நவீன இந்தியாவின் முதல் இரண்டு பிரச்னைகள் என்னவென்று என்னைக் கேட்டால், தயங்காமல் சொல்லிவிடுவேன். முதலாவது ஊழல்! இரண்டாவது குப்பை!
சென்னை நகரில் மட்டும் தினசரி 4800 டன் குப்பை போடப்படுகிறது. ‘போடப் படுகிறது’ என்று தான் சொல்ல முடியும். அகற்றப்படுகிறது என்று சொல்லமுடியாது. இந்தியா முழுவதும் உள்ள நகரங்களில் மட்டும் வருடத்துக்கு 5 கோடி டன் குப்பை உருவாக்கப்படுகிறது. நகரத்தில் வசிக்கும் ஒவ்வொருத்தரும் தினமும் சராசரியாக அரை கிலோ குப்பை ‘தயாரிக்கிறோம்.’ 2047ல் சூப்பர் பவர் ஆகிறோமோ இல்லையோ சூப்பர் கார்பேஜ் பவர் ஆகி விடுவோம். அப்போது வருடத்துக்கு சுமார் 26 கோடி டன் குப்பை தயாரிப்போம்!
இந்தக் குப்பையை என்ன செய்வது என்று வழிமுறைகள் உருவாக்கும்படி உச்ச நீதிமன்றம் எல்லா மாநிலங்களுக்கும் உத்தரவு போட்டு 12 வருடமாகிவிட்டது. ஆனால், எந்த மாநிலமும் இன்னமும் உருப்படியான குப்பை பாலிசியை உருவாக்கவில்லை.குப்பையை எரிப்பதா, புதைப்பதா என்ற விவாதமே இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. ஓர் அறிஞர் குழு எரிக்கச் சொல்கிறது. இன்னொன்று புதைக்கச் சொல்கிறது. அரசாங்கங்கள் இரண்டையும் செய்கின்றன. ஒவ்வொரு நகரத்திலும் குப்பைகளைக் கொண்டு போய் கொட்ட இடம் இல்லை. சென்னையில் பறவைகள் சரணாலயமாக இருந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியை குப்பைக்காடாக்கி விட்டோம். சென்னை வளர வளர, குப்பைகளைக் கொண்டு போய் கொட்ட சுற்றிலும் இருக்கும் கிராமங்களில் அரசு இடம் தேடுகிறது. உள்ளூர் அரசாங்கம் கிராமங்களை நகரத் தின் குப்பைமேடாகக் கருதினால், வெளிநாடுகள், மொத்த இந்தியாவையே தங்கள் குப்பைத் தொட்டியாக நினைக்கின்றன. தங்கள் நாட்டுக் குப்பைகளை கப்பல்களில் ஏற்றி இங்கே அனுப்பி விடுகின்றன. அவற்றை இறக்குமதி செய்யும் தேசபக்த வியாபாரிகளுக்கு இங்கே குறைவில்லை.
போலிப் பெயர்களில் இறக்குமதிகள் நடக்கின்றன. குப்பை கண்ட்டெனர் பிடிபட்டால், உரிமை கோர யாரும் வர மாட்டார்கள். எங்கிருந்து வந்ததோ அங்கேயே திருப்பி அனுப்புவதில் சட்ட சிக்கல்கள் உள்ளன. கப்பல் வாடகையை யார் தருவது என்ற சிக்கல் வேறு. எனவே கண்டுபிடிக்கப்பட்ட குப்பை கண்ட்டெனர்கள் இந்திய துறைமுகங்களிலேயே கிடக்கின்றன. கண்டு பிடிக்கப்படாதவை வெளியே போய் நம் ஊர்களிலும் கிராமங்களிலும் குப்பை மேடுகளில் கலக்கின்றன.
தமிழ்நாட்டில் தூத்துக்குடி துறை முகம்தான் குப்பைகளை அனுப்ப சிறந்த இடமாக வெளிநாடுகளில் கருதப்படுகிறது. கடும் நாற்றம் வீசும் கண்ட்டெனர்கள் மட்டுமே பிடிபடுகின்றன. மற்றபடி கண்ட்டெனர்களை ஸ்கேன் செய்து உள்ளே என்ன இருக்கிறது என்று பார்ப்பதற்கான கருவிகள் இந்தியாவில் எந்தத் துறைமுகத்திலும் இல்லை என்கிறார்கள். தூத்துக்குடி துறைமுகத்தில் ஒரு ரெடில் குப்பைத் தொட்டியில் கூடகத்தைக் கத்தையாகப் பணம் பிடிபட்டது. எல்லாம் கண்ட்டெனரைக் கண்டு கொள்ளாமல் இருப்பதற்கான லஞ்சப் பணம்.
அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய நாடுகள் மட்டுமல்ல; அரேபியா, மலேஷியா போன்ற நாடுகள் கூட நம்மைக் குப்பைத் தொட்டியாகப் பார்க்கின்றன.
ஏன் வெளிநாடுகள் இந்தியாவுக்குப் குப்பையை அனுப்ப வேண்டும்? ஒரு டன் குப்பையைச் சுத்திகரித்து மறுசுழற்சி செய்ய 12 ஆயிரம் ரூபாய் செலவாகும். கப்பலில் ஏற்றி இங்கே அனுப்பிவிட ஆகும் செலவு வெறும் 2800 ரூபாய்தான். இதுதான் காரணம்.
குப்பை என்பது சமையல் கழிவுகள், ப்ளாஸ்டிக் பைகள் போன்றவை மட்டுமல்ல. மருத்துவமனை கழிவுகள் முக்கியமானவை. இந்தியாவில் மொத்த மருத்துவமனைக் கழிவுகளில் பாதிக்கு மேல் வெளியே நகராட்சிக் கழிவுகளுடன் சேர்த்துக் கொட்டப்படுகின்றன. ஆனால் சட்டப்படி ஒவ்வொரு மருத்துவமனையும் தன் மருத்துவக் கழிவுகளை தானே எரித்து இல்லாமல் ஆக்க வேண்டும். இது நடப்பதில்லை.
மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் குப்பை என்றே தோன்றாத ஒரு பிரும்மாண்டமான குப்பையும் இருக்கிறது. அதுதான் எலெக்ட்ரானிக் குப்பை. சென்னையில் மட்டும் ஒரு வருடத்தில் சுமார் 28 ஆயிரம் டன் எலெக்ட்ரானிக் குப்பை சேர்கிறது. வீட்டில் உபயோகிக்கும் பிரிட்ஜ், வாஷிங் மெஷின், கம்ப்யூட்டர்கள், செல்போன்கள், டி.வி பெட்டிகள் எல்லாம் எல்க்ட்ரானிக் குப்பைதான்.
இந்தியாவில் மொத்தமாக நான்கரை லட்சம் டன் மின் குப்பை சேர்கிறது. இதில் சுமார் நான்கு சதவிகிதம் மட்டுமே மறு சுழற்சிக்குச் செல்கிறது. மீதி எல்லாம் இதர குப்பைகளுடன் சேர்ந்து நமக்குத் தலைவலியாக மாறுகின்றன.
உபயோகித்து முடிந்த செல்போனையோ டி.வி.யையோ கம்ப்யூட்டரையோ பேட்டரிகளையோ திரும்பவும் தயாரிப்பாளரிடமே கொடுக்க வகை செய்யும் சட்டங்கள் உள்ளன. சென்னையில் 21 எலக்ட்ரானிக் மறுசுழற்சி கம்பெனிகளுக்கு அரசு லைசன்ஸ் கொடுத்திருக்கிறது. இவர்களிடம் நம்மின் குப்பைகளைக் கொடுக்கலாம். சில கம்பெனிகள் தங்கள் மின் தயாரிப்புகளைத் தாங்களே திருப்பிப் பெறும் திட்டங்களை அறிவித்திருக்கின்றன. எனினும் இவையெல்லாம் பெரும் மாற்றத்தை இன்னும் ஏற்படுத்தவில்லை.
இந்தப் பிரச்னையில் அரசியல் கட்சிகள், இயக்கங்கள், பொதுமக்கள் அமைப்புகள், எல்லாம் பெரும் அளவில் கவனம் செலுத்தாமல் தொடர்ந்தால், இந்தியா மிகப்பெரிய குப்பை நாடாக அல்ல மேடாக மாறிவிடும்.
சுற்றுச்சூழலுக்கான அமைச்சராக இருந்த ஜெயராம் ரமேஷ் சொன்னது : குப்பைப் போடுவதற்கென்று ஒரு நோபல் பரிசு இருந்தால் அது நிச்சயம் இந்தியாவுக்குத்தான் கிடைக்கும்.
பிரணாப் முகர்ஜிதான் அடுத்த குடியரசுத் தலைவராவார். முலாயம் சிங் அவருக்கு ஆதரவு அளித்ததால், காங்கிரஸ் கூட்டணியில் மம்தா செய்த கலகம் பிசுபிசுத்துவிட்டது. மம்தா ரொம்பவும் நம்பிய கலாமும் காலை வாரிவிட்டுவிட்டார். எதிர் அணியான பி.ஜே.பி. கூட்டணியில் தங்கள் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்வதிலேயே குழப்பம்.
பி.ஜே.பி. கூட்டணியில் குடியரசுத் தலைவர் வேட்பாளரைப் பற்றி ஆரம்பித்த விவாதம் 2014ன் பிரதமர் வேட்பாளர் விவாதமாக மாறிவிட்டது. நரேந்திர மோடிக்கு எதிராக ஜனதா தளத்தின் நிதிஷ் குமார் பகிரங்கமாக நடத்த ஆரம்பித்திருக்கும் தாக்குதல், 2014ல் பி.ஜே.பி. அணியை இன்னும் பலவீனப்படுத்தவே செயும். மூன்றாவது அணிக்காரர்களுக்குக் கொஞ்ச நாள் சுகமான கனவுகள் வரும்.
அண்மைக் காலத்தில் குடியரசுத் தலைவராக இருந்தவர்களில் யாரை யாவது ரோல் மாடலாகச் சொல்லலாம் என்றால் அது கே.ஆர். நாராயணனைத்தான். தம் பதவியின் வரம்புகளை உணர்ந்து அதற்குள் என்னவெல்லாம் செய்யமுடியுமோ அதை செய்தவர் அவர். அவர் காலத்தில் தவறான முடிவெடுத்தார் என்று எதையும் சொல்ல முடியாது.
இப்போதும் அப்படிப்பட்டவர்கள் இருக்கிறார்கள். கோபாலகிருஷ்ண காந்தியை குடியரசுத் தலைவராக்கி இருக்கலாம். இருக்கும் இரண்டு வேட்பாளர்களில் நிச்சயம் பிரணாப் மேல். பழங்குடியினரில் ஒருவரை குடியரசுத் தலைவர் ஆக்கவேண்டும் என்றால், நான் நிச்சயம் சங்மாவுக்குப் பதிலாக முன்னாள் தலைமைத்தேர்தல் ஆணையர் லிங்டாவையே பரிந்துரைப்பேன்.
பிரணாப் சுமார் நாற்பது வருட பொது வாழ்க்கையில் இருந்தபோதும் எந்தப் பெரிய ஊழல் விவகாரத்திலும் அவர் பெயர் அடிபட்டதில்லை. என்ன அரசியல் சிக்கலாக இருந்தாலும், எல்லா கட்சித்தலைவர்களுடனும் பேசியே அதைத் தீர்க்கக்கூடிய ஒரே காங்கிரஸ் தலைவராக இப்போதைக்கு இருப்பவர் பிரணாப் மட்டும்தான். பிரணாபின் குடும்பத்தினர் அவர் பதவியை முறைகேடாகப் பயன் படுத்தியதாகவும் எந்தக் குற்றச்சாட்டும் இல்லை.
பிரணாபின் நெகட்டிவ்கள் என்று உள்ளதெல்லாம், அவருடைய தனிப்பட்ட நெகட்டிவ்கள் அல்ல. அவர் சார்ந்திருக்கக் கூடிய காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தம், நடைமுறை செயல்பாடுகளில் இருக்கும் நெகட்டிவ்கள்தான். இது எல்லா கட்சிகளிலும் இருக்கும் பல டீசண்ட்டான ஆட்களுக்கும் இருக்கும் நிலைமை.
பிரணாபுக்கு எதிராக என்ன சொல்வதென்று தெரியாத குழப்பத்தில் பி.ஜே.பி. அவர் எமர்ஜென்சியை ஆதரித்தவர்; சஞ்ச காந்தியின் ஆதரவாளர் என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறது. சஞ்சய் காந்தியின் மனைவியும் மகனும் இன்று பி.ஜே.பி.யில்தான் இருக்கிறார்கள். இருவரும் எமர்ஜென்சிக்காகவோ சஞ்சய்யின் அத்து மீறல்களுக்கோ மன்னிப்பு கோரியதாகத் தெரியவில்லை. சஞ்சயின் வலது கரமாக இருந்து தில்லியில் நடந்த எல்லா அடக்குமுறைகளையும் நடத்தியவர் ஜக்மோகன். பின்னால் அவர் பி.ஜே.பி.யில் சேர்ந்து அமைச்சராகவே இருந்தவர். எனவே, பிரணாப் பற்றிய பி.ஜே.பி.யின் புலம்பலுக்கு ஒரு மரியாதையும் இல்லை.
பிரணாப் குடியரசுத் தலைவராவதிலிருந்து நம் நாட்டு இளம்பெண்கள் கற்றுக் கொள்ள ஒரு முக்கியமான பாடம் இருக்கிறது. குள்ளமாக இருக்கிறோம் என்பது பற்றிய தேவையற்ற தாழ்வு மனப்பான்மையில் ஹை ஹீல்ஸ் அணிந்து முதுகுத் தண்டைக் கெடுத்துக் கொள்ளும் பெண்கள், பிரணாப் ஹைஹீல் அணிவதில்லை என்பதைக் கவனிக்கவேண்டும். இந்தியப் பெண்ணின் சராசரி உயரம் 5 அடி. பிரணாபின் உயரம் 4 அடி 7 அங்குலம். பொது வாழ்க்கையில் மிக உயர்ந்த பதவியை அடைய அவருக்கு அவர் உயரம் தடையாகவே தோன்றியதில்லை.
No comments:
Post a Comment