Saturday, June 16, 2012

நித்தி ராஜ்ய மர்மங்கள்! விடிய விடிய நடந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்..


காவி உடைகளால் நிரம்பிக் கிடந்த பிடதி ஆசிரமம் இப்போது காக்கி கூடாரமாக ஆகிவிட்டது!  ஆசிரமத்தின் மெயின் கேட் தொடங்கி, மேற்கு மற்றும் கிழக்கு நுழைவாயில்களிலும் நூற்றுக் கணக்கான போலீஸ் நிற்கிறது. ஆசிரமத்தின் 24 மணிநேர நடவடிக்கைகளும் அப்படியே பதிவு செய்யப்படுகிறது. பதிலுக்கு நித்தி தரப்பிலும் வீடியோ பதிவு நடக்கிறது. குறிப்பாக அத்துமீறும் காவல் துறையையும், கன்னட அமைப்புகளையும் மடக்கி மடக்கி படம் எடுக்கிறார்கள் நித்தியின் சீடர்கள்! 
கடந்த 11-ம் தேதி காலை கர்நாடக முதல்வர் சதானந்தா கவுடா, 'ஆசிரமத்துக்குத் தற்காலிகமாக சீல் வைக்கப்படும்’ என்று அறிவித்த உடனே ராம்நகர மாவட்ட ஆட்சியர் ஸ்ரீராம ரெட்டி தலைமையில் துணை ஆட்சியர் அர்ச்சனா, மாவட்ட எஸ்.பி. அனுபம் அகர்வாலுடன் வருவாய்த் துறை அதிகாரிகளும் ஆசிரமத்துக்குள் நுழைந்தனர். அப்போது ஆசிரமத்தில் இருந்த 200 பேரையும் விசாரித்த‌ அதிகாரிகள், அடுத்து நித்தியின் அறையை சோதனை போட்டனர்.
''பெரிய லேசர் டி.வி., ஆறு இரும்பு பீரோக்கள், லாக்கர் பொருத்தப்பட்ட கட்டில், உடற் பயிற்சிக் கருவிகள் என்று படுஅமர்க்களமாக இருந்தது அவரது அறை. இதுவரை எட்டு இரும்பு பீரோக் களுக்கும், நான்கு முக்கிய அறைகளுக்கும் சீல் வைத் திருக்கிறோம். ஆசிரமம் முழுக்க பல அறைகளில் சோதனையிட இருப்பதால், இந்த வாரம் முழுவதும் இந்த நடவடிக்கை நீடிக்கும்'' என்றார் ராம்நகர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீராம ரெட்டி.
சிக்கிய கன்டெய்னர்!
ஆசிரம சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகளிடம் பேசினோம். ''ஆசிரமம் முழுக்கவே ஆவணங்கள்தான். அதுவும் ஆசிரமத்தின் முக்கியஸ்தர்களின் அறைகள், நித்தியின் அறையில் இருந்த பீரோக்களில் எல்லாமே முழுக்கவே‌ ஆவணங்களாகத்தான் இருக்கின்றன. அவரது அறையில் இருந்த கட்டில் லாக்கரில் சில முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினோம். அதில் சொத்துக்கள் மற்றும் நிதி வந்த விதம் குறித்து முழுத்தகவலும் இருக்கிறது. இவைதவிர, தங்கம், வெள்ளிப் பொருட்களையும் கைப்பற்றி இருக்கிறோம். ஆசிரமத்தில் மர்மமாக இருக்கும் மூன்று கன்டெய்னர்களுக்கு சீல் வைத்திருக்கிறோம். அவை இன்னமும் திறக்கப் படவில்லை. பிரச்னை நடந்த இரவு, ஆசிரமத்தின் பின்புறத்தில் மூன்று மூட்டை ஆவணங்கள் எரிக்கப் பட்டு இருக்கின்றன. அரைகுறையாக எரிந்த அந்த ஆவணங்களைக் கைப்பற்றி இருக்கிறோம்'' என்று சொன்னார்கள்.
சிக்கிய ஆணுறை, கஞ்சா, ஆபாச சி.டி-கள்!
