Saturday, June 16, 2012

எனது இந்தியா! (வணிகர்களின் கடற்கொள்ளை ) - எஸ். ராமகிருஷ்ணன்....


இந்திய அச்சுக் கலையின் வரலாற்றில் போர்த்துக்கீசியர்கள், பிரெஞ்சு மற்றும் டேனிஷ்​காரர்​களுக்கு முக்கியப் பங்கு உண்டு. ஹென்றி கே ஹென்றீக்ஸ் என்ற போர்த்துக்கீசியப் பாதிரியார் அச்சிட்டு, கொல்லத்தில் 1577-ம் ஆண்டு வெளியிடப்பட்ட 'தம்பிரான் வணக்கம்’ என்ற புத்தகமும்... 1715-ல் தரங்கம்பாடியில் பர்த்தலோம்யூ சீகன்பால்கு அச்சிட்டு வெளி​யிடப்​பட்ட பைபிளின் தமிழாக்கமான புதிய ஏற்பாடும் அச்சுக் கலை வரலாற்றில் மிக முக்கிய​மானவை.இந்திய மொழிகளில் முதன்முதலில் தமிழில்தான் புத்தகம் அச்சிடப்பட்டது.வாசனைப் பொருட்களைத் தேடி ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்கள், கடல் வழியாக இந்தியாவுக்கு வந்தார்கள். அதே காலகட்டத்தில், மிளகு, கிராம்பு போன்ற வாசனைப் பொருட்களை வாங்க இந்தியாவுக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் டென்மார்க்கிலும் உருவானது. 1615-ம் ஆண்டு ஜான்டி வில்கெம் என்ற வணிகரும் ஹெர்மன் ரோசன்கிரின்ட் என்ற வணிகரும் இணைந்து, நான்காம் கிறிஸ்டியன் மன்னரின் துணையோடு டேனிஷ் கடல் வணிகக் கம்பெனி ஒன்றைத் தொடங்கினர். இவர்கள் கடல் வழியாக 12 ஆண்டுகள் வணிகம் செய்துகொள்ள 1616-ம் ஆண்டு மார்ச் 17-ம் நாள் அரசு ஆணை வழங்கப்பட்டது. பல்வேறு வணிகர்களிடம் இருந்து நிதி திரட்டி கம்பெனி நடத்துவது என்ற அவர்களின் முடிவுக்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. தேவையான பணத்தைச் சேகரிப்பதற்குள் ஓர் ஆண்டு ஓடிப்போனது. முடிவில், கிறிஸ்டியன் அரசரின் துணையோடு கப்பல் பயணம் ஏற்பாடு ஆனது. கடல் வணிகத்தில் முன்அனுபவம் இருந்த ரோலண்ட் கிராஃப், இந்தக் கம்பெனிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டார். இதற்கிடையில், மார்சலெஸ் போஷவோர் என்ற வணிகர், கிறிஸ்டியன் மன்னரைச் சந்தித்து, தான் இலங்கை சென்று வந்ததாகவும் அங்கே கண்டி மன்னர் வணிகம் செய்வதற்கு முழு ஒத்துழைப்பு தருவார் என்றும் நம்பிக்கை ஊட்டினார். அதன்படி, 1618-ம் ஆண்டு டேனிஷ் - இலங்கை ஒப்பந்தம் கையெழுத்து ஆனது. இந்தியாவுக்குச் செல்ல ரீஜென்ட் என்ற கப்பல் தயாராக இருந்தது. 1618-ம் ஆண்டு ஆகஸ்ட் 18-ம் தேதி கடற்​பயணம் தொடங்கியது. அதன் கேப்டன் ரோலண்ட் கிராஃப்.

