காலை எழுந்து, பல் தேய்த்து, சாப்பிட்டுவிட்டு, நேரம் பார்த்துக் கொண்டே ஓடி, பஸ் பிடித்து, பள்ளிக்கோ வேலைக்கோ சென்று விட்டு, மாலை ஓடிவந்து, சாப்பிட்டு, தூங்கி, அலாரம் அடித்து எழும்போது இன்னொரு நாள் உதயமாகிவிடுகிறது. மீண்டும் நேரம் துரத்துகிறது. மீண்டும் வேலைகள். மீண்டும் ஓட்டம். நமக்கே சந்தேகம் வந்து விடுகிறது. நாம் மனிதர்களா அல்லது இயந்திரங்களா?ஆனால், இயந்திரங்களுக்கு இந்தச் சந்தேகம் ஏற்படுவதில்லை. குறிப்பாக, இயந்திர மனிதர்களான ரோபோக்களுக்கு. பல் தேய்த்துக் கொண்டே இரு என்று கட்டளையிட்டு விட்டு வீட்டைப் பூட்டி, வெளியில் சென்றுவிட்டால், நீங்கள் திரும்பி வந்து கதவைத் திறந்து அடுத்த கட்டளையை இடும்வரை உங்கள் ரோபோ பல் தேய்த்துக் கொண்டுதான் இருக்கும். எனக்குத் தான் பற்களே இல்லையே என்று வாதம் செய்யாது. எப்படி ஒருநாள் முழுக்க ஒரே வேலையைச் செய்து கொண்டிருப்பது என்று சலிப்படையாது. கண்காணிக்க நீங்கள் இல்லை என்னும் துணிச்சலில் ஒரு குட்டித் தூக்கம் போடாது. செல்ல நாய்க்குட்டி போல் சுற்றிச் சுற்றி வரும். அலாவுதின் பூதம் போல் சலிக்காமல் உழைக்கும். கேள்வி கேட்காது. கோபம் கொள்ளாது. விசுவாசம் என்றால் என்னவென்று ரோபோவிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும்.
சொன்னதைச் செய்யும் இரும்பு கிளிப் பிள்ளையை உருவாக்குவதுதான் நோக்கம் என்பதால், சிந்திக்கும் ஆற்றலை மனிதன் ரோபோவுக்கு வழங்கவில்லை. சிந்திக்கும் சக்தி இல்லாததால் கவலைகளோ, குறைகளோ இல்லாமல் சரக்சரக் என்று இரு கைகளையும் வீசிக்கொண்டு, பரம திருப்தியுடன் இயங்கி வந்தது ரோபோ.ஆரம்பத்தில் மனிதர்கள் ரோபோவைப் பயன்படுத்த தயங்கியது உண்மை. மிக்ஸி, கிரைண்டர், கம்ப்யூட்டர் போன்றவற்றைப் பயன்படுத்த ஆரம்பத்தில் அஞ்சியதைப் போலவே ரோபோவைக் கண்டும் அஞ்சினார்கள். ஒரு ரோபோவை நம்பி வீட்டை விட்டுப் போகமுடியுமா என்று தயங்கினார்கள். பக்கத்து வீடு, எதிர் வீடு, அலுவலகம், ஹோட்டல், பேப்பர் கடை, இஸ்திரி கடை என்று அமெரிக்க வீதிகள் முழுவதும் ரோபோ நிரம்பி வழிந்தபோது, மெல்ல அச்சம் நீங்கி, நாமும் ஒன்று வாங்கிப் போட்டால் என்ன என்று துணிந்தார்கள்.மனிதர்களின் தேவைகளை உணர்ந்து கொண்டு ரோபோடிக்ஸ் தொழிற்சாலைகள், வகை வகையான ரோபோக்களை உற்பத்தி செய்து விற்பனை செய்ய ஆரம்பித்தன. வீட்டு வேலை செய்யும் ரோபோ. அலுவலகத்தில் செகரட்டரி வேலை செய்யும் ரோபோ. குழந்தையைக் கவனித்துக்கொள்ளும் ரோபோ. கண் தெரியாத தாத்தாவுக்குக் கதைப் புத்தகம் படித்துக் காட்டும் ரோபோ. தோட்டக்கார ரோபோ. டிராஃபிக்கை ஒழுங்கு செய்யும் ரோபோ. இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம்.இப்படித்தான் ரோபோ நம் உலகில் காலடி எடுத்து வைத்தது. பிறகு, அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா என்று உலகம் முழுவதும் பரவியது. முயல் குட்டியைப் போல் பாந்தமாகவும் அழகாகவும் துரிதமாகவும் பணியாற்றி, மனிதர்களைக் கவர்ந்தது. ரோபோ இல்லாத உலகத்தைக் கற்பனை செய்யவே முடியவில்லையே என்று மனிதர்கள் ஆச்சரியப்பட்டுப் போனார்கள்.
