இந்திய டென்னிஸில் புயல் அடித்துக் கொண்டிருக்கிறது. லண்டன் ஒலிம்பிக்ஸ் போட்டிக்காக டென்னிஸ் இரட்டையர் ஆட்டத்துக்குத் தேர்வு செய்யப்பட்ட லியாண்டர் - மகேஷ் ஜோடியால் இந்திய டென்னிஸின் மானம் காற்றில் பறந்து கொண்டிருக்கிறது. லியாண்டர் பெயஸு டன் ஆட விருப்பமில்லை என்று மகேஷ் பூபதி அதிரடியாக அறிவித்துப் பெரிய சர்ச்சையை உருவாக்கிவிட்டார். தொடர்ந்து லியாண்டருடன் ஆட வற்புறுத்தினால் ஒலிம்பிக்ஸிலிருந்து விலகிவிடுவேன் என்றும் மிரட்டியிருக்கிறார். இந்திய டென்னிஸ் சங்கமும், மகேஷ் பூபதி ஆட மறுத்தால் பொபனா, லியாண்டருடன் ஜோடி சேர்வார் என்று உடும்புப்பிடியாக தன் முடிவிலிருந்து மாற மறுக்கிறது.
ஒலிம்பிக்ஸ் போட்டிக்காக இந்திய டென்னிஸ் சங்கம் இரண்டு இரட்டையர் ஜோடிகளை அனுப்பலாம். ஆனால், சிக்கல் இங்குதான் இருக்கிறது.
லியாண்டர் பயஸ், இந்தியாவின் முன்னணி இரட்டையர் ஆட்ட வீரர். இரட்டையர் பிரிவில் ஆஸ்திரேலிய ஓபன், அமெரிக்க ஓபன், விம்பிள்டன், பிரெஞ்ச் ஓபன் என 4 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் பட்டம் வென்ற முதல் இந்தியர். 13 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார் (இரட்டையர் ஆட்டங்களில் 7, கலப்பு இரட்டையர் ஆட்டங்களில் 6). மகேஷ் பூபதி - பொபன்னா ஒரு ஜோடியாகக் கருதப்பட்டால், லியாண்டருடன் யார் இணைந்து ஆடுவது? அவரை மட்டும் தனியே கழற்றிவிடுவது நியாயமில்லை என்று எண்ணியிருக்கிறது இந்திய டென்னிஸ் சங்கம்.
இந்திய டென்னிஸில் பலம்வாய்ந்த இரட்டையர்களாக வலம்வந்தனர் பயஸும் பூபதியும். 1999ல், 4 கிராண்ட் ஸ்லாம்களிலும் இறுதிப் போட்டிவரை சென்று, இரண்டில் வெற்றி கண்டார்கள். இதற்குப் பிறகு, கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்து போனார்கள். இருந்தாலும், நாட்டுக்காக அடிக்கடி இருவரும் கைகோத்தார்கள். 4 ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் ஒன்றாக ஆடியிருக்கிறார்கள். 2011ல், லியாண்டர் - பூபதி இருவருமே லண்டன் ஒலிம்பிக்ஸுக்காக (2002க்குப் பிறகு) ஒன்று சேர்ந்தார்கள்.
2011 சென்னை ஓபனை ஜோடியாக வென்ற இருவரும் ஆஸ்திரேலியன் ஓபனில், இறுதிப்போட்டி வரை முன்னேறினார்கள். எல்லாமே சுமுகமாக சென்று கொண்டிருந்தபோது மீண்டும் உறவில் பிளவு ஏற்பட்டது. பூபதியுடன் லண்டனில் ஆடுவது சரியான தேர்வாக இருக்காது, பொபன்னாவுடன் ஆட விரும்புகிறேன் என்று பேட்டியளித்தார் லியாண்டர். இதற்குப் பிறகு, பொபன்னாவுடன் ஜோடி சேர்ந்து இரட்டையர் ஆட்டங்களில் ஆட ஆரம்பித்து லியாண்டருக்கு செக் வைத்தார் பூபதி.
லண்டன் ஒலிம்பிக்ஸில், லியாண்டருக்கு எதிராக யாரை ஆடவைப்பது என்கிற கேள்விக்கு பூபதி, பொபன்னா இருவரில் பூபதியைத் தேர்வு செய்திருக்கிறது டென்னிஸ் சங்கம். லியாண்டர், பொபன்னாவுடன் ஆட விருப்பப்பட்டாலும், இப்போது பூபதி, பொபன்னா இருவருமே லியாண்டருடன் ஆட மறுத்திருக்கிறார்கள். (இந்தக் கட்டுரை எழுதுகிற நேரம் வரை இந்நிலையே நீடிக்கிறது.) இந்தப் பிரச்னையில், இந்திய டென்னிஸ் சங்கம், பூபதி என இருவர் மீதும் தவறுகள் உள்ளன. எப்போது, பூபதியுடன் லியாண்டர் ஆட மறுத்தாரோ அப்போதே டென்னிஸ் சங்கம் மாற்று ஏற்பாடுகளை யோசித்திருக்க வேண்டும். கடைசி நேரத்தில், எதிரிகள் இருவரை ஒன்றாக ஆடவேண்டும் என்று சொல்வது நிச்சயம் சங்கடங்களை ஏற்படுத்தும் என்று யூகித்திருக்க வேண்டும்.
ஆனால், வழக்கம்போல அடித்துக்கொள்வார்கள், நாட்டுக்காக ஆடும்போது ஒன்று சேர்ந்துவிடுவார்கள் என்று தப்புக்கணக்குப் போட்டுவிட்டது டென்னிஸ் சங்கம்.
பூபதிமீது எல்லோரும் கோபம் கொள்வதில் நியாயம் உண்டு. நாட்டுக்காக ஆடும்போது அங்கு தனிப்பட்ட பிரச்னைகளுக்கு இடம் கிடையாது. தோனி கேப்டனாக இருக்கும் அணியில் ஆட மாட்டேன் என்று ஷேவாக், கம்பீரால் சொல்ல முடியுமோ? பொபன்னாவுடன் பூபதி ஜோடி சேர்ந்து விட்டால், லியாண்டருடன் ஜோடி சேர நல்ல ஆளே கிடையாது என்பதை பூபதி அறியாதவரா (தோள்பட்டை காயம் காரணமாக சோம்தேவ் கடந்த 6 மாதங்களாக டென்னிஸ் விளையாடவில்லை)? ஏன் இப்படியொரு இடியாப்பச் சிக்கலை அவர் உருவாக்கவேண்டும்? இத்தனை சர்ச்சைகளுக்கு மத்தியிலும், ‘தாம், யாருடனும் விளையாடத் தயார்’ என்று லியாண்டர் அறிவித்து விட்டாரே, ‘மகேஷ் பூபதி சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறார்; லியாண்டரால்தான் இந்திய டென்னிஸுக்கு ஒலிம்பிக்ஸில் பதக்கம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது’ என்று இந்திய டென்னிஸ் சங்கம் அறிவித்துவிட்டதே! இந்த அவமானங்கள் எல்லாம் மகேஷ் பூபதிக்கும் இந்திய டென்னிஸுக்கும் அவசியமா?
No comments:
Post a Comment