'திராவிட கட்சிகளுக்கு மாற்று அமைப்பதாக' ஒருபுறம் டாக்டர் ராமதாஸ் முழங்கிக் கொண்டிருக்க... மறுபுறம், தமிழக அமைச்சர் சி.வி. சண்முகத்தின் உதவியாளர் முருகானந்தம் கொலை வழக்கில் சி.பி.ஐ. டீமின் அடுத்தடுத்த கைதுகளில் ஆடிப்போய் உள்ளது பா.ம.க. வட்டாரம்!
ஆரம்பத்தில், ராமதாஸின் தம்பி சீனுவாசன், பா.ம.க. மாநிலத் துணைத்தலைவர் கருணாநிதி உள் ளிட்ட 20 பேரைக் கைது செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது சி.பி.ஐ! இத்துடன் பட்டியல் முடிந் தது என்று நினைத்திருந்த நிலையில், ராமதாஸின் அக்கா மருமகனும் முன்னாள் எம்.பி-யுமான தன் ராஜ் மற்றும் ராமதாஸ் மனைவி சரஸ்வதியின் அக்கா மகன் சிவக்குமார் ஆகிய இருவரையும் கடந்த 20-ம் தேதி சி.பி.ஐ. கைது செய்தது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள் டி.எஸ்.பி. குமார் என்பவரையும் சி.பி.ஐ. கைது செய்திருப்பதுதான், பா.ம.க. வட்டாரத்தைக் கூடுதலாகவே பதற வைத்து உள்ளது.
முருகானந்தம் கொலை செய்யப்பட்டபோது, திண்டிவனம் டி.எஸ்.பி-யாக பணியாற்றியவர் இந்தக் குமார். அப்போது, உண்மையான குற்றவாளிகளைத் தப்பவிட்டு, போலி குற்றவாளிகளை கைது செய்ததாகவும் ஆவணங்களில் திருத்தம் செய்ததாகவும் இவர் மீது சி.பி.ஐ. குற்றம் சாட்டி உள்ளது. திண்டிவனத்தை அடுத்து கும்மிடிப்பூண்டியில் டி.எஸ்.பி-யாக பணியாற்றிய குமார், சமீபத்தில் திருநெல்வேலிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அங்கு சென்று பணியில் சேருவதற்குள், வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.
22-ம் தேதி மாலை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட குமாரை, ஜூலை 5-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி கலைமதி உத்தரவிட்டார். புகைப்படம் எடுக்கக் காத்திருந்த பத்திரிகையாளர்களுக்கு டி.எஸ்.பி-யின் முகத்தைக் காட்டாதவாறு, சிவப்புத் துண்டால் திரையிட்டு அழைத்துச் சென்றது சி.பி.ஐ.
டி.எஸ்.பி. குமாரிடம் பேச முடியாத நிலையில், அவருக்கு வேண்டிய சிலர், ''இந்த வழக்கில் சம்பந்தமே இல்லாமல் அவரை சிக்க வைத்துவிட்டனர். அவர் எந்தக் குற்றமும் செய்யாதவர்'' என்று மட்டும் சொன்னார்கள்.
சி.பி.ஐ அதிகாரிகளோ, ''போலீஸார்தான் கைது செய்த பிறகு விசாரணை நடத்துவார்கள். நாங்கள் விசாரணையை முடித்து விட்டு, ஆதாரங்களோடுதான் கைது நடவடிக்கையில் இறங்குவோம். இதுவரை இந்தக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் குற்றவாளிகள் என்பதற்கு பலமான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. அடுத்தகட்ட விசாரணைக்குப் பிறகுதான் இன்னும் யாரெல்லாம் சிக்குவார்கள் என்பது தெரியும்'' என்கின்றனர்.
பா.ம.க. இதில் பதறிக் கொண்டிருக்க... லோக்கல் அ.தி.மு.க. தரப்போ, 'கொலை கொலையா முந்திரிக்கா.... சி.பி.ஐ-யே சுத்தி வா' என்று குதியாட்டம் போட்டு கவனிக்கிறது!
No comments:
Post a Comment