Thursday, June 21, 2012

ஏழு கன்டெய்னர்களுக்குள் இருப்பது என்ன? அள்ள அள்ளக் குறையாத நித்தி மர்மங்கள்!


ரு வழியாக, நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த நித்தியானந்தா, சமத்துப் பிள்ளையாக மதுரையில் போய் ஒளிந்து கொண்டார். ஆனால், பிடதியில் அரங்​கேறி வரும் கர்நாடக அரசின் அதிரடி​களைப் பார்த்தால்,  எந்த நேரத்திலும் நித்தி மீண்​டும் வளைக்கப்படலாம்! 
மைசூர் சலோ!
பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்ததாக, நித்தி மீண்டும் கைதான சம்பவத்தைத் தொடர்ந்து நடந்ததை கர்நாடக போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டோம். ''எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கும் நித்தி, மீண்டும் கைது செய்யப்பட்டதும் செம டென்ஷன் ஆகிவிட்டார். அவருக்கு 19-ம் எண் செல் தயாராக இருந்தது. 'ஏன் என்னைத் தேவை இல்லாமல் அலைக்கழிக்கிறீர்கள்? உங்களுக்கும் கர்நாடக அரசுக்கும் நான் என்ன பாவம் செய்தேன்?’ என்று போலீஸுடன் ஆக்ரோஷமாக சண்டை போட்டார். பிடதி ஆசிரமத்தில் இருந்து வந்திருந்த புளியோதரை, சப்பாத்தியையும் சாப்பிடவில்லை. நாங்கள் கொடுத்த உணவையும் சாப்பிடவில்லை. 15-ம் தேதி மதியத்தில் இருந்து 16-ம் தேதி இரவு வரை எதுவும் சாப்பிடவே இல்லை. கையோடு கொண்டு வந்திருந்த பூஜைப் பொருட்களை எடுத்து வைத்து, ஈரத் துணியோடு தியானத்தில் இருந்தார். அதன் பிறகும் தூங்கவில்லை.
'நீங்க இப்படிச் சாப்பிடாமல் இருந்தால், தற்கொலை முயற்சி வழக்குப் போட வேண்டி இருக்கும்’ என்று மிரட்டிய பிறகு தான் தண்ணீர் குடித்தார். மறுநாள் காலை தன்னுடைய வக்கீல்களைச் சந்தித்து, கர்நாடக அரசு மீதும், அதிகாரிகள் மீதும், போலீஸ் மீதும் என்னென்ன வகையில் வழக்குகள் போட வேண்டும் என்று லீகல் பாயின்ட்களோடு டிப்ஸ் கொடுத்தார். அவர் அத்தனை விவரமாகப் பேசியது எங்களுக்கே ஆச்சர்யம்தான்'' என்றார்.
எல்லாமே மதுரைதான்!
மறுநாள் காலையில் நீதிபதி ஸ்ரீராம் ரெட்டி முன்னிலையில் ஆஜரான நித்தி, 'பிடதியில் பொதுஅமைதிக்கும், சட்டம் ஒழுங்குக்கும் குந்தகம் விளைவிக்க மாட்டேன்’ என்ற உறுதிமொழிப் பத்திரத்தை எழுதிக் கொடுத்தார். 'சாட்சிகளைக் கலைக்கக் கூடாது. வழக்கு சம்பந்தமானவர்களை சந்​திக்கக் கூடாது. பிடதியில் ஓர் ஆண்டுக்கு எந்தப் பிரச்னையும் இருக்கக் கூடாது’ என்ற நிபந்தனைகளோடு ஜாமீன் வழங்கப்​பட்டது.
இதைத் தொடர்ந்து, இரவு 9.20 மணிக்கு மைசூர் சிறையில் இருந்து விடுதலை ஆனார். அவருக்காகத் தயாராக இருந்த காரில் ஏறிக்கொண்டார். பக்தர்களும் சீடர்களும் நான்கு சுமோக்களில் அணிவகுக்க, பாதுகாப்புக்காக கர்நாடக போலீஸும் உடன் கிளம்பியது. ''கர்நாடக அரசின் கோபம் குறையும் வரை பிடதிப் பக்கம் நித்தியானந்தாவின் பார்வை படாது'' என்கிறார்கள் அவரது பக்தர்கள்.
