Tuesday, June 12, 2012

மீடியா என்ற கத்தி (அ) ரியாலிட்டி ஷோ! - ஓ பக்கங்கள், ஞாநி


இரண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இந்த வாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. ஒன்று தமிழில் ஸீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிர்மலா பெரியசாமி வழங்கும் சொல்வதெல்லாம் உண்மை. இன்னொன்று ஹிந்தியில் செய்யப்பட்டு பல மொழிகளில் ஒலி மாற்றம் செயப்பட்டு ஸ்டார் டி.வி. சேனல்களில் ஒளிபரப்பாகும் நடிகர் அமீர்கான் வழங்கும் சத்யமேவ ஜெயதே.அசட்டுத்தனமான சீரியல்கள், அரை ஆபாசமான திரைப்படங்கள் இவற்றையே ஒளிபரப்பிக் கொண்டிருக்கும் போக்கிலிருந்து சற்று விலகி ரியாலிட்டி ஷோ எனப்படும் உண்மை நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிகள் ஒளிபரப்பத் தொடங்கியதற்கு இரு காரணங்கள் உண்டு. ஒன்று முதல் இரண்டுடன் பார்வையாளருக்கு அலுப்பு ஏற்பட்டது. இரண்டாவது புதிய நிகழ்ச்சிகள் ஏதாவது செய்யவேண்டுமென்றால், சினிமாவைப் போலவே டி.வி.யிலும் கற்பனை வறட்சி அதிகம். வெளிநாட்டுப்படங்களின் ‘இன்ஸ்பிரேஷனி’ல் படம் எடுப்பது போலவே வெளிநாட்டு டி.வி. நிகழ்ச்சிகளின் இன்ஸ்பிரேஷனில்தான் இங்கேயும் புது நிகழ்ச்சிகள் உருவாக்கப்படுகின்றன. ரியாலிட்டி ஷோக்களும் அப்படி வந்தவைதான். உலக அளவில் ஓரளவு தரமும் பரபரப்பும் கலந்து வணிக வெற்றி பெற்ற ஷோ, ஓப்ரா வின்ஃபிரேவுடையதுதான். வேறு பல ஷோக்கள் பிரபலமானாலும் அவை பெரும்பாலும் சென்சேஷனையே அடிப்படையாகக் கொண்டவை.
 
தமிழில் ஓரளவு ஓப்ரா ஷோவைப் பின்பற்றி அமைக்கப்பட்டு பிரபலமான முதல் ஷோ நடிகை லட்சுமியை வழங்க வைத்து மின்பிம்பங்கள் பாலகைலாசம் உருவாக்கிய ‘கதை அல்ல நிஜம்’ ஆகும். அதில் ஆரம்பத்தில் நான் ஸ்கிரிப்ட் கன்சல்டண்ட்டாகப் பணியாற்றினேன். ஷோவின் தயாரிப்புக் குழுவுக்கான நெறிமுறைகளை கைலாசம் கடுமையாக வகுத்தார். நிகழ்ச்சியை ஒளிபரப்பும் சேனலுடைய நெறிமுறைகள் அதிலிருந்து வேறுபட்டிருந்தன. பல பரஸ்பர சமரசங்களுடனே அதை தொடரவேண்டியிருந்தது. இந்த விளையாட்டின் ஆரம்ப சுவாரஸ்யமும் என்னவென்று கற்கும் ஆர்வமும் தணிந்ததும் 40 எபிசோடுகளுடன் நான் விலகிக் கொண்டேன்.
 
