ஹாலிவுட் படத்தில் கதாநாயகனாக நடிப்பதுடன், அந்த படத்தை இயக்குகிறேன். அதற்கான வேலைகள் நடக்கின்றன," என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் கமல்ஹாஸன்.
சிங்கப்பூரில் சர்வதேச இந்திய திரைப்பட அகடமி விழா நடைபெறுகிறது (ஐஃபா). இந்த விழாவில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்து இயக்கியுள்ள 'விஸ்வரூபம்' படத்தின் முன்னோட்டக் காட்சியுடன் சில ஆக்ஷன் காட்சிகளும் திரையிடப்பட்டன.
இதே விழாவில் லார்ட் ஆப் தி ரிங்ஸ் பட தயாரிப்பாளர் பேரி ஆஸ்போன் கலந்து கொண்டார். இருவரும் சந்தித்துப் பேசினர்.
விழா முடிந்து சென்னை விமான நிலையத்துக்கு வந்திறங்கிய கமல்ஹாஸன் நிருபர்களிடம் பேசியது:
எல்லாம் நல்லபடியாக வந்து கொண்டிருக்கிறது. ஐஃபா விழாவில் விஸ்வரூபம் படத்தின் காட்சிகளுக்கு மிகச் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்தப் படம் மூலம் ஹாலிவுட் படம் இயக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. தயாரிப்பவர் பேரி ஆஸ்போன்.
இவர் ஹாலிவுட்டில் பல வெற்றி படங்களை தயாரித்தவர் 'மேட்ரிக்ஸ்', `லாட் ஆப் தி ரிங்ஸ்', 'கிரேட் கேட்ஸ்பி' ஆகிய படங்களை அவர் தயாரித்துள்ளார்.
நானும், அவரும் சந்தித்து பேசி கொண்டிருந்தபோது அவரிடம் நான் 9 கதைகளை சொன்னேன். நான் மூன்றாவதாக சொன்ன கதை அவருக்கு பிடித்திருந்தது. இது சர்வதேச தரத்திலான கதை என்றும், எனவே இந்த கதையை ஹாலிவுட்டில் தயாரிக்க விரும்புவதாகவும் பேரி ஆஸ்போன் தெரிவித்தார்.
இயக்கமும் நானே...
நாங்கள் இருவரும் இணைந்து பணிபுரியும் ஹாலிவுட் படத்தில், நானே கதாநாயகனாக நடித்து இயக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். முதலில் இவ்வளவு பெரிய பொறுப்புகளை நாம் எடுத்து கொள்ளலாமா? என்று தயங்கினேன். ஆனால் அவர் தொடர்ந்து வலியுறுத்தியதால் படத்தை நான் இயக்கி, நடிக்க சம்மதித்துள்ளேன்.
விஸ்வரூபத்தை இயக்கிய உங்களுக்கு ஆங்கிலப் படம் இயக்குவது பெரிய விஷயமல்ல என்று அவர் ஊக்கமளித்தார்.
இதுதவிர என் சொந்த பட நிறுவனமான ராஜ்கமல் பிலிம்சுடனும் இணைந்து படம் தயாரிக்க பேரி ஆஸ்போன் தயாராக இருக்கிறார். நான் ஹாலிவுட்டுக்கு வர வேண்டும் என்றும், தொடர்ந்து ஆங்கில படங்களில் நடித்து இயக்க வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார்.
பெருமை
நேற்று அவர் சிங்கப்பூரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது, கமல்ஹாசனின் சினிமா, இலக்கியம், வரலாறு பற்றிய அவருடைய ஞானம் வியக்க வைக்கிறது என்று கூறினார்.கமல்ஹாசன் மிகச் சிறந்த கலைஞர் என்று பாராட்டினார். அதை கேட்பதற்கு பெருமையாக இருந்தது.
இத்தனை விஷயங்களுக்கும் வித்திட்டது 'விஸ்வரூபம்' படம்தான். நாங்கள் சந்தித்தது தற்செயலாகத்தான். விஸ்வரூபம் படத்தின் 'சவுண்ட் மிக்ஸிங்' வேலைகளை நான் சிங்கப்பூரில் செய்து கொண்டிருந்தபோது, பேரி ஆஸ்போன் என்னை வந்து சந்தித்தார். என்ன படம் செய்கிறீர்கள்? என்று என்னை கேட்டார்.
மூன்றுமுறை பார்த்தார்...
நான் 'விஸ்வரூபம்' படத்தின் சில காட்சிகளை அவருக்கு காட்டினேன். அதை பார்த்த அவர் என் மகளையும் அழைத்து வந்து இன்னொரு முறை பார்க்கலாமா? என்று என்னிடம் கேட்டார். நான் சம்மதம் சொன்னதும் அவர் மகளுடன் வந்து 2-வது முறையாக விஸ்வரூபம் படத்தை பார்த்தார்.
அவருடைய பங்குதாரரை அழைத்து வந்து 3-வது முறையாக விஸ்வரூபம் படத்தை பார்த்தார். 3 முறை அவர் முழுமையாக அந்த படத்தை பார்த்து ரசித்தார்.
சிங்கப்பூரில் நடந்த சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் விஸ்வரூபம் படத்தின் `டிரெய்லரை' வெளியிட்டபோது பேரி ஆஸ்போன் முன்கூட்டியே வந்து அரங்கில் அமர்ந்து கொண்டார். ஹாலிவுட் படத்திற்கான கதையை நான் எழுத ஆரம்பித்து விட்டேன். மாதத்தில் 7 நாட்கள் பேரி ஆஸ்போன் எனக்காக ஒதுக்கி விட்டார்.
தேவர் மகன் ஸ்டைலில்...
இந்த படம் தொடர்பான சில புத்தகங்களை படிக்க அவருக்கு நான் சிபாரிசு செய்து இருக்கிறேன். நாங்கள் இருவரும் இணைந்து உருவாக்கும் `ஹாலிவுட்' படம் தேவர் மகன், அபூர்வ சகோதரர்கள் பாணியில் ஜனரஞ்சகமான படமாக இருக்கும். உலக தரத்துடன் இந்த படம் உருவாகும். அதற்கான வேலைகள் தொடங்கி விட்டன," என்றார்.
No comments:
Post a Comment