Tuesday, June 12, 2012

முதலுதவி - எரிச்சல் குறைய என்ன செய்யலாம்?


கோடை வெயில் கொளுத்துகிறது. சூரியனின் வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க, நம் உடலின் வெப்பமும் அதிகரிக்கிறது. அதீத வெப்பத்தை நம் உடல் தாங்க இயலாதபோது, பல வெப்ப நோய்கள் நம்மைத் தாக்குகின்றன. இவற்றில் வெப்ப மயக்கம், வெப்பத் தளர்ச்சி முதலியவற்றை ஏற்கெனவே நாம் பார்த்துவிட்டோம். இப்போது வேறு சில வெப்ப நோய்களைப் பார்ப்போம்.

கண் எரிச்சல்:


கோடை வெயில் நேரடியாகப் பாதிக்கும் முக்கியமான உறுப்பு, கண். சூரியனிலிருந்து வெளிப்படுகிற வெப்பம் நிறைந்த புற ஊதாக்கதிர்கள் கண்ணுக்குப் பல வழிகளில் கேடு விளைவிக்கும். பெரியவர்களானாலும் சரி, குழந்தைகளானாலும் சரி வெயிலில் அலைந்தால், கண்களில் எரிச்சல், உறுத்தல் ஏற்படும். கண்ணில் நீர் வடியலாம். கோடை விடுமுறையில் குழந்தைகள் அதிக நேரம் தொலைக்காட்சியையும் கணினியையும் பார்த்துக்கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு வெப்பம் காரணமாக, கண்கள் சீக்கிரமே உலர்ந்துவிடும். இவர்கள் நீண்ட நேரம் கண்களை இமைக்காமல் திரையைப் பார்ப்பதால், கண்களில் எரிச்சல் ஏற்படும்.கோடை விடுமுறையில் குழந்தைகள் பலர் நீச்சல் குளங்களுக்குச் செல்வார்கள். விடுமுறைக் காலமாதலால் நீச்சல் குளங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். இதனால், தண்ணீர் மாசுபடுதலும் அதிகரிக்கும். ஆகவே, அதனைத் தவிர்க்க, நீச்சல் குளங்களில் குளோரின் பவுடரை அதிகமாகக் கலந்துவிடுவார்கள். இது அங்கு குளிப்பவர் கண்களுக்கு எரிச்சலைக் கொடுக்கும். தோலில் அரிப்பு உண்டாகும்.

என்ன முதலுதவி?

அடிக்கடி சுத்தமான தண்ணீரால் கண்களைக் கழுவ வேண்டும்.

மூன்று மணிக்கொருமுறை தண்ணீரில் நனைத்த துண்டால் கண்களை ஒற்றி எடுக்கலாம்.

தொலைக்காட்சியையும் கணினியையும் பார்த்துக்கொண்டிருப்பவர்கள் அரை மணி நேரத்துக்கு ஒரு முறை கண்களுக்கு ஓய்வு தரும் வகையில் வேறு வேலைகளில் சிறிது நேரம் கவனம் செலுத்த வேண்டும்.

பகல் 12 மணியிலிருந்து மாலை 4 மணி வரை வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது. அவசியம் செல்ல வேண்டுமென்றால் தலைக்குத் தொப்பியும், கையில் குடையும் கொண்டு செல்ல வேண்டும்.

வெயிலில் அதிக நேரம் சாலையில் பயணிக்க வேண்டியதிருந்தால், கண்களுக்குச் சூரியக் கண்ணாடியை அணிந்துகொள்ளலாம்.

நீச்சல்குளத்தில் குளித்து முடித்ததும் அவசியம் சுத்தமான தண்ணீரிலும் குளிக்க வேண்டும். அல்லது கண்களை மட்டுமாவது சுத்தமான தண்ணீரால் கழுவ வேண்டும்.

கண் எரிச்சல் தொடர்ந்து இருந்தால், கண் மருத்துவர் யோசனைப்படி உறுத்தலைப் போக்கும் கண் சொட்டு மருந்தைப் பயன்படுத்த வேண்டும்.

