குத் தூத்துக்குடி மாவட்டம் தான். என்னோட அப்பா மதுரை மாவட்ட கோர்ட்ல நீதிபதியா இருந்தார். அப்போ மெடிக்கல் காலேஜ் எதிர்புறம் இருக்கிற கார்ப்பரேஷன் ஸ்கூல்ல தான் படிச்சேன். 18 வருஷத்துக்குப் பின்னாடி இன்னைக்குத் தான் மதுரைக்கு வர்றேன்’னு சந்தோஷமாச் சொன்னார்.
இசை நிகழ்ச்சிக்காக வந்திருந்த ஹரிஹரன் சார், 'எவ்வளவு பேர் நிகழ்ச்சி பார்க்க வருவாங்க?’னு கேட்டார். 'பாஸ்ங்கிறதால 2 ஆயிரம் பேர் வருவாங்க. பாஸ் கொடுக்கைலைனா தமுக்கம் தாங்காது’னு சொன்னேன். 'மழை வருமா?’னு கேட்டுக்கிட்டே இருந்தார். திரும்பப் போகும்போது, 'நல்லவேளை மழை வரலை!’னு குழந்தையாச் சிரிச்சார். ஒரு சமையல் விளம்பரத்தில் நடிக்கிறதுக்காக, காரைக்குடி வந்த சூர்யா, என்னைப் பத்தியும் என் குடும்பத்தைப் பத்தியும் விசாரித்தார். 'உங்க தொழில்தான் நிரந்தரம். நடிகர்களுக்கு மூணு அல்லது நாலு வருஷம்தான் வாழ்க்கை. தோல்ல சுருக்கம் விழுந்தா எல்லாரும் சொல்லிவெச்சு ஓரம் கட்டிடுவாங்க. அந்த இடத்தில் இன்னொரு ஹீரோ ஜம்முன்னு வந்துடுவார். எத்தனை பேர் வந்தாலும் நீங்க கார் ஓட்டிட்டு இருப்பீங்க''னு சீரியஸா சொன்னார். 'நான் பார்த்த வி.ஐ.பி.க்களிலேயே தன்மையான ஆள் சூர்யாதான்' அழகாய்ச் சிரிக்கிறார் சீனிவாசன்.
No comments:
Post a Comment