பிடதியில் இருந்து பிடறியைப் பிடித்துத் தள்ளப்பட்ட நித்தியானந்தா இப்போது மதுரையில் தஞ்சம் அடைந்து விட் டார். தன் நாக்கில் சனி இருப்பதை உணர்ந்து கொண்டாரோ என்னவோ, பேச்சை முற்றிலும் குறைத்து விட்டார்!
பட்டாசு வரவேற்பு!
நித்தியானந்தா கைது செய்யப்பட்டதால், சரியாகச் சாப்பிடாமல் கவலையில் ஆழ்ந்திருந்தார் மதுரை ஆதீனம். பத்திரிகையாளர்களைத் தாக்கிய வழக்கில் நித்திக்கு ஜாமீன் கிடைத்ததும் குதூகலித்தார். தானே வீதியில் இறங்கி பட்டாசு கொளுத்தி, அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடினார் அருணகிரிநாதர். அடுத்த கணமே, மீண்டும் நித்தி கைது செய்யப்படவே, செய்தியைத் திரித்து விடுவார்களோ என்று பயந்துபோனார். 'நித்தி கைது... பட்டாசு போட்ட மதுரை ஆதீனம்’ என்று செய்தி வெளியிட்டு விடுவார்களோ என்பதே பயத்துக்கு காரணம். வீடியோ எடுத்த தனியார் தொலைக்காட்சிக்கு போன் செய்து, 'தயவுசெஞ்சு அந்தக் காட்சியை ஒளிபரப்ப வேண்டாம்’ என்று கெஞ்சினாராம்.
15-ம் தேதி இரண்டாவது வழக்கிலும் நித்திக்கு ஜாமீன் கிடைத்தது. இருந்தாலும் அவர் மதுரை வருவதற்குள் மீண்டும் கைது செய்யப்படலாம் என்று பதற்றத்தோடு காத்திருந்தார் அருணகிரி. பதிவு எண் 4444 கொண்ட இரண்டு என்டோவர் கார்கள் நித்தியானந்தாவிடம் உண்டு. ஒன்று மதுரை மடத்திலேயே நிற்பதால், மற்றொரு காரில் அவர் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
16-ம் தேதி அதிகாலை 5.15 மணிக்கு மதுரை ஆதீன மடத்தின் முன், கே.ஏ. 42 என் 4444 என்ற கர்நாடகப் பதிவு எண் கொண்ட இன்னோவா கார் வந்து நின்றது. அதற்குப் பாதுகாப்பாக தமிழக போலீஸாரின் சைரன் பொருத்தப்பட்ட ஹைவே பேட்ரோல் வாகனம் ஒன்று வந்திருந்தது. பின்னால் மேலும் மூன்று கர்நாடகப் பதிவு எண் கொண்ட வாகனங்கள் வந்தன.
உள்ளே இருப்பது நித்தியானந்தா என்ற தெரிந்ததும், சரவெடி பட்டாசு வெடிக்கப்பட்டது. உரத்த குரலில் மந்திரங்கள் ஓதப்பட, பரிதவிக்கிற முக பாவனையோடு வெளியே வந்தார் அருணகிரி. டிரேட் மார்க் சிரிப்போடு நின்றார் நித்தி. ஒரு கணம் அவரையே உற்றுப்பார்த்துவிட்டு, ஆரத்தழுவிய அருணகிரி, பொன்னாடை, மலர் மாலை, விபூதி அணிவித்து அவரை வரவேற்றார். பின்பு, நித்தியை தோளாடு தோள் சேர்த்துக்கொண்டு மடத்துக்குள் அழைத் துச் சென்றபோது, 'மறு... மறு... மறுஜென்மம் எடுத்ததுபோல் இருக்கிறது' என்று அருணகிரி சொல்ல, 'இது முதல் வெற்றிதான் சந்நிதானம். இனிமேல் தொட்டதெல்லாம் வெற்றிதான்' என்றார் நித்தியானந்தா.
பத்திரிகைக்கு தடா
நித்தியானந்தாவுடன் சேர்ந்து பத்திரிகையாளர்களும் உள்ளே நுழைய முற்பட, தடுத்து நிறுத்தப்பட்டு... டக்கென்று கேட் சாத்தப்பட்டது. கார் பார்க்கிங் உள்ள கிழக்கு நுழைவாயில் வழியாக உள்ளே செல்ல பத்திரிகையாளர்கள் முயன்றார்கள். உடனே, அந்தக் கேட்டையும் பூட்டிய நித்தியின் சீடர்கள், வாசலிலேயேபாதுகாப்புக்கு நின்றுகொண்டனர். அப்போது, நித்தியானந்தா வந்த காரில் இருந்த மாற்றத்தைக் கவனித்தோம். மதுரை ஆதீனத்துக்குச் சொந்தமான பழைய காரைத் தவிர மற்ற அனைத்து கார்களின் பின்புறக் கண்ணாடிகளிலும் 'நித்தியானந்தா தியான பீடம்’ என்று சிவப்பு நிறத்தில் கொட்டை எழுத்துக்களில் எழுதப்பட்டு இருக்கும். ஆனால், பிடதியில் இருந்த வந்த கார்கள் அனைத்திலும் அந்த எழுத்துக்கள் அகற்றப்பட்டு இருந்தன. கன்னட அமைப்புகள் மற்றும் கர்நாடகப் போலீஸாரின் கண்களை உறுத்தாமல் தமிழ்நாட்டுக்குத் தப்பி வருவ தற்காகத்தான் இந்த ஏற்பாடாம்.
