Monday, January 2, 2012

யானைக்குப் பாசம்... காளைக்குத் தடை!

'முல்லைப் பெரியாறு விவகாரத்தில் கேரளா வுக்கு ஆதரவாகத்தான் செயல்படுகிறது மத்திய அரசு. அது மட்டுமல்ல, மிருகவதை தடை சட்டத்தின் கீழ் யானைகளைச் சேர்க்காமல், ஜல்லிக்கட்டு காளைகளுக்கு மட்டும் தடை விதித்து உள்ளது. இது தமிழனுக்குச் செய்யும் பச்சைத் துரோகம்'' என்று கொந்தளிக்கின்றனர், ஜல்லிக்கட்டு பாதுகாப்பு குழுவினர்.

அந்தக் குழுவின் மாநில நிறுவனர் பேராசிரியர் அம்பலத்தரசுவிடம் பேசினோம். '1960-ம் ஆண்டு மிருகவதை சட்டத்தின் கீழ் சிங்கம், புலி, சிறுத்தை, குரங்கு போன்ற வனவிலங்குகளை காட்சிப் பொருளாக வைத்து வித்தை காட்டுவதை மத்திய அரசு தடை செய்தது. இது முழுக்க முழுக்க வனவிலங்குகளை பாதுகாக்கும் வகையில் இயற்றப்பட்ட சட்டம். ஆனால் திடீரென கடந்த ஜூலை மாதம், 'ஜல்லிக்கட்டில் காளைகள் வதை செய்யப்படுகின்றன’ என்று தவறான வாதத்தை முன் வைத்து வனவிலங்குகள் வரிசையில் ஜல்லிக்கட்டு காளைகளையும் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முன்னாள் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் சேர்த்து உள்ளார். இதனால் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
ஆனால் காங்கிரஸ் ஆட்சி நடக்கும் கேரளாவில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில்
யானைகளை வைத்து பல்வேறு வித்தைகள் காட்டப்படுகின்றன. இதற்காக யானைகள் பல வகைகளிலும் கொடுமைப் படுத்தப்படுகிறது. யானைகளை மிகவும் சித்ரவதை செய்துதான் பழக்கப்படுத்துகிறார்கள். அப்படி இருந்தாலும், பொது இடங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளின்போது யானைகளுக்கு மதம் பிடிப்பது அடிக்கடி நடக்கிறது. பாகன்களை மட்டு மின்றி பார்வையாளர்களை யும் யானைகள் வதம் செய்கின்றன. கண்ணில் தென்படுபவர்களை துதிக்கை யால் தூக்கி எறிவதும், கால்களால் மிதித்து துவம்சம் செய்வதும் வீடு, கடைகளை சேதப்படுத்துவதும் தொடர்ந்து நடக்கிறது.


ஜல்லிக்கட்டு காளைகளோடு ஒப்பிடும்போது யானைகள்தான் பாரம்பரியமிக்க, பாதுகாக்கப் படவேண்டிய விலங்கு. அப்படிப்பட்ட யானைகள் துன்புறுத்துவது குறித்து கொஞ்சமும் அக்கறை காட்டாத மத்திய அரசு, தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை மட்டும் தடை செய்து காளைகளைக் காப்பாற்ற நினைப்பது என்ன நியாயம்?
கேரளாவுக்கு அந்த மாநிலத்தின் கலாசாரம் முக்கியம் என்றால் நம் தமிழ் நாட்டுக்கு தமிழர்களின் வீரக் கலாசாரம் முக்கியம் இல்லையா? இந்த ஓரவஞ்சனைக்கு காரணம் மத்திய அரசின் பல்வேறு துறைகளிலும் மலையாளிகளின் ஆதிக்கம் நிரம்பி வழிவதுதான். அந்த அதிகாரிகளின் ஆதரவு இருப்பதால்தான், இன்னமும் இந்த பட்டியலில் யானைகள் சேர்க்கப்படாமல் உள்ளது. முல்லைப் பெரியாறு அணை விவகாரத் தில் ஒன்று திரண்டு போரா டும் நம் தமிழக மக்கள் ஜல்லிக்கட்டு

விஷயத்திலும் மத்திய அரசுக்கு நமது எதிர்ப் பைப் பலமாக பதிவு செய்து, நமது பாரம்பரிய ஜல்லிக்கட்டு விளையாட்டை மீட்க வேண்டும்' என்று ஆதங்கப்பட்டார்.



இந்தக் குழுவின் மாநிலச் செயலாளர் ஒண்டிராஜ், 'இதெற் கெல்லாம் காரணம் தமிழ் நாட்டை சேர்ந்த நடிகையும், ராஜ்யசபா எம்.பி-யுமான ஹேம மாலினிதான். அவர்தான் ஜல்லிக்கட்டு விளையாட்டை மிருகவதை சட்டத்தின் கீழ் தடை செய்யவேண்டும் என்று மனு அளித்தார். மத்திய அமைச்சரும் ஹேமமாலினியை திருப்திபடுத்தும் வகையில் எவரையும் கலந்து ஆலோசிக்காமல் உடனடியாக தடை விதித்து ஆணை பிறப்பித்து விட்டார்.

ஏற்கெனவே தமிழ்நாட்டில் கருணாநிதி ஆட்சியில் 2009-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு தடை அவசர சட்டம் இயற்றி அதன் மூலம் ஜல்லிக்கட்டு நடத்த கடும் நிபந்தனைகள் விதித்தது மாநில அரசு. லட்சக் கணக்கான ரூபாய் டெபாசிட் தொகை கட்டினால்தான் அனுமதி கிடைக்கும் என்பதால் ஜல்லிக்கட்டு நடத்த முடியாத இக்கட்டான சூழ்நிலைதான் நிலவுகிறது. பல மாவட்டத்திலும் 300 இடங்களில் நடந்துகொண்டிருந்த ஜல்லிக்கட்டு, தற்போது 20 இடங்களில்கூட நடக்கவில்லை. ஆனால் அதையும் தடுக்கும் வகையில் அமைந்துள்ளது மத்திய அரசின் புதிய தடை உத்தரவு. ஆகவே தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மாதான், இந்த விவகாரத்தில் தலையிட்டு நமது பாரம்பரிய விளையாட்டைக் காப்பாற்றவேண்டும். தமிழர்களின் வீரத்தை உலகுக்கு அறிவிக்கும் ஒரே நிகழ்ச்சியும் தடைபடக்கூடாது'' என்று கோரிக்கை வைத்தார்.

இந்தக் குழுவினர் சமீபத்தில் டெல்லி சென்று தற்போதைய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜன் மற்றும் ராஜ்யசபா எம்.பி. சுதர்சன நாச்சியப்பன் ஆகியோரிடம் மனு கொடுத்து இருக்கிறார்கள். நல்லதே நடக்கும் என்று நம்பிக்கையோடு காத்துக் கிடக்கிறார்கள்.

தண்ணீர் என்றாலும் யானை என்றாலும் கேரளத்தின் பக்கம் நிற்கும் மத்திய அரசு, ஜல்லிக்கட்டு காளைகள் விஷயத்திலாவது தமிழர்கள் உணர்வை மதிக்க வேண்டும்!

No comments:

Post a Comment