பல வருடங்கள் பிரபலமாகத் தொடர்ந்தது அந்த ஷோ. அதன்பின் அதே போல விதவிதமான ஷோக்கள் வந்துவிட்டன.ரியாலிட்டி ஷோ என்ற இந்த வடிவமும் மீடியாவைப் போலவே கத்தி மாதிரியானது. ஆப்பிளும் வெட்டலாம். ஆளையும் வெட்டலாம்.பல சமூகப் பிரச்னைகளை அம்பலப்படுத்தலாம். சாதாரண மக்கள் படும் துயரங்களை வீட்டு அறைக்குள் வசதியாக டி.வி. பார்ப்பவருக்கு உறைக்கச் செய்யலாம். மனித உறவுகளில் இருக்கும் சிக்கல்களைப் புரிந்துகொள்ளச் செய்ய உதவலாம்.அதெல்லாம் ஆப்பிள் வெட்டுவது போல. இன்னொரு பக்கம், தனிப்பட்டவர்கள் தங்கள் பகைகளைப் பழி தீர்க்கும் இடமாக இது மாற்றப்பட முடியும். பரபரப்புக்காக பல வீண் அவதூறுகள் துளியும் தயக்கம் இல்லாமல் அள்ளி வீசப்படும்.டி.ஆர்.பி. ரேட்டிங் எனப்படும் பார்ப்போர் எண்ணிக்கை அளவுகோல்தான் அதிக விளம்பர வருவாக்கான உத்தரவாதம் என்பதால், அந்த ஒற்றை நோக்கம் மட்டுமே நிகழ்ச்சியின் தன்மையை மாற்றத் தொடங்கிவிடும். அண்மைக்காலமாக பாட்டு, நடனப் போட்டி நிகழ்ச்சிகளில் தோற்ற குழந்தையை அழவிட்டு, அதன் உறவினர்களின் முகங்களைக் கலங்கச் செய்து அதைப் பதிவு செய்து ஒளிபரப்பி, ஷோவை அழுகாச்சி சீரியல் மாதிரி ஆக்கி அந்த ஆடியன்சையும் சம்பாதிக்கப் பார்க்கும் கேவலமான வணிக உத்திகள் சகஜமாகிவிட்டன.

ரியாலிட்டி ஷோவில் வந்தால் குடும்பப் பிரச்னை தீர்க்கப்பட்டுவிடும் என்ற பொய்யான நம்பிக்கையை அளிப்பதும் ஒரு வணிக உத்தியாக இந்த ஷோக்களில் பின்பற்றப்படுகிறது. ஒரு சில பிரச்னைகள் மெய்யாகவே தீர்க்கப்படுகின்றன என்பது உண்மைதான். ஆனால் சில பிரச்னைகள் ஷோவுக்கு வந்ததாலேயே தீராமலும் போயிருக்கும்.
 
இப்போது இந்த ஷோக்களுக்கு பலர் தாமாகவே தங்கள் பிரச்னைகளுடன் முன்வருவது ஒருபக்கம். இன்னொரு பக்கம், சுவையான பிரச்னை உடையவர்களைத் தேடிப் பிடித்துக்கொண்டு வர தயாரிப்புக் குழுவில் இருக்கும் நிருபர்கள் படும்பாடு, சினிமாவில் நல்ல சீன் சொல்ல உதவி இயக்குனர்கள்  படும்பாட்டுக்கு நிகரானது. 
 
 
இப்படிப்பட்ட சூழலில் சர்ச்சைகளை உருவாக்கியிருக்கும் இரு நிகழ்வுகளைப் பார்ப்போம். ஸீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் சொல்வதெல்லாம் உண்மையின் மூலமாக நான்கு ஆண்டுகளுக்கு முன்பு விழுப்புரம் அருகே ஒரு கிராமத்தில் நடந்த மூன்று கொலைகள் அம்பலமாகியிருக்கின்றன.


காதல் திருமணம் செய்ய முயற்சிப்பதால் தனக்கு தம் தந்தை முருகனாலேயே உயிருக்கு ஆபத்து என்று நிகழ்ச்சியில் சொல்ல வந்த டீன்ஏஜ் மகள் பார்கவி, இதற்கு முன்பே தன் தந்தை மூன்று கொலைகள் செய்திருப்பதாகச் சொல்லிப் பரபரப்பை ஏற்படுத்தினாள். தன் தந்தையின் நண்பர் மகள் காதல் திருமணம் செய்ததாகவும் அவளுக்கும் அவர் கணவருக்கும் அடைக்கலம் தரும்படி கேட்டு அவர்கள் வந்து தங்கள் வீட்டில் தங்கியதாகவும் அப்போது அவர்களை தம் தந்தை கொலை செய்து தோட்டத்தில் புதைத்தாகவும் பார்கவி விவரித்தது பரபரப்பாக இருந்தது. தம் மகளையும் மருமகனையும் தேடி வந்த நண்பரையும் தம் தந்தை கொன்று புதைத்துவிட்டதாக பார்கவி தெரிவித்தாள். இதையெல்லாம் அவளுடைய அம்மாவும் அதை நிகழ்ச்சியிலேயே உறுதிப்படுத்தினார். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தந்தை மறுத்தார்.