பிடதி ஆசிரமம், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில்தான் அமைந்து இருக்கிறது. அந்த ஆசிரம காம்பவுண்ட் ஓரத்தில் பயன்படுத்திய ஆணுறைகளும், கஞ்சா, ஆபாச சி.டி-களும், காலி மதுப் புட்டிகளும், நித்தியின் புகைப்படங்களும், புத்தகங்களும் கிடந்ததாம். இவற்றைக் கைப்பற்றிய பிடதி போலீஸ், இதுகுறித்து ரகசிய விசாரணையைத் தொடங்கி இருக்கிறார்கள்.
இவைதவிர ஆசிரமத்தின் உள்ளே, பக்தர்களுக்கு முக்தி வழங்குவதற்காக வைத்திருந்த சில போதை மருந்துகளும் வெளிநாட்டு மது வகைகளும் சிக்கி இருக்கிறதாம். 'இது எல்லாமே எங்களைப் பிடிக்காத‌ கன்னட அமைப்புகள் செய்யும் திட்டமிட்ட சதி. எங்களை இங்கே இருந்து துரத்துவதற்காக எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க’ என்று அப்பாவியாகக் பேசுகிறார்கள் நித்தியின் பக்தர்கள்.
சரண்டர் சாமி...
காவல் துறை, ஆசிரமத்தில் சல்லடை போடுவதைக் கண்ட நித்தியானந்தா கடந்த 13-ம் தேதி, தன்னுடைய சீடர் அச்சிலானாந்தா மகா நித்தியானந்தா மூலமாக கர்நாடக  உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், 'எனக்கும் பிரஸ்மீட்டில் நடந்த சம்பவங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. வேண்டும் என்றே சில கன்னட அமைப்புகளும் என்னைப் பிடிக்காத சிலரும் என் மீது சேற்றை வாறி இறைக்கின்றன. அதற்கு கர்நாடக அரசும் துணை போகிறது. எனவே, பிடதி போலீஸ் என் மீது பதிவு செய்துள்ள எப்.ஐ.ஆரை ரத்து செய்ய வேண்டும்’ என்று கேட்டு இருந்தார். இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி சுபாஷ் பி.அடி, இதுகுறித்து ஜூன் 15-ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க க‌ர்நாடக அரசுக்கு உத்தரவிட்டார்.
நீதிமன்ற நிலவரங்களைக் குறித்துக் கொண்ட நித்தி, மதியம் 3 மணிக்கு ராம்நகர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராக முடிவெடுத்தார். அவர் மனதை அறிந்த மீடியாவும் கோர்ட்டை மொய்த்தது. மீடியாக்களைத் தவிர்க்க அவரும் காவல் துறையும் பலே நாடகம் போட்டார்கள். மீடியாவிடம், 'நித்தி மதுரையிலே ஆஜர் ஆயிட்டார். அங்கே போங்க’ என்று சொல்லி விரட்டுவதிலேயே குறியாக இருந்தனர். தான் தலைமறைவாக இருந்த இடத்தை, மீடியாக்கள் கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காக தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மூன்று மாநில ரிஜிஸ்ட்ரேஷன் கார்கள் அணிவகுக்க, கே.எல்.11 ஏஏ 9669 எண் கொண்ட கேரளா ரெஜிஸ்ட்ரேஷன் எண் கொண்ட ஸ்கோடா வெள்ளைக் காரில் வந்து இறங்கினார். உடனே பலரும், 'நித்தி கேரளாவில் இருந்தார்’ என்று கதை கிளப்பினார்கள். உண்மையில், மாண்டியாவில் இருக்கும் ஒரு பக்தரின் பண்ணையில்தான் இருந்தாராம்.
சாமரம் வீசலாமா?
