Wednesday, June 27, 2012

கமிஷன்... கட்டிங்... கவுன்சிலர்ஸ்!



தவறு செய்யும் மாமன்ற உறுப்பினர்கள் ஒரு மாதக் காலத்துக்குள் தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டும். இனி, தொடர்ந்து முறைகேடுகளில் ஈடுபடுவதாகத் தகவல் வந்தால் மாநகராட்சியைக் கலைத்துவிடுவேன்" - சென்னை மாநகராட்சி மன்ற அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர்கள் கூட்டத்தில் ஜெ.விடுத்த எச்சரிக்கை இது. மேலும், நீங்கள் செய்யும் தவறுகள் எல்லாம் என் கவனத்துக்கு வந்து கொண்டுதான் இருக்கின்றன. பொதுமக்கள் மத்தியில் கெட்டப் பெயர் ஏற்படுத்தும் இது போன்ற செயல்களில் இனி ஈடுபடவே கூடாது" என்றும் சாட்டையைச் சொடுக்கியிருக்கிறார் முதல்வர். தவறு செய்த சில உறுப்பினர்களின் பெயர்களையும் படித்தாராம் ஜெ. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் முகம் கறுத்துப் போய் அரங்கை விட்டு வெளியே வந்தார்கள். ஏனிந்த டோஸ்?

சென்ற தி.மு.க. ஆட்சியில் அலைக் கற்றை ஊழல், குடும்ப ஆட்சி என்ற குற்றச்சாட்டுகள் தவிர சென்னை மாநகர தி.மு.க. கவுன்ஸிலர்கள் அடித்த கொட்டமும் அந்த ஆட்சியின் பெயரை நாறடித்தது. எனவேதான் இந்த அதிர்ச்சி வைத்தியம் என்கிறார்கள் அ.தி.மு.க. பிரமுகர்கள். வீடு கட்டும் நடுத்தர மக்களிடையே கட்டிங், கட்டப்பஞ்சாயத்து, நடைபாதைக் கடைகள் என்று மாமூல் வாங்கிக் குவிக்கத் தொடங்கினார்கள் கவுன்ஸிலர்கள். 

நான் கட்டட ப்ளான் முறைப்படி அனுமதிப் பெற்றிருந்தேன். வீடு கட்டும்போது சிமெண்ட் மூட்டைகள் மற்றும் செங்கற்களை வாசலில் தற்காலிகமாக வைத்திருந்தோம். இதை மோப்பம் பிடித்த கவுன்ஸிலர் என்னிடம் 5000 ரூபாய் கேட்டார். ஏனென்று கேட்டால் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருக்கிறது என்றார். எனக்கு முதல்வர் அலுவலக அதிகாரி ஒருவரைத் தெரிந்ததால் அவர் மூலம் அழுத்தம் கொடுத்து கவுன்ஸிலரை அடக்கினேன்" என்கிறார் தி.நகரைச் சேர்ந்த சந்திரசேகர். ‘பெரிய இடத்துக்குப் போயிட்டியா’ என்று கறுவிக் கொண்டு இருக்கிறாராம் கவுன்ஸிலர். கழிவு நீர்க் குழாய், குடிநீர்க் குழாய்கள் ஆகியவற்றைப் போடுவது மாநகராட்சி இல்லை. ஆனால் இதற்காக சாலையை வெட்ட வேண்டியிருப்பதால், மாநகராட்சி அனுமதி வேண்டும். இதுபோன்ற வேலைகளில் கவுன்ஸிலரும் இளநிலை பொறியாளரும் கூட்டுக் கொள்ளை அடிக்கிறார்கள்.

நாற்பது வருடங்களுக்கு முன் நுங்கம்பாக்கம் பகுதியில் ‘காந்தி’ கண்ணையா என்ற காங்கிரஸ் கவுன்ஸிலர் இருந்தார். தினசரி நடந்தே பல தெருக்களுக்குச் சென்று புகார் வாங்குவார். ஒரு தேநீர்கூட அடுத்தவர் காசில் குடிக்க மாட்டார். இப்போதும் கவுன்சிலர்கள் எங்கே கட்டிட வேலை நடக்கிறது. எப்படி கட்டிங் வாங்கலாம் என்று பார்க்கத்தான் ரவுண்ட் அடிக்கிறார்கள்" என்கிறார் ஓய்வு பெற்ற அதிகாரி நாதன். 

மாநகராட்சி அ.தி.மு.க. உறுப்பினர்களில் 70 பேர் பெண் உறுப்பினர்கள். இவர்களின் கணவர்கள் பெரும்பாலும் கட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள். மாநகராட்சி அதிகாரிகள் பெண் கவுன்ஸிலரின் கணவர்களிடம்தான் ஒருங்கிணைந்து (கூட்டுக் கொள்ளை) வேலை செய்வார்கள். 

முதலில் இந்தப் பெண் கவுன்ஸிலர்களின் கணவர்களை ரிப்பன் பில்டிங் வளாகத்துக்குள் அனுமதிக்கக் கூடாது. பெண் கவுன்ஸிலர்கள் சுயமாகவே பொது வேலைகள் செய்வதில் அனுபவம் பெற வேண்டும்" என்கிறார்கள் சில உயர் அதிகாரிகள். மாநகராட்சியின் மாதக் கூட்டங்களுக்கு இந்தப் பெண் கவுன்ஸிலர்கள் ஆடம்பர கார்களில் வருவதும், அணிந்திருக்கும் நகைகளும் காண்பவர்களை எரிச்சலடைய வைக்கின்றன" என்கிறார்கள் அவர்கள். மேயரிடம் புகார் கொடுக்க வரும்போது மக்களில் நாற்பது சதவிகிதம் பேர் கவுன்ஸிலர்கள் மீதுதான் புகார் பட்டியலோடு வருகிறார்களாம். 

மேயர் பலமுறை நல்ல விதமாக அவர்களுக்குச் சொல்லியும் விட்டார். மாவட்டச் செயலாளர்கள் பக்கபலத்துடன் முறைகேடுகளில் ஈடுபட்டு வந்தார்கள். சில நாட்களுக்கு முன் மண்டலம் வாரியாக மேயர் ஒவ்வொரு கவுன்ஸிலரையும் கூப்பிட்டு ‘நிலைமை கட்டு மீறுகிறது திருத்திக் கொள்ளுங்கள்’ என்று சொன்னார். யாரும் கேட்கவில்லை. மாட்டிக் கொண்டார்கள்" என்கிறார்கள் மேயரின் உதவியாளர்கள். உளவுத் துறை போலீஸ் சொல்வதை அம்மா நம்புகிறார். ஆனால் உளவுத் துறை கீழ்நிலை அதிகாரிகளை நன்கு கவனித்து நல்ல ரிப்போர்ட் அனுப்ப ஏற்பாடு செய்து விடுகிறார்கள் சில மோசமான கவுன்ஸிலர்கள். அவர்கள் அம்மா கண்ணிலிருந்து தப்பிவிட்டார்கள்" என்கிறார் வடசென்னை கவுன்ஸிலர் ஒருவர். 

மற்றொரு கவுன்ஸிலரோ, நாங்கள் கொடுக்க வேண்டியதைக் கொடுத்து ஸீட் வாங்கினோம்; எப்படி வசூல் செய்வது?" என்று கேட்கிறார்கள்.
இதற்கிடையில் முதல்வரின் இந்த நடவடிக்கை மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மற்ற மாநகராட்சிகள் மீதும் முதல்வர் விரைவில் பார்வையைச் செலுத்துவாராம்.

No comments:

Post a Comment