நிகழ்ச்சி முடிந்தபின் தொலைக்காட்சியினர் கொல்லப்பட்டதாகச் சொல்லப்பட்ட மூவர் அவர்களுடைய கிராமத்தில் நெடு நாட்களாக இல்லை என்பதை விசாரித்து உறுதி செய்து கொண்டபின் நிகழ்ச்சியை ஒளிபரப்பினார்களாம்.


ஒளிபரப்பைப் பார்த்தபோதுதான் நான்கு ஆண்டுகளாகக் ‘காணாமற்’ போன தம் மகள், மருமகன், கணவர் எல்லாம் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்று தெரியவந்ததாம் கிராமத்திலிருக்கும் ஜீவா என்பவருக்கு. நான்கு வருடமாக போலீசிடம் புகாரே அவர் கொடுக்கவில்லை. தம் கணவர், மகள், மருமகன் எல்லாரும் தம்மை விட்டுப் போய் எங்கேயோ தனியே வாழ்ந்துவருவதாக அவர் நினைத்துக் கொண்டிருந்தாராம்!


இந்தக் கதையில் நிறைய ஓட்டைகள் உள்ளன. அவற்றை போலீஸ் விசாரணை அடைக்கக் கூடும். பல அரை உண்மைகளுக்கு நடுவேதான் முழு உண்மைகள் எப்போதும் ஒளிந்திருக்கும்.


நம் கவலை மீடியா இதை எப்படிக் கையாண்டது என்பதில்தான். நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு அல்ல. முன்பதிவு செய்யப்பட்டது. பதிவு செய்த அன்றே ஒரு டீன் ஏஜ் பெண் கொலைப் புகார் சொல்கிறார் என்கிற நிலையில், அல்லது கிராமத்தில் மூவர் மிஸ்ஸிங் என்று தெரிந்த நிலையில், டி.வி. நிறுவனம் ஒளிபரப்புக்கு முன்பே போலீசிடம் இந்த விஷயத்தைத் தெரிவித்து வழக்கை ஒப்படைத்திருக்க வேண்டும். அப்படிச் செய்ததாக எந்தச் செய்தியிலும் காணப்படவில்லை.


அல்லது ஆரம்பத்திலிருந்தே போலீசிடம் எல்லாவற்றையும் தெரிவித்துவிட்டு அவர்கள் உதவி பெற்றுத்தான் மேலும் தகவல்களைத் திரட்டி அதன்பின்தான் நிகழ்ச்சியையே பதிவு செய்து ஒளிபரப்பினார்கள் என்றால், அதை நேயர்களுக்குத் தெரிவித்திருக்க வேண்டும். அப்படியும் எதுவும் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை.


எனவே இந்த மாதிரி நிகழ்ச்சிகளைத் தயாரிப்பதிலும் ஒளிபரப்புவதிலும் பின்பற்றவேண்டிய நெறிமுறைகள் முக்கியமானவையாகின்றன.இதே நெறிமுறை பிரச்னைதான் அமீர்கானின் சத்யமேவ ஜெயதேவிலும் இப்போது ஏற்பட்டிருக்கிறது. தம் மனைவிக்கு முறையான சம்மதம் பெறாமலே அறுவை சிகிச்சை செய்து அலட்சியமான சிகிச்சையினால் அவரை சாகடித்து விட்டதாகப் பெங்களூர் தனியார் மருத்துவமனை மீதும் குறிப்பிட்ட டாக்டர்கள் மீதும் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ராய் என்பவர் அமீர்கான் நிகழ்ச்சியில் குற்றம் சாட்டினார். மாற்று உறுப்பு சிகிச்சைகள் பற்றிய நிகழ்ச்சி அது. மருத்துவத்துறையில் இருக்கும் அலட்சியம், ஊழல்கள், பற்றி அமீர்கான் கடுமையாகக் கவலை தெரிவித்துப் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் அதிகாரி ராய் குற்றம் சாட்டிய மருத்துவர்கள் ராம்சரண் தியாகராஜனும் ஸ்ரீதராவும் விரிவான கடிதம் ஒன்றை அமீர்கானுக்கு எழுதியிருக்கிறார்கள். அதில் நோயாளியின் சம்மதம், உறவினர்களின் சம்மதம் எல்லாம் பெறப்பட்ட சான்றுகளை இணைக்கிறார்கள். நிகழ்ச்சியில் ராய் தெரிவிக்காத சில தகவல்களைக் குறிப்பிடுகிறார்கள். தங்கள் மீது மருத்துவ அலட்சியத்துக்காக நஷ்ட ஈடு கேட்டு ராய் தொடுத்த வழக்கில் கூட அவர் சம்மதக் கடிதப் பிரச்னையை எழுப்பவே இல்லை என்று சுட்டிக் காட்டுகிறார்கள்.