நித்திக்காக கோர்ட் வாசலில் காத்திருந்த கர்நாடக போலீஸ், அவரைக் கைது செய்யாமல் பத்திரமாக கோர்ட்டுக்குள் அழைத்துச் சென்றது. தன் சீடர்களோடு உள்ளே போன நித்தி, ராம்நகர் மாவட்ட நீதிபதி கோமளா முன்னிலையில் சரண் டர் ஆனார். பத்திரிகையாளர்களையும், கன்னட அமைப்பினரையும் தாக்கிய வழக்கில் ஜாமீன் கோரி தன் வக்கீல் முத்து மல்லையா மூலமாக மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், 'தன்னை நிபந்தனை இல்லா ஜாமீனில் உடனடியாக விடுவிக்க வேண்டும். இது சாதாரணக் குற்றச்சாட்டு என்பதால் போலீஸ் கஸ்டடிக்கு அனுப்பக் கூடாது’ என்று தெரிவித்து இருந்தார். நித்தியின் வருகையால் கோர்ட்டில் ஏகக்கூட்டம். அதனால் குற்றவாளிக் கூண்டில் நின்ற நித்திக்கு, ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போதிய காற்று வரவில்லை. வியர்த்தது. 'சாமரம் வீசலாமா சாமி?’ என்று நித்தியைக் கேட்டபடி நின்றார்கள் சீடர்கள்.
அட்வான்ஸ் அப்ளிகேஷன், சரண்டர் அப்ளிகே ஷன், பெயில் அப்ளிகேஷன் மூன்றையும் தாக்கல் செய்து முடிப்பதற்குள், காவல்துறை சார்பாக ஒரு நாள் போலீஸ் கஸ்டடி கேட்டனர். இதற்கு நித்தி தரப்பு வக்கீல் முத்து மல்லையா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். ஜாமீன் வழங்க போதிய நேரம் இல்லாததால் நீதிபதி கோமளா, நித்தியானந்தரை  ஒரு நாள் போலீஸ் காவலில் அனுப்ப உத்தரவிட்டார். மந்தகாச சிரிப்போடு வெளியே வந்த நித்திக்கு எதிராக பொதுமக்கள் கோஷம் போட்டதை அவர் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.
விடிய விடிய விசாரணை!
ரகசிய இடத்துக்கு அழைத்துச் செல்வதாக கூறி நித்தியானந்தாவை, மாகடி போலீஸ் குவாட்டர்ஸுக்கு அழைத்துச் சென்றனர். 'தியானம் செய்ய வேண்டும்’ என்று நித்தி கேட்க அதற்கு நேரம் ஒதுக்கப்பட்டது. அதன்பிறகு கிடுகிடுவென கேள்விகளை வீசினார், ராம்நகர் மாவட்ட எஸ்.பி. அனுபம் அகர்வால். அவருடைய கேள்விகளுக்குக் கொஞ்சமும் அசராமல் பதில் கொடுத்த நித்தியை போலீஸாரே ஆச்சர்யமாகப் பார்த்தார்களாம். ஒரு கட்டத்தில் வழக்குக்கு சம்பந்தம் இல்லாத கேள்விகளை போலீஸ் கேட்கத் தொடங்கவே, 'பத்திரிகையாளர்களைத் தாக்கிய வழக்கில்தானே கைதாகி இருக்கிறேன். அதுதொடர்பாக மட்டும் கேட்கலாமே?’ என்று கன்னடத்தில் நித்தி பேசியதை காவல்துறையினரும் ரசித்தார்களாம். அதன்பிறகு, அங்கே போதிய இடவசதி இல்லாத காரணத்தால், சென்னப்பட்டினம் போலீஸ் டிரெய்னிங் சென்டருக்கு நித்தியை அழைத்துச் சென்றுள்ளனர். அங்கேயும் விடிய விடிய விசாரணை நடந்ததாம்.
நஷ்ட ஈடு கேட்ட நித்தி!
மறுநாள் காலை 11 மணிக்கு, நித்தியை ராம்நகர் கோர்ட்டுக்கு அழைத்து வருவார்கள் என்பதால், காலை முதலே மீடியாவும் பொதுமக்களும் குவிந்திருந்தார்கள்.  நித்தியைப் படம் எடுக்க முடியாத இடத்தில் மீடியாக்களை நிறுத்தினர் போலீஸ். 11 மணியைத் தாண்டியும் நித்தி வரவில்லை. விசாரித்துக் கொண்டு இருந்த  எஸ்.பி. அனுபம் அகர்வாலிடம், 'கோர்ட்டுக்குப் போகலாமே?’ என்று நித்தியானந்தாவே, கேட்டாராம். அதற்கு எஸ்.பி., 'நேற்று மதியம் 3 மணிக்குத்தான் விசாரணைக்கு எடுத்தோம். அதனால் இன்று மதியம் 3 மணி வரை நேரம் இருக்கிறது’ என்று சொன்னாராம். எனவேதான் வருகை தாமதம் ஆனது.
