அம்பேத்கர் கார்ட்டூன் சர்ச்சை தீர்வதற்குள் அடுத்தது ஆரம்பம். இப்போது சூடு தமிழகத்தில் இருந்து பரவுகிறது!
மத்தியக் கல்வி வாரியப் பள்ளிகளுக்கான 12-ம் வகுப்பு அரசியல்அறிவியல் புத்தகத்தில், திராவிட இயக்கம் பற்றி ஒரு பாடம் இடம் பெற்றுள்ளது. அதில் சேர்க்கப்பட்டுள்ள ஆர்.கே.லட்சுமணனின் ஒரு கார்ட்டூன்தான் பிரச்னையின் மையம்.
1965-ம் ஆண்டு தமிழகத்தில் நடந்த மிகப் பெரிய போராட்டம் இந்தித் திணிப்பை எதிர்த்து நடந்தது. 1965 ஜனவரி 25-ம் தேதி முதல் இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தி மட்டுமே இருக்கும் என்ற அன்றைய மத்திய அரசை எதிர்த்து அந்தப் போராட்டத்தைத் தமிழக மாணவர்கள் நடத்தினார்கள். இதுபற்றி, மத்தியக் கல்வி வாரியப் பாடப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள பாடத்தில் ஒரு கார்ட்டூன் வெளியிட்டு உள்ளார்கள்.
'இந்தியைக் கற்பது கட்டாயம் இல்லை. ஆங்கிலமே தொடரும்’ என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருக்க... போராடும் ஒரு மாணவர் அதன்மீது கல் எறியப் பாய்கிறார். அதை, அப்போதைய முதல்வர் பக்தவத்சலமும், முன்னாள் முதல்வர் ராஜாஜியும் அதிர்ச்சியோடு பார்க்க, பலகைக்குப் பின்னால் நிற்கும் சிலர், 'அந்தப் பையனுக்கு ஆங்கிலமும் படிக்கத் தெரியாது’ என்று கூறுவதாகச் சித்திரிக்கப்பட்டு உள்ளது.
மொழிப்போர்த் தியாகிகளை இழிவுபடுத்தும் கார்ட்டூனையும் அபத்தமான பகுதிகளையும் பாடப் புத்தகத்தில் இருந்து உடனே அகற்றவேண்டும் என்று எதிர்ப்புக் குரல்கள் தமிழகத்தில் எழுந்துள்ளன.
பா. செயப்பிரகாசம் (எழுத்தாளர், 1965 இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்ட மாணவர் தலைவர்): ''பல இனங்கள் வாழும் நாடான இந்தியாவில், சில மாநிலங்களில் மட்டுமே பேசப்படும் மொழியான இந்தியை ஆட்சி மொழி என அறிவித்ததை எதிர்த்து, அரசியல் தெளிவோடுதான் 60-களில்
தமிழக மாணவர்கள் இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டம் நடத்தினார்கள். இந்தி மொழியை எதிர்த்து அல்ல, இந்தியைக் கட்டாயமாகத் திணிப்பதை எதிர்த்துதான் போராட்டம். தமிழ் மொழியின் உரிமையைக் காக்கும் அந்தப்போராட்டத்தில், ஏறக்குறைய 500 பேரை பலி கொடுத்து, பல ஆயிரம் மாணவர்கள் படுகாயம் அடைந்து, நான் உட்பட 10 மாணவர் தலைவர்கள், இந்தியத் தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் பல மாதங்கள் அடைக்கப்பட்டு இருந்தோம்.
இந்தக் கேலிச்சித்திரத்தில் குறிப்பிடப் படுவதுபோல முட்டாள்கள் அல்ல. தமிழக மாணவர்கள், அறிவு ரீதியாக, பல இனங்கள் வாழும் உலக நாடுகளில் எப்படி ஆட்சி மொழியை வைத்திருக்கிறார்கள் என்பதைப் பற்றி சிந்தித்து, கூட்டம் போட்டுப் பேசி, அதன்படி தமிழ் மொழியின் உரிமையை மீட்பது சரி என அரசியல்ரீதியாக முடிவெடுத்துதான், போராட்டத்தில் ஈடுபட்டார்கள். ஆனால், மத்தியப் பாடத் திட்டப் புத்தகத்தில், ஒரு பக்கச் சார்பான கேலிச் சித்திரத்தை இடம்பெறச் செய்து, தமிழகத்தின் உரிமைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி விட் டார்கள்''.
