இந்த்ரியங்களை ஏவாமல் மனஸாக எதையோ நினைத்து அனுபவித்துக் கொண்டிருக்கிறது என்னும்போதுகூட அது எதையோ தான் நினைக்க வேண்டியிருக்கிறதே தவிர தன்னையே நினைத்து அதை அனுபவித்து நிறைவுபெற முடியவில்லை. மனஸ் கதை கற்பிக்கிறது. கவிதை புனைகிறது என்றாலும் அதுவேறே பாத்ரங்கள், இயற்கைக் காட்சிகள், ரஸனங்கள் ஆகியவற்றைக் குறித்தனவாகத்தானிருக்கின்றன. வேடிக்கை என்னவென்றால், ஸுகமும் துக்கமுமான லகேஷாப லக்ஷம் இந்த்ரியாநுபவங்களிலும் அந்த ஸுகதுக் காதிகளை உண்மையாக அனுபவிப்பது மனஸுதானென்றாலும், இதில் ஒன்றைக்கூட அது தன்னிடமிருந்தே பெறமுடியாமல் வெளி வஸ்துக்களைக் குறித்தனவாகத்தான் பெற முடிகிறது.
தனியாகத் தன்னை இன்னவென்று பார்த்துக் கொள்ள முயற்சி பண்ணினால் மனஸுக்குத் ‘தான்’ என்றே ஒன்று இல்லை என்றுதான் தெரியும். தன்னுடைய ஸம்பந்தமுடையதாக, தனக்கு ஸந்தோஷம், தனக்குத் துக்கம், தனக்குப் பிடித்தது, தனக்குப் பிடிக்காதது, தனக்குத் தோன்றுகிற எண்ணம், தனக்குக் கிடைக்கிற அனுபவம் என்றெல்லாம் அநேகமிருப்பது மட்டுமே தெரிகிறது. அதனாலேயே இது எதுவும் அதன் தானான நிஜ ஸ்வரூபமில்லை என்று தெரிகிறது. இவை மனஸுடன் ஸம்பந்தமுடையவை, ஸம்பந்தமுடையவை மட்டுமே என்பதாலேயே இவையே மனஸில்லை என்றாகிவிடுகிறது. ராமன் என்ற ஒருத்தனின் ஸம்பந்தம் கொண்டவைகளாக ராமனுக்கு வீடு இருக்கிறது, ராமனுக்கு நிலம் இருக்கிறது, ராமனுக்குப் பத்னி, புத்ரர் இருக்கிறார்கள், ராமனுக்கு புத்தி இருக்கிறது, ராமனுக்குப் பதவி இருக்கிறது என்றால் அந்த வீடு, நிலம், பத்னி புத்ரர், புத்தி, பதவி எல்லாம் வேறு, அவன் வேறுதானே? இவையெல்லாம் இல்லாமலும் ராமன் என்று ஒருத்தன் இருக்க முடிகிறதுபோல; மனஸ் எதன் ஸம்பந்தமுமில்லாமல் இருக்க முடிகிறதா என்று பார்த்தால் அப்படி முடியவேயில்லை. மனஸ் என்றால் அது எதையாவது நினைக்காமல், அனுபவிக்காமல் இருக்க முடிவதேயில்லை.
தனியாக, தானாக அதைப் பிரித்துப் பார்க்கவே முடியாது. ஆகையால் மனஸை ஒருமுகப்படுத்தி தன்னிலேயே நிறுத்துவது என்பது வாஸ்தவத்தில், தனி ஸ்வரூபமே இல்லாத மனஸில் நிறுத்துவதாக இல்லாமல், எந்த வெளி ஸம்பந்தமும் இல்லாமல், இந்த மனஸின் ஸம்பந்தமும்கூட இல்லாமல் தன்னில் தானேயாய் நிறைந்திருக்கும் நிஜ நாமான ஆத்மாவில் நிற்பதுதான். மனோதீதமான ஆத்மாவை மனஸால் அனுபவிக்க முடியாது. ஆத்மாவை அத்மாவாலேயேதான்!
- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்
No comments:
Post a Comment