2011 முழுக்க சுரத்தில்லாமல் கிடந்த ரியல் எஸ்டேட் மீண்டும் சுறுசுறுப்பாகி இருக்கிறது. கைடுலைன் வேல்யூவை உயர்த்த தமிழக அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதால் பத்திரச் செலவை குறைக்க வேகவேகமாக பத்திரப்பதிவு செய்து வருகின்றனர் பலர்
. இது ஒருபக்கமிருக்க, 2012-ல் தமிழ்நாடு முழுக்க ரியல் எஸ்டேட் எப்படி இருக்கும்? என சர்வதேச சொத்து ஆலோசனை நிறுவனமான ஜோன்ஸ் லாங் லசாலே-ன் துணைத் தலைவர் (ரெசிடென்சியல் சர்வீஸஸ்) ஏ.எஸ். சிவராமகிருஷ்ணனிடம் கேட்டோம். ''கடந்த 2011-ல் இந்தியாவில் பல மாநிலங்களில் ரியல் எஸ்டேட் விலை வீழ்ச்சி அடைந்தது. ஆனால், தமிழ்நாட்டில் நிலைமை இதற்கு நேர்மாறாக அதிகரித்தது. தற்போது ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்பவர்களில் 60 சதவிகிதத்தினர் சொந்தத் தேவைக்காகவும் 40 சதவிகிதத்தினர் முதலீட்டு நோக்கிலும் வாங்குகிறார்கள்.
2012-ல் ஐ.டி. மற்றும் ஐ.டி. சார்ந்த சேவைத் துறையின் செயல்பாட்டை பொறுத்தே தமிழகத்தில் ரியல் எஸ்டேட்டின் வளர்ச்சி இருக்கும். மற்ற நிறுவன ஊழியர்களோடு ஒப்பிடும் போது ஐ.டி. நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் சம்பளம் அதிகம். இவர்கள் வருமான வரிச் சேமிக்க வீடு வாங்குகிறார்கள்.
சென்னையில் ஓ.எம்.ஆரில் படூர் வரை, ஜி.எஸ்.டி. சாலையில் ஊரப்பாக்கம் வரை சென்னை புறநகர் ரியல் எஸ்டேட் விலை 2012-ல் விலை அதிகரிக்க வாய்ப்புண்டு.
கோவையில் மெகா புராஜெக்ட்களுக்கு பதில் 10 முதல் 20 அடுக்குமாடி வீடுகளை கொண்ட நிறைய கட்டுமான திட்டங்கள் வருகின்றன. கோவையில் எதிர்பார்த்த அளவுக்கு புதிய வேலைவாய்ப்பு உருவாக வில்லை. தவிர, வீடு மற்றும் மனை விலை கிட்டத்தட்ட சென்னை அளவுக்கு இருக்கிறது.
திருச்சி, மதுரை, சேலம் போன்ற நகரங்களில் இடம் தாராளமாக கிடைப் பதால் இடம் வாங்கி வீடு கட்டுவதைத்தான் அதிகம் விரும்புகிறார்கள்''.
''2012-ல் ரியல் எஸ்டேட் விலை அதிகரிக்கும் என்று நீங்கள் சொல்ல என்ன காரணம்?'' என்று கேட்டோம்.
''நம் நாட்டில் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் தற்போது உச்சத்தில் (சுமார் 10.5-12.5%) இருக்கிறது. இதற்கு மேலே செல்ல வாய்ப்பில்லை. நாட்டில் தற்போது உணவு பணவீக்க விகிதம் இரட்டை இலக்கத்திலிருந்து குறைந்து ஒற்றை இலக்கத்துக்கு வந்து, ஒரு சதவிகிதத்துக்கும் கீழே போய்விட்டது. இந்நிலையில் வரும் மார்ச் மாத வாக்கில் ரிசர்வ் வங்கி முக்கிய வட்டி விகிதங்களை குறைக்கும் என எதிர்பார்க்கலாம். அப்படி குறைந்தால் இன்னும் பலரும் வீடு வாங்குவார்கள். அப்போது ரியல் எஸ்டேட்டின் விலையும் உயரும்.
ஆனால், தமிழ்நாட்டில் இது உடனடியாக நடக்காது. விற்பனை பாதிக்குமா என்று பார்த்துவிட்டுத்தான் பில்டர்கள் விலையை உயர்த்துவார் கள். அப்படி விலை உயர்ந்தால், வட்டி விகித குறைவோடு ஒப்பிடும் போது விலை அதிகரிப்பு கொஞ்சம் அதிகமாக இருக்கும். தற்போது எல்லாமே நெகட்டிவ்-ஆக இருப்பதால் வீடு விலை குறைவாக இருக்கிறது. அந்த வகையில், இதுவே வீடு வாங்க சரியான நேரமாக இருக்கும்'' என்றவர், ''உள்கட்டமைப்பு வசதிகள் கொண்ட பகுதியில் வீடு வாங்குவது நல்லது. அப்போதுதான் முதலீட்டுப் பெருக்கம் என்பது எதிர்பார்த்த அளவுக்கு அதிகமாக இருக்கும்.'' என்ற டிப்ஸையும் தந்தார்.
No comments:
Post a Comment