Tuesday, June 5, 2012

"கோண வகிடு!"




அந்தத் தம்பதிகளுக்கு வாழ்வில் சந்தோஷத்தைத் தவிர வேறேதுமில்லை. ஆனால், ஒரே ஒரு குறை மட்டும் தீராமல் இருந்தது. தஸரதன் அனுபவித்த அதே குறைதான்! அவர்களுக்கு குழந்தை பாக்கியம் மட்டும் இன்னனும் கிட்டவில்லை. ராமேச்வரம் சென்று சொல்லியிருக்கும் அத்தனை பரிகாரங்களையும் பண்ணியாயிற்று. பலன்தான் கிட்டவில்லை. இன்னும் ஏதேனும் வழி உண்டா எனத் தவித்தனர்.

பெரியவாளிடம் வந்தனர். பெரியவாளுக்கு மிகவும் நெருக்கமான அடியாராக இருந்த வித்யார்த்தி நாராயண சாஸ்திரி என்பவரிடம் முறையிட, அவரும் இவர்கள் சார்பாகப் பெரியவாளிடம் " சாஸ்திரத்தில் சொல்லியிருக்கும் அத்தனைப் பரிகாரங்களையும் இவா பண்ணிட்டா. ஆனா, பலன்தான் இல்லைன்னு வருத்தப்படறா" என வேண்டினார்.

தொலைவில் நின்றுகொண்டிருந்த அந்தப் பெண்ணை நோக்கினார் பெரியவா. " ஏண்டா அம்பி, அந்தப் பொண்ணு தலையுல கோண வகிடா எடுதுண்டிருக்கா?" என வினவினார்.

"ஆமாம், பெரியவா" என்றார் வித்யார்த்தி.

"தலைமயிரை நடுவகிடாத்தான் எடுக்கணும்.இதுக்கு 'ஸீமந்த'ன்னு
ஸம்ஸ்க்ருதத்துல பேரு. அவளுக்கு ஸீமந்தம் நடக்கணும்னா, அவ நடுவகிடு
எடுத்துக்கணும். கோணவகிடு எடுத்துண்டா எல்லாமே கோணலாத்தான் போயிடும். அவளை நடுவகிடு எடுத்து வாரிக்கச் சொல்லு" என்றார் பெரியவா.

அந்தப் பெண்ணும் அப்படியே செய்தாள். அடுத்த வருஷமே அவர்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.

பெண்கள் நேர்வகிடு எடுத்துக்கொண்டால் அவர்களது வாழ்க்கை நேராக அமையும் எனச் சொல்லாமல் சொன்னாரோ பெரியவா?

---- "தெய்வத்தின் முன்" - 'மஹா பெரியவாளுடனான நேரடி அனுபவங்கள்' முதல் தொகுதியில் வெளிவந்த ஒரு நிகழ்வு.

No comments:

Post a Comment