காலரா மற்றும் பரங்கிப் புண் எனப்படும் பால்வினை நோய் ஆகிய இரண்டும், காலனிய ஆட்சியாளர்கள் இந்தியர்களுக்கு அளித்த பரிசு. காலரா, இந்தியாவில் தொடங்கி இங்கிலாந்து ரஷ்யா, அமெரிக்கா, ஜெர்மனி, எகிப்து, பிரான்ஸ், பர்மா என உலகெங்கும் பரவி கிடுகிடுவென 40 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களைக் கொன்று குவித்தது.பரங்கிப் புண் எனப்படும் சிஃபிலிஸ், கோனாரியா என்ற வெட்டை நோய் ஆகியவை பிரிட்டிஷ் அதிகாரிகளும், ராணுவ வீரர்களும் எங்கெல்லாம் சென்று உல்லாசம் அனுபவித்தார்களோ... அங்கெல்லாம் பரவி மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களைப் பலிவாங்கி இருக்கிறது. இதில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் ஆதிவாசிப் பெண்களே.நோய்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் என்ன தொடர்பு? எப்படி அவர்கள் இந்த நோய்களுக்குக் காரணமாக இருக்கக்கூடும்? இந்திய வரலாற்றில் இதற்கு என்ன முக்கியப் பங்கு?ஒட்டுமொத்த உலகையே உலுக்கிய கொடிய நோயான காலரா, இந்தியாவில்தான் உற்பத்தியானது. இந்தியா என்பது ஒரு நோய்க்கிடங்கு என்ற பிம்பம் இன்று வரை பிரிட்டிஷ் ஆய்வாளர்களால் முன்வைக்கப்பட்டு வருகிறது. அது நிஜம்தானா? இந்திய வரலாற்றில் வேறு ஏதாவது ஒரு நூற்றாண்டில் இப்படி ஒட்டுமொத்த இந்தியாவையே தாக்கிய நோய் ஏதாவது ஏற்பட்டு இருக்கிறதா?18-ம் நூற்றாண்டு வரை இந்த இரண்டு நோய்கள் வெகுஅரிதாக எங்கோ ஒரு சிலருக்குப் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. மேலும், இவை அடித்தட்டு மக்களை அதிகம் பாதிக்கவில்லை. ஆனால், இந்த நோயைப் பரவலாக்கி பெரும்பான்மை ஏழை மக்களைக் காவுகொள்ளச் செய்ததற்கு பிரிட்டிஷ் காலனிய அரசுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. காலரா ஏற்பட்டதற்கு சுகாதாரமற்ற தண்ணீர் மட்டும் காரணம் இல்லை. செயற்கையாகப் பெரும் பஞ்சத்தை உருவாக்கி தானியங்களை எல்லாம் இங்கிலாந்துக்குக் கப்பல் கப்பலாகக் கொண்டுபோனதால்தான் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதுவே காலரா ஏற்பட மறைமுகக் காரணம்.அதோடு, இடம்விட்டு இடம் செல்லும் ராணுவப் படையினருக்குத் தேவையான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி செய்து தராத காரணத்தால், அவர்கள் கடந்து செல்லும் வழியில் உள்ள நீர்நிலைகளை அசுத்தம் செய்ததோடு, மீதமான உணவுப் பொருட்களையும் கழிவுகளையும் ஆங்காங்கே போட்டுவிட்டுச் சென்றனர். எல்லாத் துறைமுகங்களிலும் கப்பல் கழிவுகள் கடலில் கொட்டப்பட்டன. அதோடு, ஆங்கிலேய அரசின் சுயலாபத்துக்காக உள்ளுர் வளங்கள் உறிஞ்சப்பட்டதுடன், கிராமங்களின் ஆதாரத் தேவைகள் புறக்கணிக்கப்பட்டன. இவற்றின் ஒட்டுமொத்த விளைவாகத்தான் காலரா ஏற்பட்டது.