ராம்நகர் கோர்ட்டில் நித்திக்கு ஜாமீன் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்துகொண்டு இருக்கையில், தன்னுடைய சீடர் மூலமாக பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் கர்நாடக முதல்வர் சதானந்த கவுடாவுக்கு எதிராக ஒரு மான நஷ்ட வழக்கைப் போட்டுள்ளார் நித்தியானந்தா. அதில், 'செய்தியாளர்களைத் தாக்கிய வழக்கில் கர்நாடக முதல்வர் சதானந்த கவுடா தன்னை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் ஆசிரமத்தை சீல் வைக்க வேண்டும் என்றும் தன்னுடைய அதிகாரத்துக்கு அப்பாற்பட்டு செயல்பட்டார். அப்படி ஒரு முடிவை நீதித்துறை மட்டுமே எடுக்க முடியும். இதனால் எனது புகழுக்கும், என் கோடிக்கணக்கணக்கான பக்தர்களுக்கும் களங்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் எங்களுக்கு மன உளைச்சலும், ஆசிரமத்தின் பணிகளும் முடங்கி போய் இருப்பதால் அவற்றை சரிசெய்ய 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும்’ என்று குறிப்பிட்டு இருக்கிறார். இந்த விவகாரம் கன்னட மீடியாக்களில் ஒளிபரப்பானதைக் கண்டு முகம் சிவந்தாராம் முதல்வர் சதானந்தா. 'போலீஸ் கஸ்டடியில் இருந்து கொண்டே என் மீது வழக்குப் போடுகிறாரா?’ என்றாராம் கர்நாடக முதல்வர்!
பிடதிக்குப் போகாதே!
முதல் நாள், கூட்டத்தில் மாட்டிக் கொண்டதால், இந்த முறை நித்தியை மிகவும் பாதுகாப்பாக களம் இறக்கியது போலீஸ். அதுவும் சென்னப்பட்டினத்தில் இருந்து வஜ்ரா வேனில் அழைத்து வந்தவர்கள்,  மீடியாக்களின் வெளிச்சத்தில் படாமல் நித்தியை மறைத்து கோர்ட்டுக்குள் கொண்டு போனார்கள். அதைக் கண்டு மீடியாக்கள் கூச்சல் போடவே, கோர்ட் படியில் ஏறிய நித்தி பின்னால் திரும்பி சந்தோஷமாக கை அசைத்தார். பத்திரிகையாளரைத் தாக்கியதாக பதிவான இரண்டு வழக்கிலும், 'பிடதியில் 144 ஊரடங்கு அமலில் இருப்பதால் அங்கு போகக்கூடாது’ என்ற நிபந்தனையோடு நித்திக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. வெளியே வந்த நித்தி உடனே வேனுக்குள் பாய இருந்தார். ஆனால், மீடியா போட்ட கூச்சல் காரணமாக ராம்நகர் எஸ்.பி. அனுபம் அகர்வால், நித்தியின் தோளைப் பிடித்து இழுத்து மீடியா பக்கம் திருப்பினார். உடனே மீடியாவுக்கும் வக்கீல்களுக்கும் பொதுமக்களுக்கும் குனிந்து, குனிந்து வணங்கி விட்டு வஜ்ராவில் ஏறிப் போனார் நித்தியானந்தா.
மீண்டும் கைதான நித்தியானந்தா!
அடுத்த அரை மணிநேரத்தில் இன்னொரு ஆப்பு தயாராக இருந்தது. இதை அறியாமல் பிடதியில் பக்தர்கள் ஆனந்தக் கூத்தாடினார்கள். நித்தியை வரவேற்க வந்த ஆசிரமக் காரில் நித்தியை ஏறவிடாமல், மீண்டும் போலீஸ் வேனில் ஏற்றிய காவல்துறை, ராம்நகர் கலெக்டர் ஆபிஸுக்கு நித்தியைக் கொண்டு சென்றது. தன்னிடம் ஸ்டேட்மென்ட் வாங்குவதற்காக அழைத்து வந்து இருக்கிறார்கள் என்று நினைத்தார் நித்தி.
