Friday, June 15, 2012

காசி ஜெகநாதர் கடவுளுக்கு காய்ச்சல். 15 நாட்கள் நடை சாத்தப்படும் என அறிவிப்பு.



உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் அஸ்ஸி பகுதியில் கடவுள் ஜெகநாதர் ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் ஜெய்ஸ்தா பூர்ணிமா (முழு நிலவு) அன்று கடவுளுக்கு புனித நீராட்டல் நடைபெறும். நிகழ்ச்சியில் பங்கேற்கும் பக்தர்கள் ஜெகநாதர் சிலைக்கு அளவில்லாமல் புனித நீர் ஊற்றுவர்.
 
அதேபோல், சமீபத்தில் புனித நீர் அபிஷேக நிகழ்ச்சி நடந்தது. பக்தர்களால் ஆயிரக்கணக்கான குடங்களில் புனித நீர் எடுத்து வரப்பட்டு, ஜெகநாதர் மீது ஊற்றப்பட்டது.   இதன் காரணமாக கடவுள் ஜெகநாதருக்கு, சுகவீனம் ஏற்பட்டது. கடுமையான ஜலதோசம், இருமளால் அவதிப்படுகிறார். கடவுள் ஜெகநாதர் ஒய்வு எடுப்பதற்காக 15 நாட்களுக்கு நடை சாத்தப்பட்டது.
 
இதனால் பக்தர்கள் கவலை அடைந்துள்ளனர். அவர் விரைந்து குணமடைய பக்தர்கள் பிரார்த்தனை செய்கின்றனர். ஜெகநாதருக்கு, அவரது குடும்ப டாக்டர் தினமும் இரண்டு வேளை மூலிகையால் தயாரிக்கப்பட்ட மருந்தை அளித்து வருகிறார்.  
 
என்ன? கடவுளுக்கும் காய்ச்சலா? என்று ஆச்சரியப்பட வேண்டாம். இது ஆண்டுதோறும் நடத்தப்படும் ஒரு சடங்கு, சம்பிரதாயம் ஆகும். கடவுளை மனிதப் பிறவியாக பாவித்து செய்யப்படும் சடங்குகளில் இதுவும் ஒன்று.
 
ஆண்டு தோறும் குறிப்பிட்ட நாளில், முழு நிலவு அன்று, ஜெகநாதருக்கு அளவில்லா புனித நீர் ஊற்றி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவர். அதை தொடர்ந்து அதிகளவில் தண்ணீரில் குளித்ததால் சளிப்பிடித்து, இருமல் ஏற்பட்டதாக அறிவித்து கோவில் நடையை சாத்தி விடுவர்.
 
எப்படி மனிதர்களுக்கு டாக்டர் மூலம் சிகிச்சை அளித்து, ஓய்வு கொடுக்கப்படுமோ, அதுபோல் கடவுள் ஜெகநாதருக்கும் செய்யப்படும்.   பண்டிட் ஒருவர் கடவுளுக்கு சேவை செய்யும் டாக்டராக பாவித்து, கடவுள் சிலைக்கு மூலிகையில் தயாரான கலவைகளை தினமும் இரண்டு வேளை பூசுவார். இப்படி பூசுவதால் சிலைக்கு மேலும் சக்தி கிடைப்பதாக ஐதீகம்.
 
தற்போது தெய்வீக டாக்டர் பணியை பண்டிட் ஸ்ரீராம் ஷர்மா (வயது 33). என்பவர் கவனித்து வருகிறார். இதற்கு முன்பு இவரது தந்தை சீதாராம் ஷர்மா தெய்வீக டாக்டர் பணியை கவனித்து வந்தார். அவர் 1995-ல் மரணம் அடைந்தது முதல், அந்தப் பணியை இவர் செய்து வருகிறார்.

No comments:

Post a Comment