நவம்பரில் ஒவ்கிட்டி என்பவர் தலைமையில் மேலும் நான்கு கப்பல்கள் புறப்பட்டன. அப்போது, ஒவ்கிட்டிக்கு வயது 24. அவர்கள் நினைத்ததுபோல அந்தக் கடற்பயணம் எளிதாக இல்லை. 1619-ம் ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதி அவர்களின் கப்பல், கடற்கொள்ளையரின் தாக்குதலுக்கு உள்ளானது. இதில், ஏராளமானோர் இறந்தனர். முடிவில், ஆப்பிரிக்காவைச் சுற்றி மே 1620-ல் அந்தக் கப்பல் இலங்கைக்கு வந்து சேர்ந்தது.  கண்டி ராஜாவைச் சந்தித்த கிராஃப், வணிகம் செய்ய உதவும்படி கேட்டுக்கொண்டார். ஆனால், அந்த நாட்களில் போர்த்துக்கீசிய வணிகர்கள் இலங்கையை ஆக்கிரமித்து இருந்தனர். அவர்கள் டேனிஷ் வணிகர்களை அனுமதிக்க மறுத்தனர். தாங்கள் நினைத்தபடியே இங்கே வணிகம் செய்ய முடியாது என்று உணர்ந்த கிராஃப், அங்கே இருந்து புறப்​பட்டு தமிழகத்தின் நாகப்பட்டினம் அருகில் உள்ள தரங்கம்பாடிக்கு வந்து சேர்ந்தார்.இன்னொரு பக்கம், ஒவ்கிட்டி தனது கப்பல்களுடன் இலங்கைக்கு வந்துசேர்ந்து கண்டி அரசரிடம் திரிகோண​மலையில் தங்களின் வணிகக் கம்பெனிக்காக ஒரு கோட்டை கட்டிக்கொள்ள அனுமதி கேட்டார். அரசின் அனுமதி கிடைத்தவுடன் கோட்டை கட்டும் பணி தொடங்கியது. இதற்கிடையில், கண்டி அரசரின் ஆளாக இருந்த மார்சலெஸ் போஷவோர் இறந்துபோனதால் அரசின் முழுமையான ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கவில்லை. ஆகவே, ஒவ்கிட்டியும் அங்கிருந்து கிளம்பி தரங்கம்பாடிக்கு வந்து சேர்ந்தார். அப்போது, தரங்கம்பாடி சிறிய மீன்பிடிக் கிராமமாக தஞ்சை நாயக்கர்கள் ஆட்சியின் கீழ் இருந்தது.1620-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒவ்கிட்டி தஞ்சை நாயக்கர்களைச் சந்தித்தார். டேனிஷ் அரசருக்கும் அவர்களுக்கும் இடையில் ஓர் ஒப்பந்தம் செய்துகொள்ளலாம் என்று வேண்டுகோள் விடுத்தார். அதன்படி, டேனிஷ் கம்பெனிக்கும், தஞ்சை ரகுநாத நாயக்கருக்கும் ஒப்பந்தம் ஏற்பட்டது. தங்கத்தால் செய்த ஓலை வடிவத்தில் இந்த ஒப்பந்தப் பத்திரம் தமிழில் எழுதப்பட்டு இருக்கிறது. ரகுநாத நாயக்கரால் தெலுங்கில் கையெழுத்து இடப்பட்டிருந்தது. நாயக்கர் அளித்த இடத்தின் பரப்பளவு 8 கி.மீ. நீளம், 3 கி.மீ. அகலம். ஆண்டுக் குத்தகைப் பணம் ரூபாய் 4,000. அன்று முதல், தரங்கம்பாடி டேனிஷ் வசமானது.இதன் பிறகு, 1622-ல் ஒவ்கிட்டி டென்மார்க் திரும்பினார். அப்போது, தரங்கம்பாடி ரோலண்ட் கிராஃப் வசம் ஒப்படைக்கப்பட்டது. முதல் இரண்டு ஆண்டுகள் அவர்கள் எதிர்பார்த்தபடியே வாசனைத் திரவியங்களைக் கொள்முதல் செய்ய முடியவில்லை. இதற்கிடையே, 1621-ம் ஆண்டு தாய்லாந்துக்கு ஓர் கப்பலை அனுப்பி மிளகு வாங்கி வரச் செய்தனர். அந்த வணிகம் போட்டி இல்லாமல் இருந்த காரணத்தால், இந்தோனேஷியா நோக்கி அவர்களது