அப்போது கலெக்டர் ஸ்ரீராமரெட்டி, ''பிடதியில் பொது அமைதிக்கு பாதகம் ஏற்படுத்தியதால், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 105, 151 ஆகிய பிரிவுகளின் கீழ் உங்களைக் கைது செய்கிறோம்'' என்று சொன்னார். அதுவரை சிரித்து கொண்டே இருந்த நித்தியின் முகம் சட்டென்று சுருங்கிப் போனது. ''ஸ்டேட்மெண்ட் எழுதிக் கொடுங்கள் என்று அழைத்து வந்து, கைது என்றால் எப்படி?'' என்று கலெக்டருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் நித்தி. ஆனால், கலெக்டர் தனக்குள்ள அதிகாரத்தைத் தெளிவாக விளக்கவே, சட்டென தரையில் அமர்ந்து கொண்டார் நித்தி. அதனால் திணறிப்போன காவல் துறை, ஒரு வழியாக கைது செய்து அழைத்துப் போனது.
'முதல்வர் மீது மான நஷ்ட வழக்கு போட்ட விஷயம்  வெளியானதும், மேலிடத்தில் இருந்து கலெக்டருக்கு ஆக்ரோஷமான உத்தரவு வந்ததாம். அதனால்தான் கைது செய்ய கலெக்டர் உத்தரவு போட்டார்’ என்று சொல்கிறார்கள் கர்நாடக தலைமைச் செயலக வட்டாரத்தில். சதானந்த கவுடாவுடன் நேரடியாக நித்தி மோதத் தொடங்கி இருப்பதால், பூகம்ப அதிர்வுகள் பலமாகத்தான் இருக்கும்.!

 ''என்னத்தைச் சொல்ல?'' 
மனவருத்தத்தில் மதுரை ஆதீனம்
 கடந்த இரண்டரை மாதங்களாக நியூஸ் சுரங்கமாகவும் டென்ஷன் சென்டராகவும் திகழ்ந்த மதுரை ஆதீனம் இப்போது கப்சிப்!
நித்திக்கு எதிராக ஆதீன மீட்புக் குழுவினர் கடும் போராட்டம் நடத்திவந்த போதிலும், மதுரை ஆதீன விவகாரத்தில் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்து வந்தது. ஒரு கட்டத்தில், நித்தியானந்தா மதுரை மீனாட்சியம்மன் கோயில் அர்த்த மண்டபத்துக்குள் நுழைந்தபோது சர்ச்சை ஏற்பட்டதால், தன்னைப் போலவே இளைய ஆதீனமான நித்தியானந்தாவுக்கும் உரிய மரியாதை கொடுக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத் துறைக்கு கடிதம் எழுதினார் அருணகிரி. கடந்த 5-ம் தேதி மீனாட்சியம்மன் கோயிலில் நடந்த திருஞானசம்பந்தர் குரு பூஜை விழாவின்போது, நித்தியானந்தாவுக்கும் கோயில் சார்பில் உரிய மரியாதை அளிக்கப்பட்டது. இதனால், நித்தியானந்தாவின் நியமனத்தை தமிழக அரசு மறைமுகமாக ஏற்றுக்கொண்டதாகவே கருதப்பட்டது. பெங்களூருவில் உள்ள நித்தியின் மடத்தில் போலீஸ் ரெய்டு நடந்தபோது, மதுரை ஆதீனத்துக்கு தமிழக போலீஸார் பாதுகாப்பு கொடுத்தார்கள்.
