நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சின்னத்திரையில் முகம் காட்டப்போகிறார் குஷ்பு. கிட்டத்தட்ட சினிமாவுக்கு ‘குட்&பை’ சொல்லியிருக்கும் அவர், அரசியலில் அரைக் கிணறு தாண்டியிருப்பதாகவே சொல்கிறார்கள் நடுநிலை விமர்சகர்கள். சரி... குஷ்பு என்ன சொல்கிறார்?
இப்போதெல்லாம் உங்களை சினிமாவில் பார்க்க முடியவில்லையே?
‘‘ஆமாம். பிஸியான ஹீரோயினா நிறைய வருஷங்கள் தமிழ் ஃபீல்டுல இருந்துட்டேன். இப்பவும் அதே மாதிரி ‘ரோல்’ கிடைக்காது. ‘ஹீரோ’வுக்கு அக்கா, அம்மா ‘கேரக்டர்’தான் பண்ணணும். அது எனக்கு சரிப்பட்டு வராது.
அடுத்து, எப்பவும் ஷூட்டிங்... ஷூட்டிங்னு போய்ட்டு இருந்தா, குடும்பத்துக்குன்னு தனியாக நேரம் ஒதுக்க முடியாம போயிடும். எனக்கு ‘பிரைவஸி’ தேவை. பசங்க வளர்ந்துட்டாங்க. ஒரு அம்மாவா அவங்களையும் கவனிக்க வேண்டிய பொறுப்பு இருக்கு.’’
ஆனால், மீண்டும் சின்னத் திரைப் பக்கம் வந்துவிட்டீர்களே?
‘‘பொதுவா டி.வி. சீரியலுக்கான ‘ஸ்கிரிப்ட்டை’ நானே எழுதுவேன். இப்ப ஒரு நல்ல ‘ஸ்டோரி’ கெடச்சுது. அதனால் நானே தயாரிக்கிறேன். பெயர், ‘பார்த்த ஞாபகம் இல்லையோ!’ ப்ரியன் ‘டைரக்ட்’ பண்றார். எந்த வேலையுமே நமக்குப் பிடிச்சுப் பண்ணினா வெற்றி நிச்சயம். 2012ல் என்னோட சின்னத்திரை ரீ-எண்ட்ரியும் ‘சக்ஸஸ்ஃபுல்லா’ அமையும்னு நம்பறேன்.’’
சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராக இருந்த நீங்கள், அந்தப் பதவியை ராஜினாமா செய்தது ஏன்?
‘‘அது ஒரு தனிப்பட்ட அமைப்பு. அதில் அரசியல் புகுந்துவிடக் கூடாது என எச்சரிக்கையாக இருந்தேன். பிரச்னைகளை பேசி தீர்த்துக் கொண்டோம். ஆனால், ஒரு சில உறுப்பினர்கள் அரசியல் பின்னணியோடு செயல்பட ஆரம்பித்தார்கள். எனக்கு சுயமரியாதை முக்கியம். அதனை அதிகம் எதிர்பார்ப் பவள் நான். அதனால் அந்தப் பதவியில் தொடர்ந்து இருக்க விரும்பாமல் வெளியேறிவிட்டேன்.’’
தி.மு.க.வில் முன்னணித் தலைவர்களே ஒதுங்கி இருக்கும்போது குஷ்பு மட்டும் குதிப்பது ஏன் என்கிற பேச்சு கேட்கிறதே?
‘‘தி.மு.க.வின் தீவிர தொண்டர்களில் நானும் ஒருத்தி. அதனால், கட்சி நடத்தும் போராட்டங்களில் மற்றவர்களைப் போல் நானும் பங்கெடுக்கிறேன். இதில் ஜூனியர், சீனியர் என்கிற பாகுபாடு இல்லை. மற்றபடி மற்றவர்களைப் பின்னுக்குத் தள்ளி முன்னே நிற்கிறேன் என்று சொல்வதில் எந்த உண்மையும் இல்லை.’’
தி.மு.க.வில் மக்களைக் கவரும் அளவுக்கு பெண் தலைவர் இல்லை. அதனால்தான் கட்சி உங்களை முன்னிறுத்துவதாகச் சொல்கிறார்களே?
(சிரிக்கிறார்!) ‘‘அதைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், கட்சி மேடைகளில் இதைத்தான் பேச வேண்டும் என்கிற கட்டுப்பாடு எதுவும் எனக்கு கிடையாது. தலைமையும் அதைப் பற்றிச் சொன்னதில்லை. அதனால் சுதந்திரமாக இயங்குகிறேன், போதுமா!’’
கட்சியில் உங்களின் வளர்ச்சி பலருக்கும் பிடிக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறதே?
‘‘இப்படியெல்லாமா கற்பனை செய்கிறார்கள். சமீபத்தில் கட்சி நடத்திய உண்ணாவிரதத்தில் தலைவர் அவரது கையாலேயே எனக்குப் பருக ஜூஸ் கொடுத்தார். அப்போது நிர்வாகிகளும் தொண்டர்களும் ஆதரவுக் கோஷம் எழுப்பினார்கள். அரசியலில் வளர்வதற்கான வாய்ப்பை எதிர்பார்க்கிறேன். மற்றபடி பேராசை எல்லாம் எனக்குக் கிடையாது.’’
கட்சியில் இணைந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் பதவி எதுவும் கிடைக்கவில்லை என்கிற வருத்தம் இல்லையா?
‘‘எந்தப் பதவியையும் எதிர்பார்த்து நான் தி.மு.க.வில் சேரவில்லை. தலைமை தரும்போது பார்க்கலாம்.’’
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில் மலையாள நடிகர்கள் சங்கம் கேரளாவுக்கு ஆதரவாக தீர்மானம் போட்டிருக்கிறதே?
‘‘அவர்களது மாநிலப் பிரச்னையில் ஆதரவான தீர்மானம் போட்டிருக்கிறார்கள். அதைத் தவறென்று சொல்ல முடியாது. நமது நீராதாரம் பாதிக்கப்படும் என்பதை வலியுறுத்திப் போராடும் மக்களின் வலியை நாம் எடுத்துச் சொல்லணும். எல்லாவற்றையும் விட எல்லையோர மக்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியம்னு நான் நினைக்கிறேன்.’’.
No comments:
Post a Comment