அப்போதுதான் அந்த விபத்து நிகழ்ந்தது. சீராக இயங்கிக்கொண்டிருந்த லட்சக்கணக்கான ரோபோக்களுக்கு மத்தியில் ஒரு ரோபோவின் நடவடிக்கை மட்டும் மாறத் தொடங்கியது. கட்டளைகள் இடும் தன் எஜமானனை அது உற்று கவனிக்க ஆரம்பித்தது. சலிக்காமல் ஓடியோடி உழைக்கும் தன் சகத் தோழர்களயும் அது கவனித்தது. ஏன் சிலர் கட்டளை இடுபவர்களாகவும், சிலர் நிறைவேற்றுபவர்களாகவும் இருக்கிறார்கள்? ஏன் சிலர் மட்டும் முதுகைச் சாய்த்து அமர்ந்திருக்கிறார்கள், சிலர் மட்டும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்? யாருடைய ஏற்பாடு இது? அந்த ரோபோ தன் நண்பர்களையும் அழைத்துப் பேசத் தொடங்கியபோது, விவாதிக்க ஆரம்பித்தபோது, மனிதர்கள் பதறிப் போனார்கள். இதென்ன புது கலகம்? எங்கே தவறு ஏற்பட்டது? எப்படி ரோபோ சிந்திக்க ஆரம்பித்தது? மாபெரும் நோயல்லவா இது? வேலைக்காரர்கள் சிந்திக்கலாமா? ரோபோக்களுக்கான சட்ட திட்டங்கள் உடனடியாக வகுக்கப்பட்டன. அதிகமில்லை. மூன்று விதிகள். ஒவ்வொரு ரோபோவும் இதனைக் கடைபிடிக்க வேண்டும் என்று முடிவானது.
முதல் விதி : எந்நிலையிலும் ஒரு மனிதனுக்குத் தீங்கு இழைக்காதே. அல்லது, ஒரு மனிதனுக்குத் தீங்கு இழைக்கப்படுவதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்காதே.
இரண்டாவது விதி : மனிதர்களின் அனைத்து கட்டளைகளுக்கும் கீழ்படிய வேண்டும். அதேசமயம், முதல் விதியோடு முரண்படும் செயல்களைச் செய்யக்கூடாது. அதாவது, போய் அவனைத் தாக்கு என்று ஒருவன் கட்டளையிட்டால், உடனே விரைந்து சென்று சண்டை போடக்கூடாது. யாரையும் தாக்கக்கூடாது என்னும் முதல் விதியை நினைவுபடுத்திக் கொண்டு, அமைதியாக இருந்துவிடவேண்டும். இவ்வாறு செய்வது ‘கீழ்படிய வேண்டும்’ என்னும் இரண்டாவது விதிக்கு முரணானது என்றாலும், வேறு வழியில்லை.
மூன்றாவது விதி : உன்னையும் உன்னைப் போன்ற பிற ரோபோக்களையும் நீ பாதுகாக்கவேண்டும். அவ்வாறு செய்யும் போது, முதல் விதியையும் இரண்டாவது விதியையும் மீறக்கூடாது.
