ஒரு சிறிய அலுவலகத்தில் வைத்து கட்சியை ஆரம்பித்த வேல்முருகன், இப்போது கடலூரில் பெரிதாக சீறிக் கிளம்பி இருக்கிறார்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் அரசியல் விழிப்பு உணர்வு (முதல் மாவட்ட) மாநாட்டை கடந்த மே 17-ம் தேதியே கடலூரில் நடத்த வேல்முருகன் முதலில் திட்டமிட்டார். கடலூரில் மஞ்சை நகர் மைதானம்தான் பெரியது. ஆனால் அங்கு கண்காட்சியும் சர்க்கஸும் நடந்து வந்ததால்... மாநாட்டைத் தள்ளி வைத்தார். அதன்பிறகு, 'ஜூன் 24-ம் தேதி மாநாடு நடக்கும்’ என்று நாள் குறிக்கப்பட்டது. 'தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் அரசியல் எதிர்காலத்தைத் தீர் மானிக்கும் மாநாடாக இது இருக்கும்’ என்று வேல்முருகன் ஆட்கள் சொல்லி வந்தார்கள். இதன்படி 24-ம் தேதி கடலூரில் கூடிய கூட்டம், அந்தக் கட்சி யினரை உற்சாகம் அடைய வைத்துள்ளது.
24-ம் தேதி காலை முதலே ஊருக்குள் கட்சி வாகனங்கள் வலம் வர ஆரம்பித்தன. மாலையில், மாநாட்டு நேரம் நெருங்கநெருங்க, கட்சித் தொண் டர்களின் கட்டுக்கடங்காத கூட்டம் மஞ்சை நகர் மைதானத்தில் மையம் கொண்டது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு 60அடி உயர கட் அவுட் வைத்திருந்தனர். மாநாட்டுத் திடலுக்கு, திலீபன் அரங்கம் என்று பெயர் சூட்டி இருந்தனர். இப்படி, மாநாடு மொத்தமும் புலிவாசம்!
கட்சியின் நிறுவனர் வேல்முருகன் இரவு 8.30 மணிக்கு மைக்கைப் பிடித்து, ''நஞ்சற்ற உணவு, நோயற்ற வாழ்வு, கடனற்ற வாழ்க்கை'' என்ற முழக்கத்தோடு பேச்சைத் தொடங்கினார். தொண்டர்களை உசுப்பேற்றும் வகையில் உணர்ச்சி பொங்கும் விதமாகவும், பா.ம.க-வைத் திட்டுவதாகவும்தான் வேல்முருகனின் பேச்சு எப்போதும் இருக்கும். ஆனால் இந்த முறை, அகில இந்திய அரசியலைப் பற்றியும், மாநில அரசியலைப் பற்றியும் பேசினார். கட்சியின் நிர்வாகிகள் தீரன், காவேரி, சண்முகம் போன்றவர்கள் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ராமதாஸை வன்மையாகச் சாடினர். அதற்கு வேல்முருகன், 'நாம் பா.ம.க-வைக் கண்டிப்பதற்காக இந்த மாநாட்டைக் கூட்டவில்லை. தமிழர்களின் நலன் காக்கத்தான் கூட்டி உள்ளோம்’ என்று விளக்கம் கொடுத்தார். மேடையை நோக்கி கூட்டம் நெருக்கியடித்ததைப் பார்த்து, 'நாம் எல்லோரும் ராணுவக் கட்டுப்பாடு கொண்டு, புலிகளின் கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும்’ என்று வேல்முருகன் சொல்ல... அதற்கும் பயங்கர விசில்.
''கட்சி ஆரம்பித்த ஆறு மாதத்தில் எத்தனையோ வழக்குகளை சந்தித்து உள்ளோம். யாருடனும் போட்டி போட நாம் கட்சி ஆரம்பிக்கவில்லை. சாதிச்சண்டை, மதச்சண்டை, வன்முறை இல்லாத தமிழகமாக மாற்றத்தான் இந்தக் கட்சியைத் தொடங்கி உள்ளோம். இது சாதிக் கட்சி அல்ல. தமிழர்களை ஒருங்கிணைத்து அவர்களின் வாழ்வுரிமையைப் பெற்றுத் தரத்தான் இந்தத் தமிழர் வாழ்வுரிமை கட்சி. கட்சியின் செயல்பாடானது ஊழல்வாதிகளுக்கும், கல்விக் கொள்ளையர்களுக்கும், சிங்கள வெறியர்களுக்கும் எதிராகப் போராட்டங்களை முன் நிறுத்தும்.
தானே புயலால் பாதிக்கப்பட்ட போது மத்திய, மாநில அரசுகள் நம் மக்களைக் கண்டு கொள்ள வில்லை. அதனால், அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் சாகும்வரை உண்ணா விரதம் அமர்ந்தேன். தன் இனத்தைக் காக்க கன்னடத்தானுக்கும், மலையாளிகளுக்கும் இருக்கும் உணர்வில் பாதிகூட தமிழனுக்கு இல்லை'' என்றவர்... இலங்கை விவகாரம், டாஸ்மாக் கலாசாரம், சினிமா மோகம் என்று சாடிவிட்டு... ''ராமதாஸ் செய்தது போல் நான் செய்ய மாட்டேன். ஒருபோதும் உங்களைக் கைவிட மாட்டேன்'' என்று வாக்குறுதி கொடுக்கவும் தவறவில்லை.
''தமிழர்கள் நலன் காத்ததில் வன்னிக் காட்டுக்கும், சந்தனக் காட்டுக்கும் வர லாற்றில் தனிஇடம் உண்டு. அதுபோல் வரும் காலத்தில், இந்த முந்திரிக்காடும் இடம் பிடிக்கும்'' என்று
'பஞ்ச்' வைத்தார்.
No comments:
Post a Comment