ராய் சொல்வது எவ்வளவு உண்மை, மருத்துவர்கள் சொல்வது எவ்வளவு உண்மை என்பதெல்லாம் நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கில் மேலும் விசாரிக்கப்பட்டு முடிவாகலாம்.

மீடியா நடந்துகொண்ட விதம்தான் இப்போது நம் கவனத்துக்குரியது. ஏன் அமீர்கான், தங்கள் கருத்தைச் சொல்லும்படி குற்றம் சாட்டப்பட்ட மருத்துவர்களை நிகழ்ச்சிக்கு அழைக்கவே இல்லை? இப்போது அவர்கள் கடிதம் அனுப்பியதையடுத்து அடுத்த வாரம் அழைக்கலாம். ஆனால் அது முறையாகாது.

இதழியலின் அடிப்படைக் கோட்பாடே, ஒரு சர்ச்சைக்குரிய செய்தியை வெளியிடும்போது அதில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினரின் கருத்தையும் ஒரே நேரத்தில் கேட்டு வெளியிடுவதாகும். ஒரு தரப்பைத் தொடர்பு கொள்ள முடியாமல் போனாலோ, அல்லது அதை அடுத்து வெளியிட இருந்தாலோ, அதையும் முதல் செய்தியிலேயே அறிவிக்க வேண்டும்.

இந்த அடிப்படை நெறியைப் பின்பற்றாமல் போனால், ஒட்டுமொத்தமாக ஒரு மீடியாவில் வரும் செய்திகளின் நம்பகத்தன்மையே சந்தேகத்துக்குரியதாகிவிடும். அந்தச் சிக்கலைத்தான் இப்போது சத்யமேவ ஜெயதே சந்தித்திருக்கிறது.

நம் சமூகத்தில் அரசியல், அரசு நிர்வாகம், கல்வி-மருத்துவம் போன்ற துறைகள், நீதித்துறை அனைத்திலும் பல கோளாறுகள் உள்ளன. ஒன்றில் இருக்கும் கோளாறுக்கு இன்னொன்றின் மூலம் தீர்வைத் தேடுகிறோம். எல்லாவற்றுக்கும் மீடியா மூலம் தீர்வுகள் தேடப்படுகின்றன. எனவே மீடியா எப்படிச் செயல்படுகிறது என்பதையும் கூடவே கவனிப்பது முக்கியமாகிறது.

வெளிநாடுகளில் மீடியா வாச் ஓரளவு நிலை பெற்றிருக்கிறது. இங்கே இன்னும் இல்லை. மிகச் சில அமைப்புகளே இதில் இயங்கி வருகின்றன. ஆங்கிலத்தில் இயங்கி வரும் ஹூட்.ஆர்க் அதில் ஒன்று. தமிழிலும் இப்படிப்பட்ட அமைப்பு தேவை என்று உணர்ந்த நண்பர்கள் பலர் கூடி அண்மையில் ‘கவனிக்கிறோம் - வி ஆர் வாச்சிங்’ என்ற அமைப்பைத் தொடங்கியுள்ளோம்.

பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் இன்றைய சமூகத்தில் வெறும் வணிகம் மட்டும் அல்ல. அவற்றுக்கு மிகப்பெரும் சமூகப் பொறுப்புகளும் உள்ளன. அந்தப் பொறுப்புகளை நினைவுபடுத்திக் கொண்டே இருக்க மீடியா வாச் அமைப்புகள் தேவை - யானைக்கு அங்குசம் போல.

No comments:

Post a Comment