Monday, January 2, 2012

திவாகரன் 3 ராவணன் 12

'காலம் காலமாக கட்சிக்காக உழைத்தவர்கள் எல்லாம் திக்குத் தெரியாமல் இருட்டுக்குள் கிடக்க... அ.தி.மு.க-வின் அதிகார மையங்களாக விளங்கிய ராவணன், திவாகரன் ஆகியோரின் பார்வை பட்டு திடீர் அமைச்சர்களாக அவதாரம் எடுத்தவர்களின் பட்டியல் முதல்வரின் பார்வைக்குப் போயிருக்கிறது’ என்று உளவுத்துறை வட்டாரத்தில் சுட்டிக் காட்டப்படும் லிஸ்ட் இதோ...


இவர்கள் திவாகரனின் கைப்பாவைகள்...
வைத்திலிங்கம் (வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை): டெல்டா மாவட்டத்தில் திவாகரனுக்கு ஆல் இன் ஆளாக இருப்பவர். திவாகரனின் தளபதி என்று கூட இவருக்கு பெயர் உண்டு.
ஆர். காமராஜ் (உணவுத் துறை): திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தைச் சேர்ந்த காமராஜுக்கு எம்.எல்.ஏ. ஸீட் வாங்கிக் கொடுத்து, அவரை அமைச்சர் ஆக்கியது வரை அத்தனையும் திவாகரன் லீலைதான். திவாகரனுக்காக எதையும் செய்யக் கூடியவர் என்கிறார்கள்.
கே.டி.ராஜேந்திரபாலாஜி (செய்தி மற்றும் சிறப்பு பணிகள் செயலாக்கத் துறை): நாடார்கள் நிரம்பிய சிவகாசி பகுதியில் மைனாரிட்டி சமுதாயத்தைச் சேர்ந்த ராஜேந்திர பாலாஜிக்கு சீட் கொடுத்து அவரை அமைச்சரவையிலும் இடம்பெற வைத்தது திவாகரன்தான். திவாகரன் கல்லூரிக்குத் தேவையான நூல்கள், நோட்டு புத்தகங்கள் எல்லாமே ராஜேந்திர பாலாஜியின் தயவால் பிரின்ட் ஆகிறதாம்.
இவங்க ராவணன் ஆளுங்க...
வி. செந்தில் பாலாஜி (போக்குவரத்துத் துறை)
மாவட்ட மாணவர் அணிச் செயலாளராக கரூரை வலம் வந்து கொண்டிருந்த செந்தில் பாலாஜிக்கு, ராவணன் தொடர்பு ஏற்பட்டதும் எம்.எல்.ஏ. ஸீட் கிடைத்தது. கட்சிக்காரர்களிடம் இருந்த அதிருப்தியையும் தாண்டி அவருக்கு பவர்ஃபுல்லான போக்குவரத்துத் துறையை செந்தில் பாலாஜிக்கு டிக் அடித்தது ராவணன்தான்.
அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி (வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை): ராவணனும், கிருஷ்ணமூர்த்தியும் ஒரே கல்லூரியில் படித்தவர்களாம். அக்ரி படிப்பை முடித்துவிட்டு வேளாண்மை துறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தியை கட்சிக்குள் கொண்டு வந்ததும், பதவி வாங்கிக் கொடுத்ததும் ராவணன்தானாம்.
செ.தாமோதரன் (வேளாண்மைத் துறை): கோவையில் எத்தனையோ சீனியர்கள் இருக்க அவர்களை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு தாமோதரன் அமைச்சர் ஆனார் என்றால், அதற்கு ஒரே காரணம், ராவணனிடம் அவர் காட்டிய பணிவுதானாம்.
எடப்பாடி கே.பழனிச்சாமி (நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை): கட்சியில் இறங்கு முகமாக இருந்த பழனிச்சாமியின் வாழ்க்கை, ராவணன் வருகைக்குப் பிறகுதான் மாறியது. சேலம் மாநகர் மாவட்டச் செயலாளராக இருக்கும் எம்.கே.செல்வராஜ் மூலமாக ராவணனின் தொடர்பு கிடைக்க... எது நடக்க வேண்டுமோ அதுவே நல்லபடியாக நடந்தது.