வழக்கு மேல் வழக்கு!
தன் முகத்தில் சேற்றைப் பூசியவர்களை பழிக்குப் பழி வாங்கியே தீர வேண்டும் என்ற வெறியில் நித்தியானந்தா இருக்கிறார். அதனால்தான் போலீஸ் கஸ்டடியில் இருந்தபோதே, தன்னுடைய வக்கீல் டீம் மூலமாக ஏகப்பட்ட வழக்குகளைப் பதிய வைத்தார் என்கிறார்கள். கர்நாடக முதல்வர் சதானந்த கவுடா மீது, 10 கோடி ரூபாய் மான நஷ்ட வழக்கு, தன்னை பிரச்னையில் சிக்க வைத்த சுவர்ணா சேனல் மற்றும் அதன் நிருபர் அஜீத் மீது கிரிமினல் வழக்கு, தன்னை ரவுடி போன்று நடத்திய காவல் துறை அதிகாரிகள் மீது வழக்கு, ரெய்டு என்ற பேரில் அத்துமீறிய ராம் நகர அதிகாரிகள் மீது வழக்கு, கல் எறிந்த கன்னட அமைப்பினர் மீது வழக்கு என்று ஏகப்பட்ட வழக்குகளை பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் நித்தி தரப்பில் பதிவு செய்து இருக்கிறார்கள்.
'என் மீதும், அரசின் மீதும் ஒன்றல்ல... நூறல்ல... ஆயிரம் வழக்குகள் போடட்டும். அத்தனையையும் சட்டப்படி அடித்து நொறுக்குவேன். கர்நாடக மக்களுக்காக சிறைக்குச் செல்லவும் தயார். ஆனால் கடவுளின் பேராலோ, கன்னடத்தின் பேராலோ அரங்கேறும் ஒழுங்கீனங்களை மட்டும் பொறுத்துக்​கொள்ளவே முடியாது’ என்று ஆயிரம் வாலா பட்டாசாக வெடித்து இருக்கிறார் கர்நாடக முதல்வர் சதானந்த கவுடா.
முடக்கப்பட்ட பிடதி!
ராம் நகர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீராம் ரெட்டி, துணை ஆட்சியர் அர்ச்சனா, வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பிடதியில் நடத்திய அதிரடி ரெய்டு, கடந்த வாரம் முழுக்கவே நீடித்தது. 18 அறைகளுக்கு சீல், தங்க வெள்ளிப் பொருட்கள் பறிமுதல், மூன்று முக்கிய லேப்டாப்கள், ஏராளமான சி.டி-கள் மற்றும் பல பொருட்கள் என்று ஏகமாக அள்ளப்பட்டு இருப்பதால், 'நித்திக்கு ஆப்பு நிச்சயம்’ என்று அவரது சீடர்களே அலறுகிறார்கள்.
இந்த ரெய்டில் சிக்கியவற்றைக் கொண்டும், என்னென்ன வழக்குகள் போடலாம் என்று அறிக்கை தயாரிக்கும் பணி முழுவீச்சில் நடந்து வ‌ருகிறது. ஆசிரமத்தின் உள்ளே இருக்கும் சீட‌ர்களையும், பொருட்களையும் எந்தக் காரணம்கொண்டும் வெளியேற போலீஸ் அனுமதிக்கவில்லை. அதேபோல் வெளியே இருந்தும் யாரும் அல்லது எதுவும் உள்ளே போகாதவாறு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு நீடிக்கிறது. ஆசிரமத்தின் அத்தனை அறைகளும் முடக்கப்பட்டு விட்டன. இதனால் ரொம்பவே நொந்துபோய் இருக்கும் நித்தி தரப்பு, பாதுகாப்பை விலக்குவதற்காகவும் நீதிமன்றத்தை அணுக இருக்கிறது.
நித்தி மீது நில வழக்கு!
