Monday, June 18, 2012

கும்பகோணத்துக்கு ஒரு நீதி... ஸ்ரீரங்கத்துக்கு ஒரு நீதியா?' திருமண மண்டப தீ விபத்து..


ல்ல நாள் என்று நாள் குறிக்கப்​பட்டு கொடூர நாள் ஆன தினம் அது! 
எட்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை உலுக்கிய ஸ்ரீரங்கம் திருமண மண்டப தீ விபத்தை யாரும் மறந்திருக்க முடியாது. மணமகன் குருராஜ் உட்பட திருமணத்துக்கு வந்திருந்த 64 பேர் எரிந்து கரிக்கட்டையான கொடூரம் அது. அந்த விபத்து தொடர்பான வழக்கில் கடந்த 13-ம் தேதி திருச்சி மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை மட்டுமே விதித்து தீர்ப்பளித்தார் நீதிபதி வேல்முருகன். 'போலீஸார் சாதாரண பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ததால்தான், குறைவான தண்டனை வழங்கப்பட்டுள்ளது’ என்ற ஆதங்கக் குரல்கள் எழுந்துள்ளன.  
ஃப்ளாஷ்பேக்...
2004-ம் ஆண்டு ஜனவரி 23-ம் தேதி. ஸ்ரீரங்கம், ரெங்க நகரில் அமைந்துள்ள பத்மபிரியா திருமண மண்டபம். பெங்களூரைச் சோந்த குருராஜ் - ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ஜெயஸ்ரீ ஜோடி திருமண சடங்குகளுக்காக மண்டபத்தின் மொட்டை மாடியில் அமைக்கப்பட்ட மேடையில் அமர்ந்திருந்தனர். ஹோமம் வளர்த்து புரோகிதர் மந்திரங்கள் ஓதிய போது, திடீரென பந்தலில் தீப்பிடித்து எரிந்தது. தீயில் இருந்து தப்பிக்க ஓடியவர்கள், மாடியில் இருந்த ஒரேயரு சிறிய படிக்கட்டு வழியாக தப்பிக்க முயன்று, நெரிசலில் சிக்கினர். அந்தக் களேபரத்தில் தப்பிக்க முடியாமல் சிக்கி, தீயின் கோர தாண்டவத்துக்கு 64 பேர் பலியானார்கள். 33 பேர் காயம் அடைந்தனர். 'வீடியோ கேமரா லைட்டில் இருந்து வெப்பம் பரவியும், வீடியோ கேமராமேன் பயன்படுத்திய மின் வயர்கள் வழியே மின்கசிவு ஏற்பட்டும் தீ விபத்து நடந்தது’ என்று வீடியோ கேமராமேன் தர்மராஜ், லைட்பாய் பாலாஜி, பந்தல் கான்ட்ராக்டர் செல்வம், மண்டப உரிமையாளர் ராமசாமி, மண்டப மேனேஜர் சடகோபன், எலெக்ட்ரீசியன் முருகேசன் ஆகிய ஆறு நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர் ஸ்ரீரங்கம் போலீஸார். மண்டப உரிமையாளர் ராமசாமியைத் தவிர மற்ற அனைவரையும் கைது செய்து சிறைக்கு அனுப்பியது போலீஸ். நெஞ்சுவலி என்று தனியார் மருத்துவமனையில் படுத்து முன்ஜாமீன் வாங்கினார் ராமசாமி.
இரண்டே மாதங்களில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. நீண்ட இழுத்தடிப்புக்குப் பிறகு 2009-ம் ஆண்டுதான் வழக்கு விசாரணைக்கு வந்தது. 49 பேர் அரசுத்தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டு இருந்தனர். 30 பேர் வரை சாட்சியம் அளிக்கவே வரவில்லை. 'சாட்சிகளின் விலாசம் கண்டுபிடிக்க முடியவில்லை’ என போலீஸார் காரணம் சொன் னார்கள். குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான பந்தல் கான்ட்ராக்டர் செல்வம் இறந்துபோய்விட, மற்றவர்கள் வழக்கை எதிர்கொண்டனர்.
கடந்த ஜூன் 13-ம் தேதி தீர்ப்பு நாள்.  குற்றம் சாட்டப்பட்ட ஐந்து நபர்களையும் குற்றவாளிகள் என அறிவித்த நீதிபதி வேல்முருகன், மண்டப உரிமையாளர் ராமசாமிக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தார். சடகோபன், தர்மராஜ் ஆகியோருக்கு தலா ஓர் ஆண்டு சிறைத் தண்டனை. முருகேசனுக்கு ஆறு மாதம் சிறைத் தண்டனை வழங்கினார். லைட்பாய் பாலாஜிக்கு அபராதம் மட்டும் விதித்தார்.
தண்டனை பெற்றவர்கள், உடனே ஜாமீன் பெற்று வெளியே சென்றனர்.
குற்றவாளிகளின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் மகேந்திரனிடம் பேசினோம். ''இந்த வழக்கின் புகார்தாரர் ராஜகோபால் (மணமகனின் சகோதரர்) தன்னிடம் போலீஸார் கட்டாயப்படுத்தி புகார் வாங்கியதாக விசா ரணையில் கூறினார். யதேச்சையாக ஏற்பட்ட விபத்தை போலீஸார் பெரிதுபடுத்தி வழக்குப் பதிவு செய்தனர்.  உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்வோம்'' என்றார்.  
அரசு வழக்கறிஞரான அசோகன், ''இது கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்துதான். நான் பதவிக்கு வருவதற்கு முன்பே விசாரணை கிட்டத்தட்ட முடிந்து விட்டது. நான் விசாரணையை நிறைவு செய்தேன், அவ்வளவு தான். அதிகாரிகள் மீதும் வழக்குப் பதிவு செய்யும் பணியை எனக்கு முன் இருந்த அரசு வழக்கறிஞர்கள் செய்திருக்க வேண்டும்'' என்றார்.
முன்னாள் அரசு வழக்கறிஞரான எட்வின் ஜெயக்குமார், ''நான் 2006 முதல் 2008 வரை அரசு வழக்கறிஞராக இருந்தேன். குற்றப்பத்திரிகையை படித்து அதிர்ந்தேன். போலீஸ் பதிவு செய்திருந்த செக்ஷன்கள் மிகச் சாதாரணமானதாக இருந் தன. விசாரணை அதிகாரியான போலீஸ் இன்ஸ்பெக்டரை கூப்பிட்டு, செக்ஷன்களை மாற்றி குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய அறிவுறுத்தினேன். ஆனால் அவர் மாற்றவே இல்லை.
கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் பள்ளி உரிமையாளர் மட்டுமல்லாமல் கல்வித் துறை, வருவாய்த் துறை அதிகாரிகளும் குற்றவாளி களாகச் சேர்க்கப்பட்டு தண்டனைக்கு உட்படுத்தப்பட்டனர். ஆனால், 64 உயிர்களைப் பலி கொண்ட திருமண மண்டப விவகாரத்தில் தவறிழைத்த மாநகராட்சி அதிகாரிகளைக் குற்ற வாளிகளாகச் சேர்க்காதது ஏன்? கும்பகோணத்துக்கு ஒரு நீதி. ஸ்ரீரங்கத்துக்கு ஒரு நீதியா?'' என்றார் ஆவேசமாக.
இவர் கேள்விக்கு என்ன பதில்?

No comments:

Post a Comment