'காலை பூஜை நேரத்தில் வந்தால் நித்தியானந்தாவை சந்திக்கலாம்’ என்று அவரது சீடர்கள் சொன்னதால், பத்திரிகையாளர்கள் அனைவரும் காலை 10 மணிக்கு மீண்டும் மடத்தில் குவிந்தனர். ஆனால், உள்பக்கப் பூட்டு திறக்கப்படவே இல்லை. அதனால், உள்ளே நடந்த பூஜையை, கேட் வழியாக ஜூம் லென்ஸ் போட்டுத்தான் படம் பிடிக்கமுடிந்தது. உள்ளே திருஞான சம்பந்தருக்கு தன் கையாலேயே பூஜை செய்து, தீபாராதனை காட்டினார் நித்தி. கெடுபிடிகள் காரணமாக மிகக்குறைந்த அளவிலேயே பக்தர்கள் உள்ளே இருந்தனர். பூஜை முடிந்ததும் அவர்களுக்கு அருளாசி வழங்கினார் நித்தியானந்தா.
ஒரு கட்டத்தில் பத்திரிகையாளர்கள் பொறுமை இழக்கவே, 'பத்திரிகையாளர்கள் யாரையும் உள்ளே அனுமதிக்க வேண்டாம் என்று எங்களுக்கு உத்தரவு. இனிமேல் பிரஸ் மீட் கிடையாது. ஆதீனம் ஏதாவது சொல்ல விரும்பினால், அது அறிக்கையாக வெளிவரும்'' என்று சீடர்கள் சொல்லி அனுப்பினார்கள்.
நித்தியானந்தா நகர்வலம்!
பத்திரிகையாளர்கள் கிளம்பிய பிறகு, தனது என்டோவர் (அதன் பதிவு எண்ணும் 4444தான்) காரில் வெளியே புறப்பட்டார் நித்தியானந்தா. உள்ளேயே இருக்கப் பிடிக்காமல், அவர் நகர்வலம் வந்ததாகச் சொல்லப்பட்டது. ஆனால் அவரது சிஷ்யர், 'நித்தியானந்தாவுக்குப் பிடித்த தெய்வம் என்றால், கருப்பணசாமி, பைரவர், காளிதான். தனக்குக் கஷ்டம் வரும்போதெல்லாம் அந்தக் கடவுள்களைத் தேடிப் போய்விடுவார். இப்போது அழகர்கோயிலில் கருப் பண்ணசாமியைத் தரிசிக்கப் போயிருக் கிறார்' என்றார்.
எந்தக் காரில் நித்தியானந்தா வெளியே கிளம்புகிறார், எங்கே செல்கிறார் என்ற விஷயம் டிராஃபிக் போலீஸாருக்கு மட்டும் நன்றாகவே தெரிகிறது. நகரில் ஓடும் பொதுமக்களின் கார்களை எல்லாம் நிறுத்தி, கறுப்பு ஃபிலிம் ஒட்டி இருப்பதற்காக அபராதம் வசூலிக்கும் போலீஸ், நித்தியானந்தா மடத்தில் உள்ள கார்களை மட்டும் கண்டுகொள்வதே இல்லை. கர்நாடகப் போலீஸ் நித்தியை விரட்டினாலும், தமிழகப் போலீஸார் நன்றாகவே கவனித்துக் கொள்கிறார்கள்.
மதுரையே நிரந்தரம்!
17-ம் தேதி முதல் வழக்கம்போல் பார்வையாளர்களையும், ஆதரவாளர்களையும் சந்திக்கத் தொடங்கினார் நித்தியானந்தா. வ.உ.சி. பேரவை, தேசியவாத திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, அகமுடையார் பேரவை என்று பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அவரைச் சந்தித்தனர். 'அவர் எப்பவும்போல சந்தோஷமாத்தான் இருக்கிறார். என்ன சாமி, கர்நாடகப் போலீஸார் உங்களை இப்படிக் கஷ்டப்படுத்திட்டாங்களேனு கேட்டோம். அதுக்கு எந்த வருத்தத்தையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் புன்னகைத்தார்' என்றார் வெளியே வந்த தென்மாவட்ட வ.உ.சி. பேரவைச் செயலாளர் கணேசமூர்த்தி.
வெளிப்பார்வைக்கு சந்தோஷமாக இருப்பதுபோல் காட்டிக்கொண்டாலும், தனது தீவிர பக்தர்களிடம் பேசியபோது, கர்நாடகாவில் சந்தித்த நெருக்கடிகளைச் சொல்லி கண் கலங்கினாராம் நித்தி. 'ஜெயேந்திரர், ரவிசங்கர்ஜி போன்றவர்களின் தூண்டுதலால்தான் கர்நாடக அரசு நம் விஷயத்தில் இப்படி நடந்துகொண்டது. தெய்வத்தின் மீதும் நீதித் துறையின் மீதும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அவர்கள் செய்த தவறுக்கான பலனை அனுபவித்தே தீருவார்கள். இனிமேல் நான் மதுரையில்தான் இருப்பேன். பிடதி ஆசிரம நிர்வாகப் பணிகளையும் நாம் இங்கிருந்தே செய்ய வேண்டும். நாம் நினைத்தால், ஒரே மாதத்தில் நூறு தியான பீடங்களை நிறுவ முடியும்’ என்றாராம்.
மதுரை ஆதீனத்தில், நித்தியின் தியான வகுப்புகள் அனைத்தும் முதல் மாடியில்தான் நடைபெறுகிறது. அதனையே தியான பீடமாக மாற்ற முடிவு செய்துள்ள நித்தி, அங்குள்ள பாஸ்கர சேதுபதி இல்லத்தைப் புதுப்பிக்க உத்தரவு போட்டார். அதனால், பழைய சாமான்கள் போட்டுவைக்கப்பட்டு இருந்த பாஸ்கர சேதுபதி இல்லத்தைச் சுத்தப்படுத்தும் பணி ஜருராக நடக்கிறது.
ஏன் கிடையாது பிரஸ் மீட்?
நித்தியானந்தாவுக்கு பிரஸ் மீட் என்றால் அல்வா சாப்பிடுவது மாதிரி. அவர் மதுரையில் பதவி ஏற்ற இரண்டு மாதங்களில் சுமார் 25 பிரஸ்மீட்களை நடத்தி இருக்கிறார். பத்திரிகையாளர்கள் எதிர்பார்க்காத விஷயத்தை எல்லாம் உளறி, சர்ச்சையை ஏற்படுத்துவார். 'ஒரு வீட்டை மருத்துவ மனைக்குக் கொடுத்தவரைப் பற்றி எல்லாம் எழுதுகிறீர்கள். எங்களைப் பற்றி எழுத மாட்டீங்களா?' என்று கருணாநிதியை உரசிப் பார்ப்பார். 'தமிழக அரசும், காவல்துறையும் எங்களுக்கு ஆதரவாக இருக்கிறது. எங்கள் நியாயத்தை உணர்ந்திருக்கிறது' என்று ஜெயலலிதாவுக்கு சிக்கலை உண்டு பண்ணுவார். திருவண்ணாமலை கலெக்டர் மதுரைக்கு வந்திருப்பது பற்றி நிருபர்கள் கேள்வி கேட்கும் முன்பே, 'நெட்டில் தவறான செய்தி பரவுகிறது, அன்சுல் மிஸ்ரா எங்கள் மடத்துக்கு வந்திருக்கிறார், எங்களோடு நட்பாக இருக்கிறார். ஆனால், அவரை இங்கே கொண்டு வரும் அளவுக்கு நான் பெரியஆள் கிடையாது' என்று பந்தா காட்டுவார். ஆர்த்திராவ் கன்னடச் சேனலுக்கு கொடுத்த பேட்டியைப் பற்றி மதுரை நிருபர்களுக்கு தெரிய வருவதற்கு முன்பே, அதற்கு மறுப்பு தெரிவிக்கிறேன் பேர்வழி என்று, தானே அந்தப் புகார் விவரங்களைச் சொன்னார்.
'உங்களுக்கு நாக்கில் சனி இருக்கிறது. பேசுவதைக் குறைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் செய்யும் நல்ல விஷயங்களைச் சொன்னால் பத்திரிகையாளர்கள் கண்டுகொள்வதில்லை. சர்ச்சையான விஷயங்களை மட்டும் எழுதுகிறார்கள். எனவே பேட்டி கொடுப்பதை நிறுத்திவிட்டு, தினமும் எழுதுங்கள்'' என்றார்களாம்.
மதுரை மண்ணில் உட்கார்ந்து எழுதத் தொடங்கி விட்டாராம் நித்தி. 'இப்பவே கண்ணைக் கட்டுதே’ ஸ்டைலில் உட்கார்ந்து விட்டாராம் மதுரை ஆதீனம்!
No comments:
Post a Comment