Saturday, June 30, 2012

ராமஜெயம் வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீ சுக்கு மாறப்போகிறது.


ராமஜெயம் வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீ சுக்கு மாறப்போகிறது என்ற தகவல் கிடைத்ததும் சிரித்​தவர்​கள்தான் அதிகம்! 
ராமஜெயம் கொலை வழக்கை மூன்று மாதங்​களாக டீம் டீமாக... டிசைன் டிசைனாக... விசாரித்துப் பார்த்தும் எந்த உருப்படியான துப்பும் கிடைக்காமல், திணறிக்கொண்டே இருந்தார்கள், திருச்சி போலீஸார். மீண்டும் மீண்டும் விசாரிக்கப்பட்டதால் திருச்சி தி.மு.க. பிரமுகர்களும் பேஸ்தடித்துக்கிடந்தனர். இந்த நிலையில் வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. கைகளுக்கு மாறவே, 'ராமஜெயம் வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீ சுக்கு மாறப்போகிறது ..?’ என்று அலறுகிறார்கள் ஏற்கெனவே போலீஸிடம் வறுபட்டவர்கள்.
ஜூன் 26-ம் தேதி மாலை திருச்சி சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி.​மலைச்சாமிக்கு சென்னை தலை​மை அலுவலகத்தில் இருந்து, 'ராம​ஜெயம் கொலை வழக்குத் தொடர்பான ஆவணங்களை திருச்சி மாநகர போலீஸிடம் போய் வாங்கிக்​​​கொள்ளுங்கள்’ என்று திடீர் உத்தரவு வந்தது. அதன்படி 1,500 பக்கங்கள்கொண்ட ஆவணங்களை வாங்கிக்கொண்டார் டி.எஸ்.பி. மலைச்சாமி.
மறுநாள் காலை, சென்னையில் இருந்து சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. மஞ்சுநாதா, டி.ஐ.ஜி. ஸ்ரீதர், எஸ்.பி. ராஜேஸ்வரி ஆகியோர் தனித்தனி கார்களில் புறப்​பட்டு திருச்சிக்கு வந்து சேர்ந்தனர். ராமஜெயம் உடல் கிடந்த இடத்தைக் காட்டும் வரைபடத்தைக் கையில் எடுத்துக்கொண்டு, காலை 11.30 மணிக்குக் கிளம்பியது படை. திருவளர்ச்சோலை பகுதியில், ராமஜெயம் உடல்கிடந்த இடத்தை வரைபட உதவியுடன் தேடிக்கொண்டே இருந்தனர். அதன் பிறகு பத்திரிகையாளர்கள் உதவி செய்த பிறகுதான், இடத்தை அடையாளம் கண்டார்கள். அங்கிருந்து காரில் கிளம்பி, ராமஜெயம் வாக்கிங் செல்லும் பாதைகளை ஒரு ரவுண்ட் அடித்தனர். அடுத்து, மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை நோக்கி பயணித்தனர். அங்கு கமிஷனர் சைலேஷ் குமார் யாதவை சந்தித்துப் பேசினார்கள்.
மன்னார்புரம், காஜாநகர் பகுதி​யில் வாடகை வீட்டில் சி.பி.சி.ஐ.டி. அலுவலகம் கடந்த ஆண்டு முதல் இயங்கிவருகிறது. ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்கக் கூடுதல் போலீஸ் தேவை என்பதால், மத்திய மண்டலத்தில் உள்ள ஐந்தாறு மாவட்டங்களைச் சேர்ந்த சி.பி.சி.ஐ.டி. போலீஸார் மாற்றப்பட்டு இருந்​தனர். அவர்கள் உட்காரக்கூட இடம் இல்லாமல் தெருவில் அலைந்து​கொண்டு இருந்ததுதான் பரிதாபம்.
