ராமஜெயம் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு 75 நாட்களைக் கடந்தும், வெளிச்சம் தென்படவே இல்லை. ''பத்திரிகைகளுக்கு இருக்கும் கவலைகூட அந்தக் குடும்பத்துக்கும் போலீஸுக்கும் இல்லை'' என்று, மக்கள் பேசுகின்றனர்!
ராமஜெயத்தை அறிந்தவர்கள் அத்தனை பேரையும் விசாரித்து முடித்துக் களைப்பில் இருக்கிறது போலீஸ். கடந்த 17-ம் தேதி, தமிழகத்தின் பிரபலமான ஜவுளி நிறுவனம் ஒன்றின் உரிமையாளரிடம் விசாரித்தது போலீஸ். அவர்களின் கடை ஆரம்பித்தபோது நிலத்தகராறு ஏற்பட்டதா? அவரது வீட்டுக்கு வேண்டப்பட்ட பெண் யாராவது காதல் விவகாரத்தில் சிக்க... ராமஜெயம் அந்தப் பெண்ணுக்கு ஆதரவாகக் களம் இறங்கி, குடும்பத்தினருக்கு டார்ச்சர் கொடுத்தாரா என்று கேட்கப்பட்டதாம். பதில் எழுதிக் கொடுத்து விட்டுப் போனாராம் உரிமையாளர். 'இந்தக் கொலைக்கும் தனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை’ என்பதுதான் அவருடைய பதில்!
போலீஸ் கடந்த வாரம் விசாரித்த முக்கியப்புள்ளி, ராமஜெயத்துடன் கடந்த 25 ஆண்டுகளாக நகமும் சதையுமாக இருந்த 'குத்து ஈட்டி’ நபர்.
''ராமஜெயம் கொலையைப் பற்றி ஏதாவது தெரியுமா?''
''தெரியாது.''
''யார் மீது உங்களுக்கு சந்தேகம்?''
''தெரியாது.''
''ராமஜெயம் வீட்டு வாட்ச்மேன் ஆறுமுகம் வாக்குமூலப்படி, மார்ச் 28-ம் தேதி இரவு 10.30 மணிக்கு ராமஜெயம் வீட்டை விட்டுக் கிளம்பிப் போயிருக்கிறார். அடுத்த நாள் (மார்ச் 29) அதிகாலை 2.30 மணிக்குள் இறந்திருக்கலாம்னு ரிப்போர்ட் சொல்லுது. ஆனா, அவரது குடும்பத்தினர் அவர் அதிகாலை வாக்கிங் போகும்போது கடத்தப்பட்டதா போலீஸில் ஏன் புகார் தந்தார்கள்? யார் அவர்களை இப்படித் திசை திருப்பியது... ஏன் பொய் சொன்னார்கள்?''
''தெரியாது.''
''ராமஜெயம் குடிப்பாரா?''
''தெரியவே தெரியாது.''
''அது தெரியாம இருபது வருஷமா எப்படி அவருடன் இருந்தே? ராமஜெயம் வயிற்றில் எத்தில் ஆல்கஹால் 94 மில்லி இருந்ததாகச் சொல்றாங்க. மது அருந்தி ராமஜெயம் மூணு மணி நேரம் உயிரோட இருந்து, ஆல்கஹால் அவர் உடம்புக்குள் பரவி இருக்கு. அந்த நிலையில்தான், கொல்லப்பட்டார்னு ரிப்போர்ட்டில் இருக்கு. இதுக்கு என்ன பதில்?''
மௌனமாக மோட்டு வளையை வேடிக்கை பார்த்தாராம் அந்த நபர்.
''என்னடா? எதைக் கேட்டாலும் தெரியாது தெரியா துன்னு சொல்றே? இனிமே உங்க ஒவ்வொருத்தருக்கும் ஸ்பெஷல் விருந்து போட்டுக் கேட்டால்தான், 'தெரியாது'ன்னு சொல்ல மாட் டீங்க'' என்று சேரைப் பின்னுக்கு தள்ளிவிட்டு எழுந்தவர், அந்த நபரை போலீஸ் ஸ்டைலில் உபசரித்தாராம். நடந்த விருந்தின் மகிமையைக் கேட்ட மற்றவர்களும் இப்போது ஆடிப்போய் இருக்கிறார்களாம்.