எப்போதும் திறந்திருக்கும் மதுரை ஆதீனத்துக்கு நித்தியின் சீடர்கள், கடந்த 11-ம் தேதி உள்பக்கமாகப் பூட்டுப் போட்டார்கள். வெளியே கர்நாடக ரிஜிஸ்ட்ரேஷன் என்ட்ரோவர் கார் நிற்பதைப் பார்த்த ஆதீன எதிர்ப்பாளர்கள், 'நித்தியானந்தா உள்ளேதான் பதுங்கி இருக்கிறார்’ என்று கிளப்பி விட்டார்கள். இதைஅடுத்து கர்நாடக போலீஸார் மதுரை ஆதீனத்துக்குள் வந்து, அவரைத் தேடினார்கள். அதன்பிறகே, அவர் அங்கு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
தொடர்ந்து பூஜைகள் நடக்கத்தான் செய்கின்றன என்று ஆதீனத் தரப்பில் சொல்லப்பட்டாலும், அங்கே முறைப்படி பூஜை செய்யவே ஆள் இல்லையாம். பிரச்னை பெரிதானதும், நித்தியின் ஆண், பெண் சீடர்கள் பலர் மடத்தில் இருந்து வெளியேறி விட்டார்கள். தொடர்ந்து மடத்தில் இருந்தவர்களையும் கர்நாடக போலீஸ¨க்குப் பயந்து, அவர்களது பெற்றோர்களே வீட்டுக்கு வருமாறு வற்புறுத்தத் தொடங்கி விட்டனர். அப்படியிருந்தும் பி.இ. பட்டதாரியான ராகவன் வெளியேற மறுத்ததால், அவரை மீட்டுத் தரக்கோரி அவரது பெற்றோர் மதுரை விளக்குத் தூண் போலீஸில் புகார் செய்தனர். 'ராகவன் மேஜர் என்பதால், அவரைக் கட்டாயப்படுத்த முடியாது. அவரை யாராவது தடுத்தால்தான் நடவடிக்கை எடுக்க முடியும்’ என்று போலீஸார் கையை விரித்து விட்டார்கள்.
தனது பணியாட்களில் பலர் விலகிச் சென்று விட்டதால், தனிமைச் சிறையில் இருப்பதைப் போல் கவலையில் இருக்கிறாராம் பெரியவர். பத்திரிகையாளர்களோடு எப்போதும் நட்பாக இருக்கும் அருணகிரிநாதரை, இப்போது யாரும் தொடர்புகொள்ள முடியவில்லை. எப்போதாவதுதான் போனை அவர் எடுக்கிறார். அப்படி அவரிடம் பேசிய நெருக்கமான நிருபரிடம், ''என்னத்தைச் சொல்ல... பொறுமையாக இருப்போம்'' என்றாராம் அருணகிரி.
''இளைய ஆதீனத்தை நியமிக்கும் அதிகாரம் இருப்பதுபோல், நீக்குவதற்கும் உங்களுக்கு அதிகாரம் இருக்கிறதா?'' என்று அருகில் இருந்தவர் கேட்டபோது 'அதிகாரம் இருக்கிறது. ஆனால் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. நீதிமன்றத்தில் என்ன முடிவு வருகிறது என்று பார்ப்போம். அதுவரையில் பொறு மையாக இருப்போம்'' என்று சோர்வான குரலில் சொன்னாராம் அருணகிரிநாதர்.
ஏற்கெனவே மதுரை ஆதீனம் தொடர்பாக கோர்ட்டில் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றொரு புதுமையான வழக்கு இப்போது தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரை டி.வி.எஸ். நகரைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் தாக்கல் செய்துள்ள அந்த மனுவில், 'நான் நித்தியானந்தாவின் மாறுபட்ட வழிபாட்டு முறைகளைக் கண்டு அவரது சீடனாக மாறினேன். ஜூன் 11-ம் தேதி மாலை அவரைத் தரிசிக்க மடத்துக்குச் சென்றபோது அங்கிருந்த சீடர்கள், 'நித்தியானந்தா எங்கே இருக்கிறார் என்று எங்களுக்குத் தெரியாது’ என்று கூறி வெளியே விரட்டினர்.  அதே நாளில் அவர் அருணகிரிநாதருடன் சேலத்தில் இருந்ததாக எனக்குத் தகவல் கிடைத்தது. நித்தியானந்தாவை, அருணகிரிநாதர் சட்டவிரோதமாக அடைத்து வைத்திருப்பதாகத் தெரிகிறது. அவரை மீட்டு ஆஜர்படுத்துமாறு போலீஸுக்கு உத்தரவிட வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment