Thursday, June 28, 2012

அன்பு! - அருள்வாக்கு


அன்புதான் பக்தி. பல தினுஸான அன்புகளில் ரொம்ப உசந்ததாக ஈச்வரனிடம் வைக்கும் அன்பே பக்தி. கண்ணுக்கு இன்பமளிக்கும் ரூபம், மனஸுக்கு இன்பமளிக்கும் குணங்கள் கொண்ட ஸகுண மூர்த்தியிடம் அன்புருவான பக்தி வைப்பதென்றால் ஸுலபமாக முடிகிறது. ஆனால் ரூபமே கிடையாது. மனஸுக்கும் பிடிபடாது என்று இருக்கும் நிர்குண பரமாத்மாவிடம் அன்பு வை என்றால் எப்படி என்று தோன்றலாம்.

நம் நிலையில் அது முடியாமல் இருக்கலாம். இருந்து விட்டுப் போகட்டும். நமக்குண்டான மட்டில் ஒரு ஸாகார மூர்த்தி, பூஜை, கேஷத்ராடனம் என்று பண்ணி விட்டுப் போவோம். ஆனால் பண்பட்ட (பண்பட்ட என்பது நல்ல வார்த்தை; யோசித்தால்தான் வருகிறது! பண்பட்ட) ஸாதகர்களால் நிராகாரத்திடமும் நிர்குணத்திடமுங்கூட அன்பு வைக்க முடியும். ஏனென்றால் அந்த ஸ்டேஜில் எதனிடம் அன்பு என்றோ - அந்த எதுவோ ஒன்றிடம் நல்ல ரூபம், குணம், லீலை என்றெல்லாம் இருப்பதே அதனிடம் நமக்கு அன்பை உண்டாக்கும்; இப்படி ஒன்று வெளியில் இருந்தாலே அதன் பொருட்டாக நம்மிடம் அன்பு உண்டாகும்; இல்லாவிட்டால் இல்லை என்றோ - விஷயம் போகாமல் தானாகவே ஸ்வாபாவிகமாக அன்பு உண்டாக முடியும். முடியக் கூடிய அதை வாஸ்தவமாகவே ஸாதிக்காவிட்டால் அந்தப் பண்பட்ட நிலையிலேகூட அத்தனை ஸாதனையும் அஹங்காரத்தில் போய் முட்டிக் கொண்டு முடிந்துவிடும்.

அன்பு என்பது என்ன? ஒரே பரமாத்மாதான் எல்லா உயிர்களுமாக ஆகியிருக்கிறது. பல உயிர்களாகும்போது ஒன்றையொன்று வேறுபடுத்தி வைத்து மாய ப்ரபஞ்ச நாடகம் நடக்கிறது. இதிலேயே எதிர் டைரக்ஷனில், ரொம்பவும் உத்தமமான அம்சமாக, வேறுபட்டவற்றை ஒன்றாக ஐக்கியப்பட வைக்கவும் பரமாத்மா அனுக்ரஹத்திலிருக்கிற forceதான் அன்பு. பொதுவாக மற்றவரிடமிருந்து நமக்கு ஒன்றைப் பெற்று லாபமடைவதாகவே மனுஷ்ய மனப்பான்மை இருக்கும். அதற்கு எதிர் மருந்தாக நம்மை இன்னொருவருக்குக் கொடுத்து அதில் நிறைவு பெறச் செய்வது அன்பு.

- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

No comments:

Post a Comment