இதுவரை பாலியல் புகாரில் மட்டுமே சிக்கிவந்த நித்திக்கு, 'விவசாய நில ஆக்கிரமிப்பு’ விவகாரம் புதிய தலைவலியாக மாறி இருக்கிறது. 22 ஏக்கர் பரப்பளவுகொண்ட பிடதி ஆசிரமம் முழுக்கவே விவசாய நிலம்தான். அதில் ஆங்காங்கே கட்டடங்கள் இருப்பதால், அரைகுறையாகவே வேளாண்​மை செய்யப்படுகிறது. அதனால், 'விவசாய நிலப் பட்டாவை வைத்துக்கொண்டு, தியான பீடம் என்ற பேரில் நித்தி கல்லா கட்டுகிறார்’ என்று மாவட்ட நிர்வாகம் சம்மன் அனுப்பி இருக்கிறது.  ராம் நகரின் கல்லுகோபனஹள்ளி கிராமத்திலும் பல ஏக்கர் விவசாய நிலத்தை ஆசிரமத்தின் பேரில் ஆக்கிரமித்து இருப்பதாகவும் புகார் கிளம்பி இருக்கிறது. விவசாய நிலப் பட்டாவில் உள்ள அத்தனை கட்டடங்களையும் இடித்துத் தள்ள மாவட்ட நிர்வாகம் தீவிரமாக யோசித்து​வருகிறதாம்.
பிசினஸ்மேன் நித்தி!
ஆசிரமத்தில் கைப்பற்றிய நித்தியானந்தாவின் வருமானங்கள் குறித்த ஆவணங்களைத் தீவிர​மாக விசாரித்து வருகின்ற‌னர், வருவாய்த் துறை அதிகாரிகள். அதில் நித்தியானந்தா வெளி​நாடுகளிலும், உள்நாட்டிலும் பல பிசினஸ் நிறுவ​னங்கள் நடத்துவது தெரிய வந்திருக்கிறது. ''இதுவரை ஆன்மிகவாதியாக மட்டுமே அறியப்பட்ட நித்தி, பிசினஸ்மேனும்கூட. அமெரிக்காவில் ‌தன்னுடைய சீடர் ஒருவரின் மூலமாக பல முதலீடுகளைச் செய்துள்ளார். அதிலும் குறிப்பாக 'நித்யானந்தா டெம்பிள் ஆர்ட்ஸ்’ என்ற பெயரில் இந்தியாவில் இருந்து சுவாமி சிலைகளையும், தங்க, வெள்ளி முலாம் பூசிய நகைகளையும், ருத்ராட்ச மாலைகளையும், காவி ஆடைகளையும் பல கோடி​களுக்கு ஏற்றுமதி செய்திருக்கிறார். மேலும் நித்தியானந்தா சங்கீத அகாடமியின் பெயரில் நாட்டியமும், சங்கீதமும் கற்றுக்கொடுத்து ஏராளமான வெளிநாட்டு பணத்தைக் குவித்திருக்கிறார்கள். இன்னும் பல நாடுகளில் உள்ள தன்னுடைய ஆசிரம நிர்வாகிகள் பெயரில், கோடிகளில் புரளும் பிசினஸ்களை நித்தியானந்தா நிர்வகித்து வந்​திருக்​கிறார் என்பதற்கான ஆவணங்கள் சிக்கி இருக்​கின்றன. இதுகுறித்து நித்தியானந்தாவை விசாரிக்க முடிவு செய்திருக்கிறோம்'' என்கிறது அதிகாரிகள் தரப்பு.
ஆன்மிகத்தின் மூலம் 90 கோடி!
''விதவிதமான பெயர்களில் வெளிநாடுகளில் நடத்திய வகுப்புகள் மூலமாகத்தான், நித்தியானந்​தாவுக்கு கோடிக்கணக்கில் பணம் கொட்டி இருக்கிறது. நித்தியானந்தா தியான பீட டிரஸ்ட், நித்தியானந்தா தியான பீடம், நித்தியானந்தா ஃபவுண்டேஷன் உள்ளிட்ட 11 வங்கி கணக்குகளுக்குப் பணம் வந்துள்ளது. அதிலும் குறிப்பாக இன்னர் அவேக்னிங், குண்டலினி, லைஃப் ப்ளஸ் இன்ஜினீயரிங், ஹீலீங், நித்ய தியானம், நித்ய‌ யோகா, நித்ய கார்ப்பரேட் லீடர்ஷிப் கோர்ஸ் என்று ஏகப்பட்ட ஆன்மிக வகுப்புகளை நடத்தி இருக்கிறார். இந்த வகுப்புகளில் சேருவதற்கு, இந்திய மதிப்பில் ஒருவருக்கே பல லட்சங்கள் வரை வசூலிக்கப்பட்டுள்ளது. 2009-ம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து மட்டும் சுமார் 90 கோடி ரூபாய் வரை வந்துள்ளது என்றால் உலகம் முழுவதும் இருந்து எவ்வளவு வந்திருக்கும் என்று பார்த்துக்கொள்ளுங்கள்'' என்கிறார்கள் வருவாய்த் துறை அதிகாரிகள்.