கல்கத்தா பகுதியில் காலரா நோய் தாக்கி பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தும் வரை, பிரிட்டிஷ் அரசு அதைக் கட்டுப்படுத்தத் தீவிர முயற்சி எடுக்கவே இல்லை. இங்கிலாந்தில் காலரா பரவி மக்கள் பாதிக்கப்பட்ட பிறகே, காலராவை ஒழிக்கத் தீவிரமாகக் களம் இறங்கியது பிரிட்டிஷ் அரசு. தடுப்பு மருத்துகளையும் மருத்துவர்களையும் இந்தியாவுக்கு அனுப்பி காலராவைத் தடுத்து நிறுத்தியதோடு, எதிர்காலத்தில் இந்த நோய் வராமல் தடுக்கும் வழிமுறைகளையும் மேற்கொண்டது.ஒருவேளை, காலரா நோயால் இங்கிலாந்து தாக்கப்படாமல் போயிருந்தால், இந்தியாவின் பல லட்சம் காலரா சாவுகள் அவர்களுக்கு வெறும் தகவலாக மட்டுமே இருந்திருக்கும்.காலரா நோயைப்பற்றி 19-ம் நூற்றாண்டு வரை, பிரிட்டிஷ் மருத்துவத் துறை முறையாக அறிந்திருக்கவே இல்லை. அதனால்தான், ரெஜினால்டு ஒர்டன் என்ற மருத்துவர் சமர்ப்பித்த காலரா அறிக்கையில், மழைக் காலத்தில் ஏற்படும் திடீர் நிலநடுக்கம் காரணமாகவும், மோசமான வானிலை மாற்றங்களாலும் காலரா நோய் ஏற்படுகிறது எனக் குறிப்பிட்டு இருக்கிறார். 1503-ம் ஆண்டு, நுண்கிருமியால் உண்டாகும் வயிற்றுப்போக்கு நோயின் அறிகுறி பற்றியும், அதனால் உருவாகும் நோய்மைக் கூறுகள் பற்றியும் டச்சு மருத்துவ நூல்கள் கூறுகின்றன. டச்சு மருத்துவர் பான்ட்வியஸ், தனது 1629-ம் ஆண்டு மருத்துவக் குறிப்பேட்டில் இந்த நோய் கடலோடிகளிடம் காணப்படுவதாக எழுதிவைத்து இருக்கிறார்.1774-ம் ஆண்டு, டாக்டர் பெய்ஸ்லி என்ற மருத்துவர், இந்த நோய் பிரிட்டிஷ் கப்பல்கள் வந்து போகும் சூரத் துறைமுகத்தில் காணப்பட்டதாகவும் அது பிரிட்டிஷ் வணிகக் கப்பல்கள் தங்களது கழிவுகளைக் கொட்டுவதனால் வந்திருக்கக் கூடும் எனவும் கூறி இருக்கிறார். 1770-களில் ஆந்திராவின் கஞ்சம் பகுதியில் காலரா நோய் பாதிப்பு இருந்ததை பிரெஞ்சு வணிகப் பதிவேடு குறிப்பிட்டு இருக்கிறது.விப்ரியோ நுண்கிருமிகளே காலராவுக்கான முக்கியக் காரணி. இந்தக் கிருமி, அசுத்தமான குடிநீர் வழியாக உடலில் பரவி நோயை ஏற்படுத்துகிறது. காலரா பாதித்தவர்களின் மலக் கழிவுகளின் வழியே இக்கிருமி பல்கிப் பெருகிவிடும். போதுமான அடிப்படைச் சுகாதார வசதிகள் இல்லாததும், முறையான குடிநீர் வசதி இல்லாமல்போனதுமே இந்த நோய் பெருகக் காரணம் என்கிறார்கள்.இன்னொரு பக்கம், கடவுளின் கோபமே காலரா பரவியதற்குக் காரணம் என்று கருதிய இந்திய மக்கள், காளி, மாரி மற்றும் சில உள்ளுர் தெய்வங்களுக்கு பலி கொடுத்து சாந்தி செய்யத் தொடங்கினர். ஆகவே, நோய்க்கான முறையான சிகிச்சை பெறப்படாமல் சாவு எண்ணிக்கை அதிகமாகியது.1777-ல் காலரா தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு சிகிச்சை செய்யப்பட்டு இருக்கின்றன. ஆனால், ஆற்காடு பகுதியிலும் ஆந்திராவின் கஞ்சம் பகுதியிலும் காலரா மீண்டும் பரவியது. 5,000 பேர் கொண்ட காலனியப் படை, கஞ்சம் பகுதியைக் கடந்தபோது 1,143 பேரை காலரா நோய் தாக்கி முடக்கியது.
