சித்திரைத் திருவிழாவுக்குக் காப்புக் கட்டினால் மீனாட்சி அம்மனுக்குத் திருக்கல்யாணம் முடிந்து, அழகர் ஆற்றில் இறங்கி, மறுபடியும் அவர் மலைக்குத் திரும்பும் வரை மதுரைக்குள் கல்யாணம், கிரகப் பிரவேசம் உள்ளிட்ட சுப காரியங்கள் எதையும் நடத்த மாட்டார்கள். இது தெரிந்திருந்தும் சித்திரைத் திருவிழா நடந்துகொண்டு இருந்தபோது நித்திக்கு பெங்களூருவில் வைத்து இளவரசுப் பட்டம் சூட்டினார் மதுரை ஆதீனம் அருணகிரி. அந்தக் கோபத்திலும் உக்கிரத்திலும் மதுரை மீனாட்சி தனது திருவிளையாடலைத் தொடங்கிவிட்டார்'' என்று ஆவேசத்துடன் சொல்கிறார்கள் மதுரை ஆதீன மீட்புக் குழுவினர்.
இதுபற்றி நம்மிடம் விரிவாகப் பேசினார் நெல்லை கண்ணன்.
''அம்மைக்குக் காப்புக் கட்டி, திருவிழா நடந்தபோது அருணகிரி பெங்களூருவில் போய் தங்கியதே முதல் கோளாறு. சித்திரைத் திருவிழாவின் ஐந்தாம் திருநாள் அன்று பெங்களூருவில் வைத்து மதுரை ஆதீனத்தின் இளைய பட்டமாக நித்தியானந்தனுக்கு பட்டம் சூட்டியது இரண்டாவது கோளாறு. மதுரையில்தான் பட்டாபிஷேகம் நடந்திருக்கணும். விடுவாளா மீனாட்சி? பட்டம் சூட்டிய ஆறாவது நாள் மீனாட்சி தேரோட்டம். மாசி வீதியில் தேர் வந்துகொண்டு இருந்தபோதே மேலக் கோபுரத் தெருவில் ஆதீன மடத்துக்குச் சொந்தமான கட்டடத்தில் தீப்பிடித்தது. இதுதான் தன்னை மதிக்காத மதுரை ஆதீனத்துக்கு அன்னை மீனாட்சி காட்டிய முதல் அறிகுறி.
நித்தியானந்தனுக்குப் பட்டம் சூட்டிய பிறகு, தமிழகத்தில் நான்கு இடங்களில் தேர் அச்சு முறிந்தும் சரிந்தும் உயிர்ப் பலிகள் நடந்தன. இறந்தவரை உயிர் பிழைக்கவைத்த திருஞானசம்பந்தர் மடத்துக்கு, ஆசாரம் தெரியாத கிரிமினல் ஒருவர் இளைய பட்டமாக வந்ததை உணர்த்திய கெட்ட சகுனங்களாகவே இவற்றைப் பார்க்கிறோம்.
ஆதீனகர்த்தர்கள் சிவபெருமானின் நாமத்தை மட்டுமே உச்சரிக்க வேண்டும் என்ற மரபுகளை உடைத்து, 'காமெடி பீஸ், டம்மி பீஸ்’ என்றெல்லாம் பேசிய நித்தியானந்தன், 'பழம் பெருமை வாய்ந்த திருவாவடுதுறை, தருமபுர ஆதீனங்களை பிடதி ஆசிரம பக்தர்கள் முற்றுகையிடுவார்கள்’ என்று ரவுடியைப் போன்று அறிக்கைவிட்டார். 'மீனாட்சி அம்மன் கோயிலை மீட்பேன்’ என்றவர், மீனாட்சி அம்மன் கோயிலில் தனக்கு உரிய மரியாதை தரப்படவில்லை என்று அர்த்த மண்டபத்தில் கூச்சல் போட்டார். இதை எல்லாம் அன்னை மீனாட்சி பொறுமையாகப் பார்த்துக்கொண்டே இருந்தார்.