வணிகப் பார்வை திரும்பியது. கிராம்பு, மிளகு மற்றும் வாசனைத் திரவியங்கள் என, கப்பல் கப்பலாக வணிகம் செய்யத் தொடங்கினர். இந்தப் புதிய வணிக முயற்சி அவர்களின் பொருளாதாரப் பின்னடைவைச் சரிக்கட்டியது. அதோடு, பிரிட்டிஷ் மற்றும் போர்த்துக்கீசிய வணிகர்களுக்குப் போட்டியாக இல்லாமல் நல்லுறவுகொண்ட கம்பெனிபோல தங்களைக் காட்டிக்கொண்டதால், டேனிஷ் வணிகம் பிரச்னைகள் அதிகம் இல்லாமல் நடந்தது. 1625-ம் ஆண்டு, மசூலிப் பட்டணத்தில் டேனிஷ் கம்பெனி புதிய மையத்தை உருவாக்கியது. அதைத் தொடர்ந்து, பீப்லி மற்றும் பலோஷர் என வங்காளத்தின் முக்கிய இடங்களிலும் அதன் கிளைகள் தொடங்கப்பட்டன. கட்டுக்குள் அடங்காத நிர்வாகச் செலவு மற்றும் முறைகேடுகள் காரணமாக, கம்பெனிக்குப் பற்றாக்குறை ஏற்பட்டது. 1627-ல் இந்தியாவில் இருந்து டென்மார்க்குக்கு மூன்று கப்பல்கள் மட்டுமே பொ​ருட்கள் ஏற்றிச் சென்றன. அத்துடன், பேசியபடி நாயக்கர்​களுக்கு ஒப்பந்தப் பணம் தரவும் அவர்களால் முடியவில்லை.1636-ல் ரோலண்ட் கிராஃப், டென்மார்க் திரும்பினார். அப்போது, கம்பெனியின் நிர்வாகத்தைக் கவனித்துக்​கொள்ள பேரென்ட் பெசார்ட் என்ற டச்சு வணிகரை நியமித்துவிட்டுப் போனார். இவர், கடல் வணி​கத்தில் அனுபவம் உள்ளவர் என்றபோதும் சுரண்டல் பேர்வழி, கம்பெனிப் பணத்தை மோசடி செய்​தவர் என்ற குற்றச்சாட்டுகளும் இவர் மீது இருந்தன. ஆனால், கிராஃப் அவரையே தலைமை நிர்வாகி​யாக நியமித்தார்.பெசார்ட் நிர்வாகம் செய்தபோது, கம்பெனிப் பணம் பெருமளவு சுருட்டப்பட்டது. மசூலிப் பட்ட​ணத்தில் மட்டும் 35,800 பகோடா பணத்தை அவர் சுருட்டி இருந்தார். ஆகவே, கம்பெனிக்குக் கடன் தொல்லை அதிகரித்தது. கடன் கொடுத்த வணிகர்கள் கப்பலை முடக்கினர். பெசார்ட்டின் சுரண்டல் டேனிஷ் கம்பெனியின் வணிகச் செயல்பாடுகளை முடக்கியது. அவரும், கடன் தொல்லைக்குப் பயந்து ஒளிந்து வாழ்ந்துவந்தார்.


இந்தச் சூழலில் அவரைக் கடன் தொல்லையில் இருந்து மீட்பதற்காக 1639-ம் ஆண்டு சோலன், கிறிஸ்டியன் சேவன் என்ற இரண்டு கப்பல்கள் டென்மார்க்கில் இருந்து புறப்பட்டன. இதில், சோலன்1640-ம் ஆண்டு தரங்கம்பாடிக்கு வந்து சேர்ந்தது. பெசார்ட்டால் ஏற்பட்ட கடனை அடைக்க என்ன வழி என்ற யோசனை உருவானது. ஆயுதம் தாங்கிய சோலன் கப்பலில் இருந்தவர்கள், கோல்​கொண்டாவைச் சேர்ந்த வணிகரான மீர்முகமது சையதுவின் கப்பலை நடுக்கடலில் மடக்கி கொள்ளை அடித்தனர். அதில் கிடைத்த பணத்தில் பெசார்ட்டின் கடன் அடைக்கப்பட்டது.1643-ல் கிறிஸ்டியன் சேவன் கப்பல், தரங்கம்பாடி வந்து சேர்ந்தது. தரங்கம்பாடி டேனிஷ் கம்பெனிக்குப் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட வில்லியம் லேயல், அந்தக் கப்பலில் வந்து இறங்கினார். இந்த நியமனத்தை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிய பெசார்ட், கம்பெனிக்குள் லேயல் நுழைய முடியாதபடி கதவுகளை மூடிப் போராட்டத்தைத் தொடங்கினார்.