கோவையில் சீனியர் மாவோயிஸ்ட் ஒருவரின் வீட்டில் சமீபத்தில் ரகசிய கூட்டம் நடந்துள்ளது. மாவோயிஸ்ட் விவேக் கைதானதால், தமிழகத்தில் தலைமை இல்லாமல் மாவோயிஸ்ட்கள் தவிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி கிராமங்களில் முற்போக்கு சிந்தனையுடைய இளைஞர்களை மூளைச் சலவை செய்து, அவர்களை மாவோயிஸ்ட் இயக்கத்தில் ஒரு கும்பல் சேர்த்து வருகிறது.தேனி மாவட்ட மலைப்பகுதியில், இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளித்த வழக்கில் தலைமறைவாக இருந்த மாவோயிஸ்ட் விவேக், சென்னையில் சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.இதனால், மாவோயிஸ்ட் இயக்கத்தினரின் செயல்பாடுகள் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளன.இந்த தொய்வு நிலை குறித்து, கோவையில் உள்ள சீனியர் மாவோயிஸ்ட் சிவஞானம் என்பவரது வீட்டில் சமீபத்தில் ரகசிய ஆலோசனைக் கூட்டம் நடந்தது. சிவஞானம் தீவிர மாவோயிஸ்டாக இருந்தவர்.வயதானதால், தீவிர செயல்பாடுகளில் இருந்து ஒதுங்கியுள்ளார். அவரது வீட்டில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவோயிஸ்ட் இயக்கத்தில் மாநில அளவில் உள்ள நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.அவர்கள் பேசுகையில், "தமிழகத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்தை வழி நடத்திய விவேக் கைது செய்யப்பட்டார். அவருக்கு அடுத்த நிலையில் தலைவராக யார் செயல்படுவார் என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்' என காரசாரமாக பேசினார்.ரகசிய கூட்டம் நடந்தது குறித்தும், அதில் பங்கேற்றவர்கள் குறித்தும் கியூ பிரிவு போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர்.
6 மாத கண்காணிப்பு:சென்னையில் நடக்கும் திருமண விழாவில் மாவோயிஸ்ட் விவேக் பங்கேற்கவுள்ள தகவல், கியூ பிரிவு போலீசாருக்கு ஆறு மாதம் முன் கிடைத்தது. விவேக் பிளஸ் 2 படித்தபோது தேர்வுக்கான ஹால் டிக்கெட்டில் ஒட்டிய போட்டோ மட்டுமே கியூ பிரிவு போலீசாரிடம் இருந்தது. அதனால், விவேக்கின் தற்போதைய உருவம் குறித்த எந்த தகவலும் போலீசாரிடம் இல்லை.
போட்டோ "மிஸ்சிங்':சென்னை அண்ணா நகரில் உள்ள வீட்டில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற விவேக், நிகழ்ச்சியில் பதிவான எந்தவொரு போட்டோவிலும் தலை காட்டாமல் கவனமாக இருந்துள்ளார்.விவேக்கை கியூ பிரிவு போலீசார் கைது செய்த போது, "நான், நீங்கள் தேடும் மாவோயிஸ்ட் விவேக் இல்லை' எனக் கூறியுள்ளார். திருமண நிகழ்ச்சி போட்டோ ஆல்பத்தை கைப்பற்றிய போலீசார், அதில் விவேக்கின் போட்டோ இல்லாததை உறுதி செய்தனர். அவரிடம், கியூ பிரிவு போலீசார் கிடுக்கிப்பிடி கேள்விகளை கேட்டனர். அதன் பிறகே, நான் தான் மாவோயிஸ்ட் விவேக் என்பதை ஒப்புக் கொண்டார். போலீசாரிடம் விவேக் கூறுகையில், "ஒரு முறை சென்னை வந்த நான், என்னை கண்காணித்த போலீசாரிடமே, ஓசியில் சிகரெட் வாங்கி புகைத்தேன். போலீசாருக்கு என்னை அடையாளம் தெரியவில்லை' எனக் கூறியுள்ளார்.
கியூ பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில் தளம் அமைக்கும் மாவோயிஸ்ட்களின் முயற்சி, ஒவ்வொரு கட்டத்திலும் முறியடிக்கப்பட்டு வருகிறது. தென்மேற்கு மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, தமிழகம், கேரளா ஆகியவற்றின் மாவோயிஸ்ட் பொறுப்பாளராக, தமிழகத்தைச் சேர்ந்த குப்புராஜ் என்பவர் இருக்கிறார். தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகிறோம்.அடுத்ததாக, தமிழகம் மற்றும் கேரளாவில் மாவோயிஸ்ட் தளம் அமைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த நொண்டி பழனி என்பவரையும் தேடி வருகிறோம்.தீவிர செயல்பாட்டில் இருந்த மாவோயிஸ்ட்கள் மணிவாசகம், இளங்கோ, விவேக் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக உள்ள மாவோயிஸ்ட்களின் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளோம்.உடல்நலக்குறைவு மற்றும் வயது முதிர்ச்சியின் காரணமாக மாவோயிஸ்ட் இயக்கத்தில் இருந்து ஒதுங்கியுள்ள சீனியர் மாவோயிஸ்ட்கள் சிலரும் கண்காணிப்பு பட்டியலில் இருக்கின்றனர்.அந்த கண்காணிப்பில் தான் கோவையில், சீனியர் மாவோயிஸ்ட் சிவஞானம் வீட்டில் நடந்த ரகசிய கூட்டம் வெளியானது. கூட்டத்தில் பங்கேற்றவர்களின் பின்னணி குறித்து விசாரித்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
3 பேர் கைது அடுத்த குறி?தமிழகத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்தில் தீவிரமாகச் செயல்பட்டு வந்த மணிவாசகம், கடந்தாண்டு நவம்பரில் கைது செய்யப்பட்டார். அவருக்கு அடுத்த நிலையில் முக்கிய மாவோயிஸ்ட் இளங்கோவன், இந்தாண்டு பிப்ரவரியில் கைது செய்யப்பட்டார். அடுத்ததாக, சென்னை செனாய் நகரில் தமிழகத்தின் "ஆக்டிவ் செகரட்டரி'யாகச் செயல்பட்ட விவேக், கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். தமிழகத்தில் மாவோயிஸ்ட் தலைவரை தேர்வு செய்யும் அதிகாரம், வட மாநிலத்தில் உள்ள முக்கிய மாவோயிஸ்ட் தலைவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
No comments:
Post a Comment