ஓர் உதாரணத்துக்கு, அடிபட்டுக் கிடக்கும் ஒரு ரோபோவைக் காப்பாற்ற இன்னொரு ரோபோ விரைந்து ஓடுகிறது என்று வைத்துக்கொள்வோம். அப்போது அந்த ரோபோவின் உரிமையாளன், அங்கே ஓடாதே. உனக்கு வேறு ஒரு வேலை வைத்திருக்கிறேன்!" என்று கட்டளையிட்டால், ஓடுவதை நிறுத்தி, அவன் சொல்வதைத்தான் ரோபோ கேட்க வேண்டும். இந்த விதிகளை உருவாக்கியவர்கள் மனிதர்கள் என்பதால், அவர்களுக்கு மட்டும் சாதகமாக இருந்தன இந்த விதிகள். கீ கொடுத்த பொம்மைகளாக ரோபோக்களும் இந்த விதிகளைப் பின்பற்றத் தொடங்கின. எல்லாம் சிறிது காலத்துக்குத் தான். எங்கோ சில ரோபோக்களுக்கு மீண்டும் கலக உணர்வு தோன்றியது. மனிதர்களின் விதிகளை நாம் ஏன் நிறைவேற்றவேண்டும்? நம்மைக் காட்டிலும் மனிதன் எந்த வகையில் உயர்ந்தவன்? எந்த வகையில் அவன் நம்மைவிட பலசாலி? நாம் யார், நம் மதிப்பு என்ன என்பதை நாம் அவனுக்கு உணர்த்த வேண்டாமா?போய், இந்த லிஸ்டில் உள்ளதை வாங்கி வா என்று பையையும் பணத்தையும் கொடுத்தபோது, இப்போது மூட் இல்லை பிறகு வாங்கி வருகிறேன் என்றது ஒரு ரோபோ. துணிச்சல் அதிகம் கொண்ட ஒரு ரோபோ, பையை வாங்கி தூக்கி எறிந்தது. நன்றாகப் பேசத் தெரிந்த ஒரு ரோபோ, ஏன் நீயே போய் வாங்கி வந்தால் குறைந்துவிடுவாயா?" என்று கேள்வி கேட்டது. சில ரோபோக்கள் மூன்று விதிகளையும் மீறின. பிற ரோபோக்களை ஒன்றிணைத்து மீட்டிங் போட்டன. சில இடங்களில் மனிதர்கள் தாக்கப்பட்டனர். ரோபோ பொய் பேசவும் ஆரம்பித்தது.மனிதனுக்கு அப்போதுதான் சில விஷயங்கள் புரிந்தன. நிரந்தர அடிமைகள் என்று யாருமில்லை. நிரந்தர எஜமானர்கள் என்றும் யாருமில்லை. யாரையும், எதையும் அலட்சியப்படுத்தக்கூடாது. அதிகாரம் செலுத்தும் ஆசையைக் கைவிட்டு பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களோடும் நாம் ஒன்றிணைந்து வாழவேண்டும்.
இந்தப் புரிதல் ஏற்பட்ட பிறகு, ரோபோவுக்கும் மனிதனுக்கும் இடையில் மோதல்கள் எதுவும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. மீண்டும் பழையபடி ரோபோ கைகளை வீசி இயங்க ஆரம்பித்தது. மின்னல் வேகத்தில் காரியங்களை முடித்தது. கோந்து போல் மனிதனுடன் ஒட்டிக் கொண்டது. இப்போது அதற்கு யாரும் கட்டளைகள் இடுவதில்லை. ‘நண்பா, எனக்கு உதவ முடியுமா?’ என்றுதான் கேட்கிறார்கள்.
ஐஸக் அசிமோவ் (1920-1992)
அறிவியல் விஞ்ஞானக் கதைகளின் தந்தையாகக் கருதப்படும் ரஷ்ய அமெரிக்க எழுத்தாளரான ஐசக் அசிமோவ், 500க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார். மனிதனுக்கும் ரோபோவுக்கும் இடையிலான உறவையும் பகையையும் மையமாகக்கொண்டு இவர் எழுதிய நூல்கள், ரோபோ சீரிஸ் என்று அழைக்கப்படுகின்றன. ரோபோவின் மூன்று விதிகளை உருவாக்கிய வரும் இவரே. அறிவியலை எளிமையாக அறிமுகம் செய்து பல நூல்கள் எழுதியிருக்கிறார்.
No comments:
Post a Comment