'அதிகாலையில் காணாமல் போனதாக' போலீஸிடம் சத்தியம் பண்ணிய ராமஜெயத்தின் மனைவிக்கு சம்மன் அனுப்பி வரவழைத்து விசாரித்து இருக்கிறார்கள். நீதித்துறை தொடர்புடைய பிரமுகர் ஒருவரும் ராமஜெயத்தை அதிகாலையில் சந்தித்துப் பேசியதாக சொல்லி இருந்தார். போலீஸின் சந்தேகங்களை கேள்விகளாகத் தொகுத்து, முறைப்படி அவருக்கு அனுப்பி, பதில் வாங்கி இருக்கிறார்கள். இப்போது அவர் முன்பு சொன்னதை மாற்றி, 'ராமஜெயத்தை சந்தித்தது நள்ளிரவு 12.30 மணி’ என்கிறாராம். முன்னுக்குப் பின் முரணாக உளறிக்கொட்டும் அந்தப் பிரமுகரிடம், 'ஏன் பொய் சொன்னீர்கள்?' என்ற ரீதியில் விசாரணை நடக்கிறது.
ராமஜெயம் தினமும் வாக்கிங் போகும் ரூட் என்று சொல்லி ராமஜெயத்தின் நண்பர்களை அழைத்துப் போய் இருக்கிறார்கள். அங்கே ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியின் விசிட்டிங் கார்டு, ராமஜெயம் பயணித்த ரயில் டிக்கெட், கட்டுக் கம்பித் துண்டு ஆகிய மூன்றையும் போலீஸார் கண்டுபிடித்தார்கள். அதாவது, வாக்கிங் போகும்போதுதான் ராமஜெயம் கடத்தப்பட்டதாக போலீஸ் நம்புவதற்காக, அந்த ஜோடனைகள் நடந்து இருக்கின்றன. யார் அதைத் திட்டமிட்டு செய்தது என்கிற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.
திருச்சியில் உள்ள போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ''கனகச்சிதமாய் திட்டம் போட்டு ராமஜெயத்தைக் கொலை செய்த ஆசாமிகளைப் பிடிக்க நாங்கள் ஆவலாக இருக்கிறோம். அவர் உடலில் அயர்ன் பாக்ஸ் சூடு வைத்ததுபோன்ற தடயங்கள் தெரிகின்றன. நிச்சயமாக ரியல் எஸ்டேட் போன்ற பண விவகாரங் களுக்காக மட்டும் நடந்த கொலை அல்ல.
ராமஜெயத்தால் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்ட யாரோதான் அணுஅணுவாகச் சித்ரவதை செய்து இறுதியாக அவரது கழுத்தில் காலை வைத்து மிதித்தே கொன்று இருக்கிறான். போர்ஸ்ட்மார்ட்டம் அறிக்கையில், உணவுக் குழாய், மூச்சுக் குழாய் மற்றும் எலும்புகள் நொறுங்கி இருப்பதாகக் கூறப்பட்டு உள்ளது. ராமஜெயத்தின் வாயில் திணிக்கப்பட்டிருந்த காட்டன் துணி (41 செ.மீ நீளம், 21 செ.மீ. அகலம்) பிரவுன் மற்றும் மஞ்சள் நிறத்தால் ஆன திரைச்சீலை. உடலில் இருந்த போர்வை ஏதோ வீட்டில் இருந்தது. இவை இரண்டையும் பார்க்கும்போது, ராமஜெயத்தை தில்லை நகர் ஏரியாவில் ஏதோ வீட்டில் வைத்துத்தான் கொன்று இருக்க வேண்டும். இதில் மிக முக்கிய மான ஒரு விஷயம் இருக்கிறது'' என்று சொல்லி அவர்கள் விவரித்தது அதிர்ச்சி ரகம்.
''ராமஜெயத்தின் இரண்டு உள்ளங் கைகளிலும் மை பூசப்பட்டு உள்ளது. அதாவது அவரது கைரேகையை ஏதோ ஆவணங்களில் பதிவு செய் துள்ளார்கள் கொலையாளிகள். ராமஜெயத்தைக் கொன்ற பிறகு கைரேகை எடுத்தார்களா? அல்லது கொல்வதற்கு முன் இந்த ரேகைப் பதிவு நடந்ததா என்பதை இன்னும் உறுதியாகவில்லை!'' என்கிறார்கள்.
இறுதிக் கட்டத்தை நெருங்கும் இந்தக் கொலை வழக்கு விசார ணையில், திருச்சி போலீஸ் கமிஷனர் சைலேஷ் குமார், திருச்சி சரக டி.ஐ.ஜி. அமல்ராஜ் இருவருமே கைகோத்து செயல்படுகிறார்கள். உதவி கமிஷனர்கள் ஜெயச்சந்திரன், சீனிவாசன் ஆகியோர் இதில் மும்முரமாக அலைகிறார்கள்.
இனியாவது விடை தெரியட்டும்!
No comments:
Post a Comment