கே.வி.ராமலிங்கம் (பொதுப்பணித் துறை): 'கொங்கு மண்டலத்தில் எந்த மாவட்டத்தில் யார் அமைச்சராக இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டியது நான்தான். ஈரோட்டுக்கு நீதான் அமைச்சர். உனக்கு பொதுப்பணித் துறை. போய் வேலைகளைப் பார்’ என்று அட்வான்ஸாகவே சொல்லி அனுப்பினாராம், ராவணன்.
எஸ்.பி. வேலுமணி (தொழில்துறை): மாநிலத்தையே கையில் வைத்துக்கொள்ள நினைத்த ராவணன், தன் சொந்த மாவட்டத்தை விட்டுக் கொடுப்பாரா? கடந்த ஐந்து வருடங்களாக ராவணன் வீடே கதி என்று கிடந்ததால்தான், வேலுமணிக்கு அமைச்சர் பதவி.
பி. தங்கமணி (வருவாய்த் துறை): நாமக்கல் மாவட்டச் செயலாளரான தங்கமணிக்கு திருச்சி கலியபெருமாள் மூலமாகத்தான் ராவணன் தொடர்பு கிடைத்தது. 'நான் அம்மாவின் விசுவாசி’ என்று தங்கமணி சொல்லிக் கொண் டாலும், அவர் யாருடைய விசுவாசி என்பது அவரது மனசாட்சிக்கு நன்றாகவே தெரியும்.
எஸ்.கோகுல இந்திரா (சுற்றுலாத் துறை): டி.டி.வி.யின் ஆதரவாளரான கோகுல இந்தி ராவை ஜெயிக்க வைத்து அமைச்சராக்கியவர் ராவணன். இடையில் கோகுல இந்திரா மீது சில புகார்கள் கிளம்ப, ராவணன்தான் தலை யிட்டு அவரைச் சுற்றுலாத் துறைக்கு மாற்ற வைத்தாராம்.
எம்.எஸ்.எம்.ஆனந்தன் (இந்து அறநிலையத் துறை): ராவணனைக் கண்டால் அம்மாவுக்கு போடும் கும்பிடை விட இன்னும் சில டிகிரி அதிகமாக வளைந்து வணங்குவாராம் ஆனந்தன். இவர் அமைச்சர் ஆனதில் இருந்து கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள பல கோயில்களில் தினமும் ராவணன் பெயரில் அர்ச்சனைக்கு உத்தரவு போட்டிருக்கிறாராம்.
கே.பி.முனுசாமி (ஊரக வளர்ச்சித்துறை): எடப்பாடி பழனிசாமி மூலமாகத்தான் ராவண னுக்கு அறிமுகம் செய்து வைக்கப் படுகிறார் முனுசாமி. 'எந்த காலத் துலயும் நீங்க சொல்றதை நான் தட்ட மாட்டேன். எனக்கு எல்லாமே நீங்கதான்’ என்று முனுசாமி காட்டிய பணிவுதான் அவரை இந்த உயரத்துக்கு கொண்டு வந்திருக்கிறது!
சி.த.செல்லபாண்டியன் (தொழிலாளர் நலத்துறை): தென் மாவட்டத்தில் ராவணனுக்கு ஆதரவாக இருக்கும் ஒரே அமைச்சர் செல்லபாண்டியன். இவருக்காகவே எஸ்.பி. சண்முக நாதனை அமைச்சர் பதவியில் இருந்து தூக்கி விட்டு அந்த பொறுப்பை செல்லபாண்டியனுக்கு வாங்கி கொடுத்தார் ராவணன்.
பா.வளர்மதி ( சமூக நலத்துறை): முன்னாள் அமைச்சராக இருந்தும் கூட இந்த முறை அமைச்சரவையில் வளர்மதிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. 'நீங்க ராவணனை போய் பாருங்க..’ என்று சசி வட்டாரத்தில் நம்பிக்கைக்குரிய ஒருவர் சொல்ல.. ராவணனை சந்தித்திருக்கிறார். அடுத்த சில வாரங்களிலேயே அமைச்சராகி விட்டார் வளர்மதி.

No comments:

Post a Comment