திருச்சி சிவா (மாநிலங்கள்அவை தி.மு.க. உறுப்பினர்): ''வரலாறு என்பது விருப்பத்துக்கு ஏற்ப எழுதப்படுவது அல்ல. உண்மையை, உள்ளதை உள்ளவாறுதான் சொல்லித்தர வேண்டுமே தவிர, தனிப்பட்ட விருப்பு, வெறுப்புக்கு இடம் தரக்கூடாது. என்றைக்கோ ஒரு பத்திரிகையில், ஒருவர் தன் தனிப்பட்ட கருத்தாக வெளிப்படுத்தியதை, வரலாற்றில் நடைபெற்ற நிகழ்ச்சியாகவோ பொதுவான கருத்தாகவோ காட்ட முயற்சிப்பது விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்திவிடும். எனவே, பாடத்திட்டங்களை உருவாக்குகிறவர்கள் விருப்பு, வெறுப்புகளைக் கடந்தவர்களாக, தங்களது பொறுப்பின் தன்மையை உணர்ந்தவர்களாக இருக்க வேண்டும். மத்திய அரசின் பாடத்திட்டக் குழுவானது, இந்தக் கேலிச்சித்திரத்தை உடனடியாக நீக்க வேண்டும். ஒட்டுமொத்தமாகப் பிரச்னையை ஏற்படுத்துகிற கேலிச் சித்திரங்களை அகற்றுவது பற்றி அரசு பரிசீலனை செய்யவேண்டும்.''
நாஞ்சில் சம்பத் (ம.தி.மு.க. கொள்கைப் பரப்புச் செயலாளர்): ''அந்தப் பாடத்தை எழுதியவர்களுக்கு, தமிழகத்தின் வரலாறும் தெரியவில்லை, தமிழகத்தின் பூகோளத்தையும் புரிந்துகொள்ளவில்லை. தே.மு.தி.க-வை திராவிடர் இயக்கத்தின் பட்டியலில் சேர்த்திருப்பதை, வடிகட்டிய முட்டாள்தனம் என்றுதான் சொல்வேன். இப்படிப்பட்ட 'அறிவாளி’களை, மத்திய அரசின் பாடத்திட்டக் குழுவில் வைத்தால், பாடங்கள் தவறாக வருவதைத் தவிர்க்க முடியாது. பா.ம.க-வையும் திராவிட இயக்கத்தின் ஒரு பகுதியாக சேர்த்திருப்பது, இமாலயத் தவறு. அது ஒரு சாதிய அமைப்பின் விரிவாக்கமாகத்தான் உருவெடுத்தது. திராவிட இயக்கத்தின் குணமோ கொள்கையோ அதற்கு இல்லை. தமிழின் மீது இருக்கும் அம்மைத் தழும்புகளையும் தமிழனைச் சுற்றிய விலங்குகளையும் உடைக்க காலத்தின் குரலாக வெடித்த போராட்டம் அது. ஒரு மதத்தின் சின்னமாக, ஆதிக்கத்தின் சின்னமாக, தமிழை இந்தி அழுத்தத் தொடங்கியதை சகிக்க முடியாமல், தமிழ் இளைஞர்கள் அன்று வெடித்துக் கிளம்பினார்கள். அப்படி ஒரு போர்க் கோலம் தமிழகத்தில் இனி பூக்கப்போவது இல்லை. சில பலவீனமான தலைவர்களின் கேவலமான நடவடிக்கைகளை வைத்து, திராவிட இயக்கத்தை இழிவுபடுத்துவதை, நாங்கள் மன்னிக்க மாட்டோம். மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், அந்தப் பாடத்தை உடனடியாக அகற்றாவிட்டால், வீதி தோறும் அந்தப் பாடப் புத்தகத்தைக் கொளுத்துவோம்!''
No comments:
Post a Comment