ஆனால், லேயல் தாக்குதல் நடத்தவே பெசார்ட் அங்கிருந்து உயிர் தப்பி, போர்த்துக்கீசியக் கப்பலில் ஒளிந்தார். ஓடும்போது துப்பாக்கிகளையும் அதுவரை இந்தியாவில் டேனிஷ் கம்பெனி வணிகம் செய்த எல்லா கணக்கு வழக்குப் பதிவேடுகளையும் தூக்கிச் சென்றுவிட்டார். இது, லேயலுக்கு மிகப் பெரிய சவாலாக இருந்தது. நெருக்கடியைச் சமாளிக்கக் குறுக்கு வழியை யோசித்தது டேனிஷ் கம்பெனி. அதன்படி, பணப் பற்றாக்குறையை போக்கிக்கொள்ள கோல்கொண்டா வணிகர்களை மிரட்டிப் பணிய​வைத்து, தங்களுக்குத் தேவையான பணத்தைப் பெற்றுக்​கொண்டது. அதோடு, கடற்கொள்ளையிலும் இறங்கியது டேனிஷ் கம்பெனி. சரக்கு ஏற்றிச் செல்லும் பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சுக் கப்பல்களைக் கொள்ளை அடித்து அதில் இருந்து கிடைக்கும் பொருட்களை விற்று வணிகம் செய்ய ஆரம்பித்தது. இதற்குப் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.இன்னொரு பக்கம், டேனிஷ் கம்பெனிநிர்வாகி​களுக்குள் பணப் பிரச்னை ஏற்பட்டு கலவரம் வெடித்தது. வீட்டுச் சிறையில் லேயல் அடைக்கப்​பட்டார். அவரிடம் இருந்த பணம் பறிமுதல் செய்யப்​பட்டது. இந்தக் கலகத்தைத் தூண்டியவர் பவுல் ஹன்சென் கோர்சலர். டேனிஷ் அரசு தலையிட்ட பிறகு, லேயல் விடுவிக்கப்பட்டு டென்மார்க்குக்கு அனுப்பிவைக்கப்பட்டார். பவுல் ஹன்சென் கோர்சலர் தலைமையில் டேனிஷ் கப்பல்கள் கடற்கொள்ளை​யைத் தொடர்ந்தன.1648-ம் ஆண்டு கிறிஸ்டியன் அரசர் மரணம் அடைந்தார். அதைத் தொடர்ந்து, புதிய மன்னராக மூன்றாம் ஃபிரடெரிக், டென்மார்க் அரசர் ஆனார். அப்போது, இந்தியாவில் இருந்த டேனிஷ் வணிகக் கம்பெனி பொருளாதாரச் சிக்கலில் மாட்டித் தத்தளித்துக்கொண்டு இருந்தது. 1650-ல் மன்னரும் மற்ற வணிகர்களும் சேர்ந்து டேனிஷ் வணிக நிறுவனத்தை மூடிவிடுவது என்று தீர்மானித்தனர். அதோடு, தரங்கம்​பாடியை விலைக்கு விற்கும் ஏற்பாடும் நடந்தது. ஆனால், விலை படியவில்லை. 1655-ல் பவுல் ஹன்சென் கோர்சலர் மரணம் அடைந்தபோது, கம்பெனி ஆட்களாக 50-க்கும் குறைவானவர்களே இந்தியாவில் மிஞ்சி இருந்தனர். இந்த நிலையில், வணிக் குழுவில் இருந்த சாமான்ய வீரனான ஹோன்ஸ்பெக்கி என்ற ஹாலந்துக்காரன், இந்தக் கம்பெனிக்குத் தானே தலைவன் என்று அறிவித்து, தரங்கம்பாடியைத் தனதாக்கிக்கொண்டான். அப்போது, குத்தகைப் பணம் தராததால் தரங்கம்பாடியைத் தஞ்சை நாயக்கர்கள் முற்றுகை இட்டனர். உள்ளூர் மக்களின் ஒத்துழைப்புடன் ஹோன்ஸ் பெக்கி தரங்கம்பாடியைக் காப்பாற்றியதோடு, எதிரிகளிடம் தன்னைக் காத்துக்கொள்ள கோட்டை ஒன்றை கட்டவும் முயற்சி செய்தான்.

No comments:

Post a Comment