கன்டெய்னர் மர்மங்கள்
ஆசிரமத்தில் சீல் வைக்கப்பட்டு இருக்கும் கன்டெய்னர்களில் என்ன இருக்கிறது என்று விசாரித்தோம்.''முதலில் மூன்று கன்டெய்னர்களை மட்டுமே கண்டுபிடித்தோம். இப்போது மேலும் நான்கு கன்டெய்னர்களைக் கண்டுபிடித்து இருக்கிறோம். அதற்குள் என்ன இருக்கிறது என்று சீடர்களிடம் விசாரித்தால், முன்னுக்குப்பின் முரணான தகவல்களையே சொல்கிறார்கள். நித்தியானந்தாவிடம் விசாரித்த போது, 'அதில் தங்க, வெள்ளி முலாம் பூசப்பட்ட  சிலைகளும், பூஜைப் பொரு​ட்களும் இருக்கின்றன. சூலம், வேல், கிரீடம் போன்ற பல பொருட்கள் இருக்கின்றன. மழை, வெயில் படாமல் பத்திரமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே கன்டெய்னர்களை வாடகைக்கு எடுத்திருக்கிறோம்’ என்று சொன்​னார். துபாய் உள்ளிட்ட‌ பல நாடுகளில் இப்போது கோயில் கட்டும் பணியில் மும்முரமாக இருக்கிறார் நித்தி. அந்த நாடுகளுக்கு சுவாமி சிலைகளை அனுப்பத்தான் கன்டெய்னர் பயன்படுகிறது என்பதை, தீவிர விசாரணையில் கண்டுபிடித்திருக்கிறோம். அனுமதி பெறாமல் சிலைகளை மற்ற நாடுகளுக்குக் கடத்துவதற்குக் கன்டெய்னர் பயன்பட்டதா என்பதையும் விசாரிக்கிறோம். மேலிட உத்தரவுக்காகக் காத்​திருக்​​கிறோம். ஆர்டர் வந்த உடன் கன்​டெய்னர் மர்மம் வெளி​யாகி​விடும்'' என்கிறார்கள்.
ஆசிரமத்துக்கு சீல்?!
'ஆசிரமத்துக்குத் தற்காலிகமாக சீல் வைக்கப்படும் என்று கடந்த 11-ம் தேதி கர்நாடக முதல்வர் சதானந்த கவுடா அறிவித்தார். ஆனால், இதுவரை சீல் வைக்கவில்லை. ஆனால், ரெய்டு மட்டும் தொடர்கிறது. கர்நாடக அரசின் மீது ஏகப்பட்ட வழக் குகளைப் போட்டி​ருக்கும் நித்தி மீது, முதல்வரைக் காட்டிலும் சட்டத்துறை அமைச்சர் சுரேஷ்குமாருக்குக் கடும் கோபம். அதனால் ரெய்டு, சோ​தனை​களின் இறுதிஅறிக்கை நித்திக்கு பாதகமாகத்தான் இருக்கும் என்கிறார்கள். எந்த நேரமும் நித்தி யானந்தா ஆசிரமம் நிரந்தரமாக சீல் வைக்கப்படலாம்... கைதும் செய்யப்படலாம்.
'தன்னுடைய சொத்துக்களை எல்லாம்விட்டு ரோட்டுக்கு வரத்தயார்’ என்று மற்ற ஆதீனங் களுக்கு சவால் விட்டார் நித்தி. நிஜமாகவே அது நடந்து விடும் போல் தெரிகிறது!

No comments:

Post a Comment