கால் பாதங்களில் எரிச்சல்:

பாதங்கள் புவி வெப்பத்தோடு நேரடியாகத் தொடர்புகொள்வதால், அதிகமாகவெயிலில் அலைபவர்களுக்குக் கால் பாதங்கள் எரிச்சல் கொடுக்கும். குறிப்பாக, இரவு நேரத்தில் இந்த எரிச்சல் அதிகமாகத் தெரியும். அதீத வெப்பத்தின் விளைவால், பாதத்தில் உள்ள ரத்தக்குழாகள் தேவைக்கு அதிகமாக விரிந்துவிடுவதால் இவ்வாறு எரிச்சல் ஏற்படுகிறது. 

என்ன செய்வது?

தினமும் காலையிலும் மாலையிலும் குளிக்க வேண்டும்.கோடையில் இரண்டு மணி நேரத்துக்கு மேல் தொடர்ந்து வெயிலில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக, சிறுவர்கள் கடுமையான வெயிலில் விளையாடக் கூடாது.அகலமான பாத்திரம் ஒன்றில் தண்ணீரை நிரப்பிக்கொண்டு, கால் பாதங்களை அதில் மூழ்க வைத்துக்கொள்ள வேண்டும். சுமார் அரைமணி நேரம் இவ்வாறு செய்ய வேண்டும்.

சிறுநீர் செல்லும்போது எரிச்சல்:

கோடையில் சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் ஏற்படுவது வழக்கம். அளவுக்கு மீறி வியர்வை வெளியேறுவதும், தேவையான அளவு தண்ணீர் குடிக்காததும் இதற்கு முக்கியக் காரணங்கள். உட்கொள்ளும் தண்ணீரின் அளவு குறைந்தால் சிறுநீரின் அளவும் குறைந்து விடும். இதனால், சிறுநீரின் மூலம் வெளியேற வேண்டிய உப்புகள், படிகங்களாக மாறி சிறுநீர்ப்பாதையில் படிந்துவிடும். இதனால், சாதாரணமாக காரத்தன்மையில் இருக்கும் சிறுநீர் அமிலத்தன்மைக்கு மாறிவிடும். இதன் விளைவால், சிறுநீர் செல்வது குறையும். சொட்டுச் சொட்டாகச் சிறுநீர் செல்லும். வலி, எரிச்சல், கடுப்பு ஏற்படும். சிலருக்குச் சிறுநீர்ப்பாதையில் கல் இருக்கலாம். நோய்த்தொற்று இருக்கலாம். இவற்றாலும் சிறுநீர் செல்லும் போது வலி, எரிச்சல் ஏற்படலாம். 

என்ன செய்யலாம்?

கோடையில் 3 லிருந்து 4 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். குறிப்பாகச் சொன்னால், ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை, ஒரு தம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.நீர்மோர், இளநீர், பதநீர் குடிக்கலாம்.‘அல்கலைன் சிட்ரேட்’ எனும் திரவ மருந்தில் இரண்டு தேக்கரண்டி எடுத்து, சுமார் 100 மி.லி. தண்ணீரில் கலந்து குடிக்கலாம். இவ்வாறு தினமும் ஆறு முறை குடிக்கலாம்.கோடை முழுவதும் பருத்தி ஆடைகளை அணியுங்கள். அவற்றில் கூட இறுக்கமான ஆடைகளைத் தவிர்த்து, தளர்வான ஆடைகளை அணிய வேண்டியது முக்கியம்.காபி, தேநீர், எண்ணெய்ப் பல காரங்கள், பேக்கரி பண்டங்கள், காரம், மசாலா நிறைந்த உணவுகளைத் தவிர்க்கவும். இவை தண்ணீர் தாகத்தை அதிகப்படுத்தும்.தர்ப்பூசணி, நுங்கு, வெள்ளரி, கொய்யா, பப்பாளி, சாத்துக்குடி ஆரஞ்சு, திராட்சை, பலாப்பழம், அன்னாசி போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களையோ, பழச்சாறுகளையோ அடிக்கடி சாப்பிடவும்.காலுக்கு ஷூ போடுவதையும், பிளாஸ்டிக் செருப்புகள் அணிவதையும் தவிர்க்கவும். மாற்றாக, ரப்பர் அல்லது தோல் செருப்புகளை அணியலாம்.      

No comments:

Post a Comment