இதைத் தொடர்ந்து, 1783-ம் ஆண்டு ஹரித்துவாரில் காலரா பரவி 8 நாட்களில் 20,000 பேர்இறந்துபோயினர். இதே ஆண்டில் திரிகோணமலைக்குச்சென்ற பிரிட்டிஷ் கப்பலில் காலராபாதித்தவர்கள் இருந்த காரணத்தால், துறைமுகத்திலேயே கப்பல் நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து பர்மா, மொரீசியஸ் எனப் பரவி 1787-ல் வேலூரிலும் 1792-ல் திருவனந்தபுரத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.1816-ம் ஆண்டு வங்காளத்தில் மழை இல்லாமல்போய், வறட்சியும் வெக்கையும் மிதமிஞ்சி இருந்தன. இதைத் தொடர்ந்து, 1817-ம் ஆண்டு பெய்த கன மழையில் நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது, மறுபடியும் காலரா வேகமாகப் பரவ ஆரம்பித்தது. இதே ஆண்டு, ஆகஸ்ட் மாதம் கல்கத்தா நகரைக் காலரா தாக்கியது. அதன் பாதிப்பு மிக மோசமாக இருந்தது. குடிநீர் கிடைக்காமல் மக்கள் அல்லாடினர். நோயுற்று இறந்த உடல்கள் சாலை ஓரங்களில் வீசப்பட்டு துர்நாற்றம் வீசியது. 1817-ம் ஆண்டு தொடங்கி அடுத்த நான்கு ஆண்டுகளில் டெல்லி, மதுரா, ஹைதராபாத், பெங்களுர் என மளமளவென காலரா பரவியது.1823-ம் ஆண்டு அலெக்சான்ட்ரியாவுக்குள் பரவியது, 1832-ல் நியூயார்க் நகரம் காலராவின் பாதிப் புக்கு உள்ளானது.1855-ல் லண்டனில் 50,000 பேர் நோயுற்றனர். ஜான் ஸ்நோ என்ற மருத்துவர், பிராட்விக் வீதியில் உள்ள கழிவு நீர்க் குழாயில் ஏற்பட்ட உடைப்பின் காரணமாகவே லண்டனில் காலரா பரவுகிறது என்பதை, வரைபடங்கள் உதவியுடன் கண்டறிந்து, காலரா பரவுவதைத் தடுத்து நிறுத்தினார். அதன் காரணமாக அவரது நினைவுச்சின்னம் பிராட்விக் வீதியில் அமைக்கப்பட்டு இருக்கிறது.தொடர்ச்சியாக, டப்ளின் நகரமும் காலராவின் தாக்குதலில் நிறைய உயிரிழப்புகளை சந்தித்தது. 1860 வரை இந்தியாவில் மட்டும் காலராவில் இறந்துபோனவர்களின் எண்ணிக்கை 5 மில்லியன் என்கிறார்கள்.காலராவின் தாக்கம் இவ்வளவு மோசமாக இருந்த சூழலில் பிரிட்டிஷ் மருத்துவத் துறை எப்படிச் செயல்பட்டது என்பதை ஆராய்ந்துபார்க்க வேண்டி உள்ளது. 1600-களில் இந்தியாவுக்கு வந்த பிரிட்டிஷ் கப்பல்களில் கடலோடிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, ஆங்கிலேய மருத்துவர்கள் உடன் வந்திருக்கிறார்கள். ஆனால், இந்தியர்களுக்கு அவர்கள் சிகிச்சை அளிக்கவில்லை. 1679-ம் ஆண்டு இந்தியாவின் முதல் ஆங்கில மருத்துவமனை மதராஸில் தொடங்கப்பட்டது.அதன் பிறகு, 1764-ம் ஆண்டு வங்காளத்தில் ஒரு மருத்துவப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டது. 1785-ல் கல்கத்தா, மதராஸ், பம்பாய் ஆகிய மூன்று இடங்களில் புதிய மருத்துவமனைகள் தொடங்கப்பட்டன. 1796-ம் ஆண்டு கல்கத்தாவில் பிரசிடென்ஸி பொது மருத்துவமனை ஆரம்பிக்கப்பட்டது. 1800-ம் ஆண்டு முதல் 1820 ஆண்டுக்குள் மதராஸ் ராஜஸ்தானியில் நான்கு புதிய மருத்துவமனைகள் தொடங்கப்பட்டன.
1835-ம் ஆண்டு கல்கத்தாவில் மருத்துவக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. ஆசியாவிலேயே இதுதான் ஆங்கில மருத்துவம் கற்றுத்தந்த முதல் கல்லூரி. இந்தக் கல்லூரியோடு இணைந்த மருத்துவமனை 1852-ல் ஆரம்பிக்கப்பட்டது. பிறகு, 1860-களில் லாகூரில் இன்னொரு மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது.
விகடன்
No comments:
Post a Comment