Monday, January 2, 2012

பங்குச் சந்தை 2012 எப்படி இருக்கும்?

விக்னேஷ்

துணைத் தலைவர், இந்தியா நிவேஷ்.

''தற்போது உச்சத்தில் இருக்கும் வட்டி விகிதத்தைக் குறைத்தாலும் நிலைமைச் சரியாக இன்னும் சில மாதங்களாகும். 2012-ன் முதல் பாதியில் நிஃப்டி 4200-ஆகவும், அதை உடைத்துக்கொண்டு கீழே போனால் 4000 புள்ளிகளுக்குக்கூட குறைய வாய்ப்புண்டு.
ஆனால், நிஃப்டி 4200 புள்ளிகளில் இருக்கும்போதே முதலீடு செய்ய ஆரம்பிக்கலாம். 4000 புள்ளிகளில் துணிந்து வாங்கலாம். இன்ஃப்ரா மற்றும் ஆயில் சார்ந்த பங்குகளில் முதலீடு செய்யலாம்.''
நாகப்பன்

பங்குச் சந்தை நிபுணர்.



''தற்போதைய நிலையில் முன்கூட்டி வரி செலுத்திய தொகை குறைவாக இருக்கிறது. எனவே மார்ச் காலாண்டு முடிவும், அதற்கடுத்த இரண்டு காலாண்டு முடிவுகளும் சொல்லிக்கொள்கிற மாதிரி இருக்காது. 2012 டிசம்பர் காலாண்டில் இருந்து சிறப்பான தொடக்கம் அமைய வாய்ப்பிருக் கிறது. ஆனால், ரூபாய் மதிப்பு இன்னும் சரியக்கூடாது. பணவீக்கமும் கச்சா எண்ணெய் விலையும் குறைவாக இருக்க வேண்டும். நிஃப்டி சரியும் பட்சத்தில் அடுத்த சில மாதங்களில் 4350, அதற்கடுத்து சரிந்தால் 4000 புள்ளிகள் வரை செல்ல வாய்ப்புண்டு. வங்கித் துறை பங்குகளை விலை குறைய குறைய வாங்கலாம்!''

ரெஜிதாமஸ்

தென் மண்டல மேலாளர், கார்வி.

''இந்த வருடம் பங்குச் சந்தை அதிக ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். சென்செக்ஸ் 13100 புள்ளிகள் வரைகூட போகலாம். நிஃப்டியை எடுத்துக் கொண்டால் 4100 வரைகூட இறங்கலாம். உயர்ந்தால் 5645 என்ற உச்சபட்ச புள்ளியைகூட அடையலாம். மிட்கேப் பங்குகளை தவிர்த்து விட்டு இண்டெக்ஸ்களில் இருக்கும் பங்குகளை மட்டும் கவனித்து வரவும். இந்த பங்குகள் வீழ்ச்சியின்போது இறங்கினாலும், சந்தை திரும்பும்போது வேகமாக உயரும்.''
ஏ.கே.பிரபாகர்

சீனியர் வைஸ் பிரசிடென்ட். ஆனந்த்ரதி செக்யூரிட்டீஸ்.

''2012-ம் ஆண்டின் முதல் பாதி மிகவும் கடுமையாக இருக்கும். நிஃப்டி 3600 புள்ளிகள் வரைகூட (சென்செக்ஸ் 12,000) இறங்க வாய்ப்புண்டு. வரும் மாதங்களில் ஐரோப்பிய பிரச்னை பெரிதாக வாய்ப்பு இருப்பதே இதற்கு காரணம். ஆனால், 2012 முடிவிலேயே சந்தை மீண்டும் உயர ஆரம்பிக்கும். அப்படி உயர்ந்தால், நிஃப்டி 5400 புள்ளிகளை (சென்செக்ஸ் 17,000) தொட வாய்ப்பிருக்கிறது. பார்மா துறையில் இருக்கும் நல்ல பங்குகளில் முதலீடு செய்யலாம். நல்ல வருமானம் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது.''
சொக்கலிங்கம்

செயல் இயக்குநர். சென்ட்ரம் வெல்த் மேனேஜ்மென்ட்.

''2012 முதல் மூன்று மாதங்களில் சந்தை கீழே செல்லவே வாய்ப்பு அதிகம். பொருளாதாரம் சரியும்போது அரசு ஏதாவது நடவடிக்கை எடுத்தால் சந்தை மேலே செல்லும். சந்தை நிச்சயமற்ற சூழ்நிலையில் இருக்கும்போது எஃப்.எம்.சி.ஜி., பார்மா, ஆட்டோ, ஐ.டி. போன்ற துறைகள் டிபென்ஸிவ்வாக இருக்கும். சந்தை ஏற்றத்தில் இருக்கும்போது வங்கி, இன்ஃப்ரா, இன்ஜினீயரிங், மெட்டல் போன்ற துறைகள் வேகமாகவும் ஏற வாய்ப்பு இருக்கிறது. குறைந்தபட்சம் 13000 புள்ளிகளும், அதிகபட்சம் 20000 புள்ளிகள் வரையும் 2012-ம் ஆண்டில் சந்தை செல்லும்.''
பி.என்.விஜய்

எம்.டி. பி.என். விஜய் ஃபைனான்ஷியல் சர்வீஸஸ்.

''கார்ப்பரேட்களில் லாபம் குறைவாக இருக்கும் காரணத்தினால் வரும் இரண்டு மாதங்களில் பெரிய ஏற்றம் இருக்க முடியாது. இருந்தாலும் அடுத்த அக்டோபர் மாதத்தில் 18000 புள்ளிகள் வரை சந்தை செல்ல வாய்ப்பிருக்கிறது. தற்போதைய நிலையில் பார்மா, எஃப்.எம்.சி.ஜி. துறை பங்குகள் சிறப்பாகச் செயல்பட்டாலும், வட்டி விகித குறைப்புக்குப் பிறகு வங்கி மற்றும் ஆட்டோ துறை பங்குகள் சிறப்பாகச் செயல்பட வாய்ப்பிருக்கிறது. ரூபாய் வீழ்ச்சியினால் சிறிதளவு ஐ.டி. பங்குகளையும் வாங்கிச் சேர்க்கலாம்.''
ஸ்ரீராம்

இயக்குநர், ரிலையபிள் ஸ்டாக்ஸ்.

''சந்தை 12000 முதல் 14000 புள்ளிகளில் ஸ்திரமடையும். இதற்கு கீழே குறைய வாய்ப்பில்லை. இந்த சூழ்நிலையில் முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கிக் குவிக்கலாம். முதலீட்டாளர்களுக்குச் சந்தை கொடுக்கும் கடைசி வாய்ப்பு இது. இதை இழந்தால் இதுபோன்ற வாய்ப்பு கிடைக்காது. எப்போது சந்தை 18000 புள்ளிகளை கடந்த ஒரு நிலை பெறுகிறதோ, அதிலிருந்து ஏற்றப் பாதையில் செல்லும்.''

No comments:

Post a Comment