சிவபெருமானை வணங்க வேண்டிய மதுரை ஆதீனம், 'நானே சிவன்’ என்று சொல்லும் ஒரு பித்தலாட்டக்காரனை இளைய ஆதீனமாகஉட்காரவைத்தது சாபக்கேடு இல்லையா? மீனாட்சி அம்மன் ஆட்சி செய்யும் இடத்தில் 60 பெண்களை வைத்துக்கொண்டு களியாட்டம் போடவிடலாமா?
ஆதீன மடத்தின் மாடியில் பாஸ்கர சேதுபதி கட்டிக்கொடுத்த மண்டபத்தில் அமர்ந்துகொண்டு, 'நான்தான் சிவபெருமான். இங்கு நான் 64 திருவிளையாடல்களை நடத்தி இருக்கிறேன். இன்னும் திருவிளையாடல்களை நடத்தத்தான் இங்கு அவதரித்திருக்கிறேன்’ என்கிறார் நித்தியானந்தன். இது எவ்வளவு பெரிய பாவச் செயல். அதனால்தான் அம்மை மீனாட்சியும் சொக்கநாதரும்திருவிளையாடல் மூலம் தங்களது வேலையைக் காட்ட ஆரம்பித்துவிட்டார்கள். பிடதி ஆசிரமத்துக்குள் போலீஸ் நுழைந்து அத்தனையையும் தோண்டித் துருவப்போகிறது. மறைந்துகிடக்கும் மாபூதங்கள் எல்லாம் வெளியில் வரப்போகின்றன. அம்மையின் சக்தியை நித்தியானந்தனும் அருணகிரியும் இப்போது புரிந்து கொண்டிருப்பார்கள்!
எனக்கும் மதுரை ஆதீனத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. நித்தியானந்தர் நியமனத்தை எதிர்த்தவர்கள், திடீரென என்னை அலைபேசியில் அழைத்தார்கள். எங்க வீட்டம்மாக்கிட்ட, 'மீனாட்சி கூப்புடுறா... போயிட்டு வர்றேன்’னு சொல்லிட்டுத்தான் கிளம்பினேன். நான் வணங்கும் காந்திமதி அம்மையிடம், 'நித்தியானந்தன் ஆட்டத்துக்கு கூடிய சீக்கிரம் ஒரு முடிவு கட்டக் கூடாதா?’னு வேண்டினேன். அதற்கான பலன் கிடைச்சிருக்கு. அரசு பார்க்காவிட்டாலும் அம்மை பார்க்க ஆரம்பிச்சுட்டா. நாங்க கடந்த ஒன்றரை மாதங்களாக கூப்பாடு போடுகிறோம், தமிழக அரசு ஏனோ இந்த விஷயத்தில் மௌனமாகவே இருக்கிறது.
மதுரை ஆதீன மடம் மூடப்பட்டது என்று அறிவிப்புப் பலகை வைத்த பிறகும், அரசு ஏன் அசட்டையாக இருக்கிறது என்று தெரியவில்லை. நித்தியானந்தன் இனி மதுரை ஆதீனத்துக்குள் வர முடியாது. மீண்டும் அவரை வரவிட்டால் மிகப் பெரிய அவமானத்தை தமிழக அரசு எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.
அதேபோல், செய்த தவறைத் திருத்திக்கொள்ள அம்மையாய் பார்த்து அருணகிரிக்கு ஒரு வாய்ப்பைக் கொடுத்திருக்கிறாள். 'நான் தவறு செய்துவிட்டேன்; நித்தியானந்தன் நியமனத்தை ரத்து செய்கிறேன்’ என்று சொல்லிவிட்டால், அருணகிரி தப்பிப்பார். இல்லாவிட்டால், அவருக்கும் ஆபத்தை நிச்சயமாக்கிவிடுவாள் மீனாட்சி அம்மை'' என்று 'பஞ்ச்’ வைத்தார் நெல்லை கண்ணன்.
மதுரை இன்னமும் சர்ச்சைகளின் மையம்தான்!
No comments:
Post a Comment