மாலை 4 மணிக்கு சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு. ''எங்கள் வசம் தமிழகம் முழுக்க 114 வழக்குகள் உள்ளன. எங்களால் கண்டுபிடிக்க முடியாத வழக்கு என எதுவும் கிடையாது. ராமஜெயம் கொலை வழக்கைக் கண்டுபிடிக்க காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கவில்லை. நிர்ணயிக்கவும் முடியாது. திருச்சி போலீஸ் எங்களிடம் ஒப்படைத்துள்ள 1,500 பக்க ரிப்போர்ட்டை முழுமையாகப் படித்த பிறகு, இந்த வழக்கின் விசாரணையைத் தொடங்குவோம். புதுக்கோட்டை முத்துக்குமார் கொலை வழக்கு, திண்டுக்கல் டாக்டர் பாஸ்கரன் கொலை வழக்கு, மதுரை வாடிப்பட்டி சிறுமி நரபலி வழக்கு ஆகியவற்றில் சிறப்பாக துப்புத் துலக்கியதுபோன்று, ராமஜெயம் கொலைக் குற்றவாளிகளையும் கண்டிப்பாகப் பிடித்துவிடுவோம்'' என்ற ஐ.ஜி. மஞ்சுநாதாவிடம், ''திருச்சியில் வையம்பட்டியில் நடந்த துரைராஜ், அவரது கார் டிரைவர் கொலை வழக்கு மற்றும் மணிகண்டத்தில் நடந்த துரைராஜின் அண்ணன் தங்கவேல் கொலை வழக்கு ஆகியவை ஐந்து ஆண்டுகளாக சி.பி.சி.ஐ.டி-யால் துப்புத் துலக்கப்படாமல் இருக்கிறதே?'' என்று கிடுக்கிப்பிடி போட்டனர் நிருபர்கள்.
''அந்த வழக்குகளையும் தீவிரமாக விசாரித்துவருகிறோம். எப்படியும் குற்றவாளிகளைப் பிடித்துவிடுவோம்'' என்று சமாளித்து முடித்தார்.
திருச்சி போலீஸ் கிளப்பில் தங்கியுள்ள சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. ராஜேஸ்வரி, சிவில் சர்வீஸ் தேர்வுக்குப் படிப்பதுபோல் திருச்சி மாநகரப் போலீஸ் கொடுத்துள்ள அறிக்கையைப் படித்துவருகிறாராம். டி.எஸ்.பி. மலைச்சாமியை தலைமைப் புலனாய்வு அதிகாரியாகக்கொண்டு, அவருக்கு கீழ் ஐந்து இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் டீம்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அவர்கள் எஸ்.பி-யின் உத்தரவுக்​காகக் காத்திருக்கிறார்கள்.
''போலீஸ் கூப்பிடும்போதெல்லாம் விசாரணைக்​குப் போகவேண்டும் என்பதால், எங்களால் கடந்த மூன்று மாதங்களாக நல்லது கெட்டதுகளில் கலந்துகொள்ளக்கூட வெளியூர் போகமுடியவில்லை. இனி, சி.பி.சி.ஐ.டி. டீமும் எங்களது தூக்கத்தைக் கெடுக்கத்தான்போகிறது'' என்ற முணுமுணுப்பு ராம​ஜெயத்துக்கு நெருக்கமானவர்கள் வட்டாரத்தில் ஒலிக்கிறது.
திருச்சி போலீஸ் நிம்மதிப் பெருமூச்சுவிட, சி.பி.சி.ஐ.டி. திருதிருவென விழிக்கிறது. ஏற்கெனவே, 'சி.பி.ஐ. விசாரணை கேட்போம்’ என்று மு.க.ஸ்டாலின் சொன்னார். ஒருவேளை சி.பி.ஐ-க்கு இந்த வழக்கு மாறினால்... அவங்களும் இப்படித்தான் வருவாங்க! விசாரிப்பாங்க! பேட்டியும் கொடுப்